30 January 2012

கணினியும் நீங்களும் - 126


திருமதி. மணிமேகலை, சிங்கப்பூர்.
கே: இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட Facebook கேள்வி. மலேசியாவில் இருந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் போது இங்குள்ள ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். எனக்கு மூன்று பிள்ளைகள்.

அண்மையில்
என்னுடைய Facebook ஐப் பார்த்த என் கணவர் எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாக பெருமையாகச் சொன்னார். நானும் சந்தோஷப் பட்டேன். அவருக்கும் Facebook கணக்கு இருக்கிறது. ஆனால், அண்மையில் நான் ஏதாவது சின்ன தப்புகள் செய்தாலும், வழக்கத்திற்கு மாறாக என் மேல் எரிந்து விழுகிறார். தொட்டதற்கு எல்லாம் சந்தேகப் படுகிறார்.

Facebook
இல் இருக்கும் யாராவது ஓர் ஆணின் பெயரைச் சொல்லிஅவனுக்கு உனக்கும் என்ன உறவு?’ என்று கேவலமாக, மனசு நோகும்படி பேசி வேதனைப் படுத்துகிறார். தோழிகளிடம் சொன்னேன். அப்படிப்பட்ட கணவர் தேவை இல்லை. அவரை விவாகரத்து பண்ணச் சொல்கிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. அவர் மிகவும் நல்லவர் என்று என் மனம் சொல்கிறது. அவர் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.

தோழி மூலம் கேள்விபட்ட
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.  அவருக்கு வயது 36. என் வயது 44. இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த Facebook-க்கினால், என் எதிர்காலமே பாழாகிவிடும் போல தெரிகிறது. என் கணவரும் என் பிள்ளைகளும்தான் எனக்கு வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள்தான் என்னுடைய உலகம்.

அதனால்
, இனிமேல் எனக்கு அப்படிப்பட்ட Facebook கணக்கே வேண்டாம். எப்படி Facebook கணக்கை மூடுவது? Facebook கணக்குகளை மூடவே முடியாது என்று என் தோழிகள் சொல்கிறார்கள். நானும் முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. தயவு செய்து என் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம். எனக்கு தந்தை இல்லை. அதனால் உங்களை ஒரு தந்தையாக நினைத்து உதவி கேட்கிறேன். நான் எடுத்த முடிவு சரியா?: நீங்கள் எடுத்த முடிவு சரி.  நீங்கள் ஒரு மனைவி, ஒரு தாய், அதையும் தாண்டி ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவி எனும் நிலையில் நின்று ஒரு நல்ல முடிவை எடுத்து, பெண்மைக்கு பட்டை தீட்டி இருக்கிறீர்கள். எந்த ஒரு தகப்பனாக இருந்தாலும் ந்த முடிவைத்தான் சொல்வார். நானும் அந்த முடிவைத்தான் சொல்கிறேன்.

நீங்கள்
எவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகலாம். ஆனால், அந்தப் பழக்க வழக்கங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். கணவனைத் தவிர மற்ற எந்த ஆணிடம் பழகினாலும், பேசினாலும் நாலடி தள்ளி நின்றே பழகுங்கள் பேசுங்கள். தயவு செய்து வரம்பு மீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டும். கை சரங்கள் வேண்டவே வேண்டாம். எதிலும் ஓர் அளவு, ஒரு வரையறை இருக்க வேண்டும். சில சமயங்களில் சுத்தமான கை சரசங்கள் அசுத்தமான  வாய் விரசங்களுக்கு பாதை போட்டுக் கொடுக்கும்.

ஆகவே,
கணவனின் பலகீனங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதை முதலில் நிறுத்துங்கள். படுத்துக் கொண்டே துப்பினால் துப்பியவருக்குத் தான் தூர்வாரிய துப்பு. ஆக, குழம்பிய குட்டையில் மீனைப் பிடித்துத் தின்று, ஏப்பம் விட்டுத் திரியும் எமகாதகர்கள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால், கணவன் - மனைவி குடும்ப ரகசியங்களை அடுத்தவர்களிடம் சொல்லவே கூடாது. அண்மையில் நான் இணையத்தில் படித்த இந்திய நாட்டுச் செய்தி. (பெங்களூரு)

Facebook
கணக்கை மூடச் சொன்ன கணவன் மீது மனைவிக்கு பொல்லாத வெறுப்பு. அந்த வெறுப்பின் காரணமாக, கணவன் கட்டிய தாலியையே அறுத்துக் கட்டும் நிலைக்கு அந்தப் பெண் போயிருக்கிறாள். நினைத்தால் அறுத்துப் போடுவதற்கு தாலி என்ன அருனாக்கயிறா? ஆண்டவன் சாட்சியாகக் கட்டியதை மனசாட்சி இல்லாமல் அறுத்துப் போடும் ஒரு சில மனிதப் பிண்டங்களை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது?

Facebook
என்கிற சாதாரண விஷயம் தாலியையும் தாண்டிப் போய் நிற்கிறது. அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் இடையில் வந்தவன், தான் நினைத்ததைச் சாதித்துவிட்டு ஊமைக்குறவனாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறான். ஆக, அந்தப் பெண் ஏமாந்து போனது தான் மிச்சம். இப்போது அவளுக்கு தொட்டவனும் இல்லை தொட்டுக் கொண்டவனும் இல்லை. இது கதை இல்லை உண்மையாக நடந்தது. கணவன் மீது வெறுப்புகள் வரலாம். அதற்காக அவன் கட்டிய தாலியை, அடுத்தவனிடம் நீட்டி அறுத்துக் கட்டச் சொல்வது என்பது ரொம்பவும் அசிங்கத்தனமான பாவச் செயல். அதையும் தாண்டிச் சொல்வது என்றால் கொடூரமான வக்கிரச் செயல். பெண்ணுரிமை பேசிய பாரதியார் வாழ்ந்த மண்ணில் இப்படி ஓர் அலங்கோலமா?

உங்கள் கணவர் உங்கள் மீது வெறுப்பாக நடந்து கொள்கிறார் என்றால் அவர் உங்களிடம் ஏதோ ஒரு குறையைக் கண்டிருக்கிறார். அதை அவர் உங்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அதனால், சுற்றி வளைத்து உங்கள் மீது குறைகளைக் காண்கிறார். அவ்வளவுதான். மனைவியிடம் அதிகமாக அன்பு செலுத்தும் போது அவள் தனக்கு மட்டும் தான் சொந்தம்; மற்றவருக்குச் சொந்தமாக் கூடாது என்பதில் எல்லா ஆண்களுமே பிடிவாதமாக இருப்பார்கள். அதற்காக உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.  ஆக, உங்கள் கணவருக்குப் பிடிக்காததை உடனடியாக விட்டுத் தொலையுங்கள். ‘பேஸ்புக்
இல்லை என்றால் உங்களால் வாழ முடியாதா இல்லை உங்கள் வீட்டில் சோறு தான் வேகாதா?

எல்லாம் நல்லபடியாக ஒரு வழக்கமான முறைக்கு திரும்பிய பிறகு அவருடைய சம்மதத்தின் பேரில் மறுபடியும் ஒரு புதிய ‘பேஸ்புக்
கணக்கைத் திறந்து அவர் பார்க்கிற மாதிரி தகவல் பரிமாற்றம் செய்யுங்கள். அவரிடம் எதையும் மறைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்குப் பின் உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தன் தவறை உணர்ந்து வேதனைப்படுவார். உங்களிடமே வந்து மன்னிப்பு கேட்பார். இது ஒரு சத்தியமான உண்மையாக மாறும். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் உலா வரும் போது மிகவும் கவனமாக இருங்கள். தெரியாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கைப்பேசி எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். கிளிப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொல்லி வருகிறேன்.
இப்போதைய  இணைய உலகம் வயது, உறவு முறை என்று எதையும் பார்ப்பதில்லை. இச்சைக்கு பிச்சை கேட்கும் ஆண்கள்தான் அதிகமாக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களே பத்திரம்! பத்திரம்!!

உங்களை நீங்களே ஒரு சீதையாக நினைத்துக் கொள்ளுங்கள்.
வாழ முயற்சி செய்து பாருங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. அடுத்து ஒரு கண்ணகியாக நினைத்து வாழுங்கள். பெண்மைக்கு அதுவே பெருமை தரும். கற்பு என்பது கழுத்தில் தொங்கும் தாலியில் இல்லை தாயே. அந்தத் தாலியைச் சுமந்து நிற்கும் நெஞ்சக்கூண்டிலே நிற்கிறது

3 comments:

  1. மிக நல்ல அறிவுரை !

    ReplyDelete
  2. Actually, you didn't answer her how to delete her facebook account!!!

    ReplyDelete