23 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 118

திருமதி.சுபத்திராதேவி, சிக்கிஞ்சான், கோல சிலாங்கூர்
கே: உலகத்தில் 60 கோடி பேர்  இணையத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மின்னஞ்சல்களை இணையம் வழியாக  அனுப்புகின்றார்கள் எனும் விவரங்கள் கிடைக்குமா? கணினியில் நீங்கள் கெட்டிக்காரர் என்று நாங்கள் புகழுவது உங்களுக்குப் பிடிக்கலையா?


ப: கேட்கிறது... கேட்கிறது. ரொம்பவே நல்லாவே கேட்கிறது. அதற்கு என்று இப்படியா ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்பது. ரொம்ப சுலபமாகக் கேட்டு விட்டீர்கள். ஆனால் அதற்கு பதில் சொல்வதற்குள் எனக்கு என்னவோ இமயமலையை கட்டி இழுப்பது போல இருக்கிறது.  இதே கேள்வியைப் போய் நம்முடைய பில் கேட்ஸிடம் கேட்டு இருந்தால் கூட பாவம் அவர், தன்னுடைய ‘கல்குலேட்டரைத் தேடித் தேடி நொந்து போயிருப்பார்.

சரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல இணையத்தைப் பயன் படுத்துபவர்கள் 60 கோடி பேர் இல்லை. போன மாதம் (30.09.2011) வரையில் உலகம் முழுமையும் 1,733,993,742 பேர்  இணையத்தைப் பயன் படுத்தி வருகிறார்கள் என்று தெரிய வருகிறது. அதாவது 173 கோடி. இதைக் கூட சரியாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் இணையச் சேவைகளில் உறுப்பினர் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.  

சரியா. இன்னும் ஒரு சுவராசியமான தகவலைச் சொல்கிறேன். முடிந்தால் எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் அதாவது ஒரே ஒரு நிமிடத்தில் இணைய உலகில் நடைபெறும் அதிசயமான நிகழ்ச்சிகள்.

# 168 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன. அதாவது 16 கோடி மின்னஞ்சல்கள்.

# 1500 புதிய மின்னஞ்சல் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

# 60 புதிய வலைப்பதிவுகள் (Blogs) திறக்கப் படுகின்றன.

# 694,445 தேடல்கள் (Search) கூகுள் தேடல் இயந்திரத்தில் தேடப் படுகின்றன.

# 70 புதிய இணையத் தளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. (Domain Names)

# 695,000 புதிய இற்றைப் படுத்துதல் (Updates) பேஸ்புக்கில் செய்யப் படுகின்றன.

#  510,040 புதிய புதிய கருத்துப் பதிவுகள் பேஸ்புக்கில் பதிவு செய்யப்படுகின்றன.

# 98,000 புதிய டிவிட்டர் (Tweeter)  செய்திகள் பகிர்ந்து கொள்ளப்  படுகின்றன.

# 320 புதிய Tweeter  கணக்குகள் திறக்கப் படுகின்றன.

# You Tube-இல் 600 புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.

# 1700 தடவைகள் பயர்பாக்ஸ் (Fire Fox) உலவி பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

#ஸ்கைப் (Skype) இணையத் தொலைபேசியில் 370,000 பேர் பேசுகின்றார்கள்.

என்ன தலை சுற்றுகிறதா? இது எல்லாம் ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கின்ற சடங்குச் சம்பிரதாயங்கள் தான். இதற்கே இப்படி என்றால் என்ன. ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் என்று கணக்குப் போட்டால் எப்படி... வேண்டாம் தாயே ஆளை விடுங்கள்! 

அப்துல் சலாம் rahman1961@yahoo.com

கே: பில் கேட்ஸ் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா? அவரைப் பற்றி தவறாகச் சொல்லவில்லை.

பில் கேட்ஸும் அவருடைய மனைவி
மெலிண்டாவும் ஆப்ரிக்க குழந்தைகளுடன்
ப: சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு தவறாகச் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம். நீங்கள் சொல்வது மிகவும் தப்பு. பார்ப்பதற்குத் தான் அவர் கஞ்சனைப் போலத் தெரியும். ஆனால், அவர் கொடை நெஞ்சங்களில் ஒரு மாபெரும் அவதாரம். பல கோடி ஆப்ரிக்க மக்களின் வறுமைக் கண்ணீரைத் துடைத்த ஓர் உயர்ந்த ஆத்மா. மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற வாசகம் கணினி உலகத்திற்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 24,900 கோடி  மலேசிய ரிங்கிட். இதில் 8,100 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.  இப்போது 16,800 கோடிகளை வைத்து இருக்கிறார். இதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இது தெரியுமா உங்களுக்கு? அவரைப் போய் கஞ்சன் என்று சொல்கிறீர்களே. இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?  

அந்த வகையில் பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர். அந்தப் பணத்தைக் கொண்டு உலகப் புகழ் பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல பத்து கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. (இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.)

ஃபில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார்.  25 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும்  அதிகமாக விற்பனையானது. இரு நூல்களின் விற்பனையில் இருந்து கிடைக்கும் முழு தொகையையும் பில்கேட்ஸ் அற நிதிகளுக்கு வழங்கி விட்டார். உலகம் இருக்கும் வரையில் அவருடைய அறப் பணிகளின் ஆலம் விழுதுகள் கலியுகக் கவிதைகளைப் பாடிக் கொண்டே இருக்கும்.


(ஊர் பேர் இல்லாமல் தமிழில் வந்த குறும் செய்தி)

கே: பிள்ளைகளுக்கு இலவசமாக ஒரு புதிய விளையாட்டு வேண்டும். உதவி செய்யுங்கள்?



ப: ஊர் பேர் இல்லாமல் குறும் செய்தி அனுப்பி இருக்கிறீர்கள். பரவாயில்லை. ஹெலிகாப்டர் விளையாட்டு ஒன்று இருக்கிறது. இது ஒரு பெரிய விளையாட்டு. 60 கொண்டது. பதிவிறக்கம் செய்ய நேர ஆகும்.

அதன் முகவரி: http://www.4shared.com/file/Z2iy1Ry0/Helic.html?







2 கருத்துகள்:

  1. பெயரில்லா26/10/11, AM 10:31

    அய்யா நான் Asus i5 மடிக் கணினி பயன்படுத்துகிற்றேன். என்னுடைய RAM 4gb ஆகும். நான் இப்பொழுது என்னுடைய மடிக் கணினியை update செய்ய மேலும் 4gb பொருத்தப் போகிறேன். ஆகவே 8gb ஆகி விடும். இதனால் என்னுடைய கணினியில் ஏற்படும் மாற்றங்களை கூற முடியுமா அய்யா..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா26/10/11, AM 10:32

    அய்யா ஏன் இப்பகுதியில் இருந்து என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை.... http://www.megaupload.com/?d=B611WLRW

    பதிலளிநீக்கு