28 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 79

(விக்கிபீடியாவில் மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன். படித்துப்  பாருங்கள். உங்களுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.)
இணைய முகவரி:
http://ta.wikipedia.org/wiki/மலாக்கா
http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா_(சுல்தான்)

http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்


ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: அண்மையில் என் தோழியின் தந்தையார் இரண்டு பழைய கணினிகளை வீட்டுக்கு கொண்டு வந்தார். அந்தக் கணினிகள் இலவசமாகக் கிடைத்தவை என்று சொன்னார். அவருக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது. கடைசியில் அவருடைய நண்பர் RM 1560 க்கு இவரிடம் விற்று இருக்கிறார். ஒரு கணினி AMD Athlon 1050, 64 Ram, 20 GB வன் தட்டு; மற்றொன்று Intel Celeron 2.0, 64 Ram, 20 GB வன் தட்டு. அவர் அதிகமாக விலை கொடுத்து வாங்கி இருக்கலாம் என்று வேதனையாக இருக்கிறது. அவற்றில் கள்ள விண்டோஸ் செயலியைப் பதித்து இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்தக் கணினிகள்

ப: அதிகம் விலை கொடுத்து வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இந்த மாதிரியான கணினிகளை யாரும் பயன் படுத்துவது இல்லையே என்பது தான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. அவை பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்தக் கணினிகள். கணினி உலகில் இருந்து கரைந்து போன கணினிகள்.

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். இந்தப் பழைய கணினிகளைச் சும்மா கொடுத்தால் கூட வேண்டாம் என்று சிலர் சொல்லும் அளவுக்கு அவை மிகப் பழமையானவை. உங்கள் தோழியின் தந்தையார் ஏமாற்றப் பட்டிருக்கிறார். கணினிகளைத் திருப்பிக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி வரச் சொல்லுங்கள்.

விற்றவர் பிரச்னை கொடுத்தால் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏமாற்றியதாகப் புகார் செய்யுங்கள். அல்லது 1-800-887-800 எனும் எண்களுக்கு அழையுங்கள். கள்ளத் தனமான  விண்டோஸ் செயலியைப் பதித்து ஏமாற்றி உள்ளதாகப்  புகார் செய்யுங்கள். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

ஆஷா ராணி <ahsha145@yahoo.com>
கே: சார், வணக்கம். தமிழ் எழுத்துக்களில் TAM என்றும் TAB என்றும் இருக்கின்றன. இரண்டும் வேறு வகையைச் சேர்ந்தவையா. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. தெளிவு படுத்துங்கள்.

ப:
நல்ல கேள்வி. TAM என்றால் Tamil Mono-lingual என்று பொருள். தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டு இயங்குவது. ஆங்கில எழுத்துக்களைப் பயன் படுத்த முடியாது. TAB என்றால் Tamil Bilingual என்று பொருள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற முடியும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற முடியும்.

தமிழில் ஒரு கட்டுரை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இடையில் ஆங்கிலச் சொல் ஒன்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்றால் எழுத்துருக்கள் TAB முறையில் இருக்க வேண்டும். TAM முறையில் இருந்தால் ஆங்கில எழுத்துக்கள் வரா.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கத் தான் Unicode முறை அமலுக்கு வந்துள்ளது. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள லதா, சுருதி, மங்கல், கௌதமி, கார்த்திகா போன்ற எழுத்துருக்களைப் பார்த்து இருப்பீர்கள். அவை  யூனிகோடு முறையைச் சேர்ந்தவை. எதிர்காலத்தில் கணினி உலகில் எல்லாத் தமிழர்களும் இந்த யூனிகோடு முறையைத் தான் பயன் படுத்த வேண்டும்.

ஜெய்சங்கர் <jai_sankar@rocketmail.com>
கே: சூரிய ஒளியில் இயங்கக் கூடிய கணினித் தட்டசுப் பலகை (Key Board) வந்து விட்டதாக அமெரிக்காவில் உள்ள என் நண்பர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை சார்?

ப:
உங்கள் நண்பர் சொல்வது உண்மை. அதில் இன்னும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரிய ஒளியில் இயங்கும் அந்தத் தட்டசுப் பலகைக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது கம்பித் தொடர்புகள் இல்லாமல் இயங்கும் ஆற்றலைப் பெற்றது. அதாவது Solar Wireless Keyboard.

அந்தத் தட்டசுப் பலகையை சூரிய ஒளியில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிற்குள் வைத்து இருந்தாலும் போதும். சூரிய ஒளியைக் கிரகித்து தனது மின்கலத்தில் சக்தியைச் சேமித்துக் கொள்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லோஜிடெக் நிறுவனம் கண்டுபிடித்து இருக்கிறது. மலேசியாவின் பெரிய நகரங்களில் கிடைக்கின்றன.

விலை தான் கொஞ்சம் அதிகம். மலேசிய ரிங்கிட் 250. மனசு வைத்தால் வாங்கலாம். ஒரு சின்னக் கணக்கு போடுங்களேன். ஒரு தடவை குடும்பத்தோடு வெளியே போய்ச் சாப்பிட்டால் நூறு ரிங்கிட் வருகிறது. இரண்டு தடவை போனால் 200 ரிங்கிட். அப்புறம் பெட்ரோல், டோல், டிப்ஸ், அது இது என்று வந்து சேர்ந்து விடும் இல்லையா. இரண்டு தடவை போகாமல் இருந்தால் ஒரு கம்பியில்லா சூரிய ஒளி தட்டச்சு பலகையை வாங்கி விடலாம்.

எல்லாம் சரி. சூரிய ஒளியில் இயங்கும் மடிக்கணினிகளும் விற்பனைக்கு வந்து விட்டன. அது தெரியுமா உங்களுக்கு. Solar Powered Computers என்று சொல்கிறார்கள். அந்தக் கணினிகளுக்கு மின்சாரம் தேவை இல்லை. கணினி உலகம் எங்கேயோ போய் விட்டது ஐயா. விரட்டிப் பிடியுங்கள்.

மகாதேவன் வி.கே.  <mthevan31@gmail.com>
கே: நம்முடைய படத்தை ஒரு விளம்பரப் படமாக மாற்றும் ஒரு நிரலி இணையத்தில் இருப்பதாகக் கேள்வி பட்டேன். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

ப:
நீங்கள் சொல்வது Photo Funia எனும் இணையத் தளதைச்  சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது ஓர் இலவசச் சேவை நிறுவனம். உங்களுடைய படத்தைப் பதிவேற்றம் செய்தால் போதும். ஒரு பெரிய கட்டிடத்தில் உங்கள் படம் பெரிதாகத் தொங்கிக் கொண்டிருப்பது போல இன்னொரு படத்தை உருவாக்கித் தருவார்கள். இரண்டு இளம் பெண்கள் அந்தப் படத்தை மாட்டுவது போலவும்  பதாகையைச் செய்து கொடுப்பார்கள்.

அருமையான தொழிநுட்ப இணையத் தளம். http://www.photofunia.com/ எனும் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 300 வகையான விளம்பரப் படங்கள் உள்ளன. எதைத் தேர்ந்து எடுப்பது எதை விட்டு வைப்பது என்று உங்களுக்கே தலை சுற்றி விடும். என்னுடைய வலைத்  தளத்தில் இருந்து அந்த இணையத் தளத்திற்கு  நேரிடையாகத் தொடர்பு கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக