24 May 2018

அழகிய மகள் அல்தான்தூயா

அல்தான்தூயா ஓர் அழகிய மகள். அற்புதமான உயிரோவியம். மங்கோலிய மண்ணின் மாதுளம் மடந்தை. ஆனாலும் மலேசிய அரசியல் வளாகத்தில் மாபெரும் அமளி துமளியை ஏற்படுத்திய பேரிளம்பெண். அரசியல்வாதிகள் சிலரின் தலை எழுத்துகளைச் சொக்கட்டான் காய்களாக மாற்றிப் போட்டவர்.


அதையும் தாண்டிய நிலையில் கோடிக் கோடியான பணத்திற்கு ஆசைப் பட்டவர். கத்தைகளுக்கு நடுவில் மெத்தையைத் தட்டிப் பார்த்தவர். தலையணைக்கு மேலே மர்மஜாலம் காட்டிய மாபெரும் மனிதப் பெட்டகம். அற்ப வயதிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். அதுவே ஒரு பெண் பாவம்.

அவருடைய வாழ்க்கை வரலாறு வருகிறது. பாரபட்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன். எந்த ஓர் அரசியல்வாதியையும் இதில் சம்பந்தப் படுத்திப் புண் படுத்துவது நம்முடைய நோக்கம் அல்ல.

அல்தான்தூயாவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் என்று நம்முடைய புதிய பிரதமர் துன் மகாதீர் சொல்கின்றார். சொன்னது போல செய்யக்கூடிய மனிதர். இங்கே ஒரு பெண்ணின் உயிர் விலை பேசப்பட்டு உள்ளது. அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவுமே அனைத்து நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகள்.அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ் காலன். மங்கோலியா உலான் பத்தூர் நகரில் 1978 மே மாதம் 16-ஆம் தேதி பிறந்தவர்.

குடும்பத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ். இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல் கல்வித் துறை இயக்குநராகவும் மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.

தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக். இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை. பெற்றோர்கள் ரஷ்யாவில் பணி புரிந்தவர்கள். அதனால் அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவின் லெனின்கிரேட் நகரில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்து வந்தார்.

மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.
தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1996-ஆம் ஆண்டில் மாடாய் எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22.

மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (தமிழில்: கறுப்பு ரோஜா) எனும் இசைக் குழுவில் அல்தான்தூயாவின் கணவர் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் குடும்ப உறவில் சலசலப்புகள் கலந்த விரிசல்கள். ஜூன் 1998-இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப் பட்டது.விவாகரத்திற்குப் பின் அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நவநாகரிகச் சமுதாயத்தின் நவீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S.Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனின் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.

அதன் பின்னர் வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.முதல் திருமணத்திற்குப் பின்னர் 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் எனும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் தொடரவில்லை.

வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் சரியாக எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர் தாய்மை அடைந்து இருந்தார். அதனால் 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு மாடலிங் பள்ளியில் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு மாடலிங் துறையில் சான்றிதழைப் பெற்றார்.பாரிஸ் நகரில் இருந்து மங்கோலியா திரும்பியதும் மாடலிங் துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார்.

ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. மாடலிங் துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப் பட்டார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.

பிரபலங்களின் தொடர்புகளினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறையாக 1995-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 2006-ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.2004-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார். 

அந்தக் கட்டத்தில் மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  அந்த அறிமுகம் நட்பாக மாறி கடைசியில் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப் படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் காலக் கட்டம். அப்போது அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும் அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் மிகையான நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.

1961-இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு வயது 52. அல்தான்தூயாவிற்கு வயது 25. ’ஐந்தும் இரண்டும்’ எனும் எண்கள் விளையாடிய விளையாட்டைப் பாருங்கள்.

மலேசியாவின் பிரபலமான வலத் தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில் அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டு உள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார்.அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்தார். மறுத்தும் வருகிறார். நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.

தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டதும் ராஜா பெத்ரா கமாருடின் தன் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் 2002-ஆம் ஆண்டில் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை 1.2 பில்லியன் யூரோ மதிப்பில் (மலேசிய ரிங்கிட்: 4.7 பில்லியன்) பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. ஒரு பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன்கள். அதாவது நூறு கோடி. 

அதில் 114 மில்லியன் யூரோ அதாவது (மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன்) முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது. அதாவது கமிஷன்.அர்மாரிஸ் நிறுவனம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம் ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் எனும் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது.

அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று இருக்கிறார்.

2006 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் கூடவே இருவர் வந்தனர். ஒருவர் நமீரா கெரில்மா, வயது 29 (Namiraa Gerelmaa); இன்னொருவர் உரிந்தூயா கால் ஒச்சிர், வயது 29 (Urintuya Gal-Ochir).

இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார். ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும். கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் அவர்கள் தங்கினர். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டனர்.

ரசாக் பகிந்தாவின் அலுவலகம் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் சாலையில் இருந்தது. அவருடைய அந்த அலுவலகத்திற்கு மூவரும் சில முறை சென்று இருக்கின்றனர். ஆனாலும் ரசாக் பகிந்தாவைப் பார்க்க முடியவில்லை. அவர்களைப் பார்ப்பதை ரசாக் பகிந்தா தவிர்த்து வந்தார்.

2006 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி இரவு 7.20-க்கு அல்தான்தூயா, நமீரா, உரிந்தூயா ஆகிய மூவரும் ரசாக் பகிந்தாவின் இருப்பிடமான டாமன்சாரா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதிக்கு வாடகைக் காரில் சென்றனர். 

அப்போது ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு பி. பாலசுப்பிரமணியம் எனும் தனியார் துப்பறிவாளர் பாதுகாவலராக இருந்தார்.

அவரிடம் ரசாக் பகிந்தாவைப் பற்றி விசாரித்தார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்று பாலசுப்பிரமணியம் சொன்னார். அவருக்குத் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.மலாயா ஓட்டலுக்கு திரும்பியதும் நமீரா, உரிந்தூயா ஆகிய இருவரையும் இறக்கிவிட்டு அல்தான்தூயா மட்டும் தனியாக அதே வாடகைக் காரில் ரசாக் பகிந்தாவின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

அதுதான் அல்தான்தூயாவை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அதன் பின்னர் அல்தான்தூயா காணாமல் போய் விட்டார். அல்தான்தூயா காணவில்லை என்று காவல் துறையில் புகார் செய்யப் பட்டது. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2006 நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாம், புஞ்சாக் நியாகா நீர்த் தேக்கத்திற்கு அருகில் மனித எலும்புகளின் சிதறல்களும் மனிதத் தசைகளின் சிதைவுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

மரபணுச் சோதனை செய்யப்பட்டது. (DNA analysis) இறுதியில் அந்தச் சிதறல்களும் சிதைவுகளும் அல்தான்தூயாவிற்கு உடையவை என்று உறுதி செய்யப்பட்டது.மலேசியக் காவல் துறையைச் சேர்ந்த மூவர், அல்தான்தூயா கொலைத் தொடர்பாகக் கைது செய்யப் பட்டனர். அவர்களில் தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரி (30), கார்ப்பரல் சிருல் அசார் உமார் (35) ஆகிய இருவரும் மலேசிய காவல் துறையின் மேல்தட்டுச் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் மெய்க்காவலர்கள் ஆகும். கொலை நிகழ்ச்சியின் போது நஜீப் துன் ரசாக், மலேசியாவின் தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார். அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் பகிந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

2007 ஜூன் 4ஆம் தேதி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் அல்தான்தூயா கொலை வழக்கு தொடங்கியது. 2008 அக்டோபர் 31-ஆம் தேதி, கொலைவழக்கில் இருந்து ரசாக் பகிந்தா விடுதலை செய்யப் பட்டார்.தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரியும், கார்ப்பரல் சிருல் அசார் உமாரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப் பட்டனர். ரசாக் பகிந்தாவின் மீது குற்றம் சாட்டப் படுவதற்கு போதுமான சான்றுகள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் இதுவரையிலும் முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

2009 ஏப்ரல் 9-ஆம் தேதி நீதிமன்றம் அல்தான்தூயா கொலைவழக்கின் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் தன்னை விடுதலை செய்யும்படி சிருல் அசார் உமார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஓர் உயர்மட்டக் கொலைவழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் சொன்னார்.283 பக்கங்களில் எழுதப்பட்ட தீர்ப்பின கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளியின் உறவினர்கள் கதறி அழுதனர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேசுவதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் எங்ஜார்கால் தெட்ஸ்கி என்பவரும் இருந்தார். தீர்ப்பு வழங்கப்படும் போது, அல்தான்தூயாவின் தந்தையார் மங்கோலியாவில் இருந்தார்.  அவருக்கு நீதிமன்றத் தீர்ப்பு, குறும் செய்திகள் மூலமாகத் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கொலைவழக்கில் பல சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

மலேசிய நீதிமன்ற வரலாற்றில், இந்த அல்தான்தூயா கொலைவழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்ற வழக்கு எனும் சாதனையைப் பதித்தது. 165 நாட்கள் நடைபெற்ற இந்த கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர்.433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகக் காட்சி படுத்தப்பட்டன. முதல் குற்றவாளி அசீலா ஹாட்ரி இப்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருக்கிறார்.

இரண்டாம் குற்றவாளி சிருல் அசார் உமார் ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்று விட்டார். அல்தாதூயா வழக்கு மறுவிசாரணைக்கு வந்தால் உண்மை நிலவரத்தைச் சொல்லத் தயார் என்கிறார்.

ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு தனியார் துப்பறியும் பாதுகாவலராக இருந்த பி. பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 2013 மார்ச் 15ஆம் தேதி, சிலாங்கூர், ரவாங் நகரில் இருக்கும் அவருடைய இல்லத்தில், மாரடைப்பால் காலமானார்.

அதே போல நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில், ஊழல் நடந்துள்ளது என்று பிரான்சில் வழக்குத் தொடர்ந்த பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் மர்மமான முறையில் இறந்து போனார். தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எல்லாமே மர்மம். அல்தான்தூயா கொலைவழக்கில், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்று பாலசுப்பிரமணியம் 2008 ஜூலை மாதம் 3ஆம் தேதி சத்தியப் பிரமாணம் செய்தார்.

அந்தச் சத்தியப் பிரமாணம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் அந்தச் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார். இரண்டாவது சத்தியப் பிரமாணம் செய்தார்.

அதை மேலிடத்து ஆணையின் பேரில் செய்ததாகச் சொன்னார். அதைப்பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் அவரும் இறந்து போனார்.

No comments:

Post a Comment