01 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 66 (01.08.2010)

(


(மலேசிய நண்பன் 01-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம்.)

நா.சிவசக்தி, சுங்கை சிப்புட், பேராக்
கே: நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில மின்னஞ்சல்கள் நமக்கு வருகின்றன. அந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கும் அனுப்பச் சொல்கிறார்கள். அப்படி  அனுப்பவில்லை என்றால் அப்பா அம்மாவுக்குள் சண்டை வரும். அடுத்த வீட்டுக்காரர் கடன் கேட்டு வருவார். ஆலோங் வீட்டைத் தேடி வருவான் என்று பல விதமாக எச்சரிக்கை செய்கின்றனர். என்ன செய்வது? எப்படி தவிர்ப்பது? பயமாக இருக்கிறது.

ப:
இந்த அஞ்சலைப் படியுங்கள். 'இந்தக் கடிதத்தைப் பலருக்கு அனுப்பியதால், பீடோங் செல்வராகவனுக்கு  இருபது இலட்சம் வெள்ளி கூடா லாட்டரியில் கிடைத்தது. கோப்பேங் சரவணன் அனுப்பத் தவறினார். அதனால் அவருடைய ஆட்டுப் பண்ணையில் இருந்த கோழிகள் ஆயிரக் கணக்கில் செத்துப் போயின. நஷ்டம் பல இலட்சம். இந்தக் கடிதத்தை நீங்கள் இருபது பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பினால் 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும். எப்படியாவது பணம் கிடைக்கும். இல்லை என்றால் ஆந்தை வீட்டு வாசலில் கத்தும்.'

இது என்னய்யா கதை. ஆந்தை வீட்டுக் குசினிக்கே வந்து  கத்தட்டும். கத்தாமல் இருந்தால் பத்து நாளைக்கு பாயாசம் பருப்பு வடை கிடைக்கும். பாருங்கள். இப்படி எல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன. என்ன செய்வது.  இருபது இலட்சம் கிடைத்த அந்த செல்வராகவன், எந்தக் கம்பத்தில் இருக்கிறார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அஞ்சோ பத்தோ கேட்கலாம். எப்படி எல்லாம் ஆளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இன்னும் ஒன்று. ஆட்டுப் பண்ணையில் எப்படி ஆயிரக் கணக்கில் கோழிகள் வந்தன. ஆடுகள் குட்டி போடுவதற்கு பதிலாக முட்டைகள் போட்டு விட்டனவா. இவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள், மனநோயினால் பாதிக்கப் பட்டவர்கள் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்கள். கவலையை விடுங்கள்.

ஆக, இந்த மாதிரியான இமெயில்கள் இனிமேல் வந்தால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன தெரியுமா. தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். புண்ணியமாக இருக்கட்டும்.

இராக்ஷா பாண்டியன், அம்பாங் பெச்சா, கோல குபு
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா? போட வேண்டும் என்று சொல்கிறார்களே. என்? நார்த்தன் அண்டி வைரஸ் போட்டால் நல்லது என்கிறார்கள். ஆனால் விலை அதிகமாக இருக்கிறது. எனக்கு அதன் மேல் ஆசை. நீங்கள் மனசு வைத்தால் செய்ய முடியும்.

ப:
கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர்.

கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக  மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது.

அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM180.  AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?
ப:
பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் žட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும். அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணா திசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளுடன் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதை மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும்.

ஒரு கணினி 30 வினாடிகளிலிருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம்.

எஸ்.சுமிதா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: கணினி அழிவிகளைத் தடுப்பது எப்படி?
ப:
நல்ல ஒரு Antivirus எனும் தடுப்பு அழிவியை கணினிக்குள் பதித்துக் கொள்ள வேண்டும். அதை அடிக்கடி updates எனும் மேம்பாடு செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் குறுந்தட்டகங்கள், USB  எனும் விரலி போன்றவற்றை முறையாகச் சோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வேண்டாத விளையாட்டு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கிறதே என்று நண்பர்களிடம் இருந்து வாங்கி, சகட்டுமேனிக்கு உபயோகிப்பதைக் குறைப்பது நல்லது. அதிகாரப்பூர்வமில்லாத இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி அழிவிச் சோதிப்பிற்கு உட்படுத்த வேண்டும். மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். Autorun எனும் தானியங்கி முறையில் கோப்புகளை இயங்கவிட வேண்டாம்.

திரு.நல்லக்கருப்பன், பாரீட் பாஞ்சாங், பத்து பகாட்
கே: நீங்கள் அதிகமான வடச் சொற்களைக் கூட்டிச் சொல்கிறீர்கள் என்று வாசகர் ஒருவர் இணையத்தில் விமர்சனம் செய்து இருந்தார். உங்களுக்கு வருத்தம் இல்லையா?

ப:
இருபதையும் பதினெட்டையும் கூட்டிச் சொன்னால் அங்கே பள்ளிக்கூடப் பாடம் வரும். இருபது பதினெட்டைக் கூட்டிச் சென்றால் அங்கே பள்ளியறைப் பாடம் வரும். ஆக, கூட்டிச் செல்வது வேறு. கூட்டிச் சொல்வது வேறு. தமிழ் மொழிக்கும் வடச் சொல்லுக்கும் அருந்ததி பார்க்கவில்லை. அதனால் தமிழ் இருபதாக இருக்கட்டும். வடச் சொல் பதினெட்டாக இருக்கட்டும். இதில் வருத்தப்பட வேண்டி என்ன இருக்கிறது.

உலகத்தில் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் ஆறு மொழிகள் தான் செம்மொழிகள். அந்த ஆறு மொழிகளில் இரண்டு தான் தமிழும் சமஸ்கிருதமும். ஆக செம்மொழிகள் உறவு கொண்டாடுவதில் தப்பு இல்லை.


செல்வக்கன்னி, சிகாம்புட், கோலாலம்பூர்
கே: RAM என்றால் என்ன? கணினியில் அது எதற்காகப் பயன் படுகின்றது? அண்மையில் என்னுடைய கணினியில் இரண்டு ரேம்களை மாற்றினேன். மாற்றியதும் Fatal Exception Error என்று வருகிறது. அதோடு கணினியும் நின்று போகிறது. இதற்கு இந்த 'ரேம்' ஒரு காரணமா?

ப:
கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த வேலைகளைக் கணினி ஓர் இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். பொதுவாக Hard Disk எனும் வன் தட்டில் சேமித்து வைக்கும். இந்த வன் தட்டில் சேமித்து வைப்பதற்கு முன்னால் அது வேறு எங்கேயாவது தற்காலிகமாகச் சேமித்து வைக்க வேண்டும்.

அதற்குத் தான் இந்த RAM பயன் படுகிறது. RAM என்றால் Random Access Memory. தமிழில் தற்காலிக நினைவி அல்லது இடை மாற்றகம் என்று சொல்லலாம். இந்தத் தற்காலிக நினைவியின் ஆற்றலைக் கூட்டுவதற்காக புதிய நினைவிகளைச் சேர்ப்பது உண்டு.

அப்படி சேர்க்கும் போது வெவ்வேறு வேகம் உள்ள நினைவிகளைச் சேர்த்தால் அவை ஒன்றுக்கு ஒன்று இணைந்து போக முடியாத நிலைமை ஏற்படும். ஒரு நினைவின் வேகம் 133 ஆக இருக்கும். இன்னொன்றின் வேகம் 288 ஆக இருக்கும்.

இந்த இரண்டுமே முரண்பாடான வேக அளவு. அதனால், கணினி தடுமாறிப் போய் இரண்டுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி செய்யும். இந்தக் கட்டத்தில் எந்த நினைவியின் வேகம் குறைவாக இருக்கிறதோ அந்த நினைவியைத் தான் முதல் நிலை நினைவியாகக் கணினி ஏற்றுக் கொள்ளும். முதல் நிலை நினைவி என்றால் Default RAM. புரிகிறதா.

அப்படி முதல் நிலை நினைவியாக ஏற்றுக் கொள்ளப் படும் போது அந்த நினைவியால் கணினியின் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தால் பிரச்னை இல்லை. ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் Fatal Exception Error எனும் அறிவிப்பு வரும். இதைத் தமிழில் தவிர்க்க முடியாத இயக்கப் பிழை என்று சொல்லலாம்.

அத்துடன் கணினிக்கு கிறுக்கு வந்து நீலத் திரையைக் காட்டும். நமக்கும் மண்டை சுற்றிப் போகும். தப்பாக நினைக்க வேண்டாம். ஆக, விஷயம் தெரியாமல் கணினிக்குள் கையை வைக்க வேண்டாம்.


ஊர் பேர் இல்லை (குறும் செய்தி 20.05.2010)
கே: என் கணினியில் நான்கு மாதங்களாக Streamyx 384 kbps பயன்படுத்துகிறேன். மிகத் தாமதமாக அகப் பக்கத்திற்குள் நுழைகிறது. Reformat செய்வது நல்லதா?

ப:
தயவு செய்து ஊர் பேர் போட்டு கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் 384 kbps தொலைத் தொடர்பு இணைய வசதி என்பது மின்னஞ்சல்களைப் பார்த்து படிப்பதற்கு உரியது. அதன் கட்டணம் குறைவு. அதனால் தாமதமாக வேலை செய்யும். நிச்சயமாக அகப் பக்கங்கள் தாமதமாகத்தான் வரும். Reformat எனும் சுத்திகரிப்பு செய்ய வேண்டாம். அதன் வேகத்தைக் மேம்படுத்த டெலிகம்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் 100 எனும் எண்களுக்கு அழைத்துக் கேளுங்கள். இப்போது 1Gh லிருந்து 5Gh வரையிலான இணையத் தொடர்புச் சேவைகள் வந்துவிட்டன.



சி.குணசேகரன், புக்கிட் கெமுனிங், கிள்ளான்
கே: என்னுடைய கடன் அட்டையில் MEPS எனும் எழுத்து கள் உள்ளன. அதன் அர்த்தம் என்ன சார்?
ப:
Malaysian Electronic Payment System என்பதுதான் MEPS எனும் எழுத்து களின் பொருள். இந்த எழுத்து குறிகள் இருந்தால் போதும். உலகத்திலுள்ள எந்த வங்கியும் உடனே பணத்தைக் கொடுத்து விடும். இன்னும் ஒரு விஷயம். இந்த சின்னம் உள்ள அட்டையில் அறவே பணம் இல்லை என்றாலும் வெளி நாட்டில் மலேசியர்கள் இருந்தால் 100 அமெரிக்க டாலர்கள் வரை கடனாகவும் எடுக்கலாம். இது மலேசியர்களுக்கு மட்டுமே உள்ள உலகளாவிய ஓர் உடன் படிக்கை. ஆனால், சிப்பாங் விமான நிலையத்திலேயே கேட்டு வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடக் கூடாது.



திருவே பாலசேனா, பத்து தீக்கா, ஷா ஆலாம்.

கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?

ப:
Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த ஆவணத்தின் மீது உங்கள் சுழலியை வைத்து வலது சொடுக்குசெய்யுங்கள். அதில் Hidden என்பதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள்.

அப்புறம் உங்களுடைய கணினித் திறையில் ஆக மேலே போனால் Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாது காப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.
http://uploading.com/files/7c2m47de/Folder_Lock_6%25252C3.1.rar/
எனும் இடத்தில் Folder Lock எனும் ஒரு நல்ல நிரலி கிடைக்கும். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1 கருத்து:

  1. வணக்கம் ஐயா.

    தங்களின் வலைப்பதிவைத் திருமன்றில் திரட்டியில் இணைத்துள்ளேன். பார்க்கவும்.

    http://thirumandril.blogspot.com/

    இனிய தமிழை இணையத்தில் இணைந்து வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு