15 அக்டோபர் 2019

அக்கரைச் சோதனைகளில் இக்கரை வேதனைகள் - 1

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக மலேசியாவில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்தப் பட்டியலில் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்; சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் அடங்குவர்.


விடுதலைப் புலிகள் தொடர்பான நிதிகளை ஊக்குவித்தல்; ஆதரித்தல்; வைத்திருத்தல்; விநியோகித்தல் போன்றவற்றின் சந்தேகத்தின் பேரில்... சோஸ்மா சட்டம் 2012-இன் கீழ் அவர்கள் மீது கைது நடவடிக்கை.

நிச்சயமாக மிகவும் வேதனைக்குரிய விசயம். இருந்தாலும் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அத்துடன் இலங்கை விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக ஜ.செ.க. தலைவர்கள் மீது குற்றம் சாட்டப் படுவது இதுவும் முதல் முறை அல்ல. 

ஏற்கனவே பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி அவர்களும்; மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் சித்தரிக்கும் பழைய படங்கள், சமூக ஊடகங்களில் சிறிது காலமாகப் பரவி வந்தன. ஆனால் அந்தப் படங்கள் அண்மையில் ஒரு புதிய வடிவத்தில், ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளன.

இந்தக் கட்டத்தில் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். டாக்டர் பி. ராமசாமி; எம். குலசேகரன் இருவருமே சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் ஸக்கீர் நாயக்கிற்கு எதிராகப் பேசி வந்தவர்கள். தெரிந்த விசயம்.

ஸக்கீர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும்; அவரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளனர்.

இவர்கள் இருவரின் அந்த தொடர் வலியுறுத்தல்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த வலியுறுத்தல்கள் சில தனி நபர்களை வேதனைப் படுத்தி இருக்கலாம். அல்லது சமயம் சார்ந்த சில குழுக்களைக் கோபப்படுத்தி இருக்கலாம்.

அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் எதிராகப் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருக்கலாம். அவை ஊழியூழி காலத்து அரசியல் அணிகலன்களின் ஒரு பகுதி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


அடுத்து... சாமிநாதன்; குணசேகரன் இருவருமே சிறிது காலமாகப் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்து உள்ளனர்.

கடந்த 2018 நவம்பர் 28-ஆம் தேதி மலாக்காவில் நடந்த தமிழீழ மாவீரர் தின நிகழ்ச்சியின் போது இருவரும் உரை ஆற்றியதாகச் சொல்லப் படுகிறது.

தவிர தமிழீழ விடுதலை இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும்; மாவீரர் தின நிகழ்ச்சியின் போது பிரசுரங்களை விநியோகித்ததாலும்; அவர்கள் கைது செய்யப் பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவர் மைடின் பிச்சை தெரிவித்து உள்ளார்.

2016 செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இலங்கை தூதரைத் தாக்கியதாக மேலும் இருவர் மீது குற்றம் சாட்டப் பட்டதாகக் கூறி இருக்கிறார்.

மற்றும் ஒருவர் 28 வயதான காப்பீட்டு முகவர். இவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் கோலாலம்பூர் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு.

கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட  வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆதாரங்கள் பாரபட்சம் இல்லாமல் முன்வைக்கப்பட வேண்டும்.


அது மட்டும் அல்ல. அவர்கள் அனைவரும் சிறப்புக் குற்றங்கள் சட்டம் என் அழைக்கப்படும் (சோஸ்மா) கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 28 நாட்கள் வரை அவர்களைத் தடுத்து வைக்க முடியும். ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.

சோஸ்மா என்பது கொடூரமானது. அதற்குச் சில பல திருத்தங்கள் தேவைப் படுகின்றது. ஆரம்பத்தில் இருந்தே அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

சோஸ்மாவின் கீழ் கைது செய்யப் பட்டவர்களின் மீது ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.

கைது நடவடிக்கையில் இனம் மற்றும் மதம் போன்றவை காரணங்களாக அமைந்து விடக் கூடாது. நியாயமான நிலைப்பாடுகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. நிச்சயமாக அந்த எழுவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள பற்பல முயற்சிகள் மேற்கொள்வார்கள்.

நடந்து முடிந்த நிகழ்ச்சியில் அதிருப்தியான உணர்வுகள் இழைந்து ஓடுவதும் சன்னமாய்த் தெரிய வருகிறது. வலிமை வாய்ந்த இன சமயச் சக்திகளைச் சமாதானம் செய்யும் வகையில் ஓர் அரசியல் விளையாட்டாகவும் இருக்கலாம். அப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

மியன்மாரின் இராணுவ கெடுபிடிகளில் அவதிப்படும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இஸ்ரேலியர்களின் இன்னல்களுக்கு இலக்காகும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கெடுபிடிகளுக்கு ஆளாகி இருக்கும் மிண்டானாவோ மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இந்தோனேசியாவில் இருக்கும் ஆச்சே மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இதைத் தவிர, உலகம் எங்கும் அவதிப்படும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.

அதே போல இலங்கையில் அவதிப்படும் தமிழீழ மக்களுக்கு அனுதாபம் காட்டுவதில் தவறு இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து.

ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்கு மரியாதை செலுத்துவதால்; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிப்பதாகப் பொருள் படாது.

பேராசிரியர் இராமசாமி சொல்வதை நினைவு கூர்வோம். ”மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் உறவினர்களை ஆதரிக்கும் தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அல்ல.”

“கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும் வலதுசாரி குழுக்களுடன் நேரத்தை வீணடிக்கக் கூடாது. நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மத போதகர் ஸக்கீர் நாயக் போன்றவர்களுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.”

எது எப்படி இருந்தாலும் கைது செய்யப் பட்டவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பது கண்டிப்பாக நிரூபிக்கப்பட வேண்டும். அது வரையில் அதிருப்திகள் தொடரலாம்.

நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.





பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Muthukrishnan Ipoh உணர்வுகளுக்கு அடிபணிந்து கருத்துகளைப் பதிவு செய்வதைத் தவிர்ப்போம்... நாம் சிறுபான்மை இனத்தவர்... அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து காரியத்தைச் சாதிக்க வேண்டிய ஒரு நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.... பொறுமை காப்போம்...விவேகத்துடன் செயல் படுவோம்...
Dorairaj Karupiah Muthukrishnan Ipoh ஆம். பொறுமை, விவேகம் அவசியம். தங்களின் கூற்று முற்றிலும் உண்மை.
Kumaravel Muthu Goundan Muthukrishnan Ipoh மிகச் சரியாகச் சொன்னீர்கள் அய்யா. நம்மிடையே உள்ள உணர்ச்சி வயப்படும் குணம் பல சமயங்களில், இடம், பொருள் அறியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடச் செய்கிறது. அதன் விளைவால் சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்மையை விட தீங்கையே கொண்டு சேர்க்கும் என்பதையும் நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

Malathi Nair Very unfair. usual work. something big issue coming soon. this is to cover that.

Muthukrishnan Ipoh பொறுமை காப்போம். கருத்துகளைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது... இனம், சமயம் தொடர்பான கருத்துகளை முடிந்த வரை தவிர்ப்பதும் நல்லது... அல்லது அதை மிக மிக நாசூக்காக எடுத்துச் சொல்வதே சாலச் சிறப்பு...
Dorairaj Karupiah Muthukrishnan Ipoh மிகவும் உண்மை ஜயா.

Khavi Khavi வலிமை வாய்ந்த இன சமயச் சக்திகளைச் சமாதானப் படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையாக இருக்கலாம்.. நுட்பமான அணுகல் ஆசிரியரே நன்றி.
Muthukrishnan Ipoh கைது செய்யப் பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும்...
M R Tanasegaran Rengasamy ஸக்கிர் நாய்க் விவகாரத்துடன் அண்மையில் ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூடு. அதில் இறந்தவருடன் வந்த குடும்ப மாது மாயமான விஷயங்களைத் திசைத் திருப்ப இந்த புது அதிரடி... சந்தேகம் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Muthukrishnan Ipoh உண்மை நிலை தெரியாமல் நாம் ஒரு முடிவு எடுக்க முடியாது... கைது செய்து இருக்கிறார்கள்... அடுத்து என்ன செய்வார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்... எதற்காகக் கைது செய்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்... நிச்சயமாக இரு தரப்பு விவாதங்களில் உண்மை தெரிய வரும்...

Raghavan Raman இந்தக் கைது நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரைத் திருப்திப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செய்யப்பட்டு உள்ளது என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயமும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கம் சமுதாயத்தின் கோரிக்கையினை செவிமடுக்கும் என எதிர்பார்ப்போம். ஒற்றுமையே பலம்.
  
Muthukrishnan Ipoh Raghavan Raman நன்றிங்க... எவ்வளவுக்கு எவ்வளவு இந்தியச் சமுதாயம் அழுத்தப் படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தச் சமுதாயம் ஒற்றுமை படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன... என் தனிப்பட்ட கருத்து...
 

Neela Vanam விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு என்று சொல்லி ஆங்காங்கெ கைது செய்து இருக்கிறார்கள். இன்னும் கூட கைதாகலாம், நீயா நானா என்று தெரியாத பட்சத்தில் தமிழ் மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 
Muthukrishnan Ipoh உலகில் சில நாடுகள் விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குத் தடை விதித்து உள்ளன. அவற்றுள் மலேசியாவும் ஒரு நாடு... 
  
Sri Kaali Karuppar Ubaasagar நம்மவர்களின் உணர்வுகளை மதிக்காதது அநீதி மிக்கது. பாலஸ்தீனத்தில் போராடினால் உரிமைவாதிகள்... இலங்கையில் போராடினால் பயங்கரவாதிகள்.. என்ன ஜனநாயகம்... சபாஷ்.
 
Muthukrishnan Ipoh தமிழீழப் போரில் பலியான ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களுக்கு மனிதநேய ஆதரவு தெரிவிப்பதால்... அந்த ஆதரவாளர்கள்... விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என அர்த்தம் சொல்ல முடியாது... இரு வெவ்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும்...
 

Sri Kaali Karuppar Ubaasagar ஆம்.. அண்ணா உண்மை. நமக்கு அன்பே சிவம். காலம் நிச்சயம் மாறும்.. ஒரு தலை பட்ச அரசாங்கமும்...
 

Manikam Manikam Manikam பொறுமை காப்போம்... சிலந்தி வலை பின்னுது... 

MA Chandran இந்த கைது நடவடிக்கை எதுஎதுக்கோ முடிச்சுப் போடத்தான் என்பது தெளிவாகுது
 
Shanker Muniandy MA Chandran ஆமாம் சார் மதம் பிடித்த யானையை ஓரளவு சமாளிக்கலாம் ஆனால் மதம் பிடித்த மனிதன் ஆயிரம் மதம் பிடித்த யானைகளுக்கு சமம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஓட்டமெடுத்த வந்த ஒரு மதம் பிடித்த யானையால் எவ்வளவு பேரழிவு மலேசிய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது.

Muthukrishnan Ipoh நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்...
 

Selvi Sugumaran YES SIR WE WANT GOOD REASON
 
Muthukrishnan Ipoh என்ன காரணம் என்பதைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது...
  
KR Batumalai Robert Neethi Neelaikatum. Manitha Neyam Vellatum. Valthukal Anna. (நீதி நிலைக்கட்டும். மனித நேயம் வெல்லட்டும்.) 

Muthukrishnan Ipoh எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... ஏன் எதற்காக அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறோம்...

 
Narinasamy Karpaya தெளிவான விளக்கம். ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகக் கொள்ளலாம்! அரசு தரப்பு - குறிப்பாக காவல் துறை - தகுந்த விளக்கங்களைக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்ப்போம்!!
  
Periasamy Ramasamy இப்போது கூட இரு தரப்பினர்தான் அதிக உணர்ச்சி வசப்பட்டு வசைமொழிகள், விமர்சனங்கள் பரிமாறி கொள்கிறோம். ஒரு பக்கம் ஒரு அசல் மலாய்க்காரர் அல்லாதவரால் இன சமய உணர்வுகள் தூண்டப்பட்ட மலாய்க்காரர்கள். சமீப காலமாக அதே உணர்வுகளால் கட்டுண்ட இந்தியர்கள் மற்றொரு பக்கம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

இவ்வளவு சலசலப்பிற்கு உள்ளும், கட்சியின் பெயரால் பலவிதமாகத் தூண்டப் பட்டாலும், தெளிந்த நீரோடை போல எந்த சலனமும் இன்றி அமைதியாகப் பயணிப்பது சீனர் இனமே.

 
Kumaravel Muthu Goundan Periasamy Ramasamy உண்மைதான்... சீனர்களைப் போல் நமக்கு அடக்கி வாசிக்கத் தெரியவில்லை. வாய்ச் சொல்லில் வீரரடி என்று நமக்கு ஒரு பெயர்... ஆனால் பல சமயங்களில் நமது உணர்ச்சி வசப் பேச்சாலும், அறிக்கைகளாலும் காகிதப் புலிகளாகி விடுகிறோம்.
 
Mbs Maniyam ஒரு தவற்றை மறைக்க இன்னொரு புதிய கதை விடும் இடமாக மாறிவிட்டது... அதற்கு நம் இனம் ஒரு பலிகிடா!
 
Sathya Raman நாட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் பதறுகிறது மனம். "வேப்ப மரத்திற்கு என்ன தான் பாலும், தேனும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறவே மாறாது."

சில மனிதர்களும் அப்படித்தான். கடந்த காலங்களில் காலம் எவ்வளவுதான் படிப்பினையைப் புகட்டினாலும் சிலரை அது மாற்ற முடிவதில்லை. ஒரு உயிரின் வேதனையையும், துன்பத்தையும் இன்னொரு உயிராய் இருந்து அனுதாபம் தெரிவிப்பது இயல்பே.

அந்த அனுதாப உணர்வுகளுக்கு வேறொரு உருவகம் கொடுத்து நமது இந்திய பிரதிநிதிகளைக் கைது செய்து இருப்பது கண்டிக்க தக்கது. இந்நாட்டு இந்தியர்கள் என்னமோ நினைத்து செய்த காரியங்கள் அது அவர்களுக்கே எதிர்ப்பாய் வரும் என்பதை யாரும் நினைக்கவில்லை.

கைதிதானவர்கள் தைரியம் காத்து இருக்கணும். எல்லாவற்றையும் காலம் மாற்றும் என நம்புவோம்.
  

 

Arojunan Veloo சூழல் அறிந்து நிலை புரிந்து பேசுவோம்! சரியான நினைவூட்டல் ஐயா...!
Sarawna Sarawna Very Unfair.
 
Moon Noom சூழ்ச்சியாளர்களால் நம்மவர்களுக்கு நடப்பது சகஜமே
 
Subramaniam Subra Super.your.movement.tks.sir 
 

Murugan Rajoo தமிழீழத் தமிழர்களின் விடுதலை புலி இயக்கத்தை ஒழித்திக்கட்ட 33 நாடுகள் ஆதரவு வழங்கியது.

இந்த ஆதரவை அநியாயமாக பயன்படுத்தி சுமார் 200,000 தமிழர்களை இனவழிப்பு செய்த சிங்கள ராச்சபாக்சேவுக்கு துணைப் புரிந்தது இந்தியமும், சீனமும்.

2009-ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட இயகத்தை, இன்னமும் உள்ளது போல் தோரணையை உருவாக்கி அரசியல் நாடகத்தை ஏற்றியுள்ளார்கள்..


Murugan Rajoo This freedom fight's similar same like Palestinian fighting to get their own land from Israel Jewish. Sri Lanka land is the own land of Tamil's, Robbed by Sinhalese few decade's before. Refer the real history than post it. This kingdom ruled by King Rawana by few thousand years before. Wonder people doesn't knows the original history are commenting as known...


Kunji Pillai நமது பிரதமர் PRU14 முன்பு, முந்தைய ஆட்சி காலத்தில் இந்தியர்களுக்கு தான் ஏதும் செய்யவில்லை... அப்படி PRU14 வெற்றி பெற்றால் செய்வதாக கூறினார். அது இதுதானா??? அருமையாகச் செய்தார். 

Sivan Koran Kunji Pillai "நான் சொன்னது வேதவாக்கு இல்லை" என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்
 
Kannan Kannan இது ஒரு திருவிளையாடல்... அப்பப்பா சிவாஜி கணேசன் கூட தோல்வி அடையலாம்... அதையும் மிஞ்சியவர் ரசகுல்லா...


Shanker Muniandy இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் எல்லாம் நம்பும் படியாகவா இருக்கு? பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் சொன்னால் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்போது அந்த மாதிரி குற்றச் சாட்டுகளுக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்.

Muthukrishnan Ipoh நம்பும் படியாக இல்லைதான்... அப்படிப்பட்ட ஓர் இயக்கம் இருக்கிறதா... இயங்குகிறதா என்று தெரியாத நிலையில் கைது நடவடிக்கை... ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை... தலை சுற்றுகிறது...

Perumal Thangavelu கொத்து கொத்தாக மக்களைக் கொன்று விட்டு இன்று நல்லையன்கள் நாடாளுகின்றனர். நாம் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும். அப்படிப்பட்ட தமிழ்நாடே என்னத்த செஞ்சாங்க. அவரவர் வீட்டைப் பார்ப்பது போல் அவரவர் நாட்டை பாருங்க.
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக