15 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 68 (15.08.2010)

(மலேசிய நண்பன் 15-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும். )

குடும்ப மாது, ஊர் பெயர் வெளியிடப் படவில்லை.

கே: எனக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்கள் வீட்டில் மூன்று கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். வீட்டின் கீழ் மாடியில் உள்ள கணினியைப் பயன் படுத்துவார்கள். அண்மையில் நாங்கள் குடும்பத்துடன் லங்காவி தீவிற்கு மூன்று நாள்கள் சுற்றுலா போய் இருந்தோம். வீடு திரும்பினோம். ஒரு பெரிய  அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னஞ்சல் படிக்க கணினியைத் திறந்தேன். ஆபாச அகப் பக்கங்கள் அடுத்து அடுத்து வருகின்றன. யார் அப்படி செய்தது என்று தெரியவில்லை. அந்தப் பக்கங்கள் வருவதை எப்படி நிறுத்துவது?  போலீசில் புகார் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.
(இவர் கைப்பேசியில் அழுது கொண்டே தன் வேதனைகளைச் சொல்கிறார்.)

ப:
அழுகை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அழுகையின் பின்னால் ஓர் உறுதியான உண்மை இருக்கிறது. அங்கேதான் இந்தப் பெண்மணி ஓர் அழகான அற்புதமான குடும்பப் பெண்ணாக நிற்கிறார். இது ஓர் உணர்வு சார்ந்த பிரச்னை. ஓர் உறுதியான தீர்வு காணும் தேடல் முயற்சி.

உங்களின் மன ஆதங்கத்தைக் கொட்ட ஒரு நல்ல இடத்தைத் தேடினீர்கள். சரியான இடத்திற்கு வந்தும் இருக்கிறீர்கள்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள். சரியா. பாத்திரம் எப்படிப் பட்டது என்பது இங்கே அர்த்தம் இல்லை. பாத்திரம் ஏந்தி இருப்பவர் இருக்கிறாரே அவர் ஒரு கதாபாத்திரம். அந்தப் பாத்திரம் சுயமாக ஜீவனம் செய்யக் கூடியவரா.  வயதானவரா. உடல் ஊனம் உள்ளவரா.

மனநிலை பாதிக்கப் பட்டவரா. இல்லை மனைவி மக்களைப் பிரிந்தவரா. இப்படிப் பார்க்கச் சொல்லிதான் அந்தப் பழமொழி வந்தது.

பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா. ஓட்டை ஒடிசல் இருக்கிறதா என்று பார்த்து பிச்சை போடச் சொல்லவில்லை. அலுமினியமா, தகரமா, தண்டவாளத்து இரும்பா என்று பார்க்கச் சொல்லவும் இல்லை.

யாரையும் வீட்டில் குடி வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பது ரொம்பவும் தப்பு. ஒன்று தெரியுமா.

அன்னம் இட்ட வீட்டில் கன்னக் கோல் சாத்துவது இருக்கிறதே அது பாவத்திலும் பெரிய பாவம். சரி. அந்தப் படங்களை வர வைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதன்படி செய்யுங்கள்.

வீட்டுக்கு உள்ளேதான் ஓநாய் ஓலம் போடுகிறது. அதைப் பிடிக்க வீட்டுக்கு வெளியே கோலம் போட அவசியம் இல்லை.

போலீசில் புகார் செய்யலாம். தப்பு இல்லை. ஆனால் அதன் பின்னால் வரும் பிரச்னை இருக்கிறதே அது தீர்ந்து விடுமா. அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா. உங்கள் கணவருக்குத் தெரிந்தால் அடுத்த கப்பலைப் பிடித்து வருவார். கூடவே சிவகாசி அரிவாள், வீச்சு கத்திகள் என்று வந்து குவியும். தேவையா. அப்புறம் என்ன? தமிழ் சினிமாவுக்கு ஓர் அருமையான கரு கிடைத்த மாதிரியாகவும்  இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உடனடியாக இணையச் சேவையை நிறுத்தி விடுங்கள். அல்லது  கணினியை எடுத்து உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயன் படுத்த அனுமதிக்க வேண்டாம். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை.

மூன்று பேரில் யாருக்கு வக்கிரப் புத்தி என்று ஆராய்வதை நிறுத்துங்கள். சின்ன வயசுப் பையன்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள். அவ்வளவுதான்.

பருவக் கோளாறுகள் பேசும் சில்லறைத் தனமான ஆசைகள். அவர்கள் பந்த பாசங்களைத் தாண்டிப் போகும் நவீனக் காலத்தில் வாழ்கிறார்கள். அந்தப் பையன்களை உங்கள் மகன்களாக நினைத்து மன்னித்து விடுங்கள்.

உடனடியாக வீட்டை விட்டுப் போகச் சொல்ல வேண்டாம். அவர்களுடைய படிப்பு பாதிக்கும். வீட்டை விற்கப் போவதாகச் சொல்லி மெதுவாக அப்புறப் படுத்தி விடுங்கள்.

எதிர்காலத்தில் மூன்று இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் ஐக்கியமான பாவம் நம்மை வந்து சேரக் கூடாது. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்.


சுப்ரீம் சூரியா, செலாயாங், சிலாங்கூர்
கே: சென்ற வாரம் Facebook என்பதை முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருந்தீர்கள். அது தவறு. பேஸ்புக் என்பது ஒரு நிறுவனம். ஒரு வாணிகச் சின்னம். அதை மாற்ற முடியாது. நோக்கியா என்பது நோக்கியா தான். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் என்றால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான். முகநூல் என்பது நேரடியான மொழியாக்கமே. அர்த்தத்தை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும். வார்த்தையை நேரடியாக மொழி பெயர்க்கக் கூடாது. இது என்னுடைய பணிவான கருத்து. சரியான கருத்தும் கூட.

ப:
மொழி பெயர்ப்பு என்பது வேறு. மொழியாக்கம் என்பது வேறு. இந்த இரண்டுக்கும் இடையில் நடை முறைத் தாக்கம் வருகிறது. ஆக, காலத்திற்கு ஏற்றவாறு நாம் புதியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். Facebook என்பதை முகநூல் என்று அழைப்பது ஒரு நடைமுறைக்கு வந்துவிட்டது.

நேரடியாக முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறோம். முகநூல் என்பது ஒரு செம்மையான தமிழ்ச் சொல்லாக மாறிவிட்டது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Facebook நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்யவில்லை. உங்கள் பணிவான கருத்துக்கு மிக்க நன்றி.

திருமதி வர்ஷா, கோலாலம்பூர்
கே: நான் இண்டல் கோர்2 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்துகிறேன். முன்பு எல்லாம் ஒரு நிமிடத்தில் ஒரு பாடலைப் பதிவு இறக்கம் செய்து விடுவேன். இப்போது 20 நிமிடங்கள் பிடிக்கின்றன. ஆனால், இணையத்தின் வேகம் குறையவில்லை. பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது. என்ன பிரச்னை?

ப:
இணையத்தில் அகப் பக்கங்கள் வேகமாகத் திறக்கப் படுகின்றன. ஆனால் Download எனும் பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது என்று சொல்கிறீர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இணையச் சேவையை வழங்கும் டி.எம்.நெட் பதிவிறக்க வேகத்தைக் குறைத்து இருக்கலாம். இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் இந்தப் பதிவிறக்க வேகம் கூடும் அல்லது குறையும். இது வழக்கமான ஒன்று.

எதற்கும் நீங்கள் 100 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசுங்கள். உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். நிச்சயம் உதவி செய்வார்கள். தற்சமயத்திற்கு பதிவிறக்க நிரலி ஒன்றை வழங்குகிறேன். எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய 012-5838171 எனும் கைப்பேசி

எண்களுக்கு அழையுங்கள். அந்த நிரலி கீழ்காணும் தளத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://rapidshare.com/files/235451291/Internet_Download_Manager_5.17_Build_4_Full.zip

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும். உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.

உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன். http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன.

முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம். பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள்.

எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க.

இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.

இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச்

சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

2 கருத்துகள்:

  1. நல்ல உபயோகமான தகவல்கள்

    பதிலளிநீக்கு
  2. //அந்தப் பக்கங்கள் வருவதை எப்படி நிறுத்துவது?// இதுதான் அந்த குடும்ப மாதுவின் கேள்வி என்று நினைக்கிறேன். உங்களின் சமுதாய உணர்வும் அறிவுரையும் போற்றத்தக்கது, ஆயினும் அதுபோன்ற பக்கங்கள் வந்தால் தடுப்பது எவ்வாறு என்பதையும் சொல்லி இருந்தால் அவருக்கு பயனாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு