04 January 2012

மலேசிய மைந்தனின் மந்திரப் புன்னகை

(இந்தக் கட்டுரை விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
http://ta.wikipedia.org/wiki/பி.சி.சேகர்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
டான்ஸ்ரீ டாக்டர் பி.சி. சேகர்
பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில், வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப்புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள்.  

அப்படிப்பட்ட அந்த மாபெரும் மனிதப் பொக்கிஷங்களில் ஒருவர் தான் பாலசந்திர சகிங்கல் சேகர். அவர் பி.சி என்று அன்பாக அழைக்கப்பட்ட டான்ஸ்ரீ பி.சி.சேகர்.  இயற்கை அன்னைக்கு தன் அர்ப்பணிப்புகளின் வழியாக ஈடு இணையில்லாத மதிப்பு மரியாதைகளைச் செய்து கொடுத்தவர்.

நவீன இயற்கை ரப்பர் - செம்பனைத் துறைகளின் தந்தை

டான்ஸ்ரீ டாக்டர் பி.சி. சேகர்
இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசிய  நாட்டில் ரப்பரை புது வியூகத்திற்கு மாற்றி உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவர். நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை என்று போற்றப்பட்டவர்.

மலேசியாவின் ரப்பர் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இரு முக்கிய நிகழ்ச்சிகள் அடையாளம் சொல்லப் படுகின்றன.

1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து 12 ரப்பர் விதைகள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டன. அங்கிருந்து அவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிர் செய்யப்பட்டன. எல்லா கன்றுகளுமே உயிர் பெறவில்லை, மடிந்து விட்டன. 

 70,000 ரப்பர் விதைகள் கள்ளக் கடத்தல்

இரண்டு ஆண்டுகள் கழித்து ஹென்றி விக்ஹாம் என்பவர் 70,000 ரப்பர் விதைகளை பிரேசிலில் இருந்து கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டு கன்றுகள் ஆகின. இவற்றில் 2000 கன்றுகள் இலங்கைக்கு (இப்போதைய ஸ்ரீலங்கா) அனுப்பப் பட்டன.  

அவற்றில் 22 கன்றுகள்  சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ‘ரப்பர் ரிட்லிஎனும்  எச்.என்.ரிட்லி, ஒன்பதே ஒன்பது ரப்பர்க் கன்றுகளை 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார்.

அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின.

மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகள்

1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா வாகை சூடியது. மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் ஒரு கன்று வளர்ந்து இன்னும் கோலாகங்சாரில் காட்சிப் பொருளாக நின்று கொண்டு இருக்கிறது.

நீங்கள் கோலாகங்சார் போனால் அந்த மரத்தைப் பார்க்கலாம். கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் இருக்கிறது. அதன் வயது 135. தென் அமெரிக்காவில் பயிர் செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. கன்றுகளுக்கு கருகல் நோய் வந்து தோல்வியில் முடிந்தது.

சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரு மரங்கள் உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் வயது 135 தான். அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

 உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை

அடுத்த நிகழ்ச்சி: 1929 நவம்பர் மாதம் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. சேகர் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். அந்தக் குழந்தைதான் 1960களில் மலேசியாவின் ரப்பர் தொழில்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது. இது இரண்டாவது  நிகழ்ச்சி.

உலக வரைபடத்தில் மலேசிய நாட்டை ஓர் உன்னத இடத்திற்கு உயர்த்திச் சென்ற பி.சி.சேகர், இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதியத்தர வழிகாட்டியை அமைத்துக் கொடுத்தார்.

இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்

Standard Malaysian Rubber என்பதே எஸ்.எம்.ஆர் என்பதின் சுருக்கம். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர்  ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும் எனும் தத்துவத்திற்குப் புதிய பரிமாணத்தில், ஒரு புதிய வேதியியல் கலையையே எழுதிச் சென்றார்.

மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் டான்ஸ்ரீ பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில்துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தார். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகம்

சுங்கை பூலோவில் இருக்கும் Rubber Research Institute of Malaysia எனும் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டிய பெருமை டான்ஸ்ரீ பி.சி.சேகரையே சாரும்.  இன்னும் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அந்தக் காலக்கட்டத்தில் உலகத்தின் பல நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்து சரித்திரம் படைத்தனர். அப்போது டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தார். அது ஒரு பொன்னான காலம்.

சுங்கை பூலோ போ, சேகரைப் பார்

அந்த அளவிற்கு உலகம் போற்றும் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் அக்கழகத்தில் அஸ்திவாரம் போட்டு ஆகாயக் கங்கைகளாக உயர்ந்து போய் உச்சத்தில் பூபாள ராகம் பாடின.

ரப்பரைப் பற்றி படிக்க வேண்டும் என்றால் சுங்கை பூலோ போ, சேகரைப் பார்என்று சொல்லி களைகட்டும் அளவிற்கு, மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் சிறப்புகள் உலகம் முழுமையும் கொடிகட்டி கோபுரக் கலசங்களாகத் திகழ்ந்தன.

மலாயன் கிலாஸ்  தொழில்சாலை

ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஆராய்ச்சியாளர்கள் வருவதும் போவதும் குறைந்து விட்டன. உலகளாவிய ஆராய்ச்சிகளின் தரமும் சற்றே சலனம் காண்கின்றன.   கரும்பு இருக்கிற இடத்தை தேடித் தானே எறும்புகள் போகும். 

கரும்பு இருந்த இடத்தில் இனிப்பு கம்மியாகி விட்டது. அதனால், எறும்புகள் வருவதும் இம்மியாகிவிட்டது. மனதில் பட்டதைச் சொல்ல வருகிறேன். மற்றபடி எந்தவிதமான ஆதங்கமும் இல்லை.  உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், சுங்கை பூலோ உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். அருகாமையில் 1925-இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகமும் இருந்தது. அந்தத் தோட்டம் இப்போது இல்லை. அங்கே மலாயன் கிலாஸ்எனும் தொழில்சாலை உருவாக்கம் பெற்றுள்ளது.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், தன்னுடைய தொடக்க, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளைச் சுங்கை பூலோ, கோலாலம்பூர் நகரங்களில் மேற்கொண்டார். பட்டப் படிப்பிற்காக புதுடில்லி சென்றார்.

ஆழமான ஆய்வுகள்

அங்கு அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்தார். (Chemist)

பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.  அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர்

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய போது சிறந்த சேவைகளை வழங்கினார். இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் தயாரிப்பு,  (tyre) கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு  போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார்.

ஏறக்குறைய 50 ஆண்டுகள் இயற்கை ரப்பர் தொழில்துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட டான்ஸ்ரீ பி.சி.சேகர், படிப்படியாக முன்னேறி 1966 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். அவர்தான் அக்கழகத்தின் முதல் மலேசியர், முதல் இந்தியர், முதல் ஆசியர்.

அதுவரை அந்தத் தலைமை பீடத்தை பிரித்தானியர்களே அலங்காரம் செய்து வந்தனர். வேறு யாரையும் அவர்கள் விடவில்லை. விடவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்வது தான் சாலப் பொருத்தம்.

மலேசியத் தர ரப்பர் திட்டம்

டான்ஸ்ரீ பி.சி.சேகரின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது எஸ்.எம்.ஆர் எனும் மலேசியத் தர ரப்பர் திட்டத்தை உருவாக்கியது தான். எஸ்.எம்.ஆர் திட்டத்தை ஆங்கிலத்தில் Standard Malaysian Rubber (SMR) Scheme என்று அழைப்பார்கள்.

அந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய ரப்பர், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் முதல் தரமாகக் கருதப் பட்டது. அந்தத் திட்டம் ரப்பர் தொழில்துறையின் மூலப்பொருள் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

சில சமயங்களில் ரப்பர் மரங்களுக்குச் சாயம் அடிப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறச் சாயங்களாக இருக்கும். அப்படி சாயம் அடிப்பதன் மூலம் ரப்பர் மரங்களின் பால் உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்கிக் காட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தவரும் மதிப்பிற்குரிய டான்ஸ்ரீ பி.சி.சேகர்தான்.

தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம்

அனைத்துலக ரப்பர் விலையை ஒருமுகப் படுத்துவதற்கு தீவிரமான செயல்பாடுகளில் இறங்கினார். வெற்றியும் கண்டார். அதனால், மலேசியா, பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற பல ரப்பர் உற்பத்தி நாடுகள் பலன் அடைந்தன. அதன்வழி பல இலட்சம் சிறு தோட்டக்காரர்களும், மலேசியக் கிராமப்புற ஏழைகளும் நன்மை அடைந்தனர்.  
மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை 1983 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தார். தோட்டத் தொழிலாளர்கள் மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த தோட்ட முதலாளிமார்களுக்கு அது பலத்த அடியாக அமைந்தது.

இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஓய்வூதியம் கிடைக்கிறது. ஓய்வூதியப் பயன்களும் (gratuity benefits) கிடைக்கின்றன.

மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்

மலேசிய அதிகார்களிடம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம் இதுதான். “மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். மரம் இல்லை என்றால் மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனும் இல்லை’.

எப்பேர்ப்பட்ட வாசகம் அது. இருந்தாலும் பாருங்கள், அவர் பதவியில் இருந்த காலத்தில் மரத்தையும் பார்த்துக் கொண்டார்.  மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனையும் பார்த்துக் கொண்டார். இரண்டையும் மறக்கவில்லை.

2005 ஆம் ஆண்டு  மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை மேம்படுத்துவதற்கு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்ட போது டான்ஸ்ரீ பி.சி.சேகர் அரசாங்கத்தைத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். அப்போது அவர் எந்தப் பதவியிலும் இல்லை.

மலேசிய அரசாங்கம் செய்த முதல் மரியாதை

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும், கழக ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அவருடைய கோரிக்கையைத் தட்டாமல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அதுவே மலேசிய அரசாங்கம் அவருக்கு செய்த முதல் மரியாதை ஆகும். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல கோடி பணத்தை ஒதுக்கி வைத்தது என்பது வேறு கதை.

துன் ரசாக் ஆய்வுக் கழகம்

ஆனால், அவரிடம் பதவி இல்லை. அதிகாரம் இல்லை. அதற்காக, அரசாங்கம் அவருடைய சொற்களை அலட்சியம் செய்யவில்லையே. அவருக்குச் சேர வேண்டிய மதிப்பு மரியாதையைக் கொடுத்தது. அதுவே பெரிய விஷயம். சேகர் சொல்லை மீற வேண்டாம் என்று மலேசிய அமைச்சரவையே சம்மதம் தெரிவித்தது.

அவரிடம் அப்போதைக்கு இருந்தது அனைத்துலக செல்வாக்கும் அனைத்துலக அறிவுஜீவிகளின் பக்கபலமும் தான். அதே சமயத்தில் அனைத்துலக ரப்பரின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்யக் கூடிய செல்வாக்கு அவரிடம் இருந்தது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் உள்ள பிரிகண்டான்பரி எனும் இடத்தில் இருந்த British Rubber Producers' Research Association எனும் பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழ்கததை ஒரு விளையாட்டரங்கமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அக்கழகத்தின் புதிய பெயர் துன் ரசாக் ஆய்வுக் கழகம் ஆகும்.

‘டான்ஸ்ரீவிருது

அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்பு படுத்தப் பட்டார் என்பதை வாசகர்கள் அறிவர். அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றத்திற்கு முதன்முதலில் முழு எதிர்ப்பு தெரிவித்தவர் டான்ஸ்ரீ பி.சி.சேகர் என்பதை நாம் இந்தக் கட்டத்தில் நினைவு கூர வேண்டும்.

டான்ஸ்ரீ பி.சி.சேகர், மலேசிய நாட்டிற்கு செய்துள்ள அரிய சேவைகளுக்காக பேரரசர் ‘டான்ஸ்ரீவிருதை வழங்கி கௌரவித்துள்ளார். இவர் 1973-இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சாசே விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 20 கண்டிபிடிப்புகளின் வழி புனைவுரிமைகளையும் (patent) பெற்று இருக்கிறார்.

சென்னையில் உறவினர் வீட்டில் மாரடைப்பு

டான்ஸ்ரீ பி.சி.சேகருக்கு சுகுமாரி எனும் மனைவியும் ஜெயன், கோபிநாத், சுஜாதா, வினோத் எனும் நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மலேசிய மண்ணின் மைந்தன்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். இருப்பினும் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. அப்போது அவருக்கு வயது 77. அன்னாரின் உடல் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டு, செராஸ் மின்சுடலையில் இறுதிச் சடங்குகள் செய்யப் பட்டன.

அவரைப் பற்றியும் அவர் ஆற்றியுள்ள தொண்டுகளைப் பற்றியும் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக எழுதலாம். அவருடைய வரலாற்றுச் சாதனைகளைப் பற்றி எழுதி முடிக்கவே முடியாது. அவரைப் பற்றி B.C. Sekhar: Malaysia’s Man For All Seasons எனும் தலைப்பில் ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ பி.சி.சேகர். உண்மையிலேயே அவர் மலேசிய மண்ணின் மைந்தன்! மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன்!  அவர் மறைந்து விட்டாலும் மனிதச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத அறிவுக் களஞ்சியமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இன்றும் இனி என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவர் ஒரு சகாப்தம்!

No comments:

Post a Comment