14 பிப்ரவரி 2019

சூரியனில் தங்கம் எரிகிறது


ஒரே ஒரு விநாடி நேரத்தில் சூரியன் 4,000,000 டன்கள் எடை கொண்ட ஹைட்ரோஜன் காற்றை எரிக்கிறது. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் நான்கு மில்லியன் டன்கள் ஹைட்ரோஜன் எனும் நீரகக் காற்று. அதாவது ஒரு விநாடிக்கு நான்கு மில்லியன் டன்கள். இப்படி ஒவ்வொரு விநாடிக்கும் நான்கு மில்லியன் டன்கள் ஹைட்ரோஜன் எரிக்கப் படுகின்றது..

அப்படி என்றால் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு? ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு? ஒரு மாதத்திற்கு எவ்வளவு? ஒரு வருடத்திற்கு எவ்வளவு? சூரியனின் இப்போதைய வயது 600 கோடி ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் எவ்வளவு சக்தி தேவைப்பட்டு இருக்கும். எவ்வளவு ஹைட்ரோஜன் எரிக்கப்பட்டு இருக்கும்.

கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்கு எரிக்கப்படும் சக்தி அதனிடம் உண்டு. ஆக எவ்வளவு எரிசக்தி தேவைப்படும். எங்கே இருந்து இவ்வளவு சக்தி வருகிறது? தலை சுற்றுகிறதா.

சில சமயங்களில் மெகா சீரியல்களைத் தொடர்ந்து மூச்சு விடாமல் பார்த்தாலும் இப்படித்தான் தலைச் சுற்றல் வருமாம். நான் சொல்லவில்லை. ஆப்பிரிக்கா சோமாலியாவில் பேசிக் கொள்கிறார்கள்.

ஆக அது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இந்தச் சூரியனின் கணக்கைப் போடும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சுற்றல் வரலாம். பரவாயில்லை. சமாளித்துக் கொள்ளுங்கள்.

சூரியனின் நட்ட நடுவில் அதன் வெப்ப அளவு ஒரு மில்லியன் செல்சியஸ். நம் வீட்டில் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம் இல்லையா. அது 100 பாகை செல்சியஸ் வெப்ப அளவில் கொதிக்கிறது. அதைப் போல சூரியனின் நடு மையத்தில் ஒரு மில்லியன் செல்சியஸ் வெப்பத்தில் ஹைட்ரோஜன் காற்று கொதிக்கிறது.

அப்படி கொதிக்கும் போது அது ஹீலியம் காற்றாக மாறுகிறது. சூரியனின் நடு மையத்தில் இப்படிக் கொதித்து வெளியாகும் வெப்ப அணுக்கள் சூரியனின் மேல்பகுதிக்கு வந்து சேர ஓர் இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. பாருங்கள்.

வெளியே வந்த ஹைட்ரோஜன் ஒளியாக மாறியதும். அது நம்ப பூமியை எட்டே எட்டு நிமிடங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் உள்ளுக்குள் இருந்து வெளியே வர மட்டும் ஒரு இலட்சம் ஆண்டுகள் பிடிக்கின்றது. அதாவது நடு மையத்தில் இருந்து மேலே வெளியே வருவதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள். புரிகிறதா.

ஆக இப்போது நம்முடைய உடலில் படுகிறதே சூரிய வெளிச்சம் இது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி விட்டது. அது நடுவில் இருந்து மேலே வந்து சேருவதற்கு அவ்வளவு காலம் பிடிக்கிறது.

ஆனால் மேலே வந்ததும் அதாவது மேல்பரப்பை வந்து அடைந்ததும் நம்முடைய பூமிக்கு வந்து சேர ஏறக்குறைய எட்டு நிமிடங்கள் பிடிக்கின்றன. புரியும் என்று நினைக்கிறேன்.

இன்னும் 600 கோடி ஆண்டுகள் எரிவதற்கு சூரியனிடம் போதுமான சக்தி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படி என்றால் சூரியன் எப்பேர்ப் பட்டதாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விவரங்களைக் கணக்குப் போட்டுச் சொன்ன அல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) எனும் அறிவியல் மேதை எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் எலும்புகளைப் பொறுக்கி எடுத்து அந்த எலும்புகள் மனித எலும்புகளா இல்லை மிருகத்தின் எலும்புகளா என்று சுலபத்தில் கண்டுபிடித்து விடுகிறார்கள். எத்தனை வயது இருக்கும் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். அந்த எலும்பு ஆணின் எலும்பா இல்லை பெண்ணின் எலும்பா என்பதையும் சொல்லி விடுகிறார்கள்.

அறிவியல் எங்கோ போய்விட்டது என்று நாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். நியாயமான பெருமை. அதே சமயத்தில் பூமியின் வயது என்ன சூரியனின் வயது என்ன சந்திரனின் வயது என்ன என்று கணக் கச்சிதமாக சொல்கிறார்களே அது எப்படி என்று நினைத்துப் பார்த்து பெருமைப் படலாமே!

சூரியனில் ஒரே விநாடியில் 20 ஆயிரம் டன் தங்கம் எரிக்கப் படுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. இல்லை உங்களால் ஏற்றுக் கொள்ளத்தான் முடிகிறதா. உண்மைதாங்க. ஒரு விநாடிக்கு 20 ஆயிரம் டன் தங்கம். சூரியனில் எரிக்கப்படுகிறது. என்ன செய்வது. மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள். ஆக இத்தனைக் கோடி வருடங்களாக எவ்வளவு தங்கம் எரிந்து போய் இருக்கும்.

சரி. எரிந்தது எரிந்ததாக இருக்கட்டும். இப்போதைக்கு எவ்வளவு தங்கம் மிச்சம் இருக்கும். அதையாவது கணக்குப் பண்ணிப் பார்ப்போம். காசா பணமா. சும்மா ஒரு கற்பனை கணக்குதான். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

நம்ப பூமி இருக்கிறதே இந்த மாதிரி ஒரு நூறு பூமியை ஒன்றாகச் சேர்த்து ஒரு  கொள்ளுக் கட்டை மாதிரி பிடித்து வைத்தால் எப்படி இருக்கும். அந்த அளவுக்குச் சொக்கத் தங்கம் இன்னும் அங்கே சூரியனில் இருக்கிறது. ஆனால் என்ன அந்தத் தங்கம் சூடோடு சூடாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதுதான் மனசிற்கு வேதனையாக இருக்கிறது.

தங்கம் எரிந்து கொண்டு இருக்கிறது என்பது ரொம்பவும் கவலையாக இருக்கிறது இல்லையா. எப்படிப் போய் எடுப்பது. ஓர் ஐடியா சொல்லுங்களேன். ராக்கெட்டில் போய் தங்க வாயுக்களை பெரிய பெரிய டாங்கிகளில் உறிஞ்சி எடுத்து வரலாம் என்று மட்டும் சொல்ல வேண்டாம்.

அப்படி ஒரு வாய்ப்பும் வசதியும் இருந்தால் பூமியில் ஒரு மனுசன்கூட இருக்க மாட்டான். பக்கத்து வீட்டில் கடன் வாங்கியாவது சூரியனுக்குப் பறந்து கொண்டு இருப்பார்கள். சும்மா ஒரு கற்பனைதான்.

சூரியன் பூமியில் இருந்து 149,597,870 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நம்முடைய பூமியைப் போல 333,400 பூமிகளைச் சேர்த்து சூரியனுக்குள் அடக்கி விடலாம். இந்தப் பூமி எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

நம்முடைய பூமி நமக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இந்தப் பூமியைப் போல மூன்று இலட்சம் பூமிகள் என்றால் வேறு என்ன சொல்ல இருக்கிறது. அவ்வளவு பெரியது நம்ப சூரியன்.

தங்கம் எடுக்க சூரியனுக்குப் போவதாக இருந்தால் செய்தி அனுப்புங்கள். கிடைக்கிற தங்கத்தில் பாதிக்குப் பாதி. கமிசன் கூடுதலாக வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை.

1 கருத்து: