16 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 114

கலை மாறன்  kalai07@live.co.uk
கே: குழந்தைகள், வயதிற்கு வந்த பிள்ளைகள் Facebook, Friendster, Twitter, போன்ற சமூகத் தளங்களில் அவர்கள் பயன்படுத்தும் பாஸ்வோர்ட் சொல்லை நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை செய்கிறீர்கள். குழந்தைகள் என்றால் எத்தனை வயது? வயதிற்கு வந்த பிள்ளைகள் என்றால் எத்தனை வயது?


ப: மின்னஞ்சல் வழியாக ஏழு கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள். ஆர்வத்திற்குப் பாராட்டுகள். முதல் கேள்விக்கு வருகிறேன். இப்போதைய காலக் கட்டத்தில் குழந்தைகளும் பெண்களும் இணையச் சதிவலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகிறேன்.

நாம் நம்முடைய பிள்ளைகளை முழுக்க முழுக்க நம்பித் தான் அவர்களுக்கு இணையத்தைத் திறந்து விடுகிறோம். ஆனால், Facebook, Friendster, Twitter, Hi5 போன்ற தளங்களின் வசீகரமான அம்சங்கள்; அவற்றின்  கவர்ச்சித் தன்மைகள்; சின்னச் சின்ன பிஞ்சு மனங்களைச் சிதற வைத்து விடும்.

அவர்களின் உணர்வுகளைப் பேதலிக்கச் செய்து விடும். அவர்களுடைய பதின்ம வயது எண்ணங்களைத் தடுமாற வைத்து விடும் என்றுதான் சொல்ல வருகிறேன்.

பேஸ்புக்கில் ஒருவர் கணக்குத் திறக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தது 13 வயது  முடிந்து இருக்க வேண்டும். சரியா. ஆனால், ஒரு 10 வயதுப் பெண் பிள்ளை, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தனக்கு 14 வயது ஆகிவிட்டது என்று சொல்லி  கணக்குத் திறந்தால் யாருக்கு என்னத் தெரியும். சொல்லுங்கள்.

பேஸ்புக் நடத்துபவர்கள் என்ன... அமெரிக்காவில் இருந்து இங்கே நம்ம மலேசியாவுக்குப் பறந்து வந்து... அந்தப் பிள்ளையின் ஐ.சி. அடையாள கார்டை வாங்கிப் பார்த்து... ஓ.கே. சொல்லப் போகிறார்களா என்ன.

பேஸ்புக்கில் யார் வேண்டும் என்றாலும் கணக்குத் திறந்து கொள்ளட்டும். அப்புறம் சோறு தண்ணி இல்லாமல் அதிலேயே கிடந்து சாகட்டும்.  யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனால் நமக்கு ஒன்றும் பெரிய பேஸ்புக் ராமாயணம் வந்துவிடப் போவது இல்லை.

ஆனால், நான் கவலைப் படுவது எல்லாம் இந்த பி.எம்.ஆர், எஸ்.பி.எம் எழுதும் வயதுகளில் இருக்கும் 15, 16, 17 வயது பிள்ளைகளைப் பற்றித் தான். எஸ்.பி.எம் தாண்டிவிட்டால் எதையாவது செய்து போகட்டும் என்று ஒரு கண்ணை ஒரு பக்கம் மூடிக் கொள்ளலாம்.

அதுவரை இந்த இணைய விஷயத்தில் பெற்றோர்கள் அவர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

சரி. அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1.  முதலில் பதின்ம வயது மாணவர்களின் Password எனும் கடவுச் சொல்லைக் கண்டிப்பாகப் பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

2.  அந்தக் கடவுச் சொல் மாற்றம் செய்யப் படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. பிள்ளைகள் பேஸ்புக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

4. அவர்களுடைய நண்பர்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

5. அந்த நண்பரை உடனடியாகப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

6.  பதின்ம வயது பிள்ளைகளே, இனிப்பான வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம். விஷமதாரிகளின் முதல் ஆயுதம் இனிப்பு தான் என்பதை மறக்க வேண்டாம்.

7. உங்களுடைய நண்பர்களை இணையத்திலேயே வைத்திருக்கவும். தயவு செய்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க வேண்டாம்.

8. அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

9. உங்களின் உடல் தோற்றத்தைப் பற்றி விசாரிப்பவர்களை உடனடியாக ஒதுக்கி விடுங்கள்.

10. குடும்ப விஷயங்கள், வீட்டு முகவரிகளைத் தெரியப் படுத்த வேண்டாம்.

11.  அப்படியே நம்பகமான பேஸ்புக் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால் பெற்றோர் அல்லது மிகவும் நம்பிக்கையான உறவினர் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

12. சில சமயங்களில் ஆபாசமான உரையாடல்கள் வரும். அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்து கொள்ள வேண்டாம். முற்றாகத் தவிர்த்து விடுங்கள்.

இணையம் என்பது ஒரு மாயை உலகம். அதில் நமக்கு புதுமையான வாய்ப்புகள், அனுபவங்கள் கிடைக்கின்றன. உண்மைதான்.

ஆனால், அதுவே நமக்கு ஒரு நரக உலகமாக மாறி விடக் கூடாது. குழந்தைகள் என்றால் 15 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள். 16 வயதிற்கு மேல் போனால் வயதிற்கு வந்தவர்கள்.

சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: பேஸ்புக் போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?
ப: ஒரு முப்பது நாற்பது சமூகத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில பிரபலமான தளங்களின் பெயர்களைத் தருகிறேன். Bebo, Flickr, Orkut, Mosoto, Wallop, Mashable, Myspace, Linkedin,  Youtube,  Tagged,  Xing,  Living Social போன்றவை நம்பகரமான தளங்கள். இவற்றில் என்னுடைய தேர்வு : ஆர்க்குட், யூ டியுப்.


ராஜ் பாய்  rajboy42@yahoo.com
கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள்.

ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால் இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.

இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்று அழைக்கலாம். இந்தச் சூத்திரங்களை முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு. எக்சலை வைத்துக் கொண்டு ஒரு சின்ன மினிமார்க்கெட்டின் கணக்கு வழக்குகளைச் சரியாகச் செய்து விட முடியும்.

IF
 எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of Ifcondition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருந்தால் சரியான மதிப்பு வரும். தவறாக இருந்தால் தவறான மதிப்பு வரும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 17 க்கும் மேல் இருந்தால் அவர் மலேசியாவில் கார் ஓட்டத் தகுதி பெற்றவர். இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லாதவர். இதை எப்படி எக்சலில் கட்டளை பிறபிப்பது.

=if(age>18,"Eligible to drive","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

2. சரி, ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.

100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. இது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)
அடுத்து அடுத்து வரும் பகுதிகளில் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக