24 ஆகஸ்ட் 2014

சீனி நைனா முகமது

தித்திக்கும் தொல்காப்பியத்தில்
திக்கெட்டும் சீனி நைனா முகமது 

(மலேசியா, பேராக் மாநிலப் பொது இயக்கங்களின் இணை ஏற்பாட்டில், அமரர் சீனி நைனா முகம்மது அவர்களுக்கு, 22.08.2014 வெள்ளிக்கிழமை, ஈப்போ பாராகோன் விடுதியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, அன்றைய தினம் இந்தச் சிறப்புக் கட்டுரை தினக்குரல் நாளிதழில் வெளியிடப்பட்டது.)


சீனி நைனா முகமது
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான். அப்படி ஒரு வாசகத்தைத் தன் கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி உயிர் துறந்தவர் ஜி.யு.போப் (George Uglow Pope) என்கிற ஒரு பாதிரியார். தன்னுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டு காலத்தை, தமிழுக்காக அர்ப்பணிப்புச் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற தமிழ்க் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மறக்க முடியாத மாமனிதர்.

திராவிட மொழி இயலின் தந்தை எனப் போற்றப் படுகிறவர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell). இவரும் ஒரு பாதிரியார் தான். ஆனால், சமயத்தைப் பரப்புவதற்கு வந்த இவர், அதற்குப் பதிலாக திராவிட மொழிகளை ஆய்வு செய்து, தமிழ் மொழியின் கண்களைத் திறந்து விட்டுப் போனவர். 


இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூல், அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த நூல் இப்போது தமிழகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாட நூலாகப் பயன்படுத்தப் படுகிறது.

’சுவடி தேடும் சாமியார்’ என்று புகழப் பட்டவர் வீரமாமுனிவர் எனும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi). ஐம்பது ஆண்டு காலம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். 


தமிழில் 23 நூல்களை எழுதியவர். தமிழின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தினால், ஜோசப் பெஸ்கி எனும் தம்முடைய பெயரை, தைரியநாதன் என்று மாற்றினார். ஆனால், அந்தப் பெயர் ஒரு வடமொழி என்பதற்காக, தூயச் செந்தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். 

திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்த வீரமாமுனிவர்

தேம்பாவணி என்பது வீரமாமுனிவர் இயற்றிய அரும் பெரும் காப்பியம். தமிழில் முதல் தமிழ் அகரமுதலியை (அகராதி) உருவாக்கியவரும் இவரே. திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்தவர். 


தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த அந்தத் தமிழ்ப் பெரியாரின் கல்லறை, கேரளாவில் ஓர் உப்பங்கழியில் அனாதையாகப் புதர் மண்டிப் போய்க் கிடக்கிறது. இந்த விஷயம் உலகத் தமிழ் மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்குத் தெரியுமா என்பது எனக்கும் தெரியவில்லை. 

வித்தாலி பூர்ணிக்கா (Vitaly Fournika) ஒரு ரஷ்யர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகாகவி பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி, தன் பெயரைத் தமிழகப்பித்தன் என்று மாற்றிக் கொண்டவர். 


தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை ஆராய்ந்து ரஷ்ய மொழியில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர்.

இரோசி யமாசிடா தமிழ்ப் பேராசிரியர்

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் ஜப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆய்வு செய்தவர். 

தமிழ் மொழி சார்ந்த உலகளாவிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். தமிழ் நாவல்களை ஜப்பானிய மொழியில் மாற்றம் செய்து வருகிறார். செம்மொழி மாநாட்டில் தமிழில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தவர்.

தமிழறிஞர் சீனி நைனா முகம்மது

இவர்களைப் போல அலெக்சாண்டர் துபியான்சுகி, ராபர்ட் தே நோபிலி (இத்தாலி), மிரான் வின்கலோ (அமெரிக்கா), சீகன் பால்கு (ஜெர்மனி), என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்), ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) போன்றவர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் தமிழ் வளர்த்த பெருமக்கள். தமிழுக்காக அரிய பெரிய சேவைகளைச் செய்த மாமனிதர்கள். 

அதே வரிசையில் வருபவர்தான் தமிழறிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள். இவர் தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வந்து, தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவர். பன்மொழிப் புலமையாளர். சிறந்த பண்பாளர். பொதுநலத் தொண்டர். தமிழ்ப் பற்றாளர். 

தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தொல்காப்பியத்தில் மட்டும் தனித்து ஒரு ஞாயிறாகவே ஜொலித்து வந்தார். தொல்காப்பியம் என்றாலே விலகி ஓடும் காலக் கட்டத்தில், அதன் அருமை பெருமைகளை எளிமையாக விளக்கி வந்தார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற அன்னாரின் மறைவு, மலேசியத் தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். என்றுமே நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதயம் கனக்கிறது. 

அவர் நினைவாக சற்று நேரம் சம்மணம் போடுகிறேன். தொல்காப்பியம் என்றால் என்ன என்று எளிய முறையில் சொல்கிறேன். அதுவே, மலேசியம் பார்த்த ஒரு தமிழ் மகனுக்கு நாம் செய்யும் மரியாதை. ஒரு மௌனமான அஞ்சலி. அந்தத் தொல்காப்பிய அறிஞரின் நினைவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.

ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி

உலகில் 2795 மொழிகள் உள்ளன. அந்த அத்தனை மொழிகளிலும், ஒரே ஒரு மொழிக்கு மட்டும் ஒரே ஒரு சிறப்பு இருக்கிறது. மற்ற எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு. அது என்ன சிறப்பு. 

தொல்காப்பியம் என்கிற சிறப்பு தான் அந்தத் தனிச் சிறப்பு. ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி இருக்கிறது என்றால் அது தமிழ் மொழியாகத் தான் இருக்க முடியும். வேறு மொழியாக இருக்க முடியாது. அதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழின் மும்மணிச் சிகரங்கள்

பொதுவாகவே, ஒரு மொழியில் முதலில் தோன்றுவது அதன் கதைகள். காப்பியங்கள், புராணங்கள். அவை அனைத்தும் கதா வடிவங்கள். ஆனால், அந்தக் காப்பியங்கள் 

வருவதற்கு முன்னாலேயே, ஒரு மொழிக்கு இலக்கணம், காப்பியமாக வருகிறது என்றால், அந்த மொழியின் செம்மையை என்னவென்று புகழ்வது. அந்தச் செம்மைத் தன்மை, தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மொழி வல்லுநர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம். இந்த மூன்று இலக்கியங்களையும் தமிழின் மும்மணிச் சிகரங்கள் என்று பெருமையாகச் சொல்வார்கள். இவற்றுள் தொல்காப்பியம் என்பது தலையாயச் சிகரம். 

அதன் செம்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழுக்கு நேர்ந்த ஒரு காலக் கொடுமை. அதை குமரிக் கண்டத்தின் ஆழ் இடுக்கில் புதைந்து கிடக்கும் ஓர் இறுக்கம் என்றுகூட சொல்லலாம். ஆக, அந்த இறுக்கத்தை இப்போதே தளர்த்தி விடுவோம். தொல்காப்பியத்தை இன்றே படிக்கத் தொடங்குவோம்.

இடைச் சங்கத்தில் கபாடபுரம் அழிந்தது

பண்டைய காலத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன. தலைச் சங்க காலத்தில், குமரிக் கண்டம் அழிந்து போனது. 

இடைச் சங்க காலத்தில், கபாடபுரம் அழிந்து போனது. கடைச் சங்க காலத்தில், மதுரை அழிந்து போனது. அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய இந்த இரண்டு நூல்களும் இடைச் சங்கத்தைச் சேர்ந்தவை. 

தொல்காப்பியம் என்பது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  அதை எழுதியவர் தொல்காப்பியர். சேர நாட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் அகத்தியரின் மாணவர்களில் ஒருவர். தொல்காப்பியரைப் பற்றிய உண்மையான முழுமையான வரலாறு இன்னும் எழுதப் படாமல் இருக்கிறது.

தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல்

தமிழ் உலகில் எத்தனையோ தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி மறைந்து இருக்கின்றன. ஆனால், தொல்காப்பிய நூல் மட்டும் சிதைவு பெறாமல், இன்று வரை வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு ஓர் அடிப்படை நூலாகவும் கருதப் படுகிறது. 

தொல்காப்பியம் மிக எளிமையான நூல். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். அது ஓர் இலக்கண நூல். இலக்கிய நூல் அல்ல. அதனால், முதலில் கசக்கும். போகப் போக இனிக்கும். 

கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது

இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோமே என்று சிலர் காலம் தாழ்ந்து வருத்தப் படலாம். தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது. உரைப்பும் இருக்காது.

தொல்காப்பியம் 1,610 பாட்டுகளால் ஆனது. இதில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்கள். இயல் என்றால் துறை. ஆக மொத்தம் இருபத்தேழு இயல்கள். பாடல்களாகவே எல்லாக் கருத்துகளும் சொல்லப் படுகின்றன. அதைச் சூத்திரம் அல்லது நூற்பா என்றும் சொல்வார்கள்.

தமிழ் நூல்களும் காப்பியங்களும், பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் அப்படி அல்ல. அதற்கு கடவுள் வாழ்த்து இல்லை. 

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்ததிகாரம்

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் என்பது மட்டும் இருக்கிறது. பாயிரம் என்றால் கவிதை நடையில் உள்ள முன்னுரை. அந்தப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லை, வடவேங்கடம் தென் குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று சொல்லப் படுகிறது. அந்தப் பாயிரத்தை எழுதியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் ஒன்றாகக் கல்வி பயின்றவர்.

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்து அதிகாரம். தமிழின் எழுத்துகள் என்ன என்ன என்று சொல்லப் படுகிறது. ஆனால், தமிழ் எழுத்துகளின் வடிவம், இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மெய் எழுத்துக்கு புள்ளி வரும். ஆனால், அந்தப் புள்ளி எங்கே வரும் என்றும் சொல்லப் படவில்லை. 

புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும்

முன்பு காலத்தில் ஆணியைக் கொண்டு, பனை ஓலையில் எழுதினார்கள். புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும். அதனால், தமிழ் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பது இல்லை. 

அடுத்து, எழுத்துகள் பிறப்பதைப் பற்றி, இந்த எழுத்து அதிகாரம் சொல்கிறது. ஒலி என்பதுதான் சொல் ஆகிறது. அந்த ஒலியை அரவம், இசை, ஓசை என்று பிரிக்கலாம். 

சீன மொழியைத் தவிர, உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளும் ஒலி எழுத்துகளால் தான் எழுதப் படுகின்றன. ஆங்கிலத்தில்  Phonetics என்று சொல்வார்கள்.

சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது

எழுத்து அதிகாரத்தில் தனித்து நிற்கும் எழுத்துகள்; சொல்லுக்கு இடையில் வரும்போது அந்த எழுத்துகளின் நிலை என்ன ஆகிறது; எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும்; சொற்களில் வரும் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள்; சொற்கள் புணரும் போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் போன்றவை விளக்கப் படுகின்றன.

இரண்டாவதாக வருவது சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது. சொல்லப் படுவது என்பது ஒரு சொல். அந்தச் சொல்தான், எழுத்தால் எழுதப் படுகின்றது. ஒரு மொழிக்கு சொல் என்பதுதான் முதலில் வந்தது. அப்புறம் தான் எழுத்து வந்தது. இதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். 

எழுத்தையும் சொல்லையும் கொண்ட வாழ்க்கை இலக்கணம்

சொல் அதிகாரத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பேசுவது, எவ்வாறு எழுதுவது, எவ்வாறு சொற்களை அமைத்துக் கொள்வது போன்றவை விளக்கப் படுகின்றன. மேலும் சொற்கள் தொடர்களாக அமையும் முறை; வேற்றுமைத் தொடர்கள்; தனிச் சொற்களின் இலக்கணம் போன்றவையும் சொல்லப் படுகின்றன.

மூன்றாவதாக வருவது பொருள் அதிகாரம். அன்றைய காலத்து மக்களின் வாழ்வு எப்படி இருந்தது. எழுத்தையும் சொல்லையும் கொண்டு புனையப் படும் வாழ்க்கை இலக்கணம் எப்படி இருந்தது என்று இந்த அதிகாரத்தில் விளக்கப் படுகிறது. இந்த அதிகாரம் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்புடைய ஒரு பகுதி என்றுகூட சொல்லலாம்.

பாலை என்பது ஓர் அகத் திணை

பொருள் அதிகாரத்தில், அகத் திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.

தமிழ் இலக்கியம் என்பது திணை கோட்பாட்டைச் சார்ந்தது. ஏழு திணைகள் உள்ளன என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஏழு திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் நிலங்கள் சம்பந்தப் பட்டவை. 

இதில் நிலம் இல்லாத பாலை எனும் திணையும் சேர்ந்து கொள்கிறது. பாலை என்பது ஓர் அகத் திணையாகும். 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

இந்த அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி நற்றாய், செவிலித் தாய்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும். ஆனால், அந்தக் கதாமாந்தர்களுக்குப் பெயர்கள் வழங்கப் படுவது இல்லை. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்பது தொல்காப்பியக் கூற்று. 

தொல்காப்பிய நூல் எழுதப்பட்ட பின்னர், அதை எந்தக் கல்வெட்டிலும் எழுதி வைக்கவில்லை. காலம் காலமாகப் பனை ஓலைகளில் எழுதிப் படித்து வந்து இருக்கிறார்கள். தொல்காப்பியம் எழுதப்பட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதற்கு உரை எழுத ஆரம்பித்தார்கள். அதாவது விளக்கம் எழுதினார்கள். 

அப்படி விளக்கம் எழுதியவர்கள், அவர்களின் காலத்து இலக்கண, இலக்கிய அறிவின் அடிப்படையிலேயே உரை எழுதி இருக்கிறார்கள். பல காலக் கட்டங்களில் பலர் விளக்கவுரை எழுதி இருக்கிறார்கள். இருந்தாலும், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் போன்ற புலவர்களின் தொல்காப்பிய உரைகளை மட்டுமே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

தொல்காப்பியம் குழப்பமான நூல் அல்ல

தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கரடு முரடான தமிழில் எழுதப் பட்டது என்று சிலர் சொல்வார்கள். அதற்காக அதை ஒரு குழப்பமான நூல் என்று நினைத்து, ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். அதன் மொழி எளிமையானது. ஆனால், பல சொற்களுக்கு அர்த்தம் சொல்லப்படுகிற விதம் இருக்கிறதே, அங்கே கொஞ்சம் லேசான மயக்கம் வரலாம். 

மயக்கம் என்றால் மயக்கம் போட்டு விழுவதைச் சொல்லவில்லை. தடுமாற்ரம் வரும் என்று சொல்ல வருகிறேன். தொல்காப்பியம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள சற்று சிரமம் ஏற்படும். அவ்வளவுதான். மற்றபடி அது குழப்பமான நூல் அல்ல.

தொல்காப்பியம் என்பது தமிழின் முதல் இலக்கண நூல். தமிழ் மொழியின் உச்சமான படைப்பு. சரி. தொல்காப்பியம் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓரளவுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஐந்திலக்கண நூல்கள் என்றால் என்ன

தொல்காப்பியம் தோன்றிய பிறகு, அதனை அடிப்படையாகக் கொண்டு பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றில் முதன்மையாக வருபவை ஐந்திலக்கண நூல்கள் ஆகும். அந்த ஐந்திலக்கண நூல்களின் பெயர்கள். 1. வீரசோழியம் 2. இலக்கண விளக்கம் 3. தொன்னூல் விளக்கம் 4. முத்து வீரியம் 5. சுவாமிநாதம். இந்த நூல்களின் வரிசையில் மேலும் இரண்டு நூல்கள் உள்ளன. 

தமிழ்நெறி விளக்கம், நன்னூல். இவை இரண்டும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால், அதை ஏழு இலக்கண நூல்கள் என்பதற்குப் பதிலாக ஐந்திலக்கண நூல்கள் என்று அழைக்கிறார்கள்.

தொல்காப்பியத்தில் மூன்றாவதாகச் சொல்லப்படும் பொருள் அதிகாரம் இருக்கிறதே, அதில் ஒரு பிரிவுதான் யாப்பிலக்கணம். இந்த யாப்பிலக்கணம் ஒரு பெரிய பிரிவு. 

அதனால், அதைத் தனியாகப் பிரித்து எடுத்து விட்டார்கள். அதே மாதிரிதான் அணி இலக்கணம். குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒன்று யாப்பிலக்கணம். மற்றொன்று அணி இலக்கணம். இந்த அணி இலக்கணம் என்பது, தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில் மற்றொரு பெரிய பிரிவாகும். ஆக, யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் இரட்டைப் பிறவிகள் மாதிரி எப்போதும் சேர்ந்தே வரும். 

அணி இலக்கணத்திற்கு விளக்கம் தண்டியலங்காரம்

அணி என்றால் அழகு என்று அர்த்தம். செய்யுள்களை அமைக்கும் போது, சொல் அழகு, பொருள் அழகு ஆகிய இரண்டையும் எப்படி சேர்க்க வேண்டும் என்று இந்த அணி இலக்கணம் விளக்குகிறது. அணி இலக்கணத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஒரு பெரிய நூல் இருக்கிறது. அதன் பெயர் தண்டியலங்காரம். 

அணி இலக்கணத்தை இன்னும் பிரித்துப் பார்க்கலாம். நிறைய அணிகள் வரும். அதிசய அணி, சிலேடை அணி, தீவக அணி, வாழ்த்தணி, மயக்க அணி என்று மொத்தம் 35 அணிகள் இருக்கின்றன. இதை எல்லாம் கேட்கும் போது, உங்களுக்கும் கொஞ்சம் மயக்கம் வருகிற மாதிரி இருக்கலாம். கவலைப் படாதீர்கள். போகப் போக எல்லாம் சரியாகி விடும். மயக்கமும் தெளிந்து விடும். 

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழின் இலக்கணத்தை, இப்படி அக்குவேர் ஆணிவேராகச் சல்லடை போட்டு பிரித்து வகுத்துப் பார்த்து இருக்கிறார்கள். 

ஆக, அவர்களின் தமிழ் மொழி அறிவை என்னவென்று சொல்வது. என்னவென்று புகழ்வது. அதனால் தான் அதற்கு செம்மொழி எனும் உயர்த் தகுதி கொடுத்து இருக்கிறார்கள். இமயத்தில் சிகரம் பார்க்கும் ஒரு மொழி இருக்கிறது என்றால் அது நம் தமிழ்மொழியைத் தவிர வேறு மொழியாக இருக்க முடியாது. 

தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது

தமிழ்மொழியின் தோற்றம் மிக மிகத் தொன்மையானது. அப்பேர்ப்பட்ட அந்த மொழியில் தான் தொல்காப்பியம் என்கிற ஓர் இலக்கண இலக்கியமும் ஐக்கியமாகிறது. 

தொல்காப்பியத்திற்கு இணையாக, வேறு ஒரு நூல் இது வரைக்கும் தமிழில் இல்லை. ஆக, தொல்காப்பியம் மாதிரி இன்னொரு நூல், இனிமேலும் கிடைக்கப் போவதும் இல்லை. 

மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்

கடைசியாக ஒரு தனிப்பட்ட பதிவு. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2012-ஆம் ஆண்டில், ஓர் இணையக் கருத்தரங்கை கோலாலம்பூரில் நடத்தியது. அதில் ‘மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்போது தான் தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது அவர்களைச் சந்தித்தேன். நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. 

கணினிக் கலைச் சொற்களை உருவாக்கும் போது, அவற்றின் மூலத்தையும் வேர்த் தன்மைகளையும் எப்படி ஆராய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த வகையில், உருவாக்கப்பட்ட சுழலி, விரலி எனும் இரண்டு கணினிக் கலைச் சொற்களை, ஐயா சீனி. நைனா முகமது அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக