06 நவம்பர் 2011

கணினியும் நீங்களும் – 120


மானுடப்பசி  maanudappasi@gmail.com
கே: மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் மடிக்கணினி என்று பெயர் வந்ததா? இல்லை மடித்து வைக்க முடிவதால் அதற்கு  மடிக்கணினி என்று பெயர் வந்ததா?

ப: ஐயா, மானுடப்பசி அவர்களே... எது எதுக்கோ பசி வரும் என்பார்கள். ஆனால், உங்களுக்கு மனுஷன் மேலேயே பசி வரும் போல இருக்கிறது. எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்கணும். சரி. விஷயத்திற்கு வருவோம்.  

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, போன வாரம் தான் ஈப்போ, உலு கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் சிவநேசன் இதைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அதே கேள்வியை நீங்களும் இப்போது கேட்கிறீர்கள். Laptop எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்தது தான் மடிக்கணினி எனும் தமிழ்ச் சொல்.

ஆங்கிலத்தில் Lap என்றால் வயிற்றுப் பகுதிக்கும் தொடைப் பகுதிக்கும் இடைப் பட்ட பகுதியைக் குறிக்கும் ஒரு சொல். Top என்றால் மேலே என்று பொருள். இரண்டையும் சேர்த்தால் மடிமேலே எனும் இருச் சொற்கள் இணைந்த ஒரு சொல் வருகின்றது.  ஆக, மடிமேலே என்று ஒரு கணினிக்குப் பெயர் வைத்தால் நன்றாக இருக்காது. மடிமேலே கணினி என்று சொன்னாலும் நன்றாக இருக்காது.

ஆக, அதைச் சுருக்கி மடிக்கணினி என்று பெயர் வைத்து விட்டார்கள். இங்கே நிலை மொழிக்கும் வரு மொழிக்கும் இடையே வலி மிகுவதைக் கவனிக்கவும்.

மடிக்கணினியின் திரையை மடக்கி மடிக்க முடிவதால் மடிக்கணினிக்கு மறைமுகமான வேறு ஓர் அர்த்தமும் கிடைத்து விடுகிறது. பழம் நழுவி பாலில் விழுந்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி தான் இங்கேயும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இப்படி ஒரு கணினி வரப் போகிறது என்று தமிழ் மூதாதையர்களுக்குத் தெரிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் தான் மடி எனும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்களைச் சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.  தமிழர்களின் தீர்க்கதரிசனங்கள் சோடை போனதாகச் சரித்திரம் இல்லை. 

சின்னத்தம்பி மதிவாணன், லாவான் கூடா, கோப்பேங்
கே: சார், இது கணினி இணையம் சம்பந்தமான கேள்வி. கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். அண்மைய காலங்களில் எனக்கு ஒரு விநோதமான் ஆசை வந்து இருக்கிறது. நான் 120 வயது வரை வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை செய்ய விரும்புகிறேன். தயவு செய்து இணையத்தில் நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நான் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.


ப: கேட்க நல்லாதான் இருக்கிறது. உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நீங்கள் கேட்டு இருக்கும் கேள்வி இருக்கிறதே இதை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதாம்.  முதலில் அதைச் சொல்லுங்கள். யார் யாருக்கு என்ன என்ன ஆசைகள் எப்படி எப்படி எல்லாம் வருகின்றன பாருங்கள்!

இணையம் வந்ததும் போதும் சாமி. என்ன என்னவோ கேள்விகள். 120 வயது வரை வாழ மருந்து கேட்கிறீர்கள். வைகுண்டத்திற்கு குறுக்குப் பாதை கேட்கிறீர்கள். சத்தியாவான் சாவித்திரி காலத்தில் தோடு தொங்கட்டான் இருந்ததா என்று கேட்கிறீர்கள். தீபாவளி சமயத்தில் ஒரு கேள்வி வந்தது. இஞ்சி இடுபழகு என்பது இளசுகளுக்கா இல்லை பழசுகளுக்கா என்று ஒரு கேள்வி. பழசை எல்லாம் ஞாபகமூட்டி ஒரு வழி பண்ணி விடுவீர்கள் போல இருக்கிறது. என் நிலைமையையும் கொஞ்சம் யோசியுங்கள். உண்மையில் இவை எல்லாம் எனக்கு வந்த கேள்விகள். அதையும் மெனக்கெட்டு (மேனி கெட்டு) இணையத்தில் தேடச் சொல்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் விட்டால் ஆப்ரிக்கா அங்கோலாவில் இட்லி, தோசை, சட்னி, சாம்பார் கிடைக்குமா என்று கேட்டாலும் கேட்பீர்கள். வேண்டாம்... சாமி... ஆளை விடுங்கள்.

ஐயா சின்னத் தம்பி என்னை உங்களின் பெரிய தம்பியாக நினைத்துக் கொள்ளுங்கள். கோபித்துக் கொள்ள வேண்டாம். ஏன்யா இது உங்களுக்கே நியாயமா இருக்கிறதா? தயவு செய்து இனிமேல் எல்லாருக்கும் பயன்படும் படியான நல்ல கேள்வியாகக் கேளுங்கள். நிச்சயம் புண்ணிய பகவான் சந்தோஷப் படுவார். சரியா.

உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் கேட்கிற அந்த மாதிரி ஒரு மருந்து உண்மையிலேயே இருக்கிறது என்று தெரிந்தால், முதலில் நான் சும்மா இருப்பேனா ஐயா சொல்லுங்கள்.  நான் தானே முதல் ஆளா பன்னீர் தட்டோடு போய் நிற்பேன்.  இருந்தாலும், உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை.

இணையம் வழியாகத் தேடிப் பார்த்தேன். கடைசியாக ஒரு ரகசியமான தகவல். நீங்கள் கேட்கிற மருந்தை வட துருவத்தில் ‘பேசாமல் இரு என்கிற ஒரு பெங்குயின் பறவை வைத்து இருக்கிறதாம். அங்கே போய் கேட்டுப் பாருங்கள். இன்னும் ஒரு சேதி. வட துருவத்தில் 33 கோடி பெங்குயின்கள் இருக்கின்றன. இடம் தெரியாத இடத்தில் பெயர் தெரியாத பெண் பெங்குயினைத் தேடிப் போறீங்க. பத்திரம். எதுக்கும் வீட்டில சொல்லிட்டுப் போங்க!

ஸ்ரீ சதீஷ்  srisatish26@yahoo.com
கே: சயாம் மரண இரயில் பாதை சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு நூல் தேவைப் படுகிறது. இலவசமாக எங்கே கிடைக்கும்? அந்த நூல் எல்லாருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.


ப: சயாம் மரண இரயில் பாதை தொடர்பான ஆங்கில நூல் சில உள்ளன. அவற்றில் ஒரு நூல் இலவசமாகக் கிடைக்கிறது. கீழ்க்காணும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.filesonic.com/folder/8373321

1 கருத்து: