10 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 74

(அன்புள்ள வாசகர்களே, அண்மையில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஈப்போ மருத்துவமனையில் CCU பிரிவில்  ஒரு வாரம் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அதனால் சரிவர மேல் பதிவுகள் செய்ய முடியவில்லை. இப்போது உடல் நலம் தேறி வருகிறது.  மறுபடியும் பழைய நிலைக்கு வர சில நாட்கள் பிடிக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.)
ksmuthukrishnan@gmail.com

எஸ்.பி.பாலக்கிருஷ்ணன்  oum9100@yahoo.com.sg
கே: வலைத் திரட்டி என்றால் என்ன?
ப: இணையத்தில் இலட்சக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. இந்த வலைப் பதிவுகளை எல்லாம் ஓர் இடத்தில் ஒன்று திரட்டி தொகுத்துத் தரும் இணையத் தளத்திற்குப் பெயர் தான் வலைத் திரட்டி.

தமிழில் பல திரட்டிகள் உள்ளன. தமிழ் மணம், தமிழிஷ், உலவு, தமிழ் 10, திரட்டி, இண்டிலி, தமிழ்ப் பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சாம் ஜோசுவா sam.jo511@gmail.com
கே: பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களுக்காகக் கணினி பயிலரங்கம் நடத்தவிருப்பதாகக் கேள்வி பட்டோம். எத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்? கலந்து கொள்ள என்ன தகுதி தேவை?

ப:
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் கணினிப் பயன் பாட்டில் பின் தங்கி விடக் கூடாது. சிறந்து விளங்க வேண்டும் எனும் ஒரு தூர நோக்குச் சிந்தனை. 25.09.2010 - 26.09.2010 ஆகிய இரு தினங்களில் லூமுட் - தெலுக் பாத்தேக் கடல் கரை மையத்தில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்கம் நடைபெறுகிறது.

மாண்புமிகு டத்தோ வீரசிங்கம் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 60 தமிழ் எழுத்தாளர்களும் 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்கிறார்கள். கணினியில் தமிழை உள்ளீடு செய்வது; தமிழ் நிரலிகளைக் கணினிக்குள் நிறுவுவது; தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது; தமிழில் வலைப் பூக்கள் தயாரிப்பது போன்ற விவரங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்யப் படுகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் வரலாற்றில் இது ஒரு முன்னோடித் திட்டம். கணினிச் சகாப்தத்தில் தமிழ் எழுத்தாளர்கள் முத்திரை பதிக்கும் ஒரு காலக் கட்டம்.

இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனக்கு என்று ஓர் இணையத் தளத்தையும் உருவாக்கிச் சாதனை படைக்கிறது.

இந்தப் பயிலரங்கத்திற்கு உயிரோட்டம் வழங்கி வரும் மூத்த எழுத்தாளர்கள் இராம.பெருமாள், சித.நாராயணன், திருமதி.கமலாட்சி ஆறுமுகம், ஜி.பி.செல்வம், மா.செ.மாயதேவன் ஆகியோருக்கு நம்முடைய பாராட்டுகள். வாழ்த்து கள்.
http://peraktamilwriters.blogspot.com

நவீனச் செல்வம், தாப்பா  (குறும் செய்தி 05.09.2010)
கே: இணையத்திலிருந்து காப்பி அடித்து கேள்விகளுக்குப் பதில் கொடுத்து நல்ல பேர் வாங்குவது  பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:
சாயம் அடிக்கப் பயன் படுத்திய ஏணியை எட்டி உதைத்துச் சந்தோஷப் படுபவர்களைப் பற்றி நினைக்க நேரம் இல்லை.

கல்லூரி மாணவி, ஜொகூர் பாரு
கே: என்னுடைய கணினியில் நிறைய Virus எனும் அழிவிகள் நுழைந்து விட்டதாக நினைக்கிறேன். கணினி மெதுவாக வேலை செய்கிறது. கணினியை Format சுத்திகரிப்பு செய்ய வேண்டுமா?

ப: கணினி மெதுவாக வேலை செய்தால் வைரஸ்கள் கணினிக்குள் நுழைந்து விட்டன என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், வைரஸ்களின் தாக்குதலினால் தான் ஒரு கணினி மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு பொதுவான முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. மற்ற காரணங்களும் இருக்கின்றன. 

அதற்காகக் கணினியைச் சுத்திகரிப்பு செய்துதான் ஆக வேண்டும் எனும் அவசியம் இல்லை. Hard Disk என்பது கணினியின் உயிர்ப் பொருள்களில் ஒன்று. அந்த வன் தட்டை அடிக்கடி சுத்திகரிப்புச் செய்யக் கூடாது.

சுத்திகரிப்பு என்றால் Format. வன் தட்டின்  ஆயுள் காலத்தில் ஒரு பத்து தடவை வரை சுத்திகரிப்பு செய்யலாம். அதற்கு மேல் போகக்கூடாது.

அப்புறம் அதன் செயல் திறன் குறையும். இல்லாத பிரச்னைகளைக் கொடுக்கும். அவசியம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் NTFS எனும் கோப்பு முறையில் செய்யுங்கள். FAT 32 முறையில் செய்யவே வேண்டாம்.

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள். தேவை இல்லாத ஆவணங்கள், விளையாட்டு நிரலிகள், படங்கள், பாடல்கள் இருந்தால் முடிந்த வரையில் குறைத்து விடுங்கள்.

ஒரு சிலரின் கணினிகளில் தேவை இல்லாத படங்கள், பாடல்கள் என்று மலை மலையாகக் குவிந்து கிடக்கும். குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைத் தொட்டியாகக் கணினியை  மாற்றக் கூடாது.

கணினி மனுக்குலத்திற்கு கிடைத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதைத் தெய்வமாக நினைத்து மரியாதை செய்யுங்கள்.

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com
கே: RSS என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப:
Rich Site Summary அல்லது Really Simple Syndication என்பதன் சுருக்கமே RSS. தமிழில் இதைச் செய்தி ஓடை என்று அழைக்கிறார்கள்.

இணையத்தில் உலா வரும் இலட்சக்கணக்கான வலைப் பதிவுகளில் நமக்குப் பிடித்தவை என்று ஒரு சில இருக்கலாம்.

இந்த வலைப் பதிவுகளின் செய்திகளைத் தொடர்ந்து படிக்கத் தான் இந்தச் செய்தி ஓடை முறையைப் பயன் படுத்துகிறார்கள்.

ஒரு வலைப் பதிவில் காணப் படும் செய்தி ஓடையில் பதிந்து கொண்டால் அந்த வலைப் பதிவில் இருந்து அறிவிப்புகள் வரும்.  அந்த அறிவிப்புகளின் வழி  செய்திகளைத் தடை இல்லாமல் படிக்கலாம்.

6 கருத்துகள்:

  1. தங்களது உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக!

    சிறந்த பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10/11/10, PM 8:06

    நீங்கள் நலம் பெறவும்,இன்னும் பல ஆயிரம் பதிவுகள்இடவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

    -அன்புடன் பல்லவன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி. தங்களுடைய வேண்டுதலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் விரைவில் உடல்நலம் பெற இறைவன் உங்களுக்கு துணை புரிய வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம். இப்போது பழைய திரட்டிகள் எதுவும் செயல்படுவதில்லை. ஆகவே புதுமை படைக்கக் காத்திருக்கிறது வலை ஓலை. வாருங்கள் மீண்டும் எழுதலாம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வலை ஓலை - புதிய வலைத்திரட்டி

    பதிலளிநீக்கு