10 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 41

(மலேசிய நண்பன் - 13.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)


குமாரி.சாந்தரூபனி, ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா.

கே: சார், என்னுடைய கணினியில் This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. எப்படி நிறுத்துவது? விண்டோஸ் XP போடுவதற்கு என்னிடம் RM 360 வாங்கி விட்டார்கள். ஆனால், நான் பயன் படுத்தும் விண்டோஸ் போலியானது என்று என் சக தோழி சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. சரியாக சாப்பிட தூங்க முடியவில்லை. நான் மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மகளுக்குச் செய்யும் உதவியாக நினைத்துக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள்.


ப: உங்களுடைய மனவேதனை எனக்குப் புரிகிறது. ஒரு சின்ன விஷயத்திற்குப் போய் சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை என்று சொல்வது எல்லாம் நன்றாக இல்லை. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு டாக்டர் என்பதை மறந்து விடக் கூடாது. மற்றபடி கணினியை விற்றவர் உங்களை ஏமாற்றி இருக்கலாம். அல்லது அசல் விண்டோஸ் நிரலி எண்களை மற்றவருக்கு கொடுத்து இருக்கலாம். அதை மைக்ராசாப்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்ட பிறகு அதே நிரலியை உங்களிடம் கடைக்காரர் கொடுத்து நம்ப வைத்திருக்கலாம். என் மனதில் பட்ட விஷயம். சரி. யார் பக்கம் நியாயம் இருக்கிறது. தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

கணினியை Restart செய்யுங்கள். கணினி திறக்கும் போது F8 பொத்தானைத் தட்டுங்கள். அதில் Safe Mode என்பதைத் தட்டுங்கள். உள்ளே நுழைந்து ஆகக் கீழே இருக்கும் Run என்பதைச் சொடுக்குங்கள். regedit.exe என்று தட்டச்சு செய்யுங்கள். wgalogon எனும் கோப்பு இருக்கும். அதை அழித்து விடுங்கள். முடிந்ததா. இப்போது கணினியை அடைத்துவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். எல்லாம் சரியாக நடந்து இருக்கும். முடிந்தால் C drive ல் windows கோப்புக்கு போய் wga எனும் கோப்பையும் அழித்து விடுங்கள். சகோதரர் பில் கேட்ஸ் ஏழைகளுக்குச் சொன்ன ரகசியங்கள். இது தற்காலிகமானது. எப்படி இருந்தாலும் நீங்கள் மறுபடியும் புதிதாக ஒரு விண்டோஸ் செயலியை வாங்க வேண்டி இருக்கும். இனிமேல் நம்பிக்கையான இடங்களில் கணினியைக் கொண்டு போய் கொடுங்கள். பணத்திற்கு ஆசைப் படும் மோசக்காரர்களைப் பற்றி வெளியே சொல்லுங்கள்.

வசந்தமோகன் vasanth67@gmail.com

கே: இலவசமாக வாழ்த்து அட்டைகள் எந்த இணையத் தளத்தில் கிடைக்கும்? இலவச மின் வாழ்த்துகளைத் தயாரிக்க மென்பொருள் கிடைக்குமா? காதல் தினத்தன்று என் காதலிகளுக்கு மின் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும். உதவி செய்யுங்கள் சார்.


ப: காதலிகள் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள். எதற்கும் பார்த்துச் செய்யுங்கள். நிறைய காதலிகளுக்கு வாழ்த்து களை அனுப்பி கடைசியில் நீங்கள் ஒரு வாயில்லா ஜீவனாக மாறக் கூடாது.

Google தேடல் இயந்திரத்தில் போய் 'Lovers e-greetings' என்று தட்டுங்கள். ' ' எனும் தனிப்பட்ட குறிகள் இருக்க வேண்டும். மின் அட்டைகள் சரம் சரமாய்க் கொட்டும். காதல் தினத்தன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். புண்ணியம் சேருங்கள். ஏழைகளை உங்கள் வாழ்வின் காதலர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையும் வசந்தம் ஆகும். உங்களுக்காக மின் வாழ்த்து மென் பொருளைத் தேடப் போனேன். 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' என்று பழைய பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. என்னுடைய இரண்டு வயது பேத்தி தாத்தா தாத்தா என்று அழைத்ததும்  அந்தக் கனவுகள் எல்லாம் கலைந்து விட்டன.

அர்ச்சனா முனுசாமி  archana.munusamy@yahoo.com

கே: சார், நீங்கள் அண்மையில் படித்த சுவையான இணையச் செய்தி எதுவும் இருக்கிறதா?

ப: அடுத்த கேள்வியைப் படிக்கவும்.


முகிலன் ராஜமோகன்   mugilan_rajamohan@yahoo.com

கே: அமைதிக்கு அன்னை திரேசா. அகிம்சைக்கு அண்ணல் காந்தி. அதிரடிக்கு அண்ணன் பில் கேட்ஸ். பொருத்தமாக இருக்குதானே.

ப: கணினி மன்னன் பில் கேட்ஸ் உங்களுக்கு அண்ணனாக இருக்கலாம். ஆனால் அவர் எனக்கு உடன் பிறவாச் சகோதரர். இது நல்லா இருக்குதானே.


கார்த்திகாஜித், மாசாய், ஜொகூர்    karthikajith@aol.com

கே: கைப்பேசிக்கும் I-Phone க்கும் உள்ள வித்தியாசம் என்ன? I-Phone க்கு தமிழில் என்ன பெயர்?


ப: கைப்பேசியில் அழைப்புகளை அனுப்பலாம். அழைப்புகளைப் பெறலாம். சில கைப்பேசிகளில் படங்களைப் பிடிக்கலாம். I-Phone என்பது அதற்கும் மேலே ஒரு படி போய் வேலை செய்கிறது. Internet Phone என்பதுதான் I-Phone ஆக மாறியது. இதை அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிள் Apple நிறுவனம் 2007 ல் கண்டு பிடித்தது. இதில் விண்டோஸ் போன்ற ஆப்பிள் அடிப்படைச் செயலி, இணையம், மின்னஞ்சல் வசதி, Media Player எனும் ஊடக இயக்கி, Video எனும் நிழல் படம், Screen Saver எனும் திரைக் காப்பு, RAM எனும் நினைவகம், Wi Fi தொடர்பு, LAN எனும் உள்ளகப் பிணையம், Chatting எனும் இணைய அரட்டை, தட்டச்சு, CPU எனும் மையகச் செயலகம் என்று நிறையப் பயன் பாடுகள் உள்ளன. கடினமான அறிவியல் கணக்குகளைச் செய்யலாம். தமிழில் கைக்கணினி அல்லது இணையக் கைப்பேசி என்றும் அழைக்கலாம். இந்த இரண்டுமே அடியேன் உருவாக்கியச் சொற்கள். வேறு பொருத்தமான சொற்கள் இருந்தால் சொல்லுங்கள்.


வெங்கடேஷ் ராவ், கோலாலம்பூர்

கே: என்னுடைய கணினியில் NTLDR is missing எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது?


ப: NTLDR என்றால் New Technology Loader என்று அர்த்தம். விண்டோஸ் செயலி செயல் பட ஆரம்பிக்கும் போது இந்தக் கோப்பு தேவை. சின்னச் சின்ன ஆரம்பக் கட்டச் செயலிகள் அதன் உள்ளே இருக்கும். அந்தக் கோப்பு இல்லாமல் கணினி தன் வேலையைச் செய்ய முடியாது. ஆக, அந்தக் கோப்பு பழுது அடைந்து இருந்தால் மேற்சொன்ன எச்சரிக்கை வரும். கணினியைத் திறக்க முடியாது. சரி. எப்படி நிவர்த்தி செய்யலாம். வழி இருக்கிறது. ஆனால், சற்று சிக்கலானது. கணினியைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் அவ்வளவு சுலபத்தில் சரி செய்ய முடியாது.

http://www.quickonlinetips.com/archives/2005/12/ntldr-is-missing-press-any-key-to-restart/

எனும் இடத்தில் விவரங்களைச் சொல்கிறார்கள். படித்துப் பாருங்கள். கணினியைப் பழுது பார்ப்பவரிடம் உங்கள் கணினியை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை வரும். கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். கணினிகளைப் பழுது பார்த்துக்
கொடுக்கும்படி எனக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும் ஜொகூர் பாரு, பினாங்கு, குவாந்தான், கிள்ளான் போன்ற இடங்கள்தான். தொலை தூர இடங்கள். ஈப்போவாக இருந்தால் கண்டிப்பாக என் சேவை கிடைக்கும்.


கௌசல்யா, ஜொகூர் பாரு

கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிப்பேன். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறேன். என் மகளுக்கு தேவைப் படும். ஆனால், உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்களைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில் பயன் அளிக்கிறது. மிக்க நன்றி. மேலும் தொடர என் வாழ்த்துகள்.


ப: உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு ரொம்பவும் நன்றி. பழுத்த மரம் கல்லடி படுகிறது என்றால் யாரும் மரத்தை அடிக்கவில்லை. பழத்திற்கு ஆசைப் பட்டு கல்லையும் கம்பையும் விட்டு பழத்தை தான் அடிக்கிறார்கள். இதை எல்லாம் பெரிசாக நினைக்கக் கூடாது. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம்.

இன்னொரு விஷயம். நீங்கள் இந்தக் குறும் செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. மன்னிக்கவும். ஒரு நூறு பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக