20 செப்டம்பர் 2017

எம்.எஸ்.சுப்புலட்சுமி

இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டறக் கலந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணங்கள் வழி ஆலயங்களைத் தரிசிக்க வைத்தவர். 


காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன் எம்.எஸ். அவர்களிடம் இருந்தது. அத்தகைய பெருமைமிக்க இசை அரசிக்கு இன்றோடு (செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு ஆகும்.

சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராக மதுரையில் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் அவர்களிடம் இந்துஸ்தானியையும் கற்றுக் கொண்வர். தன் 17-வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தவர்.

‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அந்த வகையில் பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் திரைப் படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று.


திரைப் படங்களில் ஆயிரம் பேர் ஆயிரம் பாடி இருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல். சங்கீத சாம்ராஜ்யத்தில் திரையுலகம் பார்த்த ஒரு பொக்கிஷம்.

திரையுலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் சிகரம் யாராலும் தொட முடியாத சிகரமாகவே உள்ளது.

இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள்.

இசையுடன் இறை பணியில் இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்றவர். இன்று தொடங்கும் அவரின் நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழர் உலகம் நினைத்துப் பார்க்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக