09 January 2011

கணினியும் நீங்களும் - பகுதி 85


ராஜு முரளி  <raju_pollathavan@yahoo.com>
கே: கணினித் துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் தான் மேல் நாட்டு கணினி நிறுவனங்கள் அவர்களைத் தேடி வருகின்றன என்பது சரியா?
ப: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உலகத்திலேயே கணினித் துறையில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள்தான் இந்தியர்கள். கணிதத் துறையின் மூலகர்த்தாக்கள். சுழியம், ஒன்று, இரண்டு எனும் எண்களைக் கண்டுபிடித்தவர்கள்.
பிரமகுப்தா
கி.பி.598ல் குஜாராத் மாநிலத்தில் வாழ்ந்த பிரமகுப்தா என்பவர்தான் சுழியம் எனும் எண்ணைக் கண்டுபிடித்தார். அந்த எண் கி.பி.700ல் கம்போடியாவில் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது அண்மைய தகவல்.


http://wiki.answers.com/Q/Who_invented_the_number_system 
எனும் இடத்தில் விவரங்கள் கிடைக்கும்.


மற்ற எண்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டு விட்டன. அவை அரபு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. அங்கிருந்து எகிப்து நாட்டிற்குப் போய் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்தன.

கணிதம் என்பது இந்தியர்களின் இரத்தத்தில் ஊறிய இதிகாச நயனம். இயற்கை அள்ளிக் கொடுத்த சுதிவாச நாணயம். அதில் திராவிடர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்.

திராவிடர்களின் பாரம்பரிய கணிதப் புலமை இன்று வரை குறையவில்லை. இந்தப் புலமை யைக் கண்டு  சகோதரர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வருகிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 21,000 பேரை வேலைக்குச் சேர்க்கிறார்.

சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். பல கோடீஸ்வரர்களையும் உருவாக்கி வருகிறார். மேல் விவரங்களுக்கு - http://www.fathersofmathematics.com/  எனும் இணையத் தளத்திற்குச் செல்லவும்.

அசோக் முகிலன்  ashok.mugilan@gmail.com
கே: சிறுவர்கள் சின்ன வயதிலேயே கணினியை இயக்கக் கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், பெரியவர்களால் முடியவில்லை. ஏன்?

ப: கற்றுக்கொள்ளும் ஆற்றல் வயது ஆக ஆகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், அக்கறை வேண்டும். ஓர் ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு பிடிவாத குணம் இருக்க வேண்டும்.

நம்ம காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது இது ஏன் வந்து தொலைத்தது. இதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வயதை ஒரு காரணம் காட்டி சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. சரியா.

இன்னும் ஒரு விஷயம். இணையத்தை இருபத்து நான்கு மணி திறந்து விட்டால் படிக்கிற பிள்ளைகள் என்ன செய்வார்கள். அதை விட்டு விட்டு என் பிள்ளைகள் படிக்கவில்லை.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து கண்டதைக் கெட்டதைப் பார்த்துக் கெட்டுப் போகிறான் என்று பழி போடுவது நல்ல காரணமாக இருக்கிறதா. சொல்லுங்கள். இதில் உங்கள் பிள்ளைகள் கண்ட கண்ட சால்சாப்புகளைச் சொல்லலாம்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தில் வலம் வருவதில் பாது காப்புத் திரையைப் போடுங்கள். நீங்கள் இருபது வயதில் தெரிந்து கொண்டதை இப்போது உள்ள பிள்ளைகள் பத்து வயதில் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. உங்களுக்கு முன்னால் நல்லதைப் பார்க்கும் பிள்ளைகள், நீங்கள் கொஞ்சம் மறைந்ததும் மிச்சம் மீதியைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பதினாறு வயது வரை அவர்களைக் கட்டுப் படுத்துங்கள். அதன் பிறகு பாலியல் தொடர்பான இணையப் பக்கங்களைப் பார்ப்பதில் உள்ள பிரச்னைகளைச் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்வார்கள். http://www.megaupload.com/?d=GK7X43EN எனும் இடத்தில் குழந்தை கள் பாதுகாப்பு நிரலி இருக்கிறது.

அதைப் பதிவு இறக்கம் செய்து கணினியில் பதிப்பு செய்யுங்கள். அப்புறம் உங்கள் குழந்தை கள் பாலியல் (Video) காணொளிகளைப் பார்க்க முடியாது. கடவுச் சொல் வைத்து இருக்கும் உங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. அதற்காக நீங்கள் கட்சி மாற வேண்டாம். அப்புறம் வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகி விடும்.

ஓம் முருகா oum9160@yahoo.com.sg
கே: சென்ற வாரம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மைக்ராசாப்ட் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனல், வயது காலை வாரி விட்டது என்று பதில் கொடுத்து இருந்தீர்கள். அந்த அளவிற்கு நீங்கள் அமெரிக்காவினால் வேண்டப் படாதவரா அல்லது மற்றவர்கள் பார்த்துப் படித்து மெச்ச வேண்டும் என்பதற்காக இப்படி பதில் கொடுத்தீர்களா?

ப: ஓம் முருகா! மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி பதில் கொடுத்தேன். அதுதான் பாருங்கள். உங்களுக்கு மட்டும் அந்த உண்மை தெரிந்து இருக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

செய்திகளைப் படித்தால் இப்படித் தான் நன்றாகக் கவனமாகப் படிக்க வேண்டும். அடுத்து பல இலட்சம் வாசகர்களுக்குப் பயன் படும்படியான  ஒரு நல்ல கேள்வியைக் கேட்டதற்குப் பாராட்டுகள். செல்வக்குமரன், தாமான் அண்டாலாஸ், கிள்ளான்
கே: சார், 4G கைப்பேசிகள் இப்போது தான் வந்து இருக்கின்றன. அதற்குள் 5G கைப்பேசிகள் வரப் போகின்றன  என்று கேள்விப் பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை சார்?


ப: நீங்கள் கேள்வி பட்டது உண்மை. மேல் நாட்டு அறிஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. 5G கைப்பேசிகளையும்  கண்டுபிடித்து விட்டார்கள். இந்தக் கைப்பேசிகளைப் பயன் படுத்தி லேசர் ஒளிகளின் மூலம் இரும்பை வெட்ட முடியும் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. திருடர்களுக்கு லாட்டரி அடித்தது மாதிரி ஆகி விடுமே.

அடுத்து, கணினிகள் செய்யும் வேலைகளை இந்தக் கைப் பேசிகள் எடுத்துக் கொள்ளும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். சென்னையில் ஒருவர் ஒரு தியேட்டரில் படம் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தப் படத்தை அப்படியே அதே சமயத்தில் அசகு பிசகு இல்லாமல் தெளிவாக மலேசியாவில் இங்கே நேரடியாகப் பார்க்க முடியும்.  அது மட்டும் அல்ல. 5G கைப்பேசி ஒரு முழு தமிழ்ப் படத்தை ஐந்து நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விடும் ஆற்றல் கொண்டது.

அடுத்து, 5G கைப்பேசிகளில் வாசம் வரும். உங்கள் மனைவி என்ன வாசனைச் சவர்க்காரம் போட்டுக் குளித்தார் என்பதையும் சொல்லி விடும். அப்புறம் என்ன? இப்போதே ஆர்டர் செய்து விடுங்கள். 2013 ஆம் ஆண்டில் இந்த 5G கைப்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. எதற்கும் தயாராக இருங்கள். உலகம் உள்ளம் கைக்குள் அடக்கமாகி வருகிறது.

இன்னும் ஒரு வேடிக்கை. ஜப்பான் 6G கைப்பேசி ஆய்வுகளில் இறங்கியுள்ளது. இந்தக் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு ஆள் இல்லாமல் கார்களை ஓட்ட முடியும் என்கிறார்கள்.

காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கைப் பேசி வழியாக கட்டளைகளை மட்டும் போட்டால் போதும். இடது பக்கம் மெதுவாகத் திரும்பு. வலது பக்கம் வெட்டு. லேசாகப் பிரேக் வை. காரை நிறுத்து. கதவைத் திறந்து விடு. இந்த மாதிரிச் சின்னக் கட்டளைகள்.

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. தண்நீரில் போட்டாலும் மூழ்காத 7G கைப்பேசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை.

யாருக்காவது தங்களுடைய பணத்தைத் தண்நீரில் போட வேண்டும் என்கிற ஆசை இருந்தால் சொல்லுங்கள். தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால் போட்ட பணம் திரும்பி வருமா வராதா. வரும் ஆனால் வராது.

No comments:

Post a Comment