29 December 2012

பெண் குழந்தை பெரிய சுமை

24.12.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். ஆனால், இப்போது குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.

Tamil Nadu Orphaned Children
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
உங்களுக்கு ஒன்று தெரியுமா. இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே கொல்லப் படுகின்றனர்.

இந்தியாவில் பரவாயில்லை. மலேசியாவில் அதைவிட மேலும் ஒரு மோசமான நிலை வந்து கொண்டு இருக்கிறது. கல்லூரி ஆசிரமங்களில் படிக்கும் பெண்கள், வயிற்றுச் சுமைகளைக் கழிவறையிலேயே பெற்று, அவற்றைக் கழிவறைத் தொட்டிக்குள்ளேயே போட்டுவிட்டு வருகின்ற நல்ல ஒரு கலாசாரம். மிக மிக வேதனையான கலாசாரம் என்று சொல்ல மனம் வரவில்லை.

Tamil Nadu Dead Child
பெண் பிள்ளைகள் அழிந்து கொண்டு போனால்
எப்படி மனம் வருகிறது என்று இது யோசிக்கின்ற விஷயம் இல்லை. எப்படி எல்லாம் மனித மனம் போகின்றது என்று யோசிக்கின்ற விஷயம். சரி. பெண் குழந்தைகள் விசயத்திற்கு வருவோம். பெண் பிள்ளைகளை இப்படியே அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விடும்.

அந்தப் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தை திட்டம். இந்தத் திட்டம் 1992 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப் பட்டது.

Orphan Children Feeding
 தொட்டில் குழந்தை திட்டம்
தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.  சேலம் மாவட்டத்தில் தான் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

பின்னர் 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. இப்போது குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது.

Cradle Children

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 188 தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் 47 இலட்சம் ரூபாய் செலவு செய்யப் படுகிறது.  இதுவரை 3,200 பெண் குழந்தைகள் 582 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

இவர்களில் 2,400 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டுள்ளனர். தவிர 170 பெண் குழந்தைகள் 27 ஆண்குழந்தைகள் வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்கப் பட்டனர்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001 இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் இப்போது 2011 இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது.

பெண் பாவம் பொல்லாதது


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளைப் பெரிய சுமை என்றே கருதுகின்றனர். அதாவது பரவாயில்லை. சில நாடுகளில் குழந்தையே ஒரு சுமை என்கிற நவீனத் தத்துவம் பிறந்து உள்ளது. அந்தத் தத்துவம்  காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு கரை புரண்டு ஓடுகிறதே. அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

Cradle Children Tamil Nadu

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உடனடியாக அவற்றைக் கொலை செய்து விடுகின்றனர். அல்லது பொது இடங்களில் வீசி எறிந்து விடுகின்றனர். எல்லா இடங்களையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போய் விடும் சில இடங்களைச் சொல்கின்றேன்.

இந்த விவகாரத்தில் மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. இங்கேயும் சிசுக்கள் குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், பொது இடங்களில் இருந்து மீட்கப் படும் அவல நிலை இருக்கத்தானே செய்கின்றது.

Malaysia Dumped Baby
மலேசியக் கல்லூரி வாசலில் செத்துக் கிடக்கும் சிசு
அதற்கு காரணம் என்ன. கணவன் விட்டுப் போன பெண்களின் குழந்தைகள். திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள். கணவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள். கரு கலைத்தும் பிறந்த குழந்தைகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வாறான மனித ஈனச் செயல்களைத் தடுக்க மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன. குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலை எப்படியோ வரலாம்.

மலேசியக் குப்பைத் தொட்டில் குழந்தை
குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையை
மீட்கும் மலேசிய போலீஸ்காரர்
ஆக, அந்த மாதிரியான நிலையில் குழந்தையைக் கொலை செய்வதற்குப் பதிலாக அப்படியே அதைக் ’குழந்தைத் தொட்டிலில்’ விட்டுச் சென்றால் ஓர் உயிர் காப்பாற்றப் படும் இல்லையா. அப்படி விட்டுச் செல்லப் படும் குழந்தைகள் தான், பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் பட்டு முறையாக வளர்க்கப் படுகின்றன.

குறைந்து வரும் பெண் இனம்


இந்த  2011 ஆம் ஆண்டு, ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தது. அந்தக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெண் சிசுக்கொலை


தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் பரவலாக இருந்து வந்தது. 1980 ஆம் ஆண்டுகளில் பெண் சிசுக்கொலை தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி பகுதிகளுக்கும் பரவியது.

மலேசியா, பெட்டாலிங் ஜெயாவில்
மலேசியா, பெட்டாலிங் ஜெயாவில்
வீட்டுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட சிசு
அடுத்து 1990 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இக்கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது. ’மனிதம்’ இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது ஒரு சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப் பட்டது.

அதன் பின்னர் பெண்களுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்த போதும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவில்லை. தொடர்ந்தன.


தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991ம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துரிதப்படுத்தப் பட்டது. தர்மபுரியில் இத்திட்டத்துக்கு பெரும் அளவில் ஆதரவு இல்லை. அங்கே இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி மீண்டும் இத்திட்டம் தீவிரப் படுத்தப் பட்டது.

இரு நாட்களுக்கு ஒரு குழந்தை


தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக்கொலைக்கு எதிரான திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும்.


இருப்பினும்  தர்மபுரி மாவட்டத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு ஏப்ரல் வரை 89 குழந்தைகள் மட்டுமே தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டன. இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது.

பெற்றோர்களுக்கு ஆலோசனை


கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொட்டில் மையத்தில் குழந்தைகளை ஒப்படைக்க வரும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டன.  குழந்தைகளை அவர்களே வளர்க்க அறிவுரைகளும் வழங்கப் பட்டன. பண உதவியும் செய்யப் பட்டது. இதன் விளைவாக 2006 ஜூன் 24ம் தேதி முதல் இன்று வரை 531 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளனர்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
இன்று வரை தர்மபுரி மாவட்டத்தில் 65 ஆண் குழந்தைகள், 1,320 பெண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளனர். அண்மையில் ஒரு புதிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் இருந்தும் மனித நேயமற்ற முறையில் பெண் குழந்தைகள் அனாதையாக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு.

குழந்தைகளின் உரிமை


பாலக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் இப்படிச் சொல்கிறார். பெண் சிசுக் கொலையைத் தடுக்க கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், கடந்த காலங்களுக்கு சாத்தியமானது.

காண்டா காட்டுக்குள் ஒரு கைக்குழந்தை
ஆனால் இப்போது, மக்கள் விழிப்புணர்வு அடைந்து உள்ளனர். எனவே பெற்றோர் இருந்தும் குழந்தைகள் அனாதை ஆக்கப்படுவது என்பது குழந்தைகளின் உரிமையைப் பறிப்பதாகும். பாலியல் பேதத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நிலை.

இந்தத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்துக்கு மாற்றாக, பெண் குழந்தைகளைப் பெற்றோரே வளர்க்கும் வகையில் ஒரு புதிய பரிமாணம் உருவாக்கப் பட வேண்டும். கல்வி, சுகாதாரம், திருமணம் ஆகியவற்றுக்கு அரசு  உதவும் வகையிலான ஒரு திட்டம் செயல் படுத்தப் பட வேண்டும்’ என்கிறார் டாக்டர் ரவிச்சந்திரன்.
ஏற்கனவே தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்; தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள்; ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகளின் நிலை குறித்து ஒரு முறையான ஆய்வு செய்யப் பட வேண்டும். அந்தக் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

மகளிருக்கு உரிய "கருவறை முதல் கல்லறை' வரையான திட்டங்கள் முறையாக அவர்களைச் சென்று அடைய வேண்டும். அதற்கு உரிய முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

மனித இனத்தில் மனித நேயம் வரலாறு படைக்க வேண்டும்
பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில், பெண்களுக்குச் சமூகப் பாதுகாப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்யப் படுகின்றன.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு பொன்மொழியாக மாற வேண்டும். மனித இனத்தில் மனித நேயம் வளர்ந்து வரலாறு படைக்க வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட! (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

No comments:

Post a Comment