22 December 2018

பிரபஞ்சன்


பிரபஞ்சன் (பிறப்பு: ஏப்ரல் 27, 1945 - மறைவு: டிசம்பர் 21, 2018). தமிழ் எழுத்தாளர்; விமர்சகர். இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.

1995-ஆம் ஆண்டு அவரின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. இந்தப் புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப் பட்டது.

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர். தன்  வாழ்க்கையைத் தஞ்சாவூரில் ஓர் ஆசிரியராகத் தொடங்கியவர்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தவர். இவரது முதல் சிறுகதை *என்ன உலகமடா*. பரணி என்ற பத்திரிக்கையில் 1961-இல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதி உள்ளார்.

இவரின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், சுவிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரின் நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் உள்ளது. இவரின் சிறுகதைத் தொகுப்பான *நேற்று மனிதர்கள்* பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாக்கப் பட்டுள்ளது. இவரின் மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அவர் சொல்கிறார். சென்னையில் நான் தங்கி இருக்காத வீதிகளே இல்லை. அதன் எல்லா பேட்டைகளும் எனக்குத் தெரியும். அத்தனை பேட்டைகளும் என்னை அறியும்; நான் அதில் வாழ்ந்த மனிதர்களை அறிவேன்.

பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கையின் 55-வது ஆண்டு விழா சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில் ஓர் இலக்கியத் திருவிழாவாக நடந்தேறியது. பிரபஞ்சனுக்கு தமிழ் இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள், சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து திரட்டிய ரூ.10 இலட்சம் நிதியும் அளிக்கப் பட்டது. நடிகர் சிவகுமார் அந்தத் தொகையை ஒரு தாம்பூலத்தில் ஏந்தி வழங்கினார்.

“பிரபஞ்சன் பணத்தைச் செலவழிக்கிற வேகம் எனக்குத் தெரியும். அந்த வேகத்துக்கு இந்த பத்து இலட்சம் ரூபாய் எம்மாத்திரம். ஒரு மாதமோ... ரெண்டு மாதமோ. எனினும் இந்தப் பணத்தை அவர் தாராளமாகச் செலவு செய்யலாம். இன்னும் அவருக்குப் பணம் திரட்டித்தர நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்கிறார். “பிரபஞ்சன் சென்னைக்கு வந்தததற்குக் காரணம்... இலக்கியத் தாகம் என்று நினைப்போம். அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அதைவிட ஒரு முக்கியக் காரணம் அவர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத்தான் சென்னைக்கு வந்தார். கவிஞர் கங்கைகொண்டான் இயக்கத்தில் ஒரு கதையும் தயாரானது. அந்தக் கதையின் ஹீரோ பிரபஞ்சன். ஆனால் அந்தக் கதை படமாகவே இல்லை. சினிமாவுக்குத் திறமைசாலிகளைவிட வெற்றிகளே முக்கியம். சினிமாவைப் பொறுத்தவரை பிரபஞ்சனுக்கு அது கிடைக்கவே இல்லை’’ என்கிறார்.

பிரபஞ்சனின் ‘ஆண்கள் பெண்கள்’ நாவலில் ஒரு பெண் தேவாலயத்தில் இயேசுவிடம் வேண்டுவாள்... ‘கடவுளே... நான் குளிக்க மறைவாக ஒரு இடம் வேண்டும்’ என்று. அந்த வரி அவரோடு எப்போதும் பயணித்துக் கொண்டே இருந்தது. அந்த வரிதான் அவரைக் கம்யூனிஸ்டு ஆக்கியது. அந்த இயக்கத்துக்குள் அவரைத் தள்ளியது. அந்த ஒரு வரியில் பிரபஞ்சனின் மொத்த வாழ்க்கையும், எழுத்துலகமும் இருக்கிறது

*விருதுகள்*

சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)

பாரதிய பாஷா பரிஷத் விருது

கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி

இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்

சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா

நேற்று மனிதர்கள் - தமிழக அரசின் பரிசு

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை கடுமையாக பாதிப்பு அடைந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்த நிலையில் நேற்று (21.12.2018) காலை 11:30 மணிக்கு காலமானார். பிரபஞ்சனின் மறைவுக்குப் பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகத் தமிழர் இனம் ஒரு தமிழ்ச் சகாப்தத்தை இழந்து விட்டது.

No comments:

Post a Comment