07 டிசம்பர் 2018

ஐசெர்ட் என்றால் என்ன

ஐசெர்ட் (ICERD) என்றால் *International Convention on the Elimination of All Forms of Racial Discrimination*

தமிழில் *அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம்*.


1965 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ஐ.நா. சபை முன்மொழிந்த ஒரு திட்டம். 1969 ஜனவரி 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

மனித இனப் பாகுபாடுகளைத் தவிர்ப்பது; அனைத்து மனித இனங்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது; இனங்களுக்கு இடையே வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகளுக்குத் தடை செய்வது; மனித இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நட்புறவை வளர்ப்பது; இவற்றையும் தாண்டிய நிலையில்...

இனம், மொழி, கலாசாரம், நிறம் என்று மனித இனத்தைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. மனிதர்களில் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை; தாழ்ந்தவர்கள் இல்லை. மனிதர்கள் அனைவரும் மனிதர்களே.

மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மதிக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவற்றுக்கான ஒரு முன்னோடித் திட்டமே ஐ.நா.வின் ஐசெர்ட் திட்டம் ஆகும்.

ஒரே சொல்லில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் அனைத்துலகத் திட்டம் என்று சொல்லலாம்.

சான்று: https://www.ohchr.org/EN/ProfessionalInterest/Pages/CERD.aspx

உலகில் 197 நாடுகள் உள்ளன. ஐ.நா. சபை அங்கீகரித்த நாடுகள். அவற்றுள் 179 நாடுகள் இந்த ஐசெர்ட்டில் கையொப்பம் வைத்து உறுதி படுத்தி உள்ளன. 14 நாடுகள் கையொப்பம் வைக்கவில்லை. அவற்றுள் மலேசியாவும் ஒரு நாடு.

மியன்மார், தென் சூடான், வட கொரியா, வானுவாத்து (Vanuatu), கூக் தீவுகள் (Cook Islands), மார்ஷல் தீவு (Marshall Islands), கிரிபாத்தி (Kiribati), சமோவா (Samoa), நியூ (Niue), துவாலு (Tuvalu) ஆகிய நாடுகள் இன்னும் கையொப்பம் வைக்கவில்லை.

அங்கோலா, பூத்தான், நவுரு (Nauru), பாலாவ் (Palau) ஆகிய நாடுகள் கையொப்பம் வைத்து விட்டாலும்; அந்தக் கையொப்பங்களை உறுதி படுத்தாமல் உள்ளன.

1960-ஆம் ஆண்டுகளில் இனப் பாகுபாடு; சமயச் சகியாமை பெருகி வந்தன. அவற்றைச் சரி செய்யவே ஐசெர்ட் ஒப்பந்தம் முன்வைக்கப் பட்டது. 1965-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஐ.நா. சபை நாடுகளால் ஒருமித்தமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியா; புருணை ஆகிய இரு நாடுகள் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து இடவில்லை.

அரபு கூட்டமைப்பில் உள்ள 22 அரபு நாடுகளும் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகளும் ஐசெர்ட் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டு உறுதி செய்து விட்டன.

கையொப்பம் வைத்த பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது எனும் கருத்தை முன்வைக்கின்றன. அமெரிக்காவும் சில விதி முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் கைபொப்பம் வைத்து விட்டது.

உலகின் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்துவிட்டாலும் ஒரு சில விதிமுறைகளுக்குக் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

2017 நவம்பர் மாதம் சிங்கப்பூர் கையொப்பம் வைத்தது. இருப்பினும் தன் சொந்த கொள்கைகளை (வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில்) விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறது.

சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்படவில்லை. ஐசெர்ட் பிரச்சினைகளை அனைத்துலக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல இயலாது என்று அந்த நாடுகள் சொல்கின்றன.

பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசாங்கம் டிசம்பர் 8-ஆம் தேதியில் கோலாலம்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாள் டிசம்பர் 9-ஆம் தேதியை ஒரு விடுமுறை நாளாக அறிவித்து உள்ளது.

விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலம்பூர் பேரணியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்;  அத்துடன் கூட்டரசு அரசாங்கம் செய்து உள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக அந்தப் பேரணி நடத்தப் படுவதாகவும் என்று கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப் கூறி இருக்கிறார்.

ஐசெர்ட் பேரணியில் தெளிவற்ற நோக்கமே புலப் படுகிறது. அரசியல் நோக்கமே பிரதானமாகத் தெரிகின்றது. அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும் அதனை எதிர்க்கும் ஒரு சில தரப்பினரின் ஏற்பாடுகள் தேவையற்றவை என்பதே என் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக