18 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் – 113

கணினி வாசகி, (பெயர் வெளியிடப்படவில்லை)
கே: என் வயது 17. நான் ஐந்தாம் படிவம் படிக்கிறேன். தயவு செய்து என் பெயரை போட வேண்டாம். என் கேள்வி இது தான். வயதிற்கு வந்த பிள்ளை நான். இண்டர்நெட்டைப் பயன் படுத்தும் போது அடிக்கடி என் பெற்றோர் வந்து மோப்பம் பிடிக்கிறார்கள். பள்ளிப் பாடம் சம்பந்தமா தகவல் தேடும் போது பெற்றோர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். அது சரியா? அது நன்றாக இல்லை. அவர்கள் செய்வது எனக்கு அவமரியாதையாக, அவமானமாக பெரிய தொல்லையாக இருக்கிறது. என் தோழிகளின் பெற்றோர்கள் அப்படி செய்வதில்லை. என்னால் ஒழுங்காகப் பாடம் செய்ய முடியவில்லை. நீங்கள் அந்த மாதிரி நோட்டம் பார்ப்பீர்களா? வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு இண்டர்நெட் பார்க்க உரிமை இல்லையா? அவர்களுக்கும் தனிப்பட்ட உரிமை இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாதா?


ப: யாருக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கா இல்லை அப்பா அம்மாவுக்கா. நாம் சோறு தானே சாப்பிடுகிறோம். நன்றாகக் கேளுங்கள். அரிசி மாவையும் ஆட்டா மாவையும் அப்படியே உருட்டி உருட்டி சாப்பிடவில்லையே.

சோறு ஆக்குவதற்கு அரிசியைத் தேடுவது அப்பா. அந்த அரிசியை ஆக்கிப் போடுவது அம்மா. அதைச் சாப்பிடுவதில் கூட ஒரு பெரிய உரிமைப் போராட்டமா?

இப்படிப் பட்ட ஒரு கேள்வியைக் கேட்க உங்களுக்கு  உரிமை இருக்கும் போது, பத்து மாசம் இடுப்பு உடைய சுமந்தாளே அவளுக்கு எப்படி இருக்கும்? நாயா பேயா அலைஞ்சு நாலு காசு கொண்டு வந்து கொடுக்கிறாரே அப்பா, அவருக்கு எப்படி இருக்கும்?

பயப் பட வேண்டாம். உங்கள் பெயரை வெளியிடவில்லை. அதற்கு முன் இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எப்படி மனசு வந்தது.   

நீங்கள் கம்பியூட்டரின் முன் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்கிறீர்களா இல்லை பாடம் செய்கிறீர்களா என்று பெற்றோர் வந்து பார்ப்பதில் என்ன தாயே தப்பு இருக்கிறது.

அது என்ன எட்டி எட்டி பார்க்கிறார்கள். பக்கத்தில் உட்கார்ந்தே பார்க்கட்டுமே. என்ன குறைஞ்சு விடப் போகுது.

கணினியை வாங்கிக் கொடுத்து அதில் இணையத்தையும் போட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள். அவர்களுக்கு இல்லாத ஒன்றா. நன்றிகூட சொல்ல வேண்டாம். சந்தோஷப் படுங்கள். அதுவே போதும் அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும்  பெரிய மரியாதை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா. இப்போது எல்லாம் இணையத்தில் ரொம்ப பேய் பிசாசுகள் தலை கால் இல்லாமல் அலைகின்றனவாம். அதைப் பார்த்து நீங்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வந்து எட்டி எட்டிப் பார்க்கலாம்.

அதற்காக அவர்களைப் போய் மோப்பம் பிடிக்கிறார்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதா? சொல்லுங்கள் தாயே.

நாம் வளர்க்கும் ஒரு விலங்கு இனத்தை வேண்டும் என்றால் மோப்பம் பிடிக்கிறது என்று சொல்லலாம். அதற்காகப்  பெற்ற ஜீவன்களைப் போய் மோப்பம் பிடிக்கிறார்கள் என்று சொல்வது பெரிய பாவம் தாயே.

சரி, அவர்கள் மோப்பம் பிடிக்கிறார்கள் என்றால் நீங்கள் மட்டும் என்னவாம். உங்களை எதில் கொண்டு போய் சேர்ப்பது? தயவு செய்து படுத்துக் கொண்டு துப்ப வேண்டாம். அது உங்களுக்குத் தான் ரொம்ப ரொம்ப அசிங்கம்.

நீங்கள் படித்து முடிக்கும் வரை அப்பா அம்மாவுக்கு உங்களை எந்த நேரத்திலும் கண்டிக்க எல்லா உரிமைகளும் உண்டு. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய உரிமைகளைப் பற்றி கேட்பதற்கு நமக்கு முதலில் யோக்கியதை இருக்கிறதா.

படிக்கிற வயதில் படியுங்கள். ஒழுங்காகப் படித்து முடியுங்கள். அதுவரை அப்பா அம்மா பேச்சைக் கேளுங்கள். எந்த அப்பா அம்மாவும் தன் பிள்ளை கெட்டுப் போவதைப் பார்க்க விரும்ப மாட்டார்கள்.  இது சத்தியமான உண்மை.

மோப்பம் பிடிக்கிறார்கள். எட்டி எட்டிப் பார்க்கிறார்கள் என்று சொல்வதே பாவம். அந்தப் பாவத்தைச் சுமக்க வேண்டாம்.

இனிமேல் அவர்கள் கணினி பக்கம் வந்தால் அவர்களைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து நாலு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். இணையத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களிடம் காட்டுங்கள். உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்புறம் அந்தப் பக்கம் வரவே மாட்டார்கள்.


செலாயாங் சூரியா  <selayangsuria@gmail.com>
கே: உங்களுடைய புதிய கைப்பேசி எண்களைத் தருவதாகச் சொன்னீர்கள். தயவு செய்து கொடுத்து உதவுங்கள் சார். உங்களிடம் நிறைய விஷயம் இருக்கிறது. பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறோம். வாழ்த்துகள்.

ப: செலாயாங் சூரியா  எப்படி இருக்கிறீர்கள். வாரத்திற்கு இரண்டு முறையாவது மறக்காமல் அழைத்து பேசிக் கொண்டு இருப்பீர்கள். கொஞ்ச நாளைக்கு கைப்பேசி தொடர்புகள் இல்லாமல் இருக்கட்டுமே என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. திங்கள் கிழமைகளில் நண்பனில் வெளிவரும் மாணவர் சோலையில் இருந்து  கைப்பேசி எண்களைத் தேடிப் பிடித்து கணினி பிரச்னைகளைத் தீர்க்கச் சொல்கிறீர்கள்.

வேறு வழி இல்லை. சொல்லி விடுகிறேன் செலாயாங். 010-3913225 என்பது தான் புதிய கைப்பேசி எண்கள். அது சரி. நிறைய விஷயம் இருக்கிறது என்று வாழ்த்துகிறீர்கள். என்ன... பண விஷயம் இல்லையே! இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம்! ஏன் என்றால் இங்கேயும் கொஞ்சம் தட்டுப்பாடு தான்.

ராயப்பன் சவரிமுத்து  robsriaray@yahoo.com.my
கே: நான் Firefox உலவியைப் பயன் படுத்துகிறேன். இணையப் பக்கங்கள் ஆமையை விட மெதுவாக வருகின்றன.  இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருக்கிறது. இணையப் பக்கங்கள் வேகமாக வரச் செய்வதற்கு வழி இருக்கிறதா அண்ணே?


ப: இருக்கிறது தம்பி. அதாவது ஆமையை முயல் மாதிரி வேகமாக ஓடச் செய்ய வேண்டும். அதற்கு வழி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு இல்லாததா தம்பி. பயர் பாக்ஸ் உலவியை வேகப் படுத்த ஒரு சின்ன இலவச நிரலி இருக்கிறது.

இந்த நிரலி, நம்முடைய இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து உலவியின் வேகத்தை அதிகப்படுத்தும். அந்த நிரலியின் பெயர் Firefox Booster.

இதை http://www.softpedia.com/progDownload/Firefox-Booster-Download-169854.html எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் பதிப்பு செய்யுங்கள். பதிப்பு செய்யும் போது 512 கே.பிக்கும் மேல் என்பதைச் சொடுக்கி விடவும். இது ஓர் எளிமையான நிரலி. இன்னும் ஒன்று. பதிப்பு செய்யும் போது, அதாவது இண்ஸ்டால் செய்யும் போது, பயர் பாக்ஸ் உலவியை அடைத்து வையுங்கள். உலவியின் வேகம் அதிகரித்து இருந்தால் எனக்கு ஓர் அழைப்பு அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் செய்து நன்றி சொல்லுங்கள். அது போதும். ஆனால், அதே பழைய ஆமை வேகம் என்றால் தம்பி பிளீஸ்... புரியும் என்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக