25 May 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்தின் தென் கோடித் துறைமுக நகரம் தூத்துக்குடி. வரலாற்றுச் சுவடுகளில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடம். கங்கைக் கொண்டான் கல்வெட்டுக்களில் 'தூற்றிக்குடி' என்று சொல்லப் படுகிறது.
 

நீர் நிறைந்த நிலத்தைச் சார்ந்த ஒரு துறைமுகத்தில் தோன்றிய ஊர் என்பதால் அதற்குத் தூத்துக்குடி என்று பெயர் வந்தது.

இந்தத் தூத்துக்குடியில் தான் இப்போது அனல் கக்கும் அசுரத் தனங்கள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன. ஒரு சில தினங்களுக்கு முன்னால் அப்பாவி மக்கள் 11 பேர் அட்டகாசமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஓர் இளம்பெண் உள்பட பத்து பேர் பலி.

ஸ்டெர்லைட் ஆலை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries)  தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை. வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
 

இங்கு செப்புக் கம்பி; கந்தக அமிலம்; பாஸ்பரிக் அமிலம் போன்றவை உற்பத்தி செய்யப் படுகின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது.

உயிர்த் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் அப்படி போராட வேண்டும். நிச்சயம் காரணம் இருக்கிறது. சரி. விசயத்திற்கு வருவோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகப் பல போராட்டங்களை அந்தப் பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது. உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் போராட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.
 

1990-களில் மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை கட்டப் படுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. 1995-ஆம் ஆண்டு தமிழகத்தின் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை வந்து சேர்ந்தது. ஒரு சின்ன விளக்கம்.

1992-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத் தொழில் வளர்ச்சி நிறுவனம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முதலில் கடலோர ரத்னகிரி கிராமத்தில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.

ஆனால் அங்கே தொழிற்சாலை கட்டக் கூடாது என்று உள்ளூர் மக்கள் போராட்டம் செய்தனர். அதன் விளைவாக மஹாராஷ்டிரா மாநில அரசு ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது.

அந்தக் குழுவினர் வழங்கிய பரிந்துரையின்படி 1993-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டன. அதற்கு பின்னர் தான் அந்த ஸ்டெர்லைட் நிறுவனம் கொல்லைப் புறமாகத் தமிழகத்திற்குப் பொடி நடையாக வந்து சேர்ந்தது.
 

மேலே முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே வாங்க வாங்க என்று சொல்லி வெற்றிலை பாக்கு வைத்து வீர வரவேற்பு கொடுத்தார்கள்.

அப்போதைய தமிழக அரசு ஆலையை அமைக்க அனுமதி அளித்தது மட்டும் அல்ல அவசர அவசரமாகச் சுற்றுச் சூழல் அனுமதிச் சான்றிதழையும் வழங்கியது.

மேசைக்கு அடியில் பணப்பட்டுவாடா என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும் தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா. சொல்லுங்கள். மலேசியாவில் நடந்தது மாதிரி தேன்கூட்டையே கபளீகரம் செய்யவில்லையே.

அப்புறம் என்ன. ஆலை கட்டுவதற்கு அவசரம் அவசரமாகக் கையொப்பங்கள். 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத் தடையில்லா சான்றிதழையும் வழங்கியது.
 

அப்போது தமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதா இருந்தார். அதையும் சொல்லி விடுகிறேன்.

அப்புறம் அதன் பிறகு அங்கு என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எவருக்கும் அக்கறை இல்லாமல் போய் விட்டது. அரசாங்கம் அடியோடு மறந்து விட்டது. மறக்கவில்லை. மறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

`வேதாந்தா` உலகின் மிகப் பெரிய உலோகச் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1972-ஆம் ஆண்டு தன் தந்தையுடன் அலுமினியத் தொழிலில் ஈடுப்பட்டார்.

அதன் பின்னர் அனில் அகர்வால் மும்பைக்குச் சென்று அங்கு வேதாந்தா எனும் நிறுவனத்தை தொடங்கினார்.
 

வேதாந்தாவின் துணை நிறுவனம் தான் இந்த ஸ்டெர்லைட். தூத்துக்குடியில் உள்ள ஆலை. ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017-ஆம் நிதியாண்டில் மட்டும் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அபரிதமான வளர்ச்சி.

வேதாந்தா நிறுவனத்திற்குப் பல நாடுகளில் தாமிரத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா பாப்புவா நியூகினியிலும் சுரங்கங்கள் உள்ளன.

அங்கே இருந்து கப்பல்கள் வழியாகக் கொண்டு வரப்படும் தாமிரத் தாதுக்களில் இருந்து தாமிரத் தகடுகளை உருவாக்குவது தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முக்கியத் தொழிலாகும்.

ஆனால் அந்த மாதிரி தாமிரத் தாதுக்களைத் தாமிரத் தகடுகளாக மாற்றும் போது தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்ற ரசாயனப் பொருட்களும் கிடைக்கும். அந்த ரசாயனப் பொருட்களின் மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்பது தான் வேதாந்தா நிறுவனத்தின் கணக்கு.

இந்த ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததும் அந்த ஆலையில் இருந்து வெளியான நச்சுக் காற்றால் உள்ளூர் மக்கள் நேரடியாகப் பாதிக்கப் பட்டனர். அது உண்மையிலும் உண்மை.
 
அதன் விளைவாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினார்கள். ஏறக்குறைய 23 ஆண்டுகளாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களும் அமைதிப் போராட்டங்களும் அங்கே நடந்து உள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாகக் குற்றம் சாட்டப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல தரப்புகளில் இருந்தும் வழக்குகள் பதியப் பட்டன.

1997-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை அரசு ஒப்புதல்களைப் புதுப்பிக்காமல் ஆலையை நடத்தியது ஒரு பெரிய குற்றம் என்று அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை மூடச் சொல்லியது. இருந்தாலும் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வெற்றியும் பெற்றது.

நூறு கோடி அபராதம் கட்டிய பின்னர் அந்த நிறுவனம் தொடர்ந்து செயல் படலாம் என அனுமதி வழங்கப் பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் அமிலங்களை முறையாகக் கையாளா விட்டால் அந்த அமிலங்கள் சுற்றுச் சூழலுக்கும்; பொது மக்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கும்.

ஆனாலும் எந்த ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பும் இல்லாமல்; பொறுப்பும் இல்லாமல் அந்த நிறுவனம் தன் இஷ்டத்திற்குச் செயல்பட்டு வந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஏன் இப்போதைக்கு இந்த திடீர் போராட்டம்? அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அங்கு உள்ள மக்கள் அனைத்து வழிகளிலும் போராடி வருகிறார்கள்.
 

கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டம் அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்து நடந்தது தான். அதாவது அந்தத் தொழிற்சாலையை மேலும் பெரிதாகக் கட்ட திட்டம் போட்டு இருந்தார்கள். இரண்டாவது ஆலையைக் கட்டுவதற்கு பிளேன் போட்டு செய்து கொண்டு இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். அதுவே இப்போதைக்கு மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக ஓர் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிற்சாலையை இழுத்துக் கட்டுவது என அந்த நிறுவனம் முடிவு செய்தது.

அது நிச்சயமாக மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆக இரண்டாவது ஆலை கட்டும் பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட போது தான் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினார்கள்.
 

ஏற்கனவே செயல்பட்ட ஆலையில் 4 லட்சம் டன் தாமிரத் தகடுகள் உற்பத்தி செய்யப் பட்டன. புதிய ஆலையில் அதைவிட நான்கு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப் பட்டது. அதுவே பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அதுதான் கிராம மக்கள் கொந்தளித்துப் போனதற்கு காரணம். அதனால் நடந்த போராட்டங்களின் போது தான் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் இழந்து உள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கும வகையில் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை அமைந்து விட்டது. எதிர்கால சந்ததியினரின் நிலைமை என்னவாகும் என்பதும் அவர்களைச் சுற்றி வரும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
 

அந்தக் கேள்விக்கு விடை காணும் வகையில் தான் தங்கள் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராட்டத்தில் இறங்கினார்கள். அநியாயமாகப் பலம் உயிர்களைப் பறி கொடுத்தும் இருக்கிறார்கள்.

இந்த ஸ்டெர்லெட் பிரச்சினையில் இருந்து தூத்துக்குடி மக்கள் விடுபட வேண்டும். பழைய சுமுகமான வாழ்க்கை நிலைக்கு திரும்பி வர வேண்டும் என மலேசியத் தமிழர்களாகிய நாம் வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment