14 டிசம்பர் 2010

இமயம் கரைகிறது இதயம் உறைகிறது


உலகத்திலேயே உயரமான மலை. ஊழி ஊழி காலத்திற்கும் உன்னதமானக் கலை பேசும் ஓர் ஓவியம். மனுக்குலத்தின் மகிமை பாடும் இயற்கையின் புனிதப் பரிமாணம். அந்த வழியாகத் தான்  கங்கையும் ஓடுகின்றது. அழகு அழகாய் அமுத கானமும் பாடுகின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அன்னதானமும் செய்கின்றது.

இருந்தாலும் பாருங்கள். உலகத்தின் உயரமான சிகரத்தில் ஏற வேண்டும். அந்த ஏழடுக்குச் சீமையின் மேலே கால் பதிக்க வேண்டும். சரித்திரம்படைக்க வேண்டும் என்பது எல்லாம் பலருடைய கனவு.  பல இலட்சம் பேரின் இலட்சியம்.



போன வருடம் இதே நவம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்கள். ஆனால் அந்த மூவரும் திரும்பி வரவே இல்லை. பனி படர்ந்த இமயத்தின் உச்சியிலேயே மறைந்து போனார்கள். அவர்களின் நினைவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.

அந்தப் பனிமலையின் தலைவாசலில் புதைந்து கிடக்கும் மாயா ஜாலங்களைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. ஆக, மறைந்து கிடக்கும் சில மர்மமான உண்மைகளைச் சொல்ல வேண்டி இருக்கிறது.



1950 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 5070 பேர் இமய மலையில் ஏறி இருக்கிறார்கள். ஆனால், அதன் உச்சியை அடைந்தவர்கள் 3431 பேர் மட்டுமே. அவர்களில் 216 பேர் அங்கேயே இறந்து போனவர்கள். அந்தப் பட்டியலில் மேலே சொன்ன அந்த மூன்றுத் தமிழர்களும் அடங்குவர்.

அவர்களுடைய உடல்கள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் இன்னும் கிடக்கின்றன. அந்த உடல்கள் கெட்டுப் போகவில்லை. அவர்களைச் சுற்றி இருக்கும் அணிகலன்களும் அவர்களை விட்டு விலகிப் போகவில்லை. அந்தப் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும் போது நம்முடைய நெஞ்சம் எல்லாம் கசிகின்றது.



இமயத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் பனி கொட்டிக் கொண்டே இருக்கும். அதனால் அந்த 216 வீரர்களின் உடல்கள் சிதைவு பெறாமல் பக்குவப் படுத்தப் பட்ட நிலையில் இன்னும் அப்படியே இருக்கின்றன. இப்போது கூட ஏறுபவர்களும் இறங்குபவர்களும் அந்த உடல்களைப் பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள்.

தங்களுக்கும் இந்த நிலைமை வரலாம் என்பதால் அவர்களுடைய மனங்களும் மறுத்துப் போய் விடுகின்றன. அந்த உடல்களை யாரும் எடுத்து வர முயற்சி செய்யவில்லை என்று சொல்ல முடியாது. எடுத்து வர முடியாது என்பதே சரியான பதில். 

இமயத்தில் ஏறுவதற்கு முன்னால் நேபாள அரசாங்கம், மலை ஏறுபவர்களிடம் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்துப் போடச் சொல்கின்றது.



இமயத்தில் ஏறும் போதும் சரி  இறங்கும் போதும் சரி. ஒருவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் அவருடைய உடல் அங்கேயே விடப் படும். அந்த உடல் மீது யாரும் உரிமை பேசக் முடியாது.

காலா காலத்திற்கும் அந்தப் பூத உடல்கள் உயிர் இல்லாமல் அந்த இடத்திலேயே அப்படியே கிடக்கும். அதைக் கொண்டு வர யாரும் முயற்சி செய்யக் கூடாது. சட்டத்தைப் புரட்டக் கூடாது. சாணக்கியமும் பேசக் கூடாது. அரசாங்கத்தின் மீது குறை சொல்லக் கூடாது.



மலை உச்சியில் யாருக்காவது விபத்து ஏற்படலாம். நடக்க முடியாமல் போகலாம். அந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டால் முடிந்த வரை அவருக்கு உதவி செய்யுங்கள். முடியா விட்டால் அவரை அப்படியே விட்டு விட்டு வந்து விடுங்கள். அவரைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி உங்கள் உயிரைப் பணயம் வைக்கக் வேண்டாம்.

ஏன் இந்தக் கட்டளையைப் போடுகிறார்கள் என்பதற்கும் காரணம் உண்டு. நாலைந்து பேராகப் போகும் ஒரு குழுவில் யாருக்காவது ஒருவருக்கு மோசமான விபத்து ஏற்படலாம். அந்த மாதிரியான கட்டத்தில் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் மற்றவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.


ஆனால், அப்படி உதவி செய்யும் போது மற்றவர்களின் சக்தி வீணாகிறது. பிராண வாயு குறைகிறது. சொந்தமாகச் சிந்திக்கும் ஆற்றல் குன்றுகிறது.

உயிர் போகும் நிலை வருகிறது. ஆக, ஆபத்தான நிலையில் உள்ளவரை அவர் உயிரோடு இருக்கும் போது அப்படியே சாக விட்டு விட்டு வந்து விடுவார்கள். வேறு வழி இல்லை. அந்த வகையில் கணவனை விட்டு வந்த மனைவிகள் இருக்கிறார்கள். தகப்பன்களை விட்டு வந்த மகள்களும் இருக்கிறார்கள்.



இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அறிந்து வைத்து இருக்கும் நேபாள அரசு மலை ஏறிகளிடம் முன்கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்கிறது. அப்புறம்தான் மலையின் மீது ஏற விடுகிறது. 

சும்மா ஒன்றும் ஏறி விட முடியாது. முதலில் மலேசிய ரிங்கிட் மூன்று இலடசம் வரை கட்ட வேண்டும். பணம் கட்டிய பிறகு  குறைந்தது மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இப்படி காத்திருப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இமயமலையின் உயரம் 8848 மீட்டர்கள் அல்லது 29,029 அடிகள். உலகத்தின் உயரமான கட்டிடங்களில் கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களும் ஒன்று. அந்தக் கோபுரங்களைப் போல முப்பது கோபுரங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வையுங்கள். அவ்வளவு உயரத்தில் இமயம் இருக்கின்றது. இமயமலையை நேபாள மொழியில் சகர்மாதா என்று அழைக்கிறார்கள்.

1841 ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர் இந்தியாவின் தலைமை நில ஆய்வாளராக இருந்தார். அவர்தான் இமயமலை என்கின்ற ஒன்று இருப்பதை வெளி உலகத்திற்குச் சொன்னார். அவரின் நினைவாக இமயமலைக்கு Mount Everest என்றும் பெயர் வைத்தார்கள்.



இமயமலையில் பலப் பல அதிசயங்கள் நடந்து உள்ளன. 1924 ஆம் ஆண்டு ஜார்ஜ் மலரி என்பவரும் அன்டிரு ஐர்வீன் என்பவரும் தான் இமயமலையின் உச்சி வரை முதன் முதலில் ஏறினார்கள்.

ஆனால், அவர்கள் உச்சியை அடையவில்லை. 27 ஆயிரம் அடிகள் உயரத்தில்  வீசிய பனிப் புயலில் மறைந்து போனார்கள். அவர்களுடைய உடல்களை 1933 ஆம் ஆண்டுதான் கண்டுபிடித்தார்கள். அந்த ஜாம்பவான்களின் உடல்கள் இன்னும் பத்திரமாக அங்கேதான் இருக்கின்றன.




இப்படி சவால் விடும் இமயமலையை எப்படியாவது ஏறிப் பிடித்து விட வேண்டும் என்று பல வீரர்கள் பல முறைகள் முயற்சி செய்தனர். இமயம் அசையவே இல்லை. கடைசியில் 1953 ஆம் ஆண்டு சர் எட்மண்ட் ஹிலரி, டென்சிங் என்பவர்களிடம் சரண் அடைந்தது. இவர்கள் தான் இமயத்தின் உச்சியைத் தொட்ட முதல் மாமனிதர்கள்.

இமயமலையை ஏறுவதற்கு முன்னால் குறைந்தது ஒரு மாதம் அதன் அடிவாரத்தில் தங்க வேண்டும். நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டும். உடல் வலிமையை விட மன வலிமையே அதிகமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் இருபது கிலோ எடையை பல கிலோமீட்டர் உயரத்திற்குத் தூக்கிச் செல்ல வேண்டும்.




இருதய நோய், இனிப்பு நீர், ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக ஏறக் கூடாது. ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவர் மருத்துவராக இருக்க வேண்டும். இப்படி எல்லாம் தடைகள் உள்ளன.

இமயமலையை ஏறுவதற்கு நேபாள வழி, திபெத்திய வழி என்று இரு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். நேபாள வழி சற்று சுலபமான வழி. இந்த வழியைப் பயன் படுத்திதான் சர் எட்மன்ட் ஹிலரியும் டென்சிங் நார்கோவும் இமயத்தின் உச்சியை அடைந்தார்கள். பெரும்பாலும் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மலை ஏற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.




இந்தக் காலக் கட்டத்தில் பனிப் புயலின் சீற்றம் குறைவாக இருக்கும். உச்சியில் காற்று அழுத்தம் மிகவும் குறைவு. சாதாரணமாக மூச்சு விடுவதில் கூட மிக மிகச் சிரமம் ஏற்படும். அதனால் உயிர்க் காற்று எனும் பிராண வாயு கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன.

இதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த Reinhold Messner என்பவர் சாதனை படைத்தார். பிராண வாயு கலம் இல்லாமல் தன்னந்தனியாக ஏறினார். அபாரமான சாதனை.




இந்த ஆண்டு மே மாதம் Jordan Romero எனும் 13 வயது சிறுவன் இமய மலையில் ஏறி சாதனை படைத்தான். இன்னும் ஒன்று. Apa Sherpa எனும் நேபாளி இமய மலையை 20 முறை ஏறி சாதனை படைத்துள்ளார்.

அப்புறம் பாருங்கள். 76 வயதில் மின் பகடுர் சர்சான் எனும் முதியவர் 2008 மே மாதம் 25 ஆம் தேதி இமயமலையின் உச்சியை அடைந்தார்.




இப்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அனைத்துலக நெருக்குதல்கள் அதிகமாயின. அண்மையில் நேபாள அரசாங்கம் கொஞ்சம் இறங்கி வந்து இருக்கிறது. சொந்தச் செலவில் இறந்து போனவர்களின் உடல்களை உறவினர்கள் கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறது.

அதுவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அந்தச் சம்மதம் கிடைத்தது. ஆனால், எப்படிப் போய்த் தேடுவது. விமானம் தரை இறங்க முடியாது.




ஹெலிகாப்டர் போக முடியாது.பனிச் சூறாவளி வீசிக் கொண்டே இருக்கும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இதர மலை ஏறிகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏற மறுக்கிறார்கள்.

பெரும்பாலான இறப்புகள் உச்சியில் இருந்து கீழே இறங்கும் போது தான் நடை பெறு கின்றன. அதற்கு காரணம் 8000 மீட்டருக்கு மேலே உள்ள பகுதியை Death Zone அல்லது மரணப் படுக்கை என்று அழைக்கின்றார்கள். அங்கே காற்றின் அழுத்தம் மூன்றில் ஒரு பகுதி தான் இருக்கின்றது.




பனிப் புயலின் சீற்றமும் அதிகம். மலை ஏறிகளின் சக்தியும் குறைந்து போய் இருக்கும். எல்லா உடல்களும் 23,000 அடிகளுக்கு மேலே தான் இருக்கின்றன.


கோடிக் கோடியாகப் பணம் கொடுத்தாலும் யார் போவது. எப்படி தூக்கி வருவது. மலை ஏறுபவர்களுக்குத் தங்கள் சொந்த உடலைச் சுமந்து நடந்து கொண்டு வந்து சேர்க்கவே முடியவில்லை.




இதில் எப்படி இன்னோர் உடலைச் சுமந்து கொண்டு வருவது. அப்படி இருந்தும் பாருங்கள் இருபது முப்பது உடல்களைக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். 

இந்தக் கட்டத்தில் மலேசியத் தமிழர்கள் மகேந்திரன், மோகன் தாஸ் இருவரையும் நாம் மறந்து விடக் கூடாது. மக்கள் போற்றும் மாவீரர்கள்.




மலை ஏறுபவர்களின் வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லத் தோன்றுகிறதா. உண்மைதான். மலேசியாவில் உள்ள சில உயரமான மலைகளை ஏறிய அனுபவம் அடியேனுக்கும் இருக்கின்றது. அதனால் அப்படித் தோன்றுகிறது.

இமய மலையை ஏறிப் பார்க்க வேண்டும் எனும் ஆசை எனக்கு முன்பு இளம் வயதில் இருந்தது. அதற்காக குனோங் தகான், குனோங் கொர்பு, குனோங் லேடாங், குனோங் ராஜா போன்ற மலைகளில் ஏறிப் பயிற்சிகள் எடுத்ததும் உண்டு.

இப்போது அந்த ஆசைகளே இல்லை. வீட்டு மாடிப் படிகளை ஏறி இறங்கவே மூச்சு வாங்குகிறது. இதில் இமய மலை ஆசை இனி தேவையா என்று மனசு சொல்கிறது. சரிதானே.

என்ன யோசிக்கிறீர்கள். நீங்களும் ஏறலாம் என்று நினைக்கிறீர்களா. தாராளமாக. இப்போதே வாழ்த்துகள். எதற்கும் வீட்டில் சொல்லி விட்டு போங்கள்.

மலாக்காவைப் பற்றி விக்கிபீடியாவில்




எனும் கட்டுரைகளைச் சமர்பித்துள்ளேன். படித்து கருத்துகளைச் சொல்லுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக