20 June 2010

கணினியும் நீங்களும் - பகுதி 61

(20.6.2010 ஞாயிற்றுக்கிழமை மலேசியா நண்பன் நாளிதழில் வெளியான கேள்வி பதில் அங்கம்)
கணினியும் நீங்களும் - பகுதி 61
ராஜ் சுதன்  
கே: Facebookல் ஒரு நச்சு அழிவி வேகமாகப் பரவி வருகிறதாம். அதை எப்படி தடுப்பது சார்?

ப:
Facebook என்பது ஒரு சமூகச் சேவைத் தளம். இணையத்தில் உலா வரும் கோடிக் கணக்கான பேர் அந்தச் சேவையில் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அதில் பல இலட்சம் பேர் Like எனும் நச்சு அழிவி Virus ஆல் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாசகங்களைப் படியுங்கள்.


'ஒரு பெண் உங்களுக்காக காத்து இருக்கிறாள்';
'ஒருவன் தன்னைத் தானே 8 வருடங்கள் படம் பிடித்துக் கொள்கிறான்';
'ஒரு மாணவி குட்டைப் பாவாடை அணிந்ததால் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டாள்';
'இந்தப் பெண் வாழைப் பழத்தைச் சாப்பிடும் விதமே அலாதியானது'


எனும் ஆசையைத் தூண்டும் அறிவிப்புச் செய்திகள் வரும்.

தயவு செய்து அவற்றைச் சொடுக்க வேண்டாம். Click Here to Continue என்பதைச் சொடுக்கினால் போதும். அவ்வளவுதான். நாசம் செய்யும் நச்சு அழிவிகளுக்கு வெண் சாமரம் வீசியது போல ஆகி விடும். கரும்புக் கொல்லையில் காட்டு மாடுகள் நுழைந்த மாதிரி உங்கள் கணக்கு நொறுங்கிப் போகும். அந்த மாதிரியான வாசகங்கள் வந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா விட்டு விடுங்கள். ஆபத்து வராது.

இரா.செல்வகணேஷ், லோபாக், சிரம்பான்

கே: பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் கைப்பேசி நிறுவனங்களுக்கு 33 மில்லியன் ரிங்கிட்டை பரிசுகளாக வழங்க முன் வந்து இருக்கிறது. பரிசு விவரங்களைத் தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

ப:
உலகக் கணினி வித்துவான் பில் கேட்ஸ். இவர் சம்பாதித்த கோடிக் கோடியான பணத்தில் ஒரு பகுதியை ஓர் அற நிறுவனத்திற்கு எழுதி வைத்தார். அந்த அற நிறுவனத்தின் பெயர் பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம். பல கோடி டாலர்கள் ஆப்ரிக்க நாடுகளில் ஏயிட்ஸ் நோயைக் கட்டுப் படுத்த வழங்கப் பட்டுள்ளன. இன்னும் பல வகைகளில் உதவிகள் செய்யப் பட்டும் உள்ளன.

சரி. உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹாயித்தி தீவை ஒரு பயங்கரமான நில நடுக்கம் உலுக்கியது. அதனால் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. மக்களுக்கு சரியான வகையில் உதவிகள் போய்ச் சேரவில்லை. இதைக் கவனித்த பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தது.

அங்குள்ள மக்கள் தங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் கிடைக்கவும் செய்ய ஒரு திட்டத்தை யாராவது உருவாக்க வேண்டும். அந்த மாதிரியான மென்பொருள் திட்டத்தை யார் முதலில் உருவாக்கிக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சன்மானமாக 80 இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இரண்டாவதாகச் செய்து கொடுப்பவருக்கு 50 இலட்சம். மூன்றாவதாக வருபவருக்கு 20 இலட்சம் கொடுக்கப் படும். சரியா.

சில உலக நிறுவனங்கள் தீவிரம் காட்டி உள்ளன. செய்து முடிக்க சில மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் தனி மனிதராகப் பங்கு கொள்ள ஆசைப் படுகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக ஹாயித்தி தீவிற்குப் போய் ஆக வேண்டும்.

இல்லை என்றால் இந்தத் திட்டத்தில் இடம் பிடிப்பது கஷ்டம். இப்போதைக்கு அந்த நாட்டில் விமான வசதிகள் எதுவும் இல்லை. கப்பல் வசதிகளும் இல்லை. ஒன்று செய்யலாம். அந்தத் தீவிற்கு வேண்டும் என்றால் நீச்சல் அடித்துப் போகலாம். உங்கள் வசதி எப்படி?

கா.மஞ்சரி, சாலாக் செலாத்தான், கோலாலம்பூர்
கே: குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி வந்து விட்டதாமே. அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள்  பெரிய பெரிய குங்குமப் பொட்டுகளை வைத்து இருந்தால் சந்தேகப் படுகிறார்களாம். இந்தியாவில் உள்ள நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் கதை?

ப:
கைக்கணினி என்றால் PDA. அதாவது Portable Digital Assistant. அதே போல I Phone என்றால் Internet Phone. இணையத்துடன் தொடர்பு கொள்ளும் கைப்பேசி. இதற்கு இணையக் கைப்பேசி என்று பெயர்.

குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி அல்லது இணையக் கணினி இன்னும் வரவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் வந்து விடலாம்.

பெரிய பெரிய பொட்டுகளை வைத்துக் கொண்டு வரும் பெண்களைச் சந்தேகப் படும் அளவிற்கு நிலைமை இன்னும் மோசம் ஆகவில்லை.

குங்குமப் பொட்டின் தடிப்பு ரொம்பவும் மொத்தமாக இருந்தால் விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் வருவது இயல்பது தான்.

அதில் கொஞ்சம் கஞ்சா அல்லது கொஞ்சம் போதைப் பொருள் மறைக்கப் பட்டு இருக்கலாம் இல்லையா. அது எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு வகையான சந்தேகம் தான். பத்து காசு பொட்டாக இருந்தால் பரவாயில்லை. அதற்காக ஐம்பது காசு பொட்டை ஒட்டிக் கொண்டு போனால் எப்படி ஐயா? நீங்களே சொல்லுங்கள்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவர்களுடைய வேலைகளை அவர்கள் பாட்டிற்குச் செய்கிறார்கள்.அவர்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும். ஒன்று உங்களுக்குத் தெரியுமா. உலகத்திலேயே மிகவும் கெட்டிக்கார போலீஸ்காரர்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள். அதே போல அவர்களுக்குத் தண்ணி காட்டும் படு மோசமான தாதாக்களும் அங்கே தான் இருக்கிறார்கள். இதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்னும் ஒரு விஷயம். ரகசியக் காமிராக்கள் குங்குமப் பொட்டு அளவிற்கு வந்து விட்டன. அந்த மாதிரியான காமிராக்கள் மேலை நாடுகளில் சர்வ சாதாரணம். மலேசியாவிலும் கிடைக்கிறது. அதன் விலை RM1620. இந்தக் காமிராக்கள் கம்பித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் இயங்கும் கம்பியில்லா காமிராக்கள். காமிராவை நெற்றியில் பொட்டு மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

நீங்கள் பார்ப்பதைக் காமிராவும் பார்க்கும். பார்த்ததைப் படம் பிடித்துக் கொள்ளும். அல்லது வீடியோ ஒளி அலையாகவும் மாற்றிக் கொள்ளும். இந்தக் காமிரா கடுகு அளவுள்ள ஒரு மின்கலத்தால் இயங்குகிறது. பிடித்தப் படங்களை உங்களுடைய கைப்பையில் இருக்கும் சேமிப்புத் தட்டுக்கு அனுப்பி விடும்.

தவிர நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உங்கள் வீட்டிற்கும் அனுப்பிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் குங்குமப் பொட்டு ரகசியக் காமிராக்கள் எல்லா வீடுகளுக்கும் வந்துவிடலாம். அதனால் அதிகமான பிரச்னைகள் வரலாம். கணினித் தொழில் நுட்பத்தால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.


குலேபகாவலி கல்யாணம், தஞ்சோங் சிப்பாட், சிலாங்கூர்
கே: UPS என்பதற்கும் AVR என்பதற்கும் என்ன என்ன வேறுபாடுகள்?
ப:
உங்கள் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பழைய ஞாபகங்களை நினைவு படுத்துகிறது. சரி. UPS என்றால் Uninterrupted Power Supply. இதைத் 'தடையற்ற மின்சார வழங்கி' என்பார்கள். விலை RM150 க்குள் இருக்கும். இதை வாங்கி உங்கள் கணினியுடன் பொருத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வரும் மின்சாரம் திடீரென்று நின்று போனால் இந்தச் சாதனம் உடனே உயிர் பெற்று உங்கள் கணினிக்கும் உயிர் கொடுக்கும். கணினியில் செய்து கொண்டு இருந்த வேலைகள் அழிந்து போகாது. பாதுகாப்பாக இருக்கும். சரி.

AVR என்றால் Automatic Voltage Regulator. இந்தச் சாதனம் கணினிக்கு எவ்வளவு மின்சாரத்தைக் கொடுக்கலாம் என்பதை நிர்ணயம் செய்யும். விலை RM68 லிருந்து RM90 வரை இருக்கும்.

1 comment:

  1. நல்ல நல்ல தகவல் அண்ணே! தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete