19 December 2010

கணினியும் நீங்களும் - பகுதி 82
ஞானசேகரன், சுங்கைவே, பெட்டாலிங் ஜெயா
கே: நான் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவன். என்னுடைய நண்பரின் USB Pen Drive மூலமாக வைரஸ்கள் என் கணினியில் நுழைகின்றன. அவர் வைரஸ்கள் எதுவும் இல்லை என்று சொல்லித் தான் கொடுப்பார். ஆனால், வைரஸ்கள் இருக்கும். என்னுடைய கணினியின் உள்ளே வைரஸ்கள் நுழையாமல் இருக்க ஏதாவது நிரலி இருக்கிறதா? இப்போது தொட்டதற்கு எல்லாம் காசு கேட்கிறார்கள் சார். இலவசமாகக் கிடைக்கும் நிரலியாக இருந்தால் சொல்லுங்கள்.


ப: இணையத்தில் கணினியைத் தாக்கும் நச்சு அழிவிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. அது எப்போது வரும் யாரைத் தாக்கும் என்று எவருக்கும் தெரியாது. வைரஸ் என்பது ஒரு நச்சு. அந்த நச்சு வைரஸ்களைப் பரப்பி விடும் நிரலிக்குப் பெயர் நச்சு நிரலி.

அந்த நச்சு நிரலியையே அழிக்கும் ஒரு  தடுப்பு  நிரலிக்குப் பெயர் தான்  நச்சு நிரல் கொல்லி. ஆக, Anti Virus என்பதைத் தான் நச்சு நிரல் கொல்லி என்கிறோம். இந்தப் பதிலை எழுதிக் கொண்டு இருக்கும் போது என் மடிக்கணினியில் செய்தி வருகிறது. கடைசியாகக் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வைரஸ்கள். Trojan.SpyEye!, Trojan.Sefnit, Backdoor.Badpuck, Backdoor.Vinself, Trojan.Zbot.

ஒரு சின்ன புள்ளி விவரங்களைத் தருகிறேன். 1990 ஆம் ஆண்டு 200 வைரஸ்கள் இருந்தன. 2000 ஆம் ஆண்டில் 50,000 ஆக உயர்ந்தது. ஆகக் கடைசியாக 14.12.2010 திகதியில் அந்த எண்ணிக்கை 1,122,311 ஆக உயர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தில் நிம்மதியாக இணையத்தில் நுழைய முடியாது போலத் தெரிகிறது. கணினியைப் பற்றி கொஞ்சம் படித்து விட்டு சிலர் வைரஸ் நிரலிகளை எழுதித் தொலைக்கும் கேடு கெட்ட ஜென்மங்களாக மாறுகின்றார்கள்.

AVG,  Avira,  Avast,  Spybot Search & Destroy  போன்ற  இலவசமான  நச்சு நிரல் கொல்லிகளைப் பயன் படுத்தி உங்கள் கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீழ்க்காணும் இடங்களில் இலவசமான நச்சு நிரல் கொல்லிகள் கிடைக்கின்றன.

1. http://free.avg.com/us-en/homepage
2. http://www.avast.com/free-antivirus-download
3. http://www.avira.com/en/avira-free-antivirus
4. http://www.safer-networking.org/en/spybotsd/index.html
5. http://www.pctools.com/free-antivirus/


இவற்றுள் என்னுடைய தேர்வு PC Tools Antivirus நிரலி.

அடுத்து, உங்களுடைய USB Pen Drive மூலமாக கணினியை நச்சு நிரலி தாக்கி விட்டதாகச் சொல்கிறீர்கள். விரலிகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் நச்சு நிரலிகள் இருக்கின்றன. இந்த வைரஸ் நச்சு நிரலிகள் கணினிக்குள் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு ஊசி இருக்கிறது. இதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்வது நல்லது.

உங்கள் கணினியில் விரலியைச் செருகியதும் உடனே விரலிக்கு தடுப்பு ஊசி போடப் படும். தடுப்பு ஊசி போட்டு விட்டுத் தான் மறு வேலை. அதனால் கணினிக்கு மிகவும்  பாதுகாப்பு. அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் கீழே இருக்கிறது. இது ஓர் இலவச நிரலி. இதைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே சமயத்தில் போய்ப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அங்கு உள்ள பரிமாறிக் கணினி தடுமாறிப் போய் சேவைகளை நிறுத்தி வைக்கலாம். ஆக, பொறுமையைக் கையாளுங்கள். 
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html

மதியழகன் mathi038@gmail.com
கே: நம்முடைய ATM அட்டைகளில் MEPS என்று சின்னம் குறிக்கப் பட்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன? தயவு செய்து விளக்கப் படுத்துங்கள்.
ப:
MEPS என்றால் Malaysian Electronic Payment System. தமிழில் மலேசிய மின்னியல் பணம் வழங்கும் முறை என்று சொல்வார்கள்.  ஏ.டி.எம் அட்டைகளின் பின்புறம்  இந்தச் சின்னதைப் பார்க்க முடியும். ATM என்றால் Automated Teller Machine. தமிழில் தானியக்கப் பணம் வழங்கி. இதை வங்கி அட்டை என்றும் சொல்வார்கள். இந்த அட்டையில் மூன்று முக்கியப் பயன்பாடுகள் உள்ளன.


1. வங்கியில் இருந்து பணத்தைப் பெறுவது
2. இணையம் மூலமாகப் பொருட்களை வாங்குவது
3. சேமிப்பில் உள்ள பணத்தை அடமானமாகக் காட்டுவது

இந்த அட்டையைக் கொண்டு இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் ரொக்கப் பணத்தை உங்களால் பெற முடியும். இந்த நான்கு நாடுகளில் உள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் உங்களுடைய மலேசிய ஏ.டி.எம் அட்டையை சீனாவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள வங்கிகளில் சீன யுவான் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் உங்களுடைய கைப்பேசி எண்களுக்கு Topup எனும் முன்பணம் கட்டவும் முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும். 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்த முறையில் மலேசியாவின் 27 வங்கிகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆசியாவில் முதல் நாடாகவும் மலேசியா விளங்குகிறது. கூடுதலான விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.meps.com.my/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று பார்க்கவும்.

நந்தினி   milcah.nandani@yahoo.com
கே: தோசையைச் சுருட்டுவது போல மடக்கிச் சுருட்டிக் கொண்டு போகும் அளவிற்கு ஒரு மடிக்கணினி வந்து விட்டதாகச் சொல்கிறார்கள் சார். இது எந்த அளவுக்கு உண்மை? நம்ப முடியவில்லையே சார்.

ப:
ஆமாம் தாயே. என்னாலும் தான் நம்ப முடியவில்லை. இந்த மடிக்கணினி வெளி வந்ததும் நாம் கணினித் தொழில் துறையில் ஒரு படி மேலே ஏறி நிற்போம். Orkin Design எனும் ஜெர்மனிய நிறுவனம் கண்டு பிடித்து இருக்கிறது. செய்தித் தாளைப் படித்து முடித்ததும் சுருட்டிக் கைகளுக்கு இடையில் அக்குளில் வைத்துக் கொண்டு போவது... அது ஒரு காலம்.


ஆனால், மடிக்கணினிகள் அந்த இடத்திற்கு வந்து விட்டன.  http://www.techkumar.org/gadgets/roll-top-laptop.html எனும் இடத்தில் விவரங்கள் இருக்கின்றன. போய்ப் பாருங்கள். கணினி உலகம் எங்கேயோ போய்க்
கொண்டு இருக்கிறது. இந்த அதிசயத்தைத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

மதன முகிலன்   rmathanamuhilan@yahoo.com
கே: இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்து முடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்கும்? என் நண்பன் கின்னஸ் சாதனை செய்யப் போவதாகச் சொல்கிறான். அப்படி என்றால் யாரை அணுக வேண்டும்.


ப: யாரையும் அணுக வேண்டாம். நம்மை அணுகியதே போதும். இணையத்தில் உள்ள எல்லாத் தகவல்களையும் படித்து முடிக்க 57,000 ஆண்டுகள் பிடிக்கும். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டாமா? படுக்கப் போகும் போது மட்டும் ஒரு பத்து நிமிடம் படிக்கச் சொல்லுங்கள். அது போதும். சாதனை செய்து முடிக்க 8,219,088 வருடங்கள் பிடிக்கும். அப்புறம் பூமி இருக்கிற வரைக்கும் அந்தக் கின்னஸ் சாதனையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் நண்பருக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள். 

No comments:

Post a Comment