26 May 2018

கவிக்கோ அப்துல் ரகுமான்

மனிதம் பாதி மகத்துவம் பாதி என்று சொல்வார்கள். ஆனால் அந்த இரண்டுமே கலந்து செய்த ஒரு கலவை தான் கவிக்கோ. வைகை நதிக் கரையில் மலர்ந்து தமிழ்ப் பொய்கையில் அலர்ந்து தமிழ் மொழியின் ஊற்றில் ஊறித் திளைத்த ஓர் அனிச்ச மலர். 
 

அவர் மனிதத்தில் மகத்துவம் பார்த்த ஒரு மாபெரும் கவிச் சான்றோன்.. அந்த கவிக் கடலை உலகத் தமிழர்கள் இழந்து விட்டார்கள். அவர் இப்போது நம்மிடம் இல்லை.

தமிழர்களைப் பார்த்து அவர் ஒருமுறை வேதனைப்பட்டு எழுதினார். என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. அவர் சொன்னார்

உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று –
இன்றோ அதிகாரக் கால்களில் சிலம்பாகிக் கிடக்கிறாயே

எப்பேர்ப்பட்ட சொல்லாடல்.2017 ஜூன் மாதம் 2-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவருடைய வீட்டில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நினைவு இழந்த நிலையில் அமரர் ஆனார். தமிழ் உலகம் ஓர் அரிய அழகிய அருமையான படைப்பாளனை இழந்து விட்டது.

அதற்கு முன்னர் ஈராண்டுகளுக்கு முன்னால் 2015 ஜனவரி 24-ஆம் தேதி கவிக்கோ அவர்களை உலகத் தமிழ்க் கவிஞர்கள் பெருவிழாவில் சந்தித்தேன். ஈப்போவில் நடைபெற்ற நிகழ்ச்சி. அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.

அந்த நினைவுகள் மனதிற்குள் இன்றும் பசுமை படர்ந்து பாசுரம் பாடுகின்றன. பட்டம் பதவி புகழ் அனைத்திற்கும் அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்தார். பேச்சில் அழுத்தமான தாக்கங்கள். சொற்களில் தமிழின் வேர்த் தன்மைகள். சொல் உச்சரிப்பில் தமிழின் தொன்மைகள். பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.என்னைப் புகழ்ந்து ஒரு கவிதையையும் எழுதிக் கொடுத்தார். மறக்க முடியவில்லை. மாபெரும் கவிதை அரசனின் கவிநயங்கள் என் உள்ளக் கிடக்கையில் இன்றும் அமிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றன.

வார்த்தைகளை ஒடுக்கி மடக்கி எழுதினால் அது கவிதை என்பார்கள். ஆனால் கவிக்கோ அப்படி அல்ல. ஒரு வாசகனின் மனதைச் சொடுக்கி முடுக்கி எழுதத் தெரிந்த வசீகரக் கலைஞன்.

வயதைப் பார்க்காதீர்கள். அந்த வயதிற்குப் பின்னால் நீண்டு நெளிந்து நளினம் காட்டும் ஓர் அரிய தமிழ் ஞானத்தின் அசைவுகளை அசை போட்டுப் பாருங்கள். அது போதும்.

இவருடைய தந்தையும் தாத்தாவும் சிறந்த உருது மொழிக் கவிஞர்கள். கல்லூரியில் கவிக்கோ தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்றார். இலக்கண, இலக்கியங்களை கற்றார். கவிதைகள் எழுதத் தொடங்கினார்.தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்ற இவர் சமஸ்கிருதமும் பயின்றவர்.

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அழகிய கவிஞர். ஓர் அருமையான தமிழ்ப் பேராசிரியர். கவிக்கோ என்பது கவியின் கோமகன். ஓர் அற்புதமான கவி மகன்.

மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2-ஆம் தேதி மஹி – ஜைனத் பேகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாகவே இனம் காட்டிக் கொண்டார்.

அந்தத் தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி ஒரு புதுமையான பதிவு முறையை அமைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் படைப்பதிலும் சரி; பரப்பியதிலும் சரி; தனித்துவம் பெற்றவர். தமிழ்க் கவிதை உலகில் மிக மிக முக்கியமானவர்.

சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவருடைய தனிப் பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி போன்ற இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர். ஆலாபனை எனும் கவிதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தம் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அந்தக் கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழ் அறிஞர்களிடம் பயின்றார்.சென்னை தரமணியில் அமைந்து உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றியவர் ச. வே. சுப்பிரமணியம். அவரை வழிகாட்டியாகக் கொண்டார். புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சொல்லி இருக்கிறேன்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் ஒரு வாய்ப்பு கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.

1991-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். 20 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

கவிக்கோ பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. இருந்தாலும் தமிழுலகம் அவரின் வாழ்ந்த நாட்களை பிறந்த நாட்களாகக் கொண்டாடுகின்றது. என்றைக்குமே அவரை மறக்காது.

‘கல்வி’ என்ற சொல்லின் வேர் ‘கல்’. ஆக ‘கல்’ என்றால் தோண்டுதல் என்று பொருள். அதாவது அறிவு என்பது மறைந்து இருக்கும் புதையல். அதைத் தோண்டி எடுப்பது கல்வி.

மண்ணுக்குள் மறைந்து இருக்கும் நீரைப் போல அறிவு மனிதனுக்குள் மறைந்து இருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்று எடுத்துப் பெருகுவது போல் கற்கக் கற்க அறிவு ஊற்று எடுத்துப் பெருகும் என்கிறார் கவிக்கோ.

கவிதைக்குப் பொய்யழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வகையில் பொய்மைக்கு அழகு சேர்க்கிறார். பொய்க்கே ஓர் அழகு. பாரட்டலாம். ஆனால் வைரமுத்து சொல்வது பொய் என்று நான் நினைக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். ஏன் தெரியுங்களா.

நான் பார்த்த வரையில் படித்த வரையில் கவிக்கோவின் கவிதைகள் மட்டும் ஏன் உண்மைகளையே பேச வேண்டும். கவிஞர்கள் எவரும் பொய்யாக உவமானம் காட்டவில்லை. ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவு தான்.

கவிதைக்குப் பொய்யழகு என்று வைரமுத்து சொன்னாலும் கவிக்கோ இல்லை என்று சொல்கிறார். கவிதைக்கு உண்மை தான் அழகு என்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆலாபனை கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை வருகிறது. கொடுக்கிறேன் எனும் தலைப்பில் அந்தக் கவிதை.

அதற்கு முன் ஒரு செய்தி. இந்தத் கவிதைத் தொகுப்பு தான் கவிக்கோவிற்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது.

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பது எல்லாம்
உனக்குக் கொடுக்கப் பட்டது அல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டது அல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது

நீ ஒரு கருவியே

கலைஞர் கருணாநிதி ஒரு முறை கவிக்கோவைப் பற்றி இப்படிச் சொன்னார். கவிக்கோ ரகுமானோ கன்னித் தமிழுக்குக் கிடைத்த வெகுமானம். அவரின் நகைச்சுவையோ நமக்குக் கிடைத்த பெருமானம். அதற்கு ஏற்றால் போல ஒரு நிகழ்ச்சி.

இயக்குனர் ஒருவர் கவிஞர் வாலியிடம் கன்னம் எனும் சொல்லுக்கு ஓர் எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். கன்னம் என்பதே எளிமையானது தான். அதற்கு ஏன் இன்னும் எளிமை. வாலி சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை.

என்ன செய்வது என்று புரியாமல் கவிக்கோவிடம் போய் கவிஞர் வாலி சொல்லி இருக்கிறார். அதற்கு கவிக்கோ சிரித்துக் கொண்டே சொன்னாராம். கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியது தானே. இது எப்படி இருக்கு.

சீதையின் அழகைக் கம்பன் பக்கம் பக்கமாக உருகி வடித்தான். கம்ப ராமாயணத்தில் படித்து இருப்பீர்கள். ஆனால் கவிக்கோ இரண்டே வரிகளில் சொல்லி முடிக்கிறார். அதுவும் இராவணன் சொல்வதாக;

இருகண் படைத்தவனே இவள் அழகில் எரிந்திடுவான்
இருபது கண் படைத்த நான் என் செய்வேன்

அம்புட்டுத்தான். வேறு பேச்சே இல்லை. எப்படிப்பட்ட சிந்தனை. பக்கவாட்டுச் சிந்தனை என்று சொல்வார்களே. அது இது தான் போல இருக்கிறது. அப்படித்தான் எனக்கும் தெரிகிறது.

தமிழகத்தின் இன்றைய நிலையை இப்படி நாசுக்காக கவிக்கோ சொல்கிறார்.

கங்கை கொண்டவன் தான் இன்று காவிரியையும் இழந்து விட்டு கையைப் பிசைந்து நிற்கிறான்.

பாரதியாரைப் பற்றி சொல்லும் போது பாவம் பாரதி...

தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்ற பாரதியே
வந்து பார் இப்போது தமிழ் தெருவில் தான் நிற்கிறது

என்கிறார்.

அடுத்து நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. கவிக்கோ சொல்கிறார்.

இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள் அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் தான் நடிக்கிறார்கள்

கூத்தாடிகளின் உண்மைகளைக் கூத்து ஆடாமலேயே போட்டு உடைக்கிறார்.

சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப் பட்டது. இயற்றியவர் இளங்கோ அடிகள்.

அந்தச் சிலப்பதிகாரத்தை இரண்டே இரண்டு தம்மாந்துண்டு வரிகளில் எழுதியவர் கவிக்கோ.

பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்; வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை

என்று சொல்கிறார். என்னே லாவண்யம்.

கவிக்கோ அன்பரே தமிழ் இலக்கியத்தின் வறுமைக் காலத்தில் உங்களின் மௌன முகாரியைத் துறந்தீர்கள். அப்போது தான் எங்களின் மூத்த மொழிக்கும் மோகனம் பிறந்தது.

அம்மிக் கொத்த மறுத்த சிற்பியே. நீ விட்டுச் சென்ற அழகான கவிச் சிற்பங்கள் எங்களுடன் எப்போதும் கதைகள் பேசும். இன்றும் பேசும். இனி என்றும் பேசும். சொர்க்கத்தின் வாசலில் உங்களின் கவிப் புன்னகையைக் காண்கின்றோம். வாழ்த்துகிறோம் கவிப்பெருமானே.

No comments:

Post a Comment