17 ஆகஸ்ட் 2011

அனுராதா ரமணன்


அனுராதா ரமணன். தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவருடைய எழுத்துகளில் புதுமையான சமூகக் கோணங்கள், முற்போக்குச் சிந்தனைகள், பெண் உரிமை, பெண்மைப் புரட்சி போன்றவை அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கும்.



முப்பது ஆண்டுகளில் 800 நாவல்கள் 1230 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான தொடர் கட்டுரைகளை எழுதிக் குவித்தவ்ர். இவரது ஆறு நாவல்கள் திரைப்படங்களாக உருவெடுத்தன.

பல படைப்புகள் தொலைக்காட்சி நாடகங்களாக ஒளிபரப்பு செய்யப் பட்டுள்ளன. இவர் சிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல. சிறந்த ஓவியரும் ஆவார்.



அனுராதா ரமணன் தன்னம்பிக்கை நிறைந்த பெண். ’நின்றால் தப்பு, நிமிர்ந்தால் தப்பு’ என்று பெண்களை வறுத்து எடுத்த ஒரு சமூகப் பின்னணியில் மிகவும் தைரியமாகச் செயல்பட்டவர்.

துணிவே துணை என்று வாழ்ந்தவர். இருதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தும், மற்றவர் பார்வையில் முதுமையே இல்லை என்பது போல் வாழ்ந்தவர்.



தஞ்சாவூரைச் சார்ந்த அனுராதா ரமணன் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே அவருக்குத் திருமணம் ஆயிற்று. இவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவம்.

இருபத்து மூன்று வயதிலேயே இரு பெண் குழந்தைகளுடன் பிறந்தகம் வந்து சேர்ந்தார். பாதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்தார். தனி மனுஷியாகத் தன் பெண்களை வளர்த்தார்.



ஆரம்பத்தில் ஓவியராக, வடிவமைப்பவராகப் பத்திரிகை உலகில் நுழைந்தார். ஒருமுறை ’மங்கை’ பத்திரிகைக்குத் தன் ஓவியங்களுடன் சென்ற போது தன் ’டயரி’யை அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.

யாருடைய நாள்குறிப்பு என்று பார்க்கும் போது அதில் அவர் எழுதி இருந்த குறிப்புகளைக் கண்ட ஆசிரியர் அவரைக் கதை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். மிகுந்த தயக்கத்துடன் எழுதிய கதைதான் ’கனவு மலர்கள் கருகும்போது’.

அதைத் தன் பெயரில் எழுதத் தயங்கிய அவர் சாம்பவி என்னும் பெயரில் எழுதினார். அதன் பிறகு தினமணி கதிரில் ’நான்கு சுவர்களுக்கு நடுவில்’ எனும் நாவலை எழுதினார். ஓவியரான அவர் இப்படித்தான் 1977 இல் ஓர் எழுத்தாளராக உருவெடுத்தார்.

பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் ஆகியவை தொலைக்காட்சி நாடகங்களாக மாறி புகழ் பெற்றன. மங்கை, வளையோசை போன்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

1978-ம் ஆண்டு இந்தியச் சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருதையும் பெற்றார்.

அனுராதா ரமணன் பத்து வருடங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்து வந்தார்.

கால தாமதமாக அவருடைய சிறுநீரகங்கள் செயல் இழந்து வருவது தெரிய வந்தது. அவர் 2010 மே மாதம் 17 ஆம் தேதி 62 வது வயதில் காலமானார்.

அனுராதாவுக்கு சுபா, சுதா என இரு மகள்கள் பேரன், பேத்திகள் உள்ளனர். அனைவரும் அமெரிக்காவில் உள்ளனர். அனுராதா ரமணன் சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார்.

அவர் உலகை விட்டு மறைந்தாலும் இந்த உலகம் இருக்கும் வரை அவரது படைப்புகள் நிச்சயம் அவருடைய புகழைப் பேசிக் கொண்டு வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக