23 May 2018

கோபிந்த் சிங் டியோ

மலேசிய நாடாளுமன்றத்தில் கர்ப்பால் சிங் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஜெலுத்தோங் புலி என்று புகழாரம் செய்யப் பட்டவர். மலேசிய அரசியல் வானில் முடிசூடா மன்னராக வாழ்ந்தவர். மலேசிய நீதிமன்ற வாதங்களின் தலைமகனாகத் திகழ்ந்தவர்.


பெருமகனார் கர்ப்பால் சிங் அவர்களுக்கு மூன்று ஆண்மகன்கள். மூத்த மகன் ஜக்டீப் சிங் டியோ. பினாங்கு மாநிலத்தில் டத்தோ கிராமாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இரண்டாவது மகன் கோபிந்த் சிங் டியோ. சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மூன்றாவது மகன் ராம் கர்பால். மகள் சங்கீத் கவுர். இவர்கள் இருவரும் கர்பால் சிங் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கர்பால் சிங்கின் நான்கு பிள்ளைகள் வழக்குரைஞர்களாகும்.  அவருடைய கடைசி மகன் மான் கர்பால் என்பவர் மட்டும் காப்பீட்டுத் துறையில் (actuarial science) ஈடுபட்டுள்ளார். அரசியலும் வழக்காடும் தொழிலும் வேண்டாம் என்று சொல்லி முற்றிலும் மாறுபட்ட துறைக்கு மாரிக் கொண்டார். சரி.


கோபிந்த் சிங் டியோ மலேசிய அரசியல் வானில் சரித்திரம் படைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும். மலேசியாவில் இவர்தான் முதல் சீக்கிய அமைச்சர். நாற்பத்தைந்து வயதான கோபிந்த் சிங் டியோ மலேசியாவின் தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

சென்ற திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இரு இந்தியர்கள் அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த இருவருமே தலைப்பாகை அணிந்து பதவி ஏற்றனர். அதை ஓர் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் ம.இ.கா.வைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் பேரரசர் முன்னால் பதவி ஏற்கும் போது மரியாதைக்காக மலாய் பாரம்பரிய சொங்கோக் அணிந்து பதவி ஏற்பது வழக்கம். 
 

சீக்கியர்களின் வழக்கப்படி சீக்கியத் தலைப்பாகையுடன் கோபிந்த் சிங் டியோ பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரைப் போலவே மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு  எம். குலசேகரன் அவர்களும் தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத காலச்சுவடு.

1957-ஆம் ஆண்டு மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமரானதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த துன் சம்பந்தன் தலைப்பாகை அணிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அதையும் ஒரு வரலாற்று ஆவணமாக பதிவு செய்யலாம்.

கோபிந்த் சிங்கின் தந்தை கர்ப்பால் சிங் பொதுவாகவே தலைப்பாகை அணிவது இல்லை. அதே சமயத்தில் கர்ப்பால் சிங் பேரரசரின் முன்னால் விருதுகள் எதையும் வாங்கவில்லை. அல்லது ஓர் அமைச்சர் பதவியை ஏற்கும் நிலைமையும் அவருக்கு ஏற்பட்டவில்லை. 
 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு காலத்தில் மலேசியாவில் ஆட்சி மாறும். தன் மகன் ஓர் அமைச்சர் ஆவார் என்று கர்ப்பால் சிங் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். ஆனாலும் தந்தையின் அடிச்சுவட்டில் காலடி வைத்த கோபிந்த் சிங் டியோ இன்று பக்காத்தான் கூட்டணி சார்பில் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். வாழ்த்துகிறோம்.

இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஸ் இன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற கோபிந்த் சிங் டியோ 1966-ஆம் ஆண்டு மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார். பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் (பாரிசான்) கட்சியைச் சேர்ந்த லாவ் யெங் பெங் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கோபிந்த் சிங்கிற்கு 35,079 வாக்குகள் கிடைத்தன. லாவ் யெங் பெங்கிற்கு 15,107 வாக்குகள். வாக்குப் பெரும்பான்மை 19,972.

2013-ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே பூச்சோங் தொகுதியில் மீண்டும் நிறுத்தப் பட்டார். அவரை எதிர்த்து கெராக்கானைச் சேர்ந்த கோகிலன் பிள்ளை நின்றார். 
 

இந்தத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோவிற்கு 62,938 வாக்குகள் கிடைத்தன. கோகிலன் பிள்ளைக்கு 30,136 வாக்குகள். 32,802 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

கடந்த 2018-ஆம் தேர்தலில் அதே பூச்சொங் தொகுதியில் மும்முனைப் போட்டி. ஜ.செ.க.; கெராக்கான்; பாஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் களம் இறங்கின.

பலரும் எதிர்பார்த்தது போல ஜ.செ.க. (பாக்காத்தான்) வெற்றி பெற்றது. கோபிந்த் சிங் டியோவிற்கு 60,429 வாக்குகள். கெராக்கானைச் சேர்ந்த ஆங் சின் தாட் என்பவருக்கு 12,794 வாகுகள். பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் ரோசரிசான் முகமட் ரோஸ்லான் என்பவருக்கு 10,255 வாக்குகள். 47,635 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

2009 மார்ச் 16-ஆம் தேதி, கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் இருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப் பட்டார். பிரதமர் நஜீப்பிற்கும் மொங்கோலிய மாடல் அழகி அல்தாதூயா கொலைக்கும் தொடர்பு உள்ளது. நஜீப் ஒரு ‘கொலைகாரர்’ என்று நாடாளுமன்றத்திலேயே நஜீப்பின் மீது குற்றம் சாட்டினார். அப்போது நஜீப் நாட்டின் துணைப் பிரதமராக இருந்தார்.

நஜீப்பை அவமதித்துப் பேசியதால் கோபிந்த் சிங் டியோவிற்கு அந்த 12 மாத இடைநீக்கம். அத்துடன் அவருக்கு ஓர் ஆண்டு ஊதியமும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் பின்னர் வழக்குப் போட்டு அவர் அந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது வேறு கதை.
 

கோபிந்த் சிங் டியோ ஒரு வழக்குரைஞராக இருப்பதால் அவர் பணிபுரியும் கர்ப்பால் சிங் நிறுவனத்திடம் இருந்தும் மாதா மாதம் ஊதியம் கிடைக்கிறது. அந்த ஊதியத்தில் ஒரு மாதம் 5000 ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் வரை பூச்சோங் தொகுதி மக்களுக்காகச் செலவு செய்து வருகிறார்.

ஒரே நாளில் பல திருமணங்கள் வரும். ஒவ்வொரு திருமணச் சடங்கிற்கும் போக வேண்டும். ஏதாவது ஓர் அன்பளிப்புச் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் பற்றவே பற்றாது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மான்யம் கிடைப்பது இல்லை. தெரிந்த விசயம் தானே.

பூச்சோங் தொகுதியில் இரு சேவை மையங்களை நடத்தி வருகிறார். அதற்கான செலவுகளை அவரே சொந்தமாகக் கவனித்துக் கொள்கிறார். பாரிசான் அரசாங்கம் மான்யம் எதுவும் கொடுப்பது இல்லை.

ஆனால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காதான் ஆட்சி செய்வதால் ஓரளவுக்கு மான்யம் கிடைத்து வருகிறது என்று கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். இனிமேல் பிரச்சினை இல்லை. மத்திய அரசாங்கத்தைப் பக்காத்தான் கைப்பற்றி விட்டதால் மான்யங்கள் சலனம் இல்லாமல் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாத ஊதியமாக 12,500 ரிம கிடைக்கிறது. அதாவது ஓர் ஆண்டிற்கு 150,000. இதில் ஒரு இலட்சம் வெள்ளி பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்று விடுகிறது. மீதம் உள்ள 50,000 சேவை நிலையங்களுக்குப் பயன்படுகிறது என்று கோபிந்த் சிங் டியோ சொல்கிறார்.

கெடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்ற வழக்குகளில் கோபிந்த் சிங் டியோ தான் பிரதான வழக்குரைஞராகச் செயலாற்றி வந்தார். இவரின் அரசியல் வாழ்க்கையிலும் முன்னைய அரசாங்கத்தினால் பற்பல தடைகள்; பற்பல முட்டுக்கட்டைகள். இவர் சரவாக் மாநிலத்திற்குப் போகக் கூடாது என்று ஒரு தடையையே போட்டு வைத்து இருந்தார்கள். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மறுநாளே அந்தத் தடையை அகற்றி விட்டார்கள்.
 

அது மட்டும் அல்ல. அவருடைய வீட்டில் கற்களை விட்டு வீசி சேதப் படுத்தி இருக்கிறார்கள். அவருடைய காரைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய மனைவியைக் கொச்சை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். அவ்வளவு வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்.

அந்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் அன்புப் பரிசாக இப்போது அமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. பொறுமைசாலிகளுக்குப் பெருமை தானாக வந்து சேரும் என்பதற்கு கோபிந்த் சிங் டியோ நல்ல ஒரு சான்று.

கோபிந்த் சிங் டியோ அமைச்சர் பதவி ஏற்ற முதல் நாளே மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தியைச் சொல்லி இருக்கிறார். இணையத்தின் வேகம் இரு மடங்காகக் கூட்டப்படும். (doubling the country’s internet speed) இப்போதைய இணையச் சேவைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழி வகைகள் காணப்படும். எல்லோருடைய வீட்டிலும் மலிவான இணையச் சேவைகள் இருக்க வேண்டும்.
 

எங்கு எல்லாம் இணைய அலைகள் சரியாக கிடைக்கவில்லையோ அங்கு எல்லாம் முதன்மை பார்வை வைக்கப்படும். கிடைப்பதற்கான வழி வகைகள் உடனடியாகச் செய்யப்படும்.

தந்தை எப்படியோ தனயனும் அப்படியே என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் தந்தையைப் போல நீதிக்கும் நேர்மைக்கும் போராடி வருகிறார். ஜெலுத்தோங் குட்டிப்புலி என்று பெயர் பெற்ற இவர் மலேசிய மனங்களில் ஒரு போராட்டவாதியாக தடம் பதித்து வலம் வருகிறார். வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment