13 February 2011

கணினியும் நீங்களும் - 88

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 14.02.2011 மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.)

சரவணன் சாரா <sarasarawanan55@yahoo.co.uk>
கே: ஆங்கில-தமிழ் Google அகராதி மிகவும் அருமையான சுலபமான  அகராதி என்று சொல்கிறார்கள். எப்படி பதிவு இறக்கம் செய்வது?

ப: நீங்கள் சொல்வது சரி. உலகத்திலேயே மிகச் சிறந்த ஆங்கில-தமிழ் அகராதி என்றால் இப்போதைக்கு கூகிள் தமிழ் அகராதி தான். இது Online Dictionary. அதாவது நேரடி இணைய அகராதி.நேரடி இணையம் என்றால் இணையத்தில் நேரடியாகப் பங்கு பெறுதல்.

ஆங்கிலத்தில் Online என்கிறோம்.  பதிவிறக்கம் செய்ய அவர்கள் இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால், நீங்கள் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே.  அதன் இணைய முகவரி: http://www.google.com/dictionary.  'தமிழ்' என்பதைத் தேர்வு செய்து அதில் தட்டச்சு செய்யுங்கள்.

தாண்ணா ஸ்ரீ <tankanna33@yahoo.com>
கே: Anti Virus எனும் தடுப்பு நச்சு நிரலி பயன் படுத்தாமல் இணையத்தில் இருந்தேன். இப்போது என் கணினியை வைரஸ் தாக்கி விட்டது. கணினி அப்படியே நின்று விடுகிறது. கணினிக்கு ஆபத்து வந்துவிட்டது. என்ன செய்வது?


ப: சவர்க்காரம் போட்டு குளிக்காமல் இருந்தால் சொறி சிரங்கு வராமல் வேறு என்னய்யா வரும். இப்போது உடல் பூரா கொப்புளங்கள் வந்து விட்டன. தோல் வியாதி வந்த பிறகு என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். வேறு வழி இல்லை. தோலை உரித்து விடுவது தான் நல்லது. தப்பாக நினைக்க வேண்டாம்.

கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்யச் சொல்கிறேன். தடுப்பு நச்சு நிரலி இல்லாமல் இணையத்தில் தாராளமாக நுழையலாம். வரலாம். பிறகு தடுப்பு நச்சு நிரலியைப் பதிப்பு செய்யலாம். ஆனால் நச்சு நிரலிகள் கணினிக்குள் இருக்கவே செய்யும். அதனால் தான் சுத்திகரிப்பு செய்யச் சொல்கிறேன்.

உதயக்குமார்  <uthayakumar15@gmail.com>
கே: மலேசியாவில் தலைசிறந்த அல்லது முன்னோடியான வலைப்பதிவர் என்று யாரை அழைக்கலாம்?
ப:
வலைப்பதிவர் என்றால் யார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக நாம் அழைத்து வருகிறோம். அதே போல தங்கள் எழுத்துக்களை இணையத்தில் பதிவு ஏற்றம் செய்பவர்களை வலைப் பதிவர்கள் என்கிறோம். இந்த இரு பிரிவினருமே எழுத்தாளர்கள் தான்.

கே.பாலமுருகன்
இதில் இணையத்தில் நிறைய எழுதுபவர்களைத் 'தலைசிறந்த' என்று சொல்லலாமா. இல்லை தரமான எழுத்துக்களை எழுதுபவர்களைத் 'தலைசிறந்த' என்று சொல்லலாமா. வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மலேசியத் தமிழ் இணைய உலகில் முடிசூடா மூர்த்திகள் என்றால் டாக்டர் ஜெயபாரதி,  முனைவர் ரெ.கார்த்திகேசு, முரசு அஞ்சல் முத்து, சுப.சற்குணன், கே.பாலமுருகன், குமரன் மாரிமுத்து, விக்னேஸ்வரன் ஆகியவர்களைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு அப்பால் நிற்பவர் கி.லோகநாதன் எனும் தமிழ் இணைய முன்னோடி.

சுப.சற்குணன் தனித்துவம் வாய்ந்தவராக விளங்குகின்றார். நல்ல ஒரு மாபெரும் தமிழ்த் தொண்டர். திருத்தமிழ், திருமன்றில், வலைப்பதிவுகளை நடத்தி வருகிறார். பல வலைப்பதிவர் கலந்துரையாடல்களை நடத்திய பெருமையும் அவருக்குச் சேரும்.

கரிகாற் சோழன் விருதைப் பெற்று சாதனை படைத்த கே.பாலமுருகன் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' எனும் நாவல் மூலம் மலேசியர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரும் தலை சிறந்த வலைப்பதிவர் தான்.

மலேசியாவில் முதல் தமிழ் வலைப்பதிவாளர் எனும் பெருமை குளுவாங் வாசுதேவனைச் சாரும். இவரை ஒரு முன்னோடி வலைப்பதிவாளர் என்று சொல்வதில் தப்பு இல்லை. சுபாஷ’னி, ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், பாலகோபாலன் நம்பியார், சி.ம. இளந்தமிழ், கு.தீபன், பீட்டர் ஜான்சன், சிவனேஸ், தமிழினியன், ஏ.எஸ்.பிரான்சிஸ், கோ.புண்ணியவான், நவீன் போன்றவர்களின்  பட்டியல் நீள்கிறது. இதில் பலரின் பெயர்கள் விடுபட்டுப் போய் இருக்கலாம். பொறுத்து அருளுங்கள்.

தமிழன், சுங்கைவே, சிலாங்கூர்
கே: கூகிள் தேடல் இயந்திரத்தில் Google எனும் அவர்களுடைய சின்னத்திற்குப் பதிலாக என்னுடைய பெயரை வரவழைக்க வேண்டும். உங்களால் முடியும் என்று என் நண்பரிடம் சவால் விட்டிருக்கிறேன். தன்மானப் பிரச்னை. உங்களுடைய கணினிப் புலமையையும் காட்ட வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள்.  இல்லை என்றால் தூக்குப் போட்டுக் கொள்கிற நிலைமை வரலாம்.

ப:
ஐயா... சாமி. கை எடுத்து கும்பிடுறேன். அப்படி எல்லாம் ஒன்றும் செய்து விட வேண்டாம் என்று கெஞ்சுவேன் என்று நினைத்தீர்களா. அதுதான் இல்லை. தூக்குப் போட்டுக் கொள்வது என்றால் தாராளமாக தூக்குப் போட்டுக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது. முடிந்தால் நன்றாகத் தொங்குவதற்கு ஒரு நல்ல கயிறாக வாங்கித் தருகிறேன். ஏன்யா எதற்கு எதற்கு உயிரைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாம்.   தெரியாமல் தான் கேட்கிறேன். உங்கள் உயிர் என்ன சுண்டக் காயா இல்லை வெண்டிக்காயா?தூக்குப் போட்டுச் சாகிற அளவுக்கு அப்படி என்னய்யா ஒரு பெரிய தன்மானப் பிரச்னை. வருகின்ற காலத்தில் இந்த மாதிரியான சவால் எல்லாம் வேண்டாம். உலகத்திலேயே மதிக்க முடியாதது உயிர். அதிலும் பெரியது மனித உயிர். ஆண்டவன் கொடுத்ததை ஆண்டவன் தான் எடுத்துக் கொள்வான். ஆக, ஆண்டவனை மிஞ்சி எதையும் செய்ய வேண்டாம். உருப்படியாக எதையாவது செய்யப் பாருங்கள். சரியா. இந்தா பிடியுங்கள் பதிலை.

இமயமலையின் ஆங்கிலப் பெயர் Mount Everest. அந்தப் பெயருக்குப் பதிலாகத் தமிழன் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள். ஆனால், அந்தப் பெயரை உலக மக்கள் பயன் படுத்த மாட்டார்கள். நீங்கள் ஒருவர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். சரிதானே! முதலில் உங்கள் கணினியில் Firefox உலவியை நிறுவி இருக்க வேண்டும். அதன் பின்னர் https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/ எனும் இடத்திற்குப் போய் 'கிரீஸ் மங்கி' எனும் லிபி (Script) கூடுதல் இணைப்பைச் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு, File, Edit, View, History, Bookmarks, Tools, Help என்பதில் Tools  என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Grease Monkey என்று ஓர் பட்டை இருக்கும். அதைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் தமிழன் என்கிற பெயரைத் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து பயர்பாக்ஸ் உலவியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். உங்கள் விருப்பப்படி பெயர் மாறி இருக்கும்.
பிரச்னை என்றால் http://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post_26.html எனும் இடத்தில் விவரங்கள் கிடைக்கும்.

பாலு மணிக்கண்டன் <manikandan_9842@yahoo.com>
கே: 'மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் களஞ்சியம்' எனும் ஒரு தொகுப்பு வெளிவரப் போகிறதாகக் கேள்வி பட்டேன். உண்மையா?
: இன்னும் வெளிவரவில்லை. மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய தொகுப்புகள் நிறைய உள்ளன. ஆனால், மலேசியத் தமிழ் வலைப் பதிவர்களைப் பற்றிய விவரத் தொகுப்புகள் அடங்கிய  ஒரு நூல் வடிவத் தொகுப்பு இன்னும் உருவாகப் படவில்லை.இணையத்தில் நூற்றுக்கணக்கான மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களைப் பற்றி எதிர்காலச் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்லதொகுப்பின் மூலம் அந்த மாய உலகின் மாமேதைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுடைய வலைப்பதிவு விவரங்களை mybloggerstamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் களஞ்சியம்' உருவாக்கம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

சங்கீதா மோகன், ஜொகூர் பாரு
கே: சார், பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்களின் இணையத்தள முகவரி என்ன? அவர் ஒரு வலைப்பதிவரா?ப: சீனிக்கும் உப்புக்கும் விளம்பரம் இல்லை. அது போல மலேசியத் தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ரெ.காவிற்கும் விளம்பரம் தேவை இல்லை. 'மலேசியாவிலிருந்து ரெ.கா' எனும் இணையத் தளத்தை நடத்தி வருகிறார். முகவரி:http://reka.anjal.net/ அழகு அழகான, அற்புதமான எழுத்துப் படிவங்கள். காலா காலத்திற்கும் கதை சொல்லும் பரிமாணங்கள்.

தர்மசீலன் முனியாண்டி, கிள்ளான்
கே: ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக் சொல்லுங்கள்?
ப:
அண்மையில் எனக்கு வந்த ஜோக்.
காதலன்: ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
காதலி: செருப்பு பிஞ்சிடும் தலைவா
காதலன்: பிஞ்சிப் போனா பரவாயில்ல... கையில எடுத்துக்கிட்டு ஓடலாம் கண்ணே...!


வ.சுப்பிரமணியம், சிரம்பான்
கே: முரசு அஞ்சல் தற்போதைய பதிப்பை வாங்கலாம் என்று உத்தேசித்து உள்ளேன். இந்த முரசு ABOBE IN DESIGN எனும் கிராபிக் மென்பொருளில் பயன்படுத்தித் தட்டச்சு செய்ய முடியுமா?


ப: முடியும். மலேசிய நாளிதழ்கள் தயாரிப்பில் Page Maker பயன்படுத்துகிறார்கள். அதில் முரசு நன்றாக வேலை செய்கிறது. அடோபே நிறுவனம் இப்போது 'பேஜ் மேக்கர்' ஐ வெளியிடுவது இல்லை. 2005 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டார்கள். அதனால் அந்த நிரலிக்கு அடோபேயின் புது சேர்ப்புகள் எனும் updates கிடைக்காது. அதற்குப் பதிலாக 'இன் டிசைன்' வெளிவருகிறது. அதற்கு மாறிக் கொள்ளுங்கள்.

3 comments: