25 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 86

உதயக்குமார் <uthayakumar15@gmail.com>
கே: வணக்கம் சார். Virtual PC என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன? சற்று விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
வணக்கம் உதயக் குமார் அவர்களே. ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும் வாசகர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துகள். ஓர் அருமையான கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.
Virtual PC என்பதை மாயைக் கணினி என்று அழைக்கிறார்கள். கணினிக்கு உள்ளேயே ஒரு மாயமான உலகில் இயங்கும் இன்னும் ஒரு கணினியைத் தான் 'விர்ட்சுவல் பிசி' என்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக, உங்கள் கணினியில் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதிப்பு செய்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், அதே கணினிக்குள் மற்றும் ஒரு விண்டோஸ் XP இயங்குதளத்தை இயங்கச் செய்வதைத் தான் மாயைக் கணினி என்கிறோம். விண்டோஸ் XP போல வேறு விண்டோஸ் இயங்குதளத்தையும் இயக்கச் செய்யலாம்.

ஒரே கணினித் திரையில் இரண்டு இயங்குதளங்கள் இயங்குவதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.


பார்க்கும் போது அது ஓர் அதிசயமாக இருக்கும். எப்படி இந்த மாதிரி ஓர் அதிசயம் என்று யோசிக்கலாம். என்னுடைய மடிக்கணினியை எடுத்துக் கொள்ளுங்களேன். மடிக்கணினித் திரையின் ஒரு பாதியில் விண்டோஸ் 7 வேலை செய்து கொண்டிருக்கும்.


இன்னொரு பாதியில் விண்டோஸ் XP வேலை செய்து கொண்டிருக்கும். உங்களுடைய இந்தக் கேள்விக்கான பதிலை விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன்.

முரசு அஞ்சல் விண்டோஸ் XP யில் நன்றாக வேலை செய்கிறது. அதனால் விண்டோஸ் XP யில் முரசு அஞ்சல் இயங்குகிறது.

மடிக்கணினித் திரையின் வலது பக்கத்தில் தமிழில் விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன். வாசகர்களின் மின்னஞ்சல் கடிதங்களை விண்டோஸ் 7 ல் திரையின் இடது பக்கத்தில் படிக்கிறேன்.

அவற்றுக்கான இணையத் தகவல்களையும் விண்டோஸ் 7 ல் தான் தேடுகிறேன். ஆக, ஒரே சமயத்தில் இரண்டு இயங்குதளங்கள் ஒரே கணினியில் இயங்குகின்றன. விண்டோஸ் 7 என்பது மனைவி என்றால் விண்டோஸ் XP என்பது பத்து வருஷக் காதலி.

இன்னும் ஒரு விஷயம். மாயைக் கணினி இயக்க வேண்டும் என்றால் உங்களுடைய கணினி அதிக ஆற்றல் உள்ளதாக இருக்க வேண்டும்.

ராஜேந்திரா வின்னாசி, கங்கார், பெர்லிஸ்

கே: உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துகள். எல்லா சுகங்களும் செல்வங்களும் பெற்று நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தை பிறந்தால் வலி பிறக்கும்.
ப: உங்களுக்கும் வாழ்த்துகள். நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல், குறும் செய்திகள் அனுப்பி உள்ளனர். எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.


நீங்கள் வலி பிறக்கும் என்கிறீர்கள். பரவாயில்லை. அன்பு மிகுதியால் வழி தவறி வலி வந்துவிட்டது.

வேகமும் விவேகமும் தூய்மையும் உழைப்பும் மலேசியத் தமிழர்கள் வாழ்வில் வேரில் முளைத்த வியர்வைப் பூக்கள் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.


அப்துல் சலிகான் முகமது கனி <masaligan@gmail.com>
கே: பழம் பெரும் நபர்களால் நாம் அறிந்து கொள்ள அவர்களின் பெயர்களைத் தட்டச்சு செய்து தேடினால், விக்கிபீடியாவில் விவரம் அறிகிறோம். அவர்களை யார் பதிவு செய்து வைப்பது? நாமும் அவ்வாறு செய்ய முடியுமா?
ப: விக்கிபீடியா என்பது உலக இணையக் கலைக் களஞ்சியம். உலக மக்களால் உலக மக்களுக்காக உருவாக்கப் பட்ட கலைக்களஞ்சியம்.

விக்கி என்றால் ஹவாய் மொழியில் விரைவு என்று பொருள். நீங்கள் அந்தக் கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்து கொண்டு உங்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்யலாம்.


தொடக்கத்தில் உங்கள் படைப்புகளைக் கலைக்களஞ்சிய ஆசிரியர்கள் கவனித்து திருத்தி வெளியிடுவார்கள். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பிழை என்று எதுவும் இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு நீங்கள் தன்னிச்சையாக எழுதி வெளியிடலாம்.

அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதுவரை அவர்களுடைய பாதுகாப்பில் உங்களுடைய எழுத்துகள் பிரசுரிக்கப் படும்.
விக்கிபீடியா பதிப்பாளர்களில் அடியேனும் ஒருவன்.

அண்மையில் நான் எழுதியது பரமேஸ்வராவைப் பற்றியது.

http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா
எனும் முகவரியில் படிக்கலாம்.


கடவுள் பாதி  puruma86@gmail.com
கே: அண்மையில் என் நண்பரிடம் இருந்து ஒரு நோக்கியா கைப்பேசி வாங்கினேன். அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது என்ற விவரங்களை எப்படி கண்டு பிடிப்பது?

ப: வணக்கம் கடவுள் பாதி. #92702689# என்று கைப்பேசியில் தட்டுங்கள். அதன் பரம்பரை வரலாறு அக்குவேர் ஆணி வேராகத் தெரியும். அது எல்லாம் சரி.

எப்படி ஐயா இந்த மாதிரியான பெயர்களை வைத்துக் கொள்ள முடிகிறது. மிச்சம் மிருகம் பாதி என்ன ஆனது ஐயா. தெரிந்து கொள்ள ஆசை.


மனோ ரஞ்சன் <prabu5509@yahoo.com>
கே: ஐயா, ஒவ்வோரு வாரமும் உங்களுடைய கணினி கேள்வி பதில்களைப் படிக்கக் காத்திருப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய கேள்வி இதுதான். MP4 இசைக் கோப்புகளை MP3 வடிவத்திற்கு மாற்ற முடியுமா. ஒரு நல்ல மென்பொருள் இலவசமாகக் கிடைக்குமா? உதவி செய்யுங்கள் சார்.


ப: MP என்பது பொதுவாக பயன்படுத்தப் படும் ஒலி அல்லது ஒளி முறைமை. MP3 ஒலி முறைமை வந்த பிறகு கனி உலகில் ஒரு பெரிய புரட்சியே ஏற்பட்டது.


சாதாரணமாக ஒரு பாடலை MP முறைமையில் உருவாக்கினால் 40MB வரும். MB என்பது Mega Bytes என்பதைக் குறிக்கும் கொள் அளவு.
MP3 முறைமையில் அதே பாடலை 4MB க்குள் கொண்டு வந்துவிடலாம். கொள் அளவு அதாவது space  சிக்கனமாகிறது.
இந்த MP3 முறைமைக்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் தமிழ்க் கணினி வல்லுநர்கள் என்று பெருமையாகச் சொல்லலாம். கணினி உலகம் என்று
சொன்னாலே அங்கே இந்தியர்கள்தான் 'பளிச்' என்று தெரிகிறார்கள்.

MP3 முறைமை மிகவும் எளிமையானது. இலகுவானது. இப்போதைக்கு இந்த முறைமையில் இதுவரை பிரசித்தி பெற்று விளங்கும் பாடல் அமரர் கிளிவ் ரிச்சர்ட்டின் 'யங் ஒன்ஸ்'.



சரி. உங்களுக்கு இந்தச் செயலி எனும் Program இலவசமாக, அதாவது கள்ளத் தனமாகக் கிடைக்கும் இடம் தெரிந்தாக வேண்டும். அப்படித்தானே!


தம்பி மனோ, வாசகர்களுக்காக உதவி செய்யலாம். அதற்காக, அமலாக்க அதிகாரிகள் வந்து நம்மை  அள்ளிக் கொண்டு போகும் அளவுக்கு நம்முடைய நிலைமை மோசமாகி விடக் கூடாது பாருங்கள்.

அதனால் என்ன சொல்கிறேன் என்றால், கொஞ்சம் காசு கொடுத்து அசல் மென்பொருளை வாங்கிக் கொள்ளுங்கள். நானும் கொஞ்சம் நிம்மதியாகப் பெயர் போடலாம். பிரச்னை வராது. சரியா. 

கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் Law Yat Plaza, Imbi Plaza வில் தேடினால் அந்தச் செயலி கிடைக்கும்.


விக்னேஸ், ஈப்போ - viji nesh <sweetnesh.116@gmail.com>
கே: கணினியைச் சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் Mouse கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுகிறது?

ப: என்ன செய்வது. கஷ்டப்பட்டு வேலை செய்தால் கண்டிப்பாக யாருக்கும் தூக்கம் வரும். இல்லையா. ஆனால், இங்கே வேறு மாதிரியான தூக்கம். நீங்கள் Wireless Mouse எனும் கம்பியில்லாச் சுழலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். சில கட்டத்தில் சுழலியைத் தட்டி எழுப்ப வேண்டியிருக்கும். அப்படித்தானே. இருந்தாலும் பரவாயில்லை.


கம்பியில்லாச் சுழலியைத் தூங்கச் செய்திடும் செயல்பாடு கணினிக்குள் இருக்கிறது. கணினியில் நாம் எந்த வேலையையும் எட்டு நிமிடங்களுக்கு மேல் செய்யாமல் இருந்தால், கம்பியில்லாச் சுழலி கொட்டாவி விட்டு தூங்கிவிடும்.

இதற்கு காரணம், சுழலியின் உள்ளே இருக்கும் மின்கலச் சக்தியைக் கனி மிச்சப் படுத்தும் தன்மை. அதன் வேலையை அது செய்கிறது.

இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சுழலியை லேசாக நகர்த்துங்கள். இல்லை என்றால் Control Panel > Mouse > Device Settings போய் சரி செய்து கொள்ளுங்கள்.

1 கருத்து:

  1. அன்புசால் முத்து கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    உங்கள் சேவை மென்மேலும் சிறப்புற
    மாதார வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு