27 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 62

இன்று  04.07.2010 நண்பனில் வெளியாகின்ற கேள்வி பதில்களைக் காலை 10.30க்கு மேல் படிக்கலாம்.

(இந்தக் கேள்வி பதில் அங்கம்  27.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

ஜெயக்குமார் கதிர்வேல், சிம்பாங் அம்பாட், தைப்பிங்

கே: நான் இப்போது Intel Pentium 3 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் இருக்கிறது. போன வாரம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதித்தேன். பதிக்க முடியவில்லை. Install செய்ய முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. எப்படி பதிப்பது. உதவி செய்யுங்கள்.


ப:
மலேசியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்தைப் பார்க்க மாட்டு வண்டியில் ஏறி மலாக்கா கடல் கரைக்குப் போய் இருக்கிறேன். 1957ல் நடந்த வரலாறு. அது ஒரு கனா காலம். இப்போது மாட்டு வண்டிகளைப் பார்க்க முடிவதில்லை. அரும் காட்சியகத்தில் கூட பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அந்த மாதிரியாகக் காலம் மாறிப் போய் விட்டது.

அப்படி இருக்கும் போது நீங்கள் என்னடா என்றால் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் கலர் கலரா படம் வர மாட்டேங்குதே என்கிறீர். நீங்கள் பயன்படுத்தும் இண்டல் பெந்தியம் 3 இருக்கிறதே இது 1996 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இரண்டாம் தலைமுறைக் கணினி வகை.

அதற்குப் பிறகு இண்டல் பெந்தியம் 4, இண்டல் டுவல் கோர், இண்டல் டிரிபள் கோர் என்று நவீனமான நளினமான கணினி வகைகள் வந்து விட்டன. விலையும் ரொம்ப குறைவு. இதுவரை உங்கள் கணினி வேலை செய்கிறதே அதுவரைக்கும் அதற்கு முதலில் மாலை கட்டிப் போடுங்கள். விண்டோஸ் 7 இயங்குதளம் என்பது இப்போது உள்ள நவீனக் கணினிகளில் தான் வேலை செய்யும். புரிகிறதா?

உலகத்திலேயே மலேசியாவில்தான் கணினிகள் மிக மிக மலிவாவான விலையில் கிடைக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள். முன்னூறு நானூறு ரிங்கிட்டிற்கு மறுப் பயனீடு கணினிகள் கிடைக்கின்றன.

இயங்குதளம் என்றால் Operating System. கணினியை இயக்குகின்ற அடிப்படைச் செயல் முறை. விண்டோஸ் விஸ்த்தாவும் அப்படி தான். பழைய கணினிகளில் வேலை செய்யாது. காலத்திற்கு ஏற்றவாறு கணினியைத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் பழைய வண்டியை 'பார்முலா 1' கார் பந்தயத்திற்கு இழுத்துக் கொண்டு போக னைப்பது தப்பு இல்லையா.

நந்தக்குமார் அழகிரி, சுங்கை பெரானாங், மந்தின்

கே: இணையத்தில் உலா வரும் போது நடிகை சிம்ரனுக்கு தான் பேஸ்புக் இணையத் தளத்தில் அதிகமான விசிறிகள் இருப்பது தெரிய வருகிறது. வேறு எந்த நடிகைக்கும் அந்த மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தப்பாகத் தவறாக நினைக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

ப:
உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்து உங்களுடைய உத்தியோகத்தை நல்ல படியாக பார்க்கிறீர்கள். சந்தோஷம். சிம்ரனுக்கு சிலை வடித்தாலும் சரி சிக்கன் குனியா கடித்தாலும் சரி கருத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கணவர்தான். ஆக, நாம் தப்பாகவும் நினைக்கவில்லை. தவறாகவும் நினைக்கவில்லை. நாளைய தலைமுறை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி கேள்வி கேளுங்கள். நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்தக் கேள்வி பதில் இணையத்திலும் போகிறது. உலகில் உள்ள எல்லா தமிழர்களும் படிக்கிறார்கள்.



பால் மோகன்

கே: வணக்கம் சார், நான் கணினியைத் திறந்ததும் There are unused icons on your desktop எனும் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. எரிச்சல் உண்டு பண்ணும் இந்த அறிவிப்பை எப்படி  நிறுத்துவது?

ப:
கணினி எனும் சாதனம் கடமை தவறாமல் அதன் வேலையைச் செய்கிறது. சில சமயங்களில் இந்த மாதிரியான அறிவிப்புகள் எரிச்சலைக் கொடுக்கும். சிலர் சகித்துக் கொள்கிறார்கள். சிலரால் முடியாது. சரி. எப்படி அதை நிறுத்தி விடுவது. உங்கள் சுழலியை Desktop எனும் முகப்புத் திரையில் வைத்து வலது சொடுக்கு செய்யுங்கள். அடுத்து Properties என்பதைச் சொடுக்குங்கள்.

மேலே தெரியும் வரிசையில்  Desktop என்பதைச் சொடுக்குங்கள். அப்புறம் ஆகக் கீழே Customize Desktop என்று ஒரு பட்டை இருக்கும். அதைச் சொடுக்குங்கள். அங்கே Run Desktop Cleanup Wizard every 60 days என்ற அறிவிப்பு இருக்கும். அதன் தொடக்கத்தில் இருக்கும் 'சரி' எனும் குறியை அப்புறப் படுத்துங்கள். அப்புறம் Apply, OK பொத்தான்களைத் தட்டி வெளியே வாருங்கள். பிரச்னை தீர்ந்தது.


சரவணன் சாரா sarasarawanan55@yahoo.co.uk

கே: என்னுடைய மேசைக் கணினியின் RAM 128MB. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. என்னுடைய தாய்ப் பலகை பெந்தியம் 3. நான் இன்னும் அதிக சக்தியுள்ள நினைவியைப் பொருத்த முடியுமா. எவ்வளவு சக்தி உள்ளதைப் போடலாம்?

ப:
RAM என்றால் தற்காலிக நினைவி. கணினியின் வேலைகளை அப்போதைக்கு அப்போது நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன சாதனம். நீள் சதுரத்தில் ஒரு பட்டை மாதிரி பச்சை நிறத்தில் இருக்கும். கணினியின் Hard Disk எனும் வன் தட்டில் தகவல்கள் நிரந்தரமாகச் சேமிப்பு செய்யப் படுகின்றன. அதற்கு முன்னால், இந்தத் தற்காலிக நினைவியில் தான் அனைத்து தகவல்களும் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப் படுகின்றன. கணினியை அடைத்ததும் தற்காலிக நினைவியில் உள்ள தகவல்களும் அழிந்து போகும். சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் பயன் படுத்துவது பெந்தியம் 3 வகையைச் சேர்ந்த கணினி வகை. இதற்கு முன் வந்த கேள்வியைப் பாருங்கள்.

பெந்தியம் 3 ன் வேகம் 800MHz ஐத் தாண்டி போகாது. சில சமயங்களில் 300MHz வரை கிடைக்கும். கணினியின் செயல் வேகம் மிகக் குறைவான நிலையில் இருக்கும் போது நீங்கள் எவ்வளவுதான் தற்காலிக நினைவியின் சக்தியைக் கூட்டினாலும் பலன் இல்லை. வேகம் அதிகரிக்காது. அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

பவா முனியாண்டி  bawanymuniandy@yahoo.com

கே: என் கணி
னியும் சில சமயம் என்னிடம் பூச்சாண்டி காட்டுகிறது. முக்கியமான கடிதம் தட்டச்சு செய்யும் போது திடீரென்று தானாகவே அடைத்துக் கொண்டு திரும்பவும் தானாகவே திறந்து கொள்கிறது. என்ன காரணமாக இருக்கக் கூடும்?

ப:
இதற்கு காரணம் கணினிக்குள் இருக்கும் காற்றாடி தான். காற்றாடி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் இந்தப் பிரச்னை வரும். கணினிக்குள் வெப்பம் அதிகரித்து விட்டால் அதைச் சமமான லைக்கு கொண்டு வர கணினி தானாகவே அடைத்துக் கொண்டு மறுபடி திறக்கும். அந்த மாதிரி கணினியின் இயக்கத்தைச் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆக, காற்றாடியை மாற்றலாம். அல்லது கூடுதலாக இன்னும் ஒரு காற்றாடியைச் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு காற்றாடியின் விலை பத்து ரிங்கிட்.  

நாராயணன் வெங்கட சுப்பிரமயம்  naribala03@gmail.com

கே: சில தினங்களுக்கு முன்னால் You Tube பதிவிறக்கம் செய்ய எளிய முறை கேட்டிருந்தேன். மலேசிய வாசிகளுக்கு மட்டும்தான் பதிலா? எனக்கு ஜோசியத்திலும் ஆர்வம் இருக்கிறது. அது சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கலாமா?

ப:
வணக்கம் அய்யா வணக்கம். தமிழ் நாட்டில் இருந்து கேள்வி கேட்கிறீர்கள். நன்றி. தமிழ் நாட்டில் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கிப் படிக்க முடியவில்லை என்றாலும் இணையம் வழியாகப் படிக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் இணையத்திலும் பிரசுரம் ஆவதால் உலகம் முழுமையும் உள்ளவர்கள் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து நான்கு ஐந்து  கடிதங்கள் வந்திருக்கின்றன. விரைவில் பதில் கிடைக்கும்.

You Tube ல் இருந்து படங்களைப் பதிவிறக்கம் செய்ய புதிய பதிவிறக்கி வந்து விட்டது. அதன் பெயர் YouTube Downloader 2.5.6 அதை http://youtubedownload.altervista.org/ எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுவரை 37 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.

ஜோதிடம் தொடர்பாக உங்கள் முழுப்பெயர், பிறந்த இடம், தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிவியுங்கள். சேவைக் கட்டணம் எப்படி? பரவாயில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இலவசமாகச் செய்து விடுகிறோம். மலேசியத் தமிழர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாகப் பேசுவார்கள் இல்லையா. எல்லாம் சரி. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லையே.

மதன் ராஜ்  rajesmathanraj@yahoo.com

கே: இண்டல் பெந்தியம் 3ன் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

ப:
முதலில் கணினியைச் சுத்தப் படுத்துங்கள். சுத்தப் படுத்துதல் என்றால் கணினியைக் கழற்றிப் போட்டு குளிப்பாட்டுவது அல்ல. அப்படி எதையும் செய்து விடாதீர்கள். முதலுக்கே மோசமாகி விடும். உள்ளே உள்ள தேவை இல்லாத ஆவணக் கழிசல்களைத் துப்புரவு செய்வதைத் தான் சுத்தப் படுத்துதல் என்று சொன்னேன். http://www.ccleaner.com/ எனும் இடத்திற்குப் போய் CCleaner எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கணினியில் பதிப்பு செய்து நிரலியை ஓட விடுங்கள். அடுத்து தேவை இல்லாத நிரலிகளை அகற்றி விடுங்கள். பெரிய பெரிய விளையாட்டுகள் இருந்தால்  எடுத்து விடுங்கள். இப்போது கணினி வேகமாக வேலை செய்யும்.
ஊர் பெயர் வெளியிடப் படவில்லை

கே: உங்களின் வழி காட்டுதலின் படி Blogger எனும் வலைப் பூ அமைத்து விட்டேன். ஆனால், முகப்பு பக்கம் மட்டுமே அமைக்க முடிந்தது. ஆனால், தலைப்புகள் கொடுத்து பக்க வாரியாக அமைப்பது எப்படி? சிரமம் பாராமல் வழிகாட்டவும்.

ப:
இதற்கு மேல் நாம் எப்படி உதவி செய்யலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள். இலையைப் போட்டு சாதம் போட்டு சாம்பாரும் ஊற்றி ஆகிவிட்டது. எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா! அதற்குப் பதிலாக நானே வலைப்பூவைத் தயாரித்து உங்கள் பெயரைப் போட்டு விட்டால் பிரச்னையே இல்லாமல் போய் விடும். முயற்சி செய்யுங்கள் அய்யா முயற்சி செய்யுங்கள். காலா காலத்திற்கும் வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு இடித்துத் தர முடியுமா.

1 கருத்து:

  1. தங்களின் email முகவரி கிடைத்தால் நானும் எனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன், நன்றி,,,,

    பதிலளிநீக்கு