07 October 2014

ரஷ்யா எப்படி உடைந்தது

மலேசியா தினக்குரல் 23.07.2014 நாளிதழில் வெளிவந்த கட்டுரை

இந்த உலகில் இரண்டே இரண்டு வல்லரசுகள். ஒன்று அமெரிக்கா. மற்றொன்று ரஷ்யா. இது எழுதப் படாத சாசனம். இப்போது சீனாவும் எட்டி எட்டிப் பார்க்கிறது. போட்டிக்குத் தயாராய் நிற்கிறது. இந்தியாவும் களத்தில் இறங்கலாம். இறங்க முடியும். வாய்ப்பு இருக்கிறது. முதலில் இத்தாலிக்கு ‘சப்போர்ட்’ செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்ப்பசேவ்

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து இருக்கும் பத்து இலட்சம் கோடி பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். அப்புறம் வேண்டும் என்றால், வல்லரசு போட்டியில் இந்தியா கலந்து கொள்ளலாம். அந்தத் தகுதி வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

உலக வல்லரசு என்று சொல்லிக் கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரிட்டன் ஆகிய இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது.  மற்ற எந்த நாட்டுக்கும் அந்தத் தகுதி இல்லை. பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், போன்ற நாடுகளைப் போட்டியில் சேர்க்க வேண்டாம்.  அப்படியே கொடுத்தாலும் அது அழகாகவும் இருக்காது. காட்டுவாசிக்கு மேக்கப் போட்டது மாதிரி ஆகிவிடும்.

யார் அந்த உலகப் போலீஸ்காரர்

ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டு காலமாக, உலக வல்லரசுகள் என்கிற அந்தப் பாரம்பரியம் நிலைகாக்கப் பட்டு வருகிறது. ரஷ்யா அமெரிக்கா என்கிற இந்த இரண்டு பேரில் யார் உலகப் போலீஸ்காரராகச் சேவை செய்ய முடியும் என்பதற்கு பலப் பல ஒலிம்பிக் போட்டிகளும் நடந்து இருக்கின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இரண்டு நாடுகளுமே தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கின்றன.

ரஷ்ய போர் வீரர்கள்

சில சமயங்களில் கீழே விழுந்து, மீசையில் ஒட்டிய மண்ணைத் தடவி விட்டு, சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று சொல்லிய வரலாறும் வல்லினங்கள் பேசுகின்றன.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். ஆடம்பரமான வாழ்க்கை. அநாவசியமான செலவுகள். அன்றாடம் அரண்மனைக் களியாட்டங்கள். அடிதட்டு மக்களை அடித்துப் போடும்  அதிகாரங்கள். அடுக்கடுக்காய் அத்துமீறல்கள். இந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்குச் சமாதி கட்டினார் விலாடிமிர் லெனின். அவர் கொண்டு வந்த மக்கள் புரட்சியை அக்டோபர் புரட்சி என்றும் அழைக்கிறார்கள். 

அவருடைய சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு வழி வகுத்துக் கொடுத்தது கார்ல் மார்க்ஸின் தத்ததுவச் சித்தாந்தங்கள். சோசலிச ரஷ்யாவை லெனின் உருவாக்கினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யு.எஸ்.எஸ்.ஆர் என்கிற ஒரு சோசலிஸ்டு நாடு தோற்றுவிக்கப் பட்டது.

இணங்க மறுத்த மகாதேவிகள்

இரண்டாம் உலகப் போர் வந்தது. உலக நாடுகளின் குடுமிகளை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டுப் போனது. நாகசாக்கி ஹிரோசிமாவில் குண்டுகள் போடவில்லை என்றால், போர் தொடர்ந்து போய் இருக்கும். உலக வரலாறும் திருத்தப்பட வேண்டி வந்து இருக்கும். அந்த வாக்கில், சோவியத் ரஷ்யா பக்கத்தில் இருந்த சின்னச் சின்னக் குட்டி நாடுகளை, தன் நாட்டுக்குள் சேர்த்துக் கொண்டது.

யுக்ரெயின் போர்க் கப்பல்கள்

அப்படிச் சொல்ல முடியாது. வன்முறையைப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். சின்னச் சின்ன நாடுகளுக்கு அல்வா துண்டுகளை ஆட்டிக் காட்டி, ஆசைகளை உண்டாக்கி விட்டது. இணங்க மறுத்த மகாதேவிகளும் இருந்தன. அந்த மாதிரியான பெரிய நாடுகளை ‘இணங்கிவிடு மகாதேவி’ என்று சொல்லி ரோத்தான்களைப் பயன்படுத்தியது. அதில் ரொம்ப ரோத்தான் பூசை வாங்கிய நாடு யுக்ரெயின். 

அப்புறம் சோவியத் ரஷ்யா உலகின் மிகப் பெரிய நாடாகப் பேர் போட்டது. அப்போது அதன் நிலப்பரப்பு, ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரை இரண்டு கண்டங்களிலும் பரந்து நிறைந்து விரிந்து கிடந்தது. அதன் பரப்பளவு 6,592,800 சதுர மைல்கள். 17,075,400 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மலேசியாவைப் போல 51 மடங்கு பெரியது. சபா சரவாக்கைச் சேர்த்து தான்.

யுக்ரெயின் விடுதலைப் போராட்டம்

1917-க்குப் பின்னர், சோவியத் யூனியனில் ஒட்டு மொத்தமாகக் கம்யூனிஸ்டு ஆட்சி. நாட்டுக்குள் என்ன தான் நடக்கிறது என்கிற விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது. மறைப்புச் சுவரை எழுப்பி ஒரு நாட்டையே மறைத்து வைத்து இருந்தார்கள். அதனால் அதை இரும்புத் திரை நாடு என்றும் வர்ணித்தார்கள். 

ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின்

ரஷ்யக் கூட்டமைப்பில் ரஷ்யா, பைலோருஷ்யா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜக்ஸ்தான், கிர்க்கிஸ்தான், ஜார்ஜியா, யுக்ரெயின், மால்டோவியா, எஸ்டோனியா, லாட்வியா, லிட்வேனியா என்று 15 மாநிலங்கள் இருந்தன.

குருஷேவ்

இதில் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று மாநிலங்களும் பால்டிக் நாடுகள். இவை பால்டிக் கடலுக்குப் பக்கத்தில் இருந்ததால் அவற்றை பால்டிக் நாடுகள் என்று அழைத்தார்கள். இவை ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்தவை.

லெனினுக்குப் பிறகு, 1924-இல் ஸ்டாலின் வந்தார். இந்த மனிதர் ரஷ்யாவை ஒரு வழி பண்ணிவிட்டுத் தான் போனார். சும்மா சொல்லக் கூடாது. கிராமிய நாடாக இருந்த ரஷ்யாவைக் கைத்தொழில்மய நாடாக மாற்றிய பெருமை இவரைத் தான் சாரும். இருந்தாலும் இவருடைய அடக்கு முறையினால் பலப் பல இலட்சம் பேர் மறைந்து போனார்கள்.

லெனின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சைபீரிய வதைமுகாம்களில் பல இலட்சம் அரசியல் கைதிகள் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். இன்னும் பல்லாயிரம் பேர் நாடு கடத்தப் பட்டனர். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் வந்தார். இவரும் பல மாற்றங்களைச் செய்தார். இவர் ஒரு மிதவாதி. தொழிலாளர் வதை முகாம்களை ஒழித்துக் கட்டினார். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல நூறு  புனர்வாழ்வு மையங்களை அமைத்துக் கொடுத்தார். 

கியூபா ஏவுகணை நெருக்கடி

இவருடைய காலத்தில்தான் ரஷ்யா, முதன் முதலாக மனிதனை (யூரி ககாரின்) விண்வெளிக்கு அனுப்பி வைத்துச் சாதனை செய்தது. இவருக்கும் அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் கியூபா ஏவுகணைகள் தொடர்பாக ஒரு முறுகல் ஏற்பட்டது. அப்போது உள்ளவர்களுக்கு ஞாபகம் வரலாம். மூன்றாம் உலகப் போர் வரக் கூடிய கட்டம். அது 1962-ஆம் ஆண்டில் நடந்தது. கியூபா ஏவுகணை நெருக்கடி என்றும் சொல்வார்கள்.  ஒரு வழியாக நீறு பூத்துப் போனது.

புன்னகை மன்னன் புடின்

அடுத்து, குஷேவிற்குப் பிறகு பிரஷ்னீவ் வந்தார். இவருடைய காலத்தில் தான் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தன. பெருமையாகச் சொல்வது என்றால், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்கள் சுரண்டப் பட்டன என்று தாராளமாகச் சொல்லலாம். இவர் ரஷ்யாவில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்து விடவில்லை. ஒரு வகையில் அந்த நாடு உலகத் தரத்தில் கொஞ்சம் சரிந்து போனது தான் மிச்சம். 

அடுத்து, 1984-ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக கார்ப்பசேவ் பதவி ஏற்றார். இவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். இவருடைய ஆட்சியில் சில பல கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன. கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப் பிடியைத் தளர்த்தினார். உலக அமைதி முயற்சியில் இறங்கினார். அதனால் ரஷ்ய மக்கள் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ரஷ்ய அதிபர்களிலேயே மனதில் நிற்கக் கூடிய மனிதர்

அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனால் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப் பட்டது. உலக நாடுகளில் இவருடைய புகழ் ஓங்கி நின்றது. நல்லபடியாக ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யா சுமுகமாக நடை போட்டது. என்னைக் கேட்டால், ரஷ்ய அதிபர்களிலேயே என் மனதில் நிற்கக் கூடிய ஒரே மனிதர். இவர்தான், ஒரு கம்னியூஸ்ட் நாட்டை ஜனநாயகப் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த நல்ல ஒரு மனிதர்.

ஆனால், என்ன செய்வது. இவருக்கும் ஒரு கஷ்ட காலம். எதிர்பாராத சூழ்நிலை. ரஷ்யாவில் உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. அமெரிக்காவுடன் குசலம் பேசிக் கொண்டு, இங்கே ரஷ்யாவைக் கவனிக்கவில்லை என்கிற ஆத்திரம் ஆதங்கம் வேறு. 1991-ஆம் ஆண்டு மத்தியில், தானியத் தட்டுப்பாடு ரஷ்யாவின் கழுத்தை நெரித்தது. 

கார்ப்பசேவ் அதிபராகும் வரையில் மற்ற மற்ற அதிபர்களிடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தன. தவிர, உலகின் மிகப் பெரிய வல்லரசாகவும் பேர் போட்டு வந்தது. அதனால், முன்பு 1910-களில் வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்ட குட்டி நாடுகளும், பிரிந்து போக வழி இல்லாமல் பேசாமல் இருந்தன.

முதன் முதல் சுதந்திரக் குரல்கள்

கார்ப்பசேவ் அதிபரானதும் அவருடைய அமைதிக் கொள்கை, இந்தக் குட்டி நாடுகளுக்குக் கொஞ்சம் இளக்காரமாகிப் போனது. அதே சமயத்தில் உணவுத் தட்டுப்பாடு என்பது அவர்களுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. இந்த இரண்டுமே பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் உற்சாகத்தையும், மன தைரியத்தையும் கொடுத்தன. 

பால்டிக் நாடுகள் என்று சொல்லப்படும் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய இந்த மூன்று மாநிலங்கள் தான், முதன் முதலில் சுதந்திரக் குரல்களை உயர்த்தின. ஒரு நல்ல நாள் பார்த்து, ஜார்ஜியாவும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது.

சுதந்திரம் கோரி போர்க் கொடி தூக்கிய அந்த நான்கு மாநிலங்களும், தங்களுக்குத் தாங்களாகவே சுதந்திரப் பிரகடனங்களைச் செய்து கொண்டன. அவற்றுக்குத் தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்னுக்கு வந்தன. அடுத்தக் கட்டமாக, உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா களம் இறங்கினார்.

அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ்

பால்டிக் நாடுகளுக்கு உடனடியாகச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இது கார்ப்பசேவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ், கார்ப்பசேவுக்கு மருந்து மாத்திரைகளை அனுப்பி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது. 

ஏன் தெரியமா. கார்ப்பசேவ் என்கிற பிள்ளையைக் கிள்ளிவிட்டது ஜார்ஜ் புஷ் தானே. ஆக, பிரிந்து போன மாநிலங்களின் அதிகாரங்களைப் பரவலாக்கி, அவற்றைச் சாந்தப் படுத்த முயற்சிகள் செய்தார். ஒன்றும் எடுபடவில்லை.

அப்போது கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட தலைவர்கள் சிலர் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தில் இருந்தனர். அவர்களுக்கு கார்ப்பசேவின் அதிரடி மாற்றங்கள் பிடிக்கவில்லை. கார்ப்பசேவினால் பதவியில் அமர்த்தப் பட்டவர்களே, அவருக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். திடீரென்று கார்ப்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். கொள்கைப் பிரிவினைவாதிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சிகள் செய்தனர்.

பொது மக்களுக்கு எதிராக, ராணுவம் களம் இறக்கப் பட்டது. சுட்டுத் தள்ளுமாறு கட்டளை. ஆனால், இராணுவத்தினர் பொது மக்களைச் சுட மறுத்தனர். எங்கள் மக்களை நாங்களே சுட்டுக் கொல்வதா. முடியாது என்று மறுத்து விட்டனர். அப்புறம் என்ன. கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி கலகலத்துப் போனது. கார்ப்பசேவ் விடுவிக்கப் பட்டார்.

சோவியத் ரஷ்யா உடைந்து போனது

புரட்சியைத் தூண்டிவிட்ட எட்டு முன்னணித் தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப் பட்டன. அவர்களில் அறுவர் கைது செய்யப் பட்டனர். இருவர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமரையும் அமைச்சர்களையும் கார்ப்பசேவ் நியமித்தார். இருந்தாலும், போகப் போக கார்ப்பசேவிற்கு கம்யூனிஸ்டு உயர்மட்டக் குழுவின் ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் கார்ப்பசேவின் தலைமைத்துவம் பலகீனம் அடைந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், யுக்ரெயின் ஆகிய ஐந்து மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இங்கே யுக்ரெயின் இருப்பதைக் கவனியுங்கள். சோவியத் யூனியன் மறைந்து விட்டது என்றும் பிரகடனப் படுத்தினார்கள். இப்படித்தான் சோவியத் ரஷ்யா உடைந்து போனது.

பிரிந்து போன மாநிலங்கள் தங்களைக் காமன்வெல்த் கூட்டமைப்பு என்று அழைத்துக் கொண்டன. அதற்கு போரிஸ் யெல்ட்சின் தலைமை தாங்கினார். கார்ப்பசேவ் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இப்படித்தான் கார்ப்பசேவ் என்கிற ஒரு நல்ல மனிதர் பதவியில் இருந்து தூக்கி வீசப் பட்டார்.

சோவியத் யூனியனுக்குச் சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் சில ஆயுதக் கிடங்குகள் யுக்ரெயினிலும் இருக்கின்றன. 
கார்ப்பசேவ் ரஷ்யாவின் காமராசர்

மிக்காயில் கார்ப்பசேவ், ரஷ்யாவின் தொலைதூர பிரிவோல்னயா என்கிற கிராமத்தில், 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர், 21-ஆம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். படிப்படியாக உயர்ந்து ரஷ்யாவின் அதிபரானார். அவருக்கு இப்போது வயது 83.

மிக்காயில் கார்ப்பசேவுக்கு ஒரே மனைவி. 46 வயதில் 1999-ஆம் ஆண்டு புற்று நோயினால் இறந்து போனார். கார்ப்பசேவ் மறுமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு ஒரே ஒரு மகள். ஈரினா மிக்காயிலோவ்னா.

இப்போது கார்ப்பசேவிற்கு மாதா மாதம் பத்தாயிரம் ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கி வருகிறார்கள். கை சுத்தமான மனிதர். ரஷ்யாவின் காமராசர் என்றுகூட புகழாரம் செய்வார்கள். அவருக்கு ரஷ்ய அரசாங்கம் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 

கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு சைபீரியக் குளிர்ப் பிரதேசத்தில் இன்னொரு வீட்டையும் கொடுத்து இருக்கிறது. அவர் கார்ப்பசேவ் அறநிறுவனம் என்கிற ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதில் அவரும் அவருடைய மகளும் அறப் பணிகளைச் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment