20 பிப்ரவரி 2011

கோல்கொண்டா வரலாறு

வைரங்களும் வைடூரியங்களும்

கொட்டிக் கிடந்த பூமியின் கலசங்கள் தெரிகின்றன. காலப் பிரளயத்தில் கதை சொல்ல முடியாத காவியக் கலைகள் தெரிகின்றன.  அன்று ஒரு நாள் இதே நிலவில் ஆயிரம் ஆயிரம் அழகிகள் ஆடிப் பாடினார்கள்.


அதனால் ஆர்ப்பரித்துப் போன கோபுர வாசல்கள் தெரிகின்றன. நல்லவர்களும் கெட்டவர்களும் நாடி ஜோசியம் பார்த்தார்கள். அந்த நளினங்கள் தெரிகின்றன. சல்லாபங்களுக்கும் சரசங்களுக்கும் சமரசங்கள் பாடிய கருங் கோட்டைச் சுவர்களும் தெரிகின்றன. என்ன செய்வது.

அப்பேர்ப் பட்ட கோல்கொண்டாவின் இப்போதைய நிலையைப் பாருங்கள். வேதனையாக இருக்கிறது. எல்லாமே இப்போது இடிந்து போய் தெருப் புழுக்களாய்த் தெரிகின்றன. எல்லாமே எலும்பும் தோலுமாய்ச் சரித்திரம் பேசுகின்றன.

அவை எல்லாம் ஆந்திர பிரதேசத்தின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கின்றன. அந்தச் சுவட்டை நாமும் கொஞ்சம் விரட்டிப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் கோல்கொண்டாவின் புகழ் உலகம் பூராவும் பரவிக் கிடந்தது. இந்தியாவைப் பிடிக்க வந்தவர்கள் எல்லாரும் கோல்கொண்டாவின் மீது கை வைக்காமல் போனது இல்லை.


அந்த அளவிற்கு கோல்கொண்டா பிரசித்தி பெற்றது. கோல்கொண்டா என்று சிலர் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால், அதன் உண்மையான ரகசியங்கள் பலருக்குத் தெரியவே தெரியாது.

1960 களில் ரேடியோ மலேசியா என்று அழைக்கப் பட்ட  இன்றைய மலேசிய வானொலி எனும் மின்னல் எப்.எம். வாரத்திற்கு ஒரு முறை நேயர் விருப்பம் போடுவார்கள். அதைக் கேட்க தோட்ட மக்களே திரண்டு நிற்பார்கள். 

நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொண்டா தோட்டத்தின் பெயர் வாரம் தவறாமல் வரும்.

அந்தத் தோட்டம் இப்போது அத்திம் மேடாக மாறி இருக்கலாம். இதை ஏன் சொல்ல வருகிறேன். இந்தக் கோல்கொண்டா எனும் பெயர் உலகில் பல நாடுகளில் பல இடங்களின் பெயர்களாக மாறி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. அதே மாதிரிதான் இங்கே மலேசியாவில் இருந்தது அந்தக் கோல்கொண்டா. 

கோல்கொண்டா அல்லது Golconda என்பது ஓர் ஆந்திரச் சொல். உருதுச் சொல் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஒரு காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவை ஆண்டு வந்தார்கள். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவின் வட பகுதியை ஆண்டு வந்தார்கள். சோழர்கள் தென் பகுதியை ஆண்டு வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை.

இந்தச் சண்டைகள் பெரிதாகிப் போய் கடைசியில் ஒரு பயங்கரமான போராக வெடித் தது. அதுதான் சாளுக்கிய-சோழப் போர். கி.பி. 950ல் நடந்தது.


இதில் சாளுக்கியர்கள் தோற்றுப் போனார்கள். இந்தச் சமயத்தில் சாளுக்கியர்களின் பிரதிநிதியாக இருந்த இரண்டாம் அம்மா என்கிற சிற்றரசன் தனக்கு என்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொண்டான்.

ஆந்திர பிரதேசத்தில் ஹைதராபாத் நகரைச் சுற்றியுள்ள நிலப்பகுதிதான் அந்தத் தனி நாடு. மலேசியாவின் பேராக் மாநில அளவிற்குப் பெரியது.

அதற்கு காக்காத்தியா அரசு என்று பெயரையும் சூட்டினான். Kakatiya Dynasty என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஹைதராபாத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிதான் இந்தக் காக்காத்தியா அரசு.

அப்புறம் இந்த அரசு பற்பல தடைகளைத் தாண்டி நல்லபடியாக முன்னேறி வந்தது. இந்தக் காக்காத்தியா மன்னர்கள்தான் கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்கள். இந்தக் கோட்டைக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

கி.பி.1143 ஆம் ஆண்டு. ஓர் இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஓர் அழகான சிலையைக் கண்டு எடுத்தான். அந்தச் சிலையைக் கொண்டு போய் மன்னரிடம் கொடுத்தார்கள்.

அதன் அழகில் இலயித்துப் போன மன்னன் சிலை கண்டு எடுக்கப்பட்ட இடத்திற்கு கோலா கொண்டா என்று பெயரைச் சூட்டினான்.


கோலா கொண்டா என்பது ஆந்திரச் சொல். ஆடு மேய்க்கும் இடையனின் குன்று என்று அர்த்தம். அந்த இடத்தின் பழைய பெயர் மங்களவரம். இப்படித் தான் கோலா கொண்டா என்பது கோல்கொண்டா எனும் பெயர் மாறி சரித்திரம் படைத்தது.

கோல்கொண்டா கோட்டையை ஓர் அரசன் கட்டவில்லை. பலர் கட்டினர். 13ஆம் நூற் றாண்டில் கட்டப்பட்டது. மிக அற்புதமான கருங்கல் கோட்டை. தப்பு.  கருங்கல்லாலும் பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான கல் ஓவியம்.


ஹைதராபாத்தில் இருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில் இன்னும் இருக்கிறது. பல போர் வெறியர்களின் தாக்குதலால் ரொம்பவும் சேதம் அடைந்து விட்டது.

இந்தக் கோட்டையைக் கட்டிய பிறகு தான் காக்காத்தியா அரசுக்கு கோல்கொண்டா சாம்ராஜ்யம் எனும் பெயரும் வந்தது. கோல்கொண்டா கோட்டை ஒரு மனோரஞ்சிதமான கோட்டை. முழுக்க முழுக்க பளிங்கு கருங்கற்களால் கட்டி இருக்கிறார்கள். ஏழு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுவர்களை எழுப்பி இருக்கிறார்கள்.

கோட்டையின் உயரம் 400 அடிகள். கட்டி முடிக்க 62 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. கோட்டைக்கு உள்ளே ஒரு மாநகரமே இருந்திருக்கிறது.


அரண்மனைகள், தொழில் சாலைகள், குடிநீர் விநியோகத் திட்டம், பீரங்கிகள் சார்ந்த அரண்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், வணிகச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், புல்வெளிகள், நீர்மனைகள், நேர்த்திக் கடன் இல்லங்கள், சூதாட்ட மையங்கள், குதிரை இலயங்கள், நீதிமன்றங்கள், இத்யாதி இத்யாதி. மன்னிக்கவும்.

இப்போது உள்ள கட்டிடக் கலைஞர்கள் எல்லாம் அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும். இதில் ஓர் அதிசயம் என்ன தெரியுமா.

கோட்டையின் வாசல் படியில் இருந்து இரண்டு கைகளையும் தட்டினால் அந்தச் சத்தம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாலா இசார் எனும் ஓர் உயரமான இடத்திலும் கேட்கிறது. என்னே ஒலி அலை அற்புதங்கள். நம்ப முடியவில்லை.

கோல்கொண்டா கோட்டைக்குப் போவதற்கு முன்னால்
என் மனைவியை ஆசிர்வதிக்கும் ஒரு கோயில் கணபதியார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி ருக்குமணியும் போய்ப் பார்த்தோம். இப்படி எல்லாம், கோட்டைகளைக் கட்டி அழகு பார்த்து இருக்கிறார்களே என்று பிரமித்துப் போனோம்.

எங்கள் உள்ளங்களும் கூனிப் போயின.  எல்லாருடைய ஆழ்மனதிலும் உறக்கம் கொண்ட மகாமேடை அது. ஆழ்ந்து போன உலகக் கோட்டைகளில் இதற்கு முதல் இடம். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

அவுரங்கசிப் எனும் மொகலாய அரசனைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். பெற்ற தந்தை ஷா ஷகானையே  கொண்டு போய் சிறையில் வைத்து வேடிக்கை பார்த்தவன்.

சொந்தச் சகோதரர்களையே காவு கொடுத்தவன். அவன் தான் ஆகக் கடைசியாகக் கோல்கொண்டா கோட்டையைத் துவம்சம் செய்தவன். கதை பிறகு வருகிறது.

காக்காத்தியா அரசு போன பிறகு பாமினி ஆளுமை வந்தது. பாமினியர்களில் ஒரு பகுதியினர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியர்கள். அவர்கள்தான் காக்காத்தியா அரசைக் கைப்பற்றி கோல்கொண்டா சாம்ராஜ்யத்திற்கு புத்துயிர் கொடுத்தவர்கள்.

கோல்கொண்டா கோட்டையைச் žரமைப்புச் செய்தவர்களும் கூட. இவர்களைக் குதுப் அரசர்கள் என்றும் சொல்வார்கள். அந்த வரிசையில் நான்காவதாக வந்தவர் குலி குதுப் ஷா வலி என்பவர்.

இந்தப் பாமினியர்கள் ஆட்சி செய்யும் போது மேலே மொகலாய சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மொகலாயர்கள் படை எடுப்பார்கள்.

அந்த அச்சத்தில் பாமினியர்கள் கோல்கொண்டா கோட்டையை மேலும் வலுப் படுத்தினார்கள். 1687 வரை கோல்கொண்டா சாம்ராஜ்யம் பாமினியர்கள் கைவசம் இருந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களும் பாமினியர்களிடம்தான் இருந்தது. பாமினியர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த காலத்தில் மேலே அக்பர், ஜஹாங்கிர், ஷா ஷகான் போன்றவர்கள் டில்லியை ஆட்சி செய்து வந்தனர்.

இவர்கள் மூவருமே அதிகமாக வெளிநாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை கொண்டவர்கள். அமைதியைக் கடை பிடித்தவர்கள். அதனால் பாமினியர்கள் நிம்மதியாகக் காலம் தள்ளினர்.

அவுரங்கசிப் பற்றி பீடிகை போட்டேன் அல்லவா. இந்தக் கட்டத்தில் அவர் வருகிறார். 1687ல் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தன்னுடைய சாம்ராஜ்யத்தைப் பெரிதாக ஆக்க வேண்டும் எனும் வெறி. 

கோல்கொண்டாவைத் தாக்கினான். அவ்வளவு சுலபத்தில் விழவில்லை. ஒன்பது மாதங்கள் கோல்கொண்டா தாக்குப் பிடித்தது. அப்புறம் விழுந்தது.

1707ல் அவுரங்சிப் இறந்து போனான். ஏற்கனவே வெறி பிடித்துப் போய் ஷா ஷகானைச் சிறையில் அடைத்தான். ஷா ஷகான் ஒழுங்காக நாட்டை நடத்தவில்லை. இருக்கிற செல்வத்தை எல்லாம் கொண்டு போய் தாஜ் மகாலில் கொட்டினார். கஜானா காலி ஆகிறது எனும் ஆதங்கம்.

இதில் யார் அடுத்த மொகலாய அரசனாக வருவது எனும் போட்டி வேறு. இருந்த சகோதரர்களை எல்லாம் ஒரு வழி பண்ணிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். அந்த வேகத்தில்தான் கோல்கொண்டாவிற்கு வந்தான்.

ஒன்பது மாதங்கள் வரை கோல்கொண்டா கோட்டையை முற்றுகை இட்டு தாக்குதல் மேல் தாக்குதல் நடத்தினான். அதோடு பாமினியர்களின் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.

அவுரங்சிப் இறந்த பிறகு மொகலாய சாம்ராஜ்யமும் பலம் இல்லாமல் போனது. அவருக்குப் பிறகு பகதூர் ஷா என்பவர் வந்தார். சரியாக ஆட்சியை நடத்த முடியவில்லை. சன்னம் சன்னமாக மொகலாய சாம்ரஜ்யம் தேய்ந்து போனது. சரி. கீழே கோல்கொண்டாவிற்கு வருவோம்.

அவுரங்சிப் இறந்த கையோடு ஹைதராபாத்தில் இருந்த நிஜாம் தலை தூக்கினார். கோல்கொண்டாவைச் சுதந்திரப் பிரகடனம் செய்தார். இந்தக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்து விட்டார்கள்.

Divide and Rule எனும் மகா பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்களும் அவர்களே. அதற்காக நோபல் பரிசுகளில் ஒரு பத்துப் பதினைந்து கொடுத்திருக்கலாம். என்ன செய்வது. அல்பிரட் நோபல் அப்போது பிறக்கவில்லையே. இருந்தாலும் உலகத்தில முக்கால்வாசியை அடித்துப் பிடித்து வாங்கிவிட்டார்களே. அதுவரை பாராட்ட வேண்டும்.

ஹைதராபாத் நிஜாம் இருக்கிறாரே இவர் பக்கா சந்தர்ப்பவாதி. வெள்ளைக்கார்கள், மராட்டியர்களுடன் சேர்ந்து கொண்டு திராவிட வீரன் திப்பு சுல்தானை ஒழித்துக் கட்டினார்.

அப்புறம் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் கோல்கொண்டாவின் ராஜாவாகவும் இருந்தார். 

உலகத்திலேயே அதிகமாக வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது இந்தக் கோல்கொண்டாவில்தான். நுர் உல் அயின் வைரம், கோகினூர் வைரம், Hope வைரம், Regent வைரம் போன்ற உலகப் புகழ் பெற்றவை எல்லாம் இங்கே இருந்து போனவைதான். வரலாற்று ஏடுகளில் கோல்கொண்டா எப்போதும் நிலைத்து நிற்கும்.

கோல்கொண்டா மாபெரும் சாம்ராஜ்யமாக இருந்த போது இவை எல்லாம் தெரிந்த உண்மைகள். இப்போது இவை எதுவுமே தெரியவில்லை. மறைந்து விட்டன. ஏன்? காலம் செய்யும் கோலம்!  

5 கருத்துகள்:

  1. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள், நிறைய வரலாற்று தகவல்கள் கூட எழுதியது அருமை, அங்கு சென்று வர வசதிகள் விவரமும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள், நிறைய வரலாற்று தகவல்கள் கூட எழுதியது அருமை, அங்கு சென்று வர வசதிகள் விவரமும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பிறந்த தோட்டத்திற்கு ஒரு பெரிய வரலாரையே எழுதி விட்டீர்கள் ஐயா... ஒரு நல்ல வரலாற்றுப் பாடத்தைப் படித்தது போலிருந்தது... அற்புதம்... இந்தியர்களை விடுங்கள்.. தங்களுக்குள் அடித்துக் நம் மூவேந்தர்கள் மட்டும் அப்போது ஒற்றுமையாக இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் துள்ளி விளையாடுகிறது... ம்.. என்ன செய்வது... கனவு கனவாகவே இருக்கிறதே... நம் ஈழம் வரைக்கும்!!!!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பிறந்த தோட்டத்திற்கு ஒரு பெரிய வரலாரையே எழுதி விட்டீர்கள் ஐயா... ஒரு நல்ல வரலாற்றுப் பாடத்தைப் படித்தது போலிருந்தது... அற்புதம்... இந்தியர்களை விடுங்கள்.. தங்களுக்குள் அடித்துக் கொண்ட நம் மூவேந்தர்கள் மட்டும் அப்போது ஒற்றுமையாக இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் துள்ளி விளையாடுகிறது... ம்.. என்ன செய்வது... கனவு கனவாகவே இருக்கிறதே... நம் ஈழம் வரைக்கும்!!!!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா30/3/11, PM 8:03

    Golconda JAI

    பதிலளிநீக்கு