26 ஜூலை 2019

சிங்காசாரி பேரரசு - 1

இந்தோனேசிய வரலாற்றில் இந்தியர்களின் ஆளுமைகள் மிகையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. இதுவரையிலும் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள், சிற்பச் சிலைகள், கோட்டை மதில்கள், சமயச் சின்னங்கள், அகழாய்வுகள், மண்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் போன்றவை தான் வரலாற்று ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவிகள் செய்து வருகின்றன.


ஜாவா, சுமத்திரா தீவுகளில் இந்தியர்களின் ஊடுருவல்கள் மிக மிக அழுத்தமாக இருந்து இருக்கின்றன. இப்போதைய இந்தோனேசிய கலாசாரமும்; ஏன் அவர்களின் இந்தோனேசிய மொழியும்கூட சமஸ்கிருத மொழியின் பலத்த தாக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அதை இந்தோனேசியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். பெருமைக்காகச் சொல்லவில்லை.

கீழே ஓர் இணையத் தளத்தின் பெயரைக் கொடுத்து இருக்கிறேன். போய்ப் பாருங்கள். உண்மை தெரியும்.

(சான்று: http://www.gimonca.com/sejarah/sejarah01.shtml)

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் ஒன்றுதான் சிங்காசாரி பேரரசு (Singhasari). அதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.



சிங்காசாரி எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். சிங்கம் + சாரம் = சிங்கசாரம் என்று பிரிந்து வரும். சாரம் என்றால் தூங்குதல். ஆக தூங்கும் சிங்கம் என்று பொருள் படும். இன்னும் ஒரு விசயம்.

ஜாவாவிலும் சரி; சுமத்திராவிலும் சரி; சிங்கம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி சிங்கத்தின் பெயர் வந்து இருக்கலாம் என்று நீங்களும் கேட்கலாம். சரி.

சிங்கப்பூரில் கூட சிங்கம் இல்லை தான். அப்படி இருக்கும் போது சிங்கப்பூருக்கு மட்டும் சிங்க ஊர் என்று எப்படி பெயர் வந்தது. கேட்கலாமா இல்லையா.

சிங்கப்பூரைக் கண்டுபிடித்தவர் நீல உத்தமன். ஒருநாள் சிங்கப்பூர் காட்டில் சிங்கத்தைப் போன்ற ஓர் உருவத்தைப் பார்த்து அந்த இடத்திற்கு சிங்க ஊர் என்று பெயர் வைத்தார். அதுவே சிங்கப்பூரம் என்று மாறி, கடைசியில் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கப் படுகிறது.



விலங்குகளின் ராஜா சிங்கம். அதனால் சிங்கத்தின் பெயரை ஒரு பெருமைக்காகச் சிங்காசாரி பேரரசிற்கு வைத்து இருக்கலாம். சரி. விசயத்திற்கு வருவோம்.

அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியல் வருகிறது. பாருங்கள். எந்த ஆண்டில் எங்கே தோற்றுவிக்கப் பட்டது என்பதையும் கவனியுங்கள்.

இந்தோனேசியாவை மொத்தம் 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. 



அந்தப் பேரரசுகளின் பட்டியல்:

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–1292

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

இவற்றில் முதன்முதலாகத் தோன்றியது ஜலநகரப் பேரரசு. பெயரை நன்றாகக் கவனியுங்கள். ஜலநகரப் பேரரரசு. ஆகக் கடைசியாக வருவது மஜபாகித் பேரரசு. அதற்கு முன்னர் வருவது தான் சிங்காசாரி பேரரசு.



சிங்காசாரி பேரரசு என்பது ஜாவாவில் இருந்த ஒரு சைவம் – பௌத்த சமய அரசு. கி.பி 1222 முதல் கி.பி. 1292 வரை எழுபது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்த அரசு.

கி.பி. 1293 ஆம் ஆண்டு வாக்கில் மஜபாகித் பேரரசு எழுச்சி பெறும் வரையில் இந்தச் சிங்காசாரி அரசு நீடித்து இருந்தது.

சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதல் கடவுளாக வணங்கும் சமயமாகும். இந்துச் சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக விளங்குகிறது. இன்றைய உலகில் சுமார் 25 கோடி 22 இலட்சம் இந்துக்கள் சைவ சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் முன்பு காலத்தில் ஆட்சி செய்த இந்திய அரசர்கள் பெரும்பாலோர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். சரி. நம்ப சிங்காசாரி கதைக்கு வருவோம். 



சிங்காசாரி அரசு என்பது கென் அரோக் (Ken Arok) என்பவரால் மத்திய ஜாவாவில் உருவாக்கப் பட்டது. இவரை கென் அங்கோரம் (Ken Angrok) என்றும் அழைப்பது உண்டு.

இந்தக் கென் அரோக் அரசர் கி.பி. 1182 முதல் கி.பி 1227 வரை சிங்காசாரி அரசை ஆட்சி செய்தவர். ஓர் ஏழ்மையான உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருடைய வாழ்க்கை வரலாறு ஜாவாவின் நாட்டுப்புறக் கதைகளில் மிகுந்த களிநயத்துடன் இன்றும் வருணிக்கப் படுகின்றது. குறிப்பாக பரராத்தன் எனும் நூலில் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

உலகப் புகழ் மஜபாகித் பேரரசு தெரியும் தானே. அந்தப் பேரரசும் சிங்காசாரி பேரரசில் இருந்து தான் உருவானது. இந்தோனேசியாவைப் பற்பல இந்திய அரச பரம்பரையினர் ஆட்சி செய்து உள்ளனர். தெரிந்த விசயம்.



அந்தப் பரம்பரையினரில் ஒன்று தான் ராஜசா பரம்பரை (Rajasa dynasty). அந்தப் பரம்பரையைத் தோற்றுவித்தவரும் இதே இந்தக் கென் அரோக் தான்.

கென் அரோக்கின் தாயாரின் பெயர் கென் எண்டோக் (Ken Endok). இவருடைய தந்தையாரின் பெயர் கஜபுரன் (Gajahpura).

இவருடைய குடும்பம் ஓர் ஏழ்மையான உழவர் குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன். கிழக்கு ஜாவாவில் பிரந்தாஸ் (Brantas) ஆற்றுக் கரை கிராமத்தில் வாழ்ந்த குடும்பம். ஏழ்மையின் எல்லைக்கே போன குடும்பம்.

கென் அரோக் கைக்குழந்தையாக இருக்கும் போது ஒரு நாள் அவனுடைய தந்தையார் அவனைக் கொண்டு போய் ஓர் இடுகாட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார். யாராவது வசதி படைத்தவர்கள் அவனைக் கொண்டு போய் வளர்க்கட்டுமே எனும் நல்ல எண்ணம் தான். 



ஆனால் என்ன ஆனது தெரியுமா. கென் அரோக்கை ஒரு பக்கா திருடன் தூக்கிக் கொண்டு போய் வளர்க்கத் தொடங்கினான். அப்படியே அவனுக்கு எல்லாவிதமான தீய பழக்கங்களையும் கற்றுக் கொடுத்தான்.

கொள்ளை அடிப்பதில் இருந்து கொலை செய்வது வரை அனைத்தும் சின்ன வயதிலேயே கென் அரோக்கிற்கு அத்துப்படி.

நாளடைவில் அவன் வாழ்ந்த கெடிரி (Kediri) பகுதியிலேயே மிக தந்திரமான; மிக வஞ்சகமான கொள்ளைக்காரன் எனும் பெயரையும் எடுத்தான். அவனைப் பிடிப்பதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

இப்படி இருக்கும் போது மாப்பு லோகவன் (Mpu Lohgawe) எனும் ஒரு ரிஷியைக் கென் அரோக் சந்தித்தான். இந்த லோகவ ரிஷிதான் அவனுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தவர். 



அந்தக் காலக் கட்டத்தில் மத்திய ஜாவாவில் துமாபெல் (Tumapel) எனும் ஒரு குட்டி அரசு இருந்தது. அந்த அரசைத் துங்குல் அமேதுங்கன் (Tungul Ametung) என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

அந்த அரசரிடம் லோகவ ரிஷி இந்தக் கென் அரோக்கைக் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்படியே ஒரு சாதாரணப் பணியாளனாக வேலையிலும் சேர்த்து விட்டார்.

படிப்படியாக முன்னேறிய கென் அரோக், கெடிரி சிற்றரசின் அரசரானான். அது மட்டும் அல்ல. ஒரு கட்டத்தில் ஜாவாவின் அசைக்க முடியாத அரசராகவும் பெயர் பெற்று விளங்கினான்.

படிப்படியாக முன்னேறினான் என்று சொல்லக் கூடாது. தப்பு. தனக்கு வேலை கொடுத்து, படி அளந்த அரசர் துங்குல் அமேதுங்கனையே கொலை செய்துவிட்டுத் தான் கென் அரோக் அரசப் பதவிக்கு வந்தான். 



இந்தக் கொலையிலும் ஒரு பச்சைத் துரோகம் இருக்கிறது. மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்று சொல்வார்களே. அதில் வருவது நடு ஆசையான பெண்ணாசை. அந்த ஆசையும் கென் அரோக்கிற்கு வந்து தொலைத்து விட்டது.

எந்த நேரத்தில் யாருக்கு என்ன ஆசை வந்து தொலையும் என்று யாருக்குத் தெரியும். சொல்லுங்கள். அந்தப் பதஞ்சலி ரகசியத்தை முன்கூட்டியே தெரிந்து வைத்து இருந்தால் இவனும் அந்தப் பக்கம் பாய் விரித்துப் படுத்து இருக்க மாட்டான்.

அந்த மாதிரி பாவம் கென் அரோக்கிற்கும் அரசர் துங்குல் அமேதுங்கனின் மனைவி மீது ஆசை வந்துவிட்டது. அப்புறம் தான் பெரிய பெரிய வில்லங்கமே நடந்தது.



அரசர் துங்குல் அமேதுங்கனின் மனைவியின் பெயர் கென் தேடிஸ் (Ken Dedes). ஓர் அழகிய ஓவியம். அவள் மீது ஆசை மட்டும் அல்ல கண்களை மறைக்கின்ற மோகம். இந்தக் கதையை இழுத்து அடிக்காமல் கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

அப்புறம் என்ன. கென் அரோக் அழகாய் ஒரு சதித் திட்டம் தீட்டி அரசர் துங்குல் அமேதுங்கனை கொலை செய்து விடுகிறான். அவருடைய மனைவியைத் தன் உடைமையாக வரித்துக் கொண்டான். அதன் பின்னர் பழம் நழுவிப் பாலில் விழுந்தது. துமாபெல் அரசின் ஆளுநராகத் தன்னை நியமித்துக் கொண்டான். 

அடுத்ததாக கி.பி.1222-இல் பக்கத்து நாடான கெடிரி அரசின் மீது போர் தொடுத்தான். அதன் அரசர் கர்த்த ஜெயாவையும் (Kertajaya) தோற்கடித்தான். அடுத்து கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து சிங்காசாரி எனும் ஓர் அரசை உருவாக்கினான். ஆக அந்த வகையில் துமாபெல் சிற்றரசும் கெடிரி சிற்றரசும் ஒன்றிணைக்கப் பட்டன. இப்படித்தான் சிங்காசாரி அரசு உருவானது.

 


தன் பெயரை ஸ்ரீ ரங்கா ராஜசா பத்திரை அபூர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Amurwabhumi) என்று மாற்றிக் கொண்டான். அந்த வகையில் ராஜசா எனும் அரச பரம்பரையும் உருவானது.

அது மட்டும் அல்ல. தன்னைச் சிவபெருமானின் மகன் என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டான். நாட்டு மக்கள் தன்னைக் கடவுளாகப் பார்க்க வேண்டும் என்றும் கட்டளை போட்டான்.

கென் அரோக்கின் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. துமாபெல் அரசின் துங்குல் அமேதுங்கன் என்பவர் அரசராக இருந்த போது கொலை செய்யப் பட்டார். சொல்லி இருக்கிறேன்.

இந்தக் கொலையில் துங்குல் அமேதுங்கனின் மகன் அனுசபதிக்கு (Anusapati) நீண்ட நாட்களாக சந்தேகம். தன் தந்தையைக் கென் அரோக் தான் கொலை செய்து இருக்க வேண்டும் எனும் சந்தேகம். 



ஒருநாள் உண்மை தெரிய வர கென் அரோக்கை அனுசபதி கொன்று விடுகிறேன். எந்தக் கத்தியால் துங்குல் அமேதுங்கனைக் கொன்றானோ அதே கத்தியால் தான் கென் அரோக்கும் குத்தப்பட்டுச் சாகடிக்கப் பட்டான். இப்படித்தான் ரோமாபுரியில் ஜுலியஸ் சீசரின் சகாப்தம் ஒரு முடிவிற்கு வந்தது. சரி.

அங்கே இந்தோனேசியாவில் இந்தியர்களின் வரலாற்றை வரலாறாக மதித்து கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் அப்படியா நடக்கிறது. இந்தியர்கள் சார்ந்த அடையாளங்களை அடித்துத் துவைத்து மிதித்து அரிச்சுவடி இல்லாமல் சிதைத்துக் கொண்டு  வருகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எதைக் கடிக்கக் கூடாதோ அதையும் கடித்து வருகிறார்கள்.

மனிதர்களில் முன்பு பரமேஸ்வரா காணாமல் போனார். அப்புறம் முன்ஷி அப்துல்லா காணாமல் போனார். அப்புறம் ஹங்துவா காணாமல் போனார். அப்புறம் கோத்தா கெலாங்கி காணாமல் போனது. இப்போது பூஜாங் சமவெளியும் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. 



எது எப்படியோ பத்துமலை, ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர்மலைக் கோயில்களை எங்கள் தாத்தா பாட்டிகள் தான் கட்டிக் கொடுத்தார்கள் என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி. அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்; பெரிய புண்ணியம்.

(தொடரும்)

சான்றுகள்:

1.https://en.wikipedia.org/wiki/List_of_monarchs_of_Java)

2.http://www.gimonca.com/sejarah/sejarah01.shtml - Early civilization in Java and Sumatra was heavily influenced by India. Today's cultures in Indonesia, and even the language, still show influences from the Sanskrit language and literature)

3.Ooi, Keat Gin, ed. (2004). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor (3 vols)

4.http://www.eastjava.com/books/majapahit/html/dynasty.html - Abandoned in a cemetery shortly after his birth, the infant was subsequently adopted by a thief named Lembong)

5.Saidihardjo, Dr. M. Pd., A.M, Sardiman, Drs., Sejarah untuk SMP, Tiga Serangkai, Solo, 1987, 4th reprint edition in 1990

6.https://id.wikipedia.org/wiki/Kertajaya - Sri Maharaja Kertajaya adalah raja terakhir Kadiri yang memerintah sekitar tahun 1194-1222

7.https://en.wikipedia.org/wiki/Anusapati)

All Rights Reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system or transmitted in any form by any means/ electronic/ mechanic/ photocopying/ recording or otherwise without written permission from the author KSMuthukrishnan.

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

4 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. sir,raja sholan vanthu pona piragu tamilargal kadaratil irunthargala?

    பதிலளிநீக்கு
  3. ஜகார்தா வில் இருந்தபோது இந்த இந்து மத அடையாளங்களைக் கண்டிருக்கிறேன். ஸ்ரீ விஜயா என்ற பெயர் பிரசித்தம். அதே போல கருடர் சிலைகளும், ராமாயண வரலாறும். பாலித் தீவுகளில் இந்தையப் பெயர் கொண்ட பல குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள்.

    சுக்ரீவா,இந்த்ரா என்று பெயர்கள் கொண்ட வானர வனத்தையும் பார்த்தேன்.
    எங்கள் வண்டி ஓட்டுபவர் பெயர் சுதாமா. ஆனல் அவர் ஒரு முஸ்லிம்.

    உங்கள் கட்டுரை பல விஷயங்களைக் கொண்டு தருகிறது. மனம் நிறை நன்றி.

    பதிலளிநீக்கு