06 January 2013

பூனை குறுக்கே போனால் பூலோகம் இருண்டு போகுமா?

மலேசியா, ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரை எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரை ஜூன் 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


இரண்டு மாதங்களுக்கு முன்னால் மலேசியா, பேராக், ஈப்போ புறநகரில் நடந்த ஓர் உண்மையான நிகழ்ச்சி. என் வீட்டுப் பக்கத்து தெருவில் நடந்தது. 

தொட்டதற்கு எல்லாம் சகுனம் பார்ப்பவர் சாம்பசிவம். அவர் ஓர் ஐதீகவாதி. சமயவாதி. சகுனவாதி. எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.   

குனிந்தால் ஒரு சகுனம். நிமிர்ந்தால் ஒரு சகுனம். உட்கார்ந்தால்கூட ஒரு சகுனம். அதை விடுங்கள். இடுப்பில் இருக்கும் வேட்டி அவிழ்ந்தால்கூட பரவாயில்லை. 


அவிழ்ந்த நேரம் அஷ்டமா துஷ்டமா என்று கஷ்டப்பட்டு சுத்தவேளை சுகாதார வேளை கணக்கு பார்க்கின்ற ஒரு நல்ல சம்பிரதாய மனிதர். சகுனத்திலே பிறந்து சகுனத்திலேயே வாழ்கின்றவர். இன்னும் அபூர்வ ராகங்கள் பாடிக் கொண்டே இருக்கிறார். மாற்றம் இல்லை. கதைக்கு வருவோம்.

பள்ளி விடுமுறை. ஆசை ஆசையாய்ப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பங்கோர் தீவிற்கு கிளம்பினார். வீட்டை விட்டு கார் ஒரு பத்தடி தூரம் போய் இருக்கும். யார் நேரம் சரி இல்லையோ தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஒரு கறுப்பு பூனை. சாலையில் குறுக்காக பாய்ந்து ஓடியது. 

சகுனம் சாம்பசிவம் சும்மா இருப்பாரா. ’பட்’டென்று ’பிரேக்’ போட்டார்.  அடுத்த விநாடி, பின் பக்கமாக ‘கொஸ்த்தான்’ எடுத்தார். மெதுவாக எடுத்தாலும் பரவாயில்லை. பூனை மீது இருந்த கோபத்தை காரின் மீது காட்டி விட்டார். 


கணவரையும் பிள்ளைகளையும் வழி அனுப்ப வந்த மனைவியை கார் மோதித் தள்ளியது. நல்ல வேளை. பெரிய காயம் எதுவும் இல்லை. அப்புறம் என்ன. பிள்ளைகளை இறக்கிவிட்டு மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

கடலுக்குப் போக வேண்டிய கார், கட்டுப் போட ஆஸ்பத்திரிக்குப் போனது. எந்தப் பாதையில் போகக்கூடாது என்று சகுனம் பார்த்தாரோ அதே பாதையில்தான் மறுபடியும் கார் போனது. 

சரி, இத்தனைக்கும் காரணம் சகுனம் பார்த்த சாம்பசிவமா, இல்லை எதிர் வீட்டில் ஏங்கித் தவிக்கும் காதலியைப் பார்க்க, பாய்ந்து ஓடிய கறுப்பு பூனையா. சொல்லுங்கள்.

என்னைக் கேட்டால் இரண்டு பேர் மீதும் தப்பு இருக்கிறது. காரைப் போகவிட்டு அப்புறம் வேண்டும் என்றால் கறுப்பு பூனை காதலியைப் பார்க்கப் போய் இருக்கலாம். 

கண்ணைக் கட்டிக் கொண்டு ஓடிய பூனை செய்ததும் தப்பு. அதே சமயத்தில் சாம்பசிவம் தன் கோபத்தைக் காரின் மீது காட்டாமல், கொஞ்சம் மெதுவாய் போய் இருக்கலாம். சகுனம் பார்த்த சாம்பசிவம் செய்ததும் தப்பு.

இந்தக் கதை பரவாயில்லை. அண்மையில் நான் படித்த செய்தி, நெஞ்சத்தையே உலுக்கிவிட்டது. தமிழ்நாடு, தாம்பரம் அழகிரி நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார், முத்துக்குமார் எனும் சகோதரர்கள். இருவருக்கும் கொத்தனார் வேலை. அடுத்தடுத்த வீடுகள். ராஜேஷ்குமார் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வந்தார். 

ஒரு நாள் காலை தம்பி முத்துகுமார் வேலைக்காக கிளம்பி இருக்கிறார். அப்போது அண்ணன் ராஜேஷ்குமாரின் வீட்டுப் பூனை குறுக்கே போய் இருக்கிறது. அன்று முத்துகுமாருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அலைச்சல்தான் மிச்சம். 

பூனை குறுக்கே சென்றது அபசகுனம். அதனால்தான் தனக்கு வேலை கிடைக்கவில்லை என நினைத்தார் தம்பி. அவரது கோபம் முழுவதும் அண்ணன் வீட்டு பூனை மீது திரும்பியது. மாலையில் போதையுடன் வீட்டுக்கு திரும்பினார். 

அந்த நேரம் பார்த்து பூனை அந்தப் பக்கமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் தம்பிக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறி தாளம் போட்டது. பூனையைப் பிடித்து சுவரில் ஓங்கி ஓங்கி அடித்தார். பூனை செத்துப் போனது. இதைப் பார்த்த அண்ணன், தம்பியை தட்டிக் கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம். அதுவே கைகலப்பாக மாறியது. ராஜேஷ்குமாரை முத்துக்குமார் சரமாரியாக தாக்கினார். அக்கம் பக்கத்தினர் வந்து விலக்கி விட்டனர்.

வீட்டுக்கு சென்ற ராஜேஷ்குமார் மயங்கி கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவ்வளவுதான். இறந்து விட்டதாக செய்தி வந்தது. முத்துகுமார் அடித்ததால்தான் கணவர் இறந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இப்போது முத்துகுமார் காவலில் இருக்கிறார். சிறைக் கம்பிகள் ஆலாத்தி எடுக்க காத்து நிற்கின்றன. இப்படி சகுனம் பார்த்து வந்த தகராற்றில் உடன் பிறந்த அண்ணனையே அடித்து கொலை செய்துள்ளார் ஒரு பாமர மனிதர்.

ஆடு குட்டிப் போட்டால் சகுனம் பார்ப்பது; நாய் ஊளையிட்டால் சகுனம் பார்ப்பது; பல்லி கச்சா செய்தால் சகுனம் பார்ப்பது; காக்கா கத்தினால் சகுனம் பார்ப்பது; இவை எல்லாம் என்ன? பொருத்தம் இல்லாத நம்பிக்கைகள் என்று சொல்லலாம். 

அதனால் என் மீது வருத்தமும் வரலாம். பரவாயில்லை. சில விளக்கங்களைச் சொல்கிறேன். ஆனால், பூனை விஷயத்தில் மட்டும் சற்று மாறுபாடான அறிவியல் கருத்து இருக்கிறது. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பூனை குறுக்கே போனால் கெட்டது நடக்கும் என்பது சிலருடைய நம்பிக்கை. அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இங்கேதான் பூமியின் மீது உள்ள காந்தம் வந்து கதை பேசுகிறது. 

நாம் வாழும் இந்த உலகம் இருக்கிறதே அது ஒரு பெரிய காந்தம். பூமியின் மீதுள்ள பொருள்கள் இந்தக் காந்தத்தினால் ஈர்த்து இழுத்துப் பிடிக்கப் படுகின்றன. 

அதே சமயத்தில், இந்தக் காந்த ஈர்ப்புச் சக்தியினால், பூமியில் உள்ள எல்லா பொருள்களுமே காந்தத்தை வெளிப்படுத்துகின்றன. இதில் பூனை எனும் பாலூட்டி, அதிகமான காந்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. 

பூனையின் காந்த அலைகள் மற்ற பொருள்களின் காந்த அலைகளை வெட்டித் தள்ளிவிடும் அல்லது குறைத்துவிடும் அளவிற்கு மிகுதியாக உள்ளன. நாம் நடந்து போகும் போது பூனை குறுக்கே வந்தால் அதன் காந்த அலைகள் நம்முடைய காந்த அலைகளை வெட்டிவிடும் அல்லது குறைத்துவிடும் என்பதுதான் உண்மை.  

அதனால் நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிற விஷயமும் சில நேரங்களில் சலனம் அடையலாம் அல்லது தேக்கம் அடையலாம். பூனை ஒரு காந்தமா என்றுகூட நீங்கள் கேட்கலாம்.  

பூனை மட்டும் அல்ல. உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையான காந்தம் இருக்கவே செய்கிறது. காந்தவிசையை பாதிக்கும் குணம் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கின்றது. ஆனால், பூனையிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.

உயிரினங்களுக்கு இருக்கும் காந்தவிசையை பாதிக்கும் இந்த அபூர்வ குணத்தை மேக்னெட்டோரிஸப்ஷன் (Magnetoreception) அல்லது  காந்தவிசை ஏற்புத் திறன் என்கிறார்கள். இது 1972ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

உயிரினங்களின் காந்தவிசை ஏற்புத் திறன் பற்றிய ஆய்வுகள் இன்றைய காலக்கட்டங்களில் பல உண்மைகளைத் தெளியப் படுத்துகின்றன. இருந்தாலும், ஒரு காலத்தில் அது ஒரு மூட நம்பிக்கை என்றே சொல்லப்பட்டது.

தேனீக்கள், சாலமாண்டர் பல்லிகள், (Salamanders) கடல் ஆமைகள், சுறாமீன்கள், பறவைகள் என்று பல உயிரினங்களிடம் காந்தவிசையேற்புகள் உள்ளன. அந்த வகையான உயிரினங்களைக் காந்தவிசையேற்பிகள் என்று அழைக்கிறார்கள். 

நமக்கு பழக்கமான புறாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை எந்தத் தருணத்திலும் திசைகளைச் சர்வ நிச்சயமாய் அறிந்து தெரிந்து வைத்து இருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் Magnetoencephalography எனும் முறையைப் பயன்படுத்தி பறவைகளைப் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மனிதனின் மூக்கு, கண்களில் இந்த காந்தவிசை ஏற்புத் திறன்கள் இருக்கின்றன. (Magnetic bones have been found in the human nose, specifically the sphenoidal/ethmoid sinuses. Magnetosensitive protein, cryptochrome-2, has been found in the human eye.) ஆனால், நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது வேறு கேள்வி. இதைப் பற்றிய ஆராய்ச்சி துறைக்கு Sensory Biology என்று பெயர்.

ஆக, பூனை குறுக்கே போவதால் மனதனின் மன அலைகள் தேக்கம் அடையலாம் அல்லது அவன் நினைவில் இருப்பது மறந்து போகலாம் என்பது ஓர் அறிவியல் சார்ந்த உண்மை. 

அதைத் தான் சகுனம் என்று நாம் சொல்கிறோம். இந்த அறிவியல் உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த அறிவியல் உண்மை, சகுனம் என்று மருவி வந்து உள்ளது. 

நவீன மயமான கணினி உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. செவ்வாய் கிரகத்தில் நிலத்தைப் பேரம் பேசும் அளவுக்கு, வையகம் தன் இணைய வலையை விரித்து வருகிறது. 

ஆக, எதையும் நிலையான ‘பாசிட்டிவ்’ எனும் நேர்மறை கோணத்தில் பாருங்கள். தயவு செய்து ‘நெகட்டிவ்’ எனும் எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.


சகுனம் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. எது எதற்கு சகுனம் பார்க்க வேண்டும் என்று ஒரு வரையறையும் இருக்கிறது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு பூனை குறுக்கே போனால், கவலைப்பட வேண்டாம். 

அது அதனுடைய வேலையைப் பார்க்கிறது. நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று போய்க் கொண்டே இருங்கள். அதை ஒரு கெட்ட சகுனமாக நினைக்கவே வேண்டாம். சகுனம்தான் சகுனியாக மாறும்.

முடிந்தால் அந்தப் பூனை எங்கே போகிறது என்று பாருங்கள். கண்டிப்பாக, அது பக்கத்து வீட்டில் இருக்கும் தன் காதல் ஜோடியைப் பார்க்க போய்க் கொண்டு இருக்கும். நீங்கள் மட்டும் உங்கள் காதலியைப் பார்க்க போகலாம். அது மட்டும் போகக் கூடாதா என்ன. 

நீங்கள் சட்டை சிலுவார் போட்டு அழகாக ராஜ நடை போடுவீர்கள். பாவம் பூனை. அதற்கு சட்டை சிலுவார் வாங்க காசு இல்லை. அதனால், பார்வதியைப் பார்க்க நிர்வாணமாக ஓடுகிறது. நமக்கு அந்த மாதிரியான நிர்வாண கோலம் இல்லையே என்று சந்தோஷப் படுங்கள்.

5 comments:

 1. வாழ்த்துக்கள்...உன்மையை சொன்னிர்கள்....புறியதர்வர்களுக்காக வருத்தபடுவதர்க்கில்லை....தொடர்த்து எழுத்துங்கள்..பாரட்டுக்கள்.

  ReplyDelete
 2. Thanks for the superb articles.

  ReplyDelete
 3. Thanks for the superb articles.

  ReplyDelete
 4. ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).

  மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்

  ReplyDelete
 5. ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).

  மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்

  ReplyDelete