05 December 2010

கணினியும் நீங்களும் - பகுதி 80


சரவணக் குமார், ரவுப்
கே: அண்ணா, எங்கள் பகுதியில் அம்புலி மாமா இதழ் கிடைப்பது இல்லை. இணையத்தில் கிடைக்குமா?


ப: ஒரு காலத்தில் அம்புலி மாமா கதைகளைப் படிப்பதற்கு பைத்தியம் பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். அது ஒரு கனாக் காலம். இப்போது அந்த இதழைப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் இணையத்தில் வருகிறது. அதன் முகவரி: http://www.chandamama.com/lang/TAM/index.htm. இது ஓர் இலவசச் சேவை.


சந்தனா செல்வம், முனிச், ஜெர்மனி <santhana14@gmail.com>
கே: வணக்கம் சார், நீங்கள் 1977 ஆம் ஆண்டு பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் எனக்கு ஆங்கில மொழி ஆசிரியராக இருந்தீர்கள். நீங்கள் மறந்து இருப்பீர்கள்.  ஆனால், நாங்கள் உங்களை மறக்கவில்லை. நான் இப்போது ஜெர்மன் Deutche Welle தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணி புரிகிறேன். சார், இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பகுதியில்  தாங்களும் எழுதி வருகிறீர்கள் என்று கேள்விப் பட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ப:
33 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை இன்னும் மறக்காமல் இருக்கும் உங்களுக்கு நன்றிகள். தங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். ஞாபகம் வரவில்லை. விக்கிப்பீடியாவின் பதிப்பாசிரியர்கள் உலகம் முழுமையும் பரவி இருக்கின்றனர். அனைவரும் சிறந்த கல்வியாளர்கள். ஊதியம் வாங்காமல் உலக மக்களுக்காக உழைக்கின்றனர்.
http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா_(சுல்தான்)#
எனும் முகவரியில் பரமேஸ்வராவின் வரலாறு இருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/மலாக்கா

எனும் இடத்தில் மலாக்காவைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும். நீங்களும் ஒரு பதிப்பாளராக விரும்புகிறீர்களா. முடியும். முயற்சி செய்யுங்கள். நிறைய பேர் விக்கிப்பீடியாவின் பயனர்களாக மாற வேண்டும். அதுவே என்னுடைய ஆசை.

மோகன் தாஸ், தாமான் செம்பாக்கா, கூலிம், கெடா
கே: உங்களுக்கு நிறைய எஸ்.எம்.எஸ் வரும். அதில் ஏதாவது ஒரு காதல் எஸ்.எம்.எஸ் இருந்தால் சொல்லுங்கள். நல்ல எஸ்.எம்.எஸ் ஆக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் பயனாகவும்  இருக்க வேண்டும்.

ப:
கேட்கிறதோ காதல் எஸ்.எம்.எஸ். அப்புறம் அதில் போய் என்னய்யா நல்ல எஸ்.எம்.எஸ். கெட்ட எஸ்.எம்.எஸ். இதில் வேறு மற்றவர்களுக்குப் பயனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். தம்பி மோகன் தாஸ் அவர்களே! நமக்கு காதல் எஸ்.எம்.எஸ் எல்லாம் வருவது இல்லை. வந்தால் கம்பியூட்டர் எஸ்.எம்.எஸ். தான் வரும்.

உங்களுக்காக ஓர் எஸ்.எம்.எஸ். "காதல் ஒரு பட்டாம்பூச்சி, லேசாப் பிடிச்சா பறந்துடும், இறுக்கிப் பிடிச்சா இறந்துடும்!" சரியா. இன்னும் ஒன்று வருகிறது.  "காதல் என்பது ஒரு கழுதை. முன்னே போனால் முட்டும். பின்னே வந்தால் உதைக்கும்." நீங்கள் எந்தப் பக்கம் போகப் போகிறீர்கள்.

சுமித்ரா தேவி, தாமான் காயாபாரு, பாகன் டத்தோ
கே: நான் ஒரு பள்ளி மாணவி. உயர்நிலைப் பள்ளியில்  படிவம் ஐந்து படிக்கிறேன். வீட்டில் Streamyx அகல அலை வரிசை இணையச் சேவை உள்ளது. Facebook சமூக இணையத் தளத்தில் என்னைப் போன்ற படிக்கும் பெண்கள் தங்களுடைய முகவரி விவரங்களைத் தெரியப் படுத்தினால் ஆபத்து வருமா?

ப: அது என்ன ஆபத்து வருமா வராதா. ஆபத்து கள் ஆயிரக் கணக்கில்  வரும். இணையம் என்பது ஒரு மாயை உலகம். அங்கே நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எல்லா  சமயங்களிலும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மாணவிகளுக்கும் இளம் பெண்களுக்கும் சில முக்கியமான தகவல் குறிப்புகளைத் தருகிறேன். அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

1. அந்தரங்கமான தகவல்களைத் தயவு செய்து இணையத்தில்  பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களுடைய கைப்பேசி எண்கள், வீட்டு முகவரியை முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டாம். குடும்பத் தகவல்களைச் சொல்லவே கூடாது.

2. உங்களுடைய படத்தைப் பிரசுரிக்க அனுமதிக்க வேண்டாம். அவதார் எனும் நகல் படத்தைக் கொடுக்கவும்.

3. உங்களுக்குத் தெரியாதவரின் இனிமையான வேண்டுகோள்களை, கனிவான அழைப்புகளைப் புறக்கணியுங்கள்.  ஒருவர் இணையத்தில் அழகாகத் தோற்றம் அளிக்கலாம். சரம் சரமாய்க் கவிதைகள் பாடலாம். திருப்பிப் போட்டால் அது ஒரு கருநாகமாக இருக்கும். புரிகிறதா. அப்படியே பழக்கம் ஏற்பட்டு அவர் உங்களுக்கு அநாகரிகமான செய்திகள் எதையாவது அனுப்பினால் உடனடியாக அப்பா அம்மாவிடம் சொல்லி விடுங்கள். அவர்களிடம் மறைக்க வேண்டாம்.

4. அடுத்து  நல்ல ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டு அவர் உங்களைச் சந்திக்க விரும்பலாம். ஆள் நடமாட்டம் உள்ள பொதுவான இடத்தில் சந்திக்கவும். பெற்றோர்களில் யாரையாவது ஒருவரை உடன் அழைத்துச் செல்லவும். தனியாகச் செல்லவே வேண்டாம்.

5. பேஸ்புக், டிவிட்டர், மை ஸ்பேஸ்  போன்ற சமூக இணையத் தளங்களில் settings என்று சொல்லப்படும் தனிப்பட்ட அமைப்புகளில் "private" என்பதைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அனுமதி அளித்தவர்கள் மட்டுமே உங்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக்கும் படியாக இருக்க வேண்டும். எல்லாரும் பார்க்கும் படியாக இருக்கக் கூடாது.

6. படங்களைப் பிரசுரிக்க வேண்டும் என்றால் எந்தப் படங்களைப் பிரசுரிக்கலாம் என்பதை அப்பா அம்மா முடிவு செய்யட்டும். உங்கள் இஷ்டத்திற்கு தேர்வு செய்ய வேண்டாம். திருமணமாகிப் போகும் வரை உங்கள் பெற்றோர் தான் உங்களுக்குக்  காவலாளிகள்.

7. இத்தனை மணிக்கு இந்த இடத்தில் இருப்பேன்; இன்னது செய்து கொண்டிருப்பேன் என்று பகிங்கரமாக இணையத்தில்  சொல்லவே வேண்டாம்.

8. நீங்கள் சந்தேகப் படும் மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்.

9. முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள், ஊர் பேர் தெரியாதவர்களின் மின்னஞ்சல் அழைப்புகளைத் தவிர்க்கவும். அந்த மாதிரியான மின் அஞ்சல்களை உடனே அழித்து விடுங்கள்.

10. ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது  உங்களுடைய Password எனும் கடவுச்
சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.

11. உங்கள் தோழிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் இருந்தால் பகிங்கரமாக இணையத்தில் விவாதம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இன்றைக்கு உங்கள் தோழி. நாளைக்கு நீங்கள்.

12. இணையம் மூலமாகப் பணம் செலுத்த வேண்டும் என்றால் அப்பா அம்மாவின் அனுமதியை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவர்களின் கடன் அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

இணையத்தில் சாக்கடைச் சங்கதிகள் சரசம் பாடுகின்றன. பார்த்து நடந்து கொள்ளுங்கள். நான் சொன்னதை ஒரு தகப்பனின் புத்திமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போடுங்கள்.

திருமதி. இராசாத்தி, மந்தின்
கே: நான் விண்டோஸ் XP இயங்குதளத்தைப் பயன் படுத்துகிறேன். இந்த இயங்குதளம் நன்றாக வேலை செய்யும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், My Computer எனும் கோப்பு உறையைச் சொடுக்கினால் வெகு நேரம் காத்து இருக்க வேண்டி இருக்கிறது. žக்கிரமாகத் திறக்க வழி இருக்கிறதா?

ப: விண்டோஸ் இயங்குதளத்தில் கோளாறு எதுவும் இல்லை. கோப்புகளைத் திறக்கும் கணினி அமைப்பு settings முறையில் தான் கோளாறுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. My Computer எனும் கோப்பு உறையைச் சொடுக்கி திறந்து கொள்ளுங்கள். ஆக மேலே Tools இருக்கும். அதைச் சொடுக்குங்கள்.

அப்புறம் Folder Options >> View >> Files and Folders >> எனும் பட்டியல் வரும்.  அதில் Automatically search for network folders and printers என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதன் இடது புறத்தில் ஒரு தணிக்கைச் சதுரக் கட்டம் இருக்கும். அதில் சரி என்று இருக்கும் அடையாளத்தை நீக்கி விடுங்கள். அந்தச் சதுரக் கட்டம் காலியாக இருக்க வேண்டும். அதன் பின்னர் கோப்பு உறைகளைச் சொடுக்கினால் வேகமாகத் திறக்கும்.

No comments:

Post a Comment