14 பிப்ரவரி 2011

கறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை

காவேரி ஆறு கர்நாடகாவில் பிறக்கிறது. தமிழ்நாட்டில் தவழ்ந்து வருகிறது. வங்காள விரிகுடாவில் தத்துவம் பேசுகிறது. படர்ந்து வரும் பாதையில் பல கோடி உயிர்களின் கண்ணீரைத் துடைக்கிறது. பல கோடி பயிர்களின் தாகத்தைத் தீர்க்கிறது. பல கோடி வீடுகளில் அடுப்பு எரிய உதவுகிறது. பல கோடி நிலத்தில் பச்சைப் பாசிகளை உயிர்ப்பிக்கிறது.



அதனால் பாருங்கள், அங்கே  காய்ந்து போன அதன் கரிசல் காடுகளும் பாசுரம் பாடுகின்றன. நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் எல்லாம் நனைந்தும் போகிறது. 

அப்படி நனையும் அந்த நெஞ்சத்தில் இந்தக் காவேரி ஆறு யாருக்குச் சொந்தம் என்று நடக்கும் பங்காளிச் சண்டையினால் கானல் நீராகிப் போகிறது. எப்போது மொழி வாரியாக கர்நாடகத்தைப் பிரித்தார்களோ அப்போதே மதம் பிடித்த யானைக்கு வதம் செய்யும் தலைக்கனம் தலை தெறித்துப் போனது. பரவாயில்லை. அந்த உரிமைப் போராட்டம் பனிவனமாக மாறட்டும். வேண்டிக் கொள்வோம்.


நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் மூன்றாம் வீட்டுக்காரன் நாட்டாமை செய்வான் என்று மலேசிய அறிஞர் காதர் இப்ராஹிம் அடிக்கடி சொல்வார். அவர் சொல்வது இப்போது நினைவிற்கு வருகிறது.

ஆக, ஒற்றுமை பந்தத்தை நிறுத்தி வைத்து அவர்களாகவே அந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளட்டும். ஆனால், காவேரிக் கன்னி எனும் புனித ஜென்மத்தின் பெருமை காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் நம்முடைய ஆசை.

காவேரிக் கரைகளாக மாறிப் போகின்றன

அதே போலத்தான் அமெரிக்காவில் ஒரு கறுப்பினச் சிறுமி இருந்தாள். ஆறு வயதில் அப்பா அம்மா பிரிந்து போகிறார்கள். உறவினர்கள் அவளை ஓரம் கட்டுகிறார்கள்.


ஒன்பதாவது வயதில் பெண்மை பாழாகிப் போகிறது. படுக்க பாயில்லை. உட்கார இடமில்லை. படிக்க வசதியில்லை. வயிற்றுக்குச் சோறு வசதி இல்லை. வேதனையின் வீதிகளில் ஓடும்போது வயது பதின்நான்கு. அந்த வயதில் அந்தச் சிறுமி ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.

அவளே ஒரு குழந்தை. அவளுக்குள் ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்குள் ஒரு குழந்தை. என்ன கொடுமை சார் இது. அவளுடைய இளமையே போராட்டம். அதன் எல்லைக்கே போகிறாள்.


கடைசியில், அந்தப் போராட்டமே காவேரிக் கரைகளாக மாறிப் போகின்றன. தன் இலட்சியத்தின் இலக்கை அடைகிறாள். அந்த இலட்சிய வேட்கை வெற்றி வாகை சூடுகிறது.  புகழ் மழையில் நனைந்து செல்வக் களஞ்சியமாகிறாள்.

அப்புறம் என்ன. உலகக் கோடீஸ்வரியாக ஆகிறாள். தன் சந்ததியினர் பிறந்த ஆப்ரிக்க மண்ணில்
இப்போது கோடிக் கோடியாகக் கொட்டி ஏழை பாழைகளுக்கு புண்ணியம் செய்து வருகிறாள்.


காவேரி ஆறு எப்படி தான் பிறந்த மண்ணுக்கு மாசு மருவற்ற  மகிமையைச் சேர்க்கிறதோ அதே போல இந்த மனித ஜென்மமும் பல கோடி மக்களை வாட்டி வதைக்கும் வறுமைப் பிசாசை விரட்டி வருகிறது. அவளுடைய பெருமை ஊழியூழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். சந்தேகம் வேண்டாம்.

யார் அந்த கறுப்பு அழகி. யார் அந்த கறுப்புக் காவேரி. அவர் தான் உலகப் புகழ்பெற்ற Oprah Winfrey. நமக்கு எல்லாம் கலர் கலராய்க் கதை சொல்லும் ஓபரா வின்பரே எனும் கறுப்பு தேவதை. பெரியவர் சாலமன் பாப்பையாவிற்கும் அரட்டை அரங்க விசுவிற்கும் அழகாக பாலம் போட்டுக் காட்டியவர். இது கதையல்ல நிஜம்.


என்ன மலைக்கிறீர்கள். உலகப் பிரசித்தி பெற்ற The Oprah Winfrey Show எனும் மக்கள் அரங்கத்தை நடத்தி வரும் ஓபரா வின்பரேதான் அந்தக் காவேரிக் கன்னி.

ஆச்சரியமாக இருக்கிறதா! படியுங்கள். லியோனி, விசு, சாலமான் பாப்பையா, நடிகை லெட்சுமி போன்றவர்கள் நடத்தி வரும் விவாதக் களங்களுக்கு மூல வடிவம் கொடுத்தவர் 
ஓபரா வின்பரே என்று சொன்னாலும் அது மிகையில்லை.


ஓபரா வின்பரேயின் இளமை கால வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் வேதனைகளும் விரக்திகளும் கரைகளை உடைத்துக் கொண்டு வந்து வெளியே கொட்டும். அந்த மாதிரியான பலப்பல கொடுமைகள்.

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்

பராசக்தியில் நடிகர் திலகம் பேசுவாரே ஒரு வசனம். 'ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்' என்று. அதே அதே! அந்த மாதிரிதான் இந்த ஓபரா வின்பரேயின் வாழ்க்கையிலும்.


ஓபரா வின்பரே சாமான்ய வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடியவள்.

வேதனைகளைச் சாதனைகளாக மாற்றிய அந்தக் கறுப்புத் திலகத்தை உலகமே வியந்து பார்க்கிறது. ஒரு காலத்தில் பசியின் கொடுமையால் வாடியவளுக்கு ஒரு வேளை சோறு போடாமல் விரட்டி அடித்த கழிசடைகள்  எல்லாம் இப்போது 'அன்பே சிவம் வின்பரே சிவம்' என்று பித்துப் பிடித்து அலைகின்றன. ’எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்’ என்று சொல்லி வானத்தையும் பூமியையும் இப்போது மாறி மாறிப் பார்க்கின்றன.

அமெரிக்காவில் அடிமைத் தொழிலை ஆப்ரகாம் லிங்கன் அழித்து விட்டாலும் அவர்களின் உரிமைகள் இன்று வரை மறைக்கப்பட்டு வருவது உண்மை. கறுப்பர்கள் இன்னும் ஓரங் கட்டப் பட்டு வருகிறார்கள். இது அங்கே மட்டும் இல்லை.


இந்த ஓரங்கட்டும் விவகாரம் இருக்கிறதே அது பல இடங்களில் பலப்பல கோணங்களில் இன்னும் பேரம் பேசப்பட்டு வருகிறது. ஆப்ரிக்கக் காடுகளில் சிவனே என்று இருந்தவர்களைப் பிடித்து இழுத்து வந்து அடிமைகள் ஆக்கினார்கள். கசக்கிப் பிழிந்தார்கள். உழைப்பை உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் கரும்புச் சக்கையாகத் துப்பி விட்டார்கள்.

'கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை' என்று நாடக அரங்குகளில் எழுதி வைத்தார்கள். எப்பேர்பட்ட நன்றி கெட்டத்தனம். குடிக்கிற தண்ணீர் தொண்டைக்குள்ளே இருக்கிற வரைக்கும்தான் நன்றிக்கடன், நினைப்புக்கடன், வாழ்த்துக்கடன் எல்லாம்.


அது உள்ளே இறங்கிடுச்சா... அவ்வளவுதான். ஒரு கிராம் நன்றியை ஒரு வெள்ளிக்கு விற்கவும் தயங்க மாட்டாத பச்சோந்திகள் உலவுகின்ற சமுதாய அமைப்பில் நல்ல மனிதர்களும்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பச்சோந்தியம் வேறு மனிதயம் வேறு. தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

பதினெட்டு சுற்றுப் பட்டியைக் கூப்பிடு

வெள்ளைக்காரர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு கறுப்பர் குடியேறி விட்டால் அவரை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று திட்டம் போடுவார்கள்.


கொஞ்சம் கொஞ்சமாகத் தொல்லை கொடுப்பார்கள். அந்தத் தொல்லைகளை எல்லாம் தாண்டி ஒரு கறுப்பர், ஒரே ஒரு கறுப்பர் மட்டும் பேர் போட்டு விட்டால் போதும். பதினெட்டு சுற்றுப்பட்டியைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேச மாட்டார்கள். அவர்களுக்கு அது பிடிக்காத விஷயம்.

அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் ஒட்டு மொத்தமாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி விடுவார்கள். அதற்கு அப்புறம் அந்த இடம் சேரிப் பகுதியாக மாறும்.

நாய்களும் பூனைகளும் நலம் விசாரிக்கும் கழிசைப் பேட்டையாக மாறும். தொடர்ந்து நாலாந்தர குடிமக்கள் வாழும்  புறம் போக்காக மாறும். இதைத்தான் slumps என்று சொல்கிறார்கள்.


அமெரிக்காவில் இன ஒதுக்கல் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. அடியோடு அழிக்க முடியவில்லை. இனக் களைவும் நிறக் களைவும் நேர்க் கோட்டில் நின்று குசலம் விசாரிக்கின்றன. கறுப்பு வெள்ளை என்று நிறத்தைப் பார்க்கிறார்கள்.

எத்தனையோ கறுப்பினத் தலைவர்கள் வந்து பேரணி நடத்தினார்கள். போராட்டம் செய்தார்கள். இருந்தும் இன நிற பாகுபாடு புகைந்து கொண்டுதான் இருக்கிறது. துவானமும் விடவில்லை. தூறலும் நிற்கவில்லை.


இந்த அமெரிக்கர்கள் மட்டும் எங்கே இருந்து வந்தார்கள். பூமியைப் பிளந்து கொண்டு 'குபுக்' என்று ஒன்றும் வெளியே வரவில்லை. இவர்களும் இராக்காலத்தில் முளைத்த காளான்கள் தான்.

சாதி சனம் சீர்செனத்தி

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷார் அமெரிக்காவில் குடியேறினார்கள். சுண்டல் மூலம் சுரண்டல்தான். வேறென்ன. அதன் பின்னர் ஐரோப்பாவிலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் மக்கள் குடியேறினார்கள். இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா என்று எல்லா நாடுகளும் அடக்கம்.


இத்தாலியர் ஜெர்மனியரைக் கல்யாணம் செய்வது. ரஷ்யர் இத்தாலியரைக் கல்யாணம் செய்வது. இத்தாலியர் பிரிட்டிஷ்காரரைக் கல்யாணம் செய்வது. டச்சுக்காரர் போலந்துக்காரரைக் கல்யாணம் செய்வது. சாதி சனம் பார்ப்பது இல்லை. சீர்செனத்தி பார்ப்பது இல்லை. வரதட்சணை என்ற பேரில் மாப்பிள்ளையை வெட்கம் கெட்டு விற்பதுவும் இல்லை.

இப்படியே கல்யாணம் செய்து செய்து ஒரு கலப்படம் உருவானது. இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பிரச்னை பெரிதாக இல்லாமல் போய் விட்டது. இப்படி ஒரு கலப்படத்தில் உருவானவர்கள்தான் இந்த அமெரிக்கர்கள். ஆனால், இவர்கள் விஷயத்தில் நினைப்பு பிழைப்பைக் கெடுக்கவில்லை.

ஏனென்றால், புதிய இரத்தத்தின் வழி புதிய சமுதாயம் உருவாகிப் போனது. கலப்பட இரத்தம் கலங்கம் இல்லாமல் கலந்து விட்டது. அதனால், நல்ல சிந்தனையாளர்களும் அடிப்படைவாதிகளும் தோன்றப் புதிய பாதை பிறந்தது. இருந்தாலும் என்ன செய்வது. 'நான் தான் எல்லாத்திலும் ஒசத்தி' என்கிற மனப்பான்மை உச்சந் தலையில் குச்சுப்புடி ஆடுதே!

Talk Show என்பதைத்தான் மக்கள் அரங்கம், அரட்டை அரங்கம், விவாத அரங்கம், பேச்சரங்கம் என்று பலப்பல கோணங்களில் ஆஸ்ட்ரோவில் அரங்கேற்றி வருகிறார்கள். விசு, பெரியவர் சாலமன் பாப்பையா, லியோனி போன்றவர்கள் சபை கூட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அமெரிக்காவில் ஓபரா வின்பரே சரணம் பாடிவிட்டார்.


இன்றைய நிலையில் பேச்சரங்கம் மூலமாக தொலைக்காட்சி உலகின் முடிசூடா மகாராணியாக வலம் வருகிறார் ஓபரா வின்பரே. அவரை மிஞ்ச யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதே சாயலில் வருவதுதான் நடிகை லெட்சுமியின் 'அச்சமில்லை அச்சமில்லை' நிகழ்ச்சியும்! ஓபரா வின்பரேயின் இந்தச் சாதனை பல சோதனைகளுக்குப் பின்னால் பரிணமித்த அவதாரமாகும்.

விசுவாசமிக்க பிரஜை

Oprah Gail Winfrey என்பவர் 1954 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29 ஆம் தேதி பிறந்தார். அப்பா வெர்மன் வின்பரேக்கு வயது 21. இராணுவத்தில் இருந்தார். அம்மா வெர்னித்தா லீக்கு வயது பதினெட்டு. அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் பிரச்னை ஏற்பட்டது. பெற்றோர் பிரிந்து போயினர்.

ஓபரா வின்பரே பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆறு வருடங்கள் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். பாட்டியுடன் இருக்கும் காலத்தில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். வாசிக்கும் பழக்கம் வாரிசாக வந்து அமைந்தது. பேச்சாற்றலும் உடன் சேர்ந்து கொண்டது.

எதையுமே சரியாக சட்டென்று புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி ஓபராவுக்கு இருந்தது. அவரை மேலும் படிக்க வைக்க பாட்டிக்குச் சக்தி இல்லை. பாட்டி ஒரே ஆள்.

கிடைக்கிற சில்லறை வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தார். குடும்பத்தில் பணக்கஷ்டம். வறுமை விடாமல் விரட்டியது. ஓபராவுக்கு ஆறு வயதாகும் போது பாட்டியிடமிருந்து மறுபடியும் தாயிடமே வந்து சேர்ந்தார். பாட்டியிடம் இருக்கும் வரையில் அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை.


தாயிடம் வந்த பின்னரும் பிரச்னை இல்லைதான். எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார். பாட்டியிடம் கண்டிப்பு இருந்தது. ஆனால், தாயாரிடம் கண்டிப்பு இருந்தும் கண்காணிப்பு இல்லை. அதிகச் சுதந்திரமாக இருந்தார்.

எங்கே வேண்டும் என்றாலும் போகலாம் வரலாம். கேட்க ஆள் இல்லை. காலையில் வேலைக்குப் போகும் தாயார் விளக்கு வைத்துதான் வருவார். அதுவரை ஓபரா சொந்தக்காரர்கள் வீடுகளில்தான் விசுவாசமிக்க பிரஜையாக வாழ்ந்தார்.

அப்பொழுது எல்லாம் சேரிப் பகுதிகளில் கறுப்பர்கள் ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். கொலை, கொள்ளை, திருடு, பாலியல் வன்முறைகள் போன்றவை சகட்டு மேனிக்கு துளிர்விட்ட காலக் கட்டம். வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களும் கண்டு கொள்வது இல்லை. 'அடிச்சிகிட்டு சாவுங்கடா' என்று இரண்டு கண்களையுமே மூடிக் கொண்டார்கள்.

ஓபராவுக்கு ஒன்பது வயதாகும்போது ஒரு சம்பவம். வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். ஒருநாள் ஓபராவின் சொந்தக்காரர்களில் ஒருவர் அவரை வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். 'இங்கேயே இருந்துவிடு. நீ பெரிய மனுஷியானதும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்கிறார். விவரம் தெரியாத ஓபரா விழிக்கிறார். மிரள்கிறார்.

ஆசை ஆசையாய் மிட்டாய் பிஸ்கட்

விசயம் புரிகிற வயசா அது. ஆசை ஆசையாய் மிட்டாய் பிஸ்கட் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. அப்புறம் என்ன. பதிலுக்கு ஓபராவின் உடலும் தானம் செய்யப் படுகிறது. அந்த உறவினர் மற்ற மற்ற உறவினர்களிடம் சொல்லப் போய், அங்கே பலருக்கும் கன்னிகா குளியல்.

பல மாதங்களாக இது நடந்து வந்து இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஓபரா சொன்னவைதான். எதையும் மறைக்காமல் சொல்லி வருகிறார். உண்மையை உள்ளபடியாக சொல்லி வரும் அரிசந்திரவர்த்தினி.

அவரே இதை எல்லாம் சொல்லி இருப்பதால் தான் உயிரோடு இருக்கும் அவரைப் பற்றி விலாவாரியாக எழுத முடிகிறது. இல்லை என்றால் நடப்பதே வேறு. மான நஷ்டயீடு கேட்டு வழக்குப் போட்டு ஏழேழு ஜென்மங்களுக்கு நம்மை திவாலாக்கி இருப்பார்.

அப்புறம் நாமும் நந்தவனத்து ஆண்டியாகி குயவனைத் தேடிப் போனாலும் போக வேண்டி இருக்கும். இந்தப் பாதிப்புகளினால் தான் அவர் வெகு நாட்களாக கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

தனக்கு என்ன நடந்து வருகிறது என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத அப்பாவிப் பருவம். நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் முட்டி முடங்கிப் போனார். தனக்கு ஏற்பட்ட அவலங்களை இப்போதைய காலங்களில் பத்திரிகைகளில் எழுதி வருகிறார். விழிப்புணர்வு அரங்குகளில் சொல்லி வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவரிக்கிறார். ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கறுப்பினப் பெண்கள் கிள்ளுக் கீரைகளாகவே கருதப் பட்டார்கள். கறுப்பினப் பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரம். அந்த அளவுக்கு இந்தப் பக்கம் இல்லையே. அதுவரையில் நாம் ஒருவகையில் புண்ணியம் செய்தவர்கள்.

சாதனைகள் கோலத்தில் சோதனைகள்

அவர் மீதான பாலியல் பலாத்காரங்கள் ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து வந்து இருக்கிறது. அதனால் பதின்நான்கு வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகி நின்றாள்.

அந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போனது. ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை பிறந்தது சாதனையா சோதனையா. கின்னஸ் புத்தகத்தைப் பார்த்தால் சீனாவில் எட்டு வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி இருக்கிறது.

ரஷ்யாவில் ஏழு வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி இருக்கிறது. இப்படி நிறைய உண்டு. சாதனைகள் கோலத்தில் சோதனைகள் நடந்தும் இருக்கின்றன.

பதின்நான்கு வயது பெண்ணுக்கு கொஞ்சம்கூட பொருந்தி வராத அவலமான கோலங்கள். தும்மல், விம்மல், விரக்தி, வேதனை, ஆத்திரம்  என்று எல்லாமே அவரை விரட்டி விரட்டிப் பிடித்தன. புரட்டிப் புரட்டி போட்டன. அவை அனைத்தும் அவருடைய வாழ்க்கையின் கறுப்பு நாட்கள்.

இதை ஒரே ஒரு வரியில் நாம் சுலபமாகச் சொல்லிவிடலாம். ரொம்ப சுலபம். ஆனால், அந்த எழுத்துகளின் பின்னாலே தெரிகிற வலி இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கம்பரைக் கூப்பிட்டு 'ஒபேராயணம்' என்று ஓர் இராமாயணத்தை எழுதிக் கொடுங்கள் என்று கேட்கலாம். அவர்கூட சற்று யோசிப்பார். 

ஓபேராவின் மனதில் ரணங்கள் புண்களாகிக் கடைசியில் ஆழமான தளும்புகளாகின. இந்தக் கட்டத்தில் அவருடைய தந்தை வருகிறார். கவலையின் தளும்புகளை மறைக்க ஓபேராவின் தந்தை பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். தன் மகளைத் தண்டிக்காமல் கண்டிப்போடு வளர்த்தார். படிப்பின் அவசியத்தை மகளுக்கு நன்கு உணர்த்தினார்.

படிப்புதான் மனிதனின் ஜீவநாடி என்பதை வலியுறுத்தினார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகப் படிக்க வேண்டும். அதே போல ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும்.

வார இறுதியில் அந்தப் புத்தகத்தின் விவரத்தை தந்தையிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் ஓபேராவின் வாசிக்கும் திறமையை அதிகரித்தது. அது மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

இயற்கையிலேயே ஓபேரா படிப்பில் கெட்டிக்காரர். உள்ளூர் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையை வெளியுலகிற்கு காட்டினார். பால்நிலா காயத் தொடங்கியது. பாட்டுப் போட்டி, நடிப்பு என்று எதையுமே விட்டு வைக்கவில்லை. அவரிடம் அருமையான பேச்சுக்கலை இருந்தது. அதுதான் அவருடைய துருப்புச் சீட்டு.

அதை வைத்துக் கொண்டு ஒரு தனியார் வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகச் சேர்ந்தார். வேலை செய்து கொண்டே ஒளிபரப்புத் துறையில் மேல்படிப்பு படித்தார். பக்க பலமாக தந்தை இருந்தார்.

முக்கியமான திருப்புமுனை

1973 ஆம் ஆண்டு ஒர் உள்ளூர் தொலைக்காட்சியில் 'மக்கள் அனைவரும் பேசுகிறார்கள்' எனும் நிகழ்ச்சியை நடத்தினார். People Are Talking எனும் அந்த நிகழ்ச்சிக்கு மக்களின் பேராதரவு கிடைத்தது.

பின்னர் அந்த நிகழ்ச்சி தேசிய ரீதியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் நடத்தி அமெரிக்க மக்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார். எல்லாவற்றிற்கும் அவருடைய பேச்சுத் திறமைதான் காரணம்.

ரசிகர்களிடம் கேள்வி கேட்டு அதே அந்த ரசிகர்களிடமிருந்தே பதிலை வரவழைப்பதில் ஓபேரா பலே கில்லாடி. அது ஒரு தனிக்கலை. 1984 ஆம் ஆண்டு ஓபேராவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை.

நம் தொலைக்காட்சியில் சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, ராஜ் டிவி என்று இருக்கிறதே, அதைப் போல அமெரிக்காவில் WLS எனும் ஒளிபரப்பு ஒன்று இருக்கிறது. அது அப்போதைய காலத்தில் ரசிகர்கள் கணக்கெடுப்பில் அடி பாதாளத்தில் இருந்தது.

அந்த நிலையத்தில் AM Chicago எனும் நிகழ்ச்சியைத் தொடங்கினார். அது ஒரு நேர்காணல் நிகழ்ச்சி. தனது சுவாரஸ்யமான பேச்சால் ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.

அந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வருடத்தில் அரைமணி நேரமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப் பட்டது. சாதனை தானே!

சிறுமிகளுக்கான பாலியல்
கொடுமைகள் விழிப்புணர்வு


அந்த நிகழ்ச்சி தான் இன்றுவரை உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் 'ஓபேரா வின்பரே ஷோ". இந்த நிகழ்ச்சிக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. இன்றும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். 25 வருடங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்து ரசிகப் பட்டாளம் பெருகியது. பெண் ரசிகைகள் ஏராளம். முதிர்ச்சியும் பக்குவமும் அதிகரிக்க திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். ஹார்ப்போ என்பது அவருடைய நிறுவனம். பணம் கொட்டத் தொடங்கியது.

2003 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். ஒரு விஷயம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணும் ஓபேராதான். 'போர்ப்ஸ்' எனும் பத்திரிகை இந்தப் பட்டியலைத் தயாரித்து வருகிறது.

கிடைக்கும் பணத்தை அர்த்தமுள்ள வகைகளில் செலவு செய்து வருகிறார். பாலியல் கொடுமைகளை எதிர்த்து முழுமூச்சுடன்  போராடி வருகிறார்.

'சிறுமிகளுக்கான பாலியல் கொடுமைகள் விழிப்புணர்வு' அமைப்பைத் தொடங்கி அல்லும் பகலும் உழைத்து வருகிறார். அந்த அமைப்பிற்கான எல்லா செலவுகளையும் இவரே பார்த்துக் கொள்கிறார்.

அவருக்கு கிடைக்கும் வருமானம் நூறு டாலர் என்றால் அதில் 82 டாலர்களைத் தான தர்மங்களுக்குச் செலவு செய்து விடுகிறார். உலகிலேயே வருமானவரி மிக மிகக் குறைவாகக் கட்டும் ஒரே கோடீஸ்வரர் ஓபேராதான். ஏனென்றால், அவருடைய தான தர்மங்களினால் அதிகப்படியான வரிவிலக்கு கிடைக்கிறது.

ஆப்ரிக்காவில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ஓர் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார். பல நூறு கோடி டாலர்களை அங்கே கொண்டு போய் கொட்டுகிறார். 'என் சந்ததியினர் எங்கே இருந்து வந்தார்களோ அங்கேயே இந்தப் பணம் போகட்டும்' என்று சொல்கிறார்.

சுனாமி பேரிடர் மறுவாழ்வு மையம்


தங்களின் வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணம் செய்தவர்களுக்கு 'Use Your Life Award' எனும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். அது ஒரு பிருமாண்டமான நிகழ்ச்சி.

தென் ஆப்ரிக்காவில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ஓர் ஆசிரமத்தை உருவாக்கி தன் செலவிலேயே பார்த்துக் கொள்கிறார். 

ஒபேரா வின்பரே லீடர்ஷ’ப் அகாடமி எனும் கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்து ஆப்ரிக்க பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்து வருகிறார்.

ஆண்டு தோறும் கல்லூரிகளில் படிக்க வசதியில்லாத ஆப்ரிக்க மாணவர்கள் நூறு பேரை அமெரிக்காவிற்கு கொண்டு வந்து படிக்க வைக்கிறார். நூறு கோடி டாலர்

செலவில் தென் ஆப்ரிக்காவில் புற்று நோய்க்கான ஓர் இலவச மருத்துவமனையைக் கட்டி பராமரித்து வருகிறார். அதில் ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

காம்பியா நாட்டில் ஏழைகளுக்கான இலவச சிகிச்சை மையத்தைக் கட்டியிருக்கிறார். நிர்வாகச் செலவுக்கான பணத்தை அரசாங்கத்திடமே கொடுக்கிறார்.

சுனாமி பேரிடர் மறுவாழ்வு மையம் ஒன்றை ஸ்ரீலங்காவில் கட்டி பல கோடி செலவு செய்து வருகிறார்.

பாப்புவா நியூகினி நாட்டில் உள்ள பூர்வீகக் குடிமக்களைக் காப்பாற்ற 15 கோடி செலவில் இலவசமாக ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

நேப்பாளத்தில் 20 கோடி டாலர் செலவில் இலவச மருத்துவமனையைக் கட்டி அமெரிக்க டாக்டர்களை அங்கே அனுப்பி வைத்திருக்கிறார். எல்லா செலவுகளையும் இவரே ஏற்றுக் கொள்கிறார்.

எதியோப்பியாவில் 'Poverty Eradication Programme' எனும் வறுமை ஒழிப்பு அறக்கட்டளையை உருவாக்கி பல ஆயிரம் உயிர்களுக்கு உயிர்பிச்சை கொடுத்து வருகிறார்.

சூடான் நாட்டில் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு நல்லபடியான போக்குவரத்து கிடைக்க வேண்டும் என்று 65 பேருந்துகளை வாங்கி அனுப்பி இருக்கிறார்.

இன்னும் பட்டியல் நீள்கிறது. இப்போது சொல்லுங்கள் இந்த மனுஷி ஒரு மனிதப் பிறவியா இல்லை தெய்வப் பிறவியா. பணத்தைப் பார்த்து பல்லைக் காட்டும்
உலகில் இந்தக் காவேரிக் கன்னி ஓர் உயர்ந்த இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார்.
இவர் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும்!
ஆண்டவன் அருள் புரியட்டும்!   

3 கருத்துகள்: