08 February 2011

கணினியும் நீங்களும் - பகுதி 87


மீரா.ரத்தினவேலு, தஞ்சோங் மாலிம்
கே: என்னுடைய மகள் படிவம் 4 படிக்கிறாள். அண்மைய காலமாக அவளுடைய அறையில் தனிமையாக இருப்பதையே விரும்புகிறாள். கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவள் 'பேஸ்புக்'கில் தீவிரம் காட்டி வருகிறாள். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரம் செலவு செய்கிறாள். அதன் கடவுச் சொல்லைக் கேட்கிறோம். கொடுக்க மறுக்கிறார். 'பேஸ்புக்'கில் அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை. அவளைத் திட்டி நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை. அவளுடைய கணக்கில் நுழைந்து என்ன செய்கிறார் என்று பார்க்க முடியுமா?

ப: Facebook என்பது ஒரு சமூக வலைத்தளம். இதை நட்பு ஊடகம் என்றும் சொல் வார்கள். உலகில் ஏறக்குறைய 500 மில்லியன் பேர் இந்த நட்பு ஊடகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி எல்லோருமே 'பேஸ்புக்'கில் கணக்கைத் திறந்து அரட்டையாடல் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. மேல்நாடுகளில் 'பேஸ்புக்' காய்ச்சல் சுனாமி வேகத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது.

மலேசியத் தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் 'பேஸ்புக்' காய்ச்சல் பேய்க்காய்ச்சலாக மாறி வருகிறது.

உங்கள் மகளுக்கு இப்போது 'பேஸ்புக்' காய்ச்சல் அடிக்கிறது என்பது மட்டும் உண்மை. அவருக்கு 1696 நண்பர்கள் இருக்கிறார்கள். எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் என்பதை என்னால் கணக்குப் பண்ணிப் பார்க்க முடியாது.

சொல்ல வேண்டியதைச் சொல்லித் திருத்த வேண்டியது அப்பாவாகிய உங்களுடைய கடமை. காய்ச்சல் பேய்க்காய்ச்சலாக மாறி வருவதற்குள் ஒரு நல்ல முடிவைச் செய்யுங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகளில் ஒன்று.

1. கால அட்டவணை போட்டு ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று கட்டளை போடுவது.

2. கணினியை எல்லாரும் பார்க்கும் படியாகப் பயன் படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது. இதில் எதுவும் சரிபட்டு வரவில்லை என்றால்

3. இணையத்தைத் துண்டித்து விடுவது. அதற்கு அப்புறம் ஆகக் கடைசிக் கட்டமாக,

4. கணினியை முடக்கி வைத்தல் அல்லது  மின்சாரத்தைத் துண்டித்து விடுதல்.

விது ரத்னா, பங்சார்
கே: சார், அண்மையில் உங்களுடைய கணினி வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி அல்லது ஒரு ஜோக் சொல்லுங்கள்.
ப:
தம்பி, நிறைய ஜோக்குகள் இருக்கின்றன. எதைச் சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் ஸ்ரீ டமன்சாராவில் இருக்கின்ற ஒரு மளிகைக் கடையில் இருந்து ஒருவர் அழைத்தார். அப்போது கெப்போங்கில் இருந்தேன். தன்னுடைய கணினியில் யுனிகோடு எழுத்துருகளைப் பயன் படுத்த வேண்டும் என்றார். ஓய்வு இருக்கும் போது வந்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நானும் அந்தப் பக்கம் போக வேண்டிய வேலை இருந்தது. அவரைப் போய்ப் பார்த்தேன். அழகான ஓர் இளைஞர். யுனிகோடு நிரலியைக் கொண்டு வந்து

இருக்கிறேன். உங்கள் கணினியில் பதித்து விட்டுப் போகிறேன் என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா. 'சார், இனிமேல்தான் கணினியை வாங்க வேண்டும்' என்றார். அப்போது என் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.

செந்தூரன் கீர்த்தி, பங்சார்
கே: Yahoo எனும் பெயர் எப்படி வந்தது?
ப:
யாஹூ இளைஞர்களிடம் பரவலாகக் காணப்படும் சொல். சந்தோஷம் வந்ததும் யாஹூ என்று துள்ளிக் குதிப்பார்கள். ஆனால், அந்தப் பெயர் வந்த விதமே வேடிக்கை ஆனது. ஆரம்பத்தில் அதன் பெயர் Jerry and David's Guide to the World Wide Web.

ஆனால், ஜோனாதான் ஸ்விப்ட் என்பவர் எழுதிய குலிவர் டிரெவல்ஸ் எனும் நூலில் Yet Another Hierarchical Officious Oracle"  எனும் சொல் தொடர் வருகிறது.

அந்தச் சொல்லைப் பிடித்துக் கொண்டு அதற்குப் புதிய வடிவம் கொடுத்தார்கள். அதன் சுருக்கமே 1994ல் உருவாக்கப்பட்ட Yahoo எனும் பெயர். 


ராஜசேகரன், பத்தாங் பெர்ஜுந்தை
கே: Clone PC என்றால் என்ன?
ப:
Clone PC என்றால் நகல் கணினிகள். பிரபல நிறுவனங்கள் அல்லது பிரபலம் ஆகாத நிறுவனங்கள் என பலவற்றின் கணினிப் பாகங்களை வாங்கி எல்லாம் ஒன்று  கலந்து  கொடுப்பார்கள். விலையும்  குறைவு. நான் பார்த்த வரையில் பெரும்பாலான வீடுகளில் இந்த மாதிரியான கணினிகள் நிறைய உள்ளன.

இருந்தாலும் பரவாயில்லை. பல வருடங்கள் ஆகியும் நன்றாகவே வேலை செய்கின்றன. விலையை 700-800 ரிங்கிட்டுக்குள் அடக்கி விடலாம்.

1 comment:

  1. நல்ல ஜோக்...முன் யோசனை உள்ள இளைஞன்...

    ReplyDelete