27 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களுக்குச் சோதனைகள் - 13.10.2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக மலேசியாவில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்தப் பட்டியலில் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்; சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் அடங்குவர்.


விடுதலைப் புலிகள் தொடர்பான நிதிகளை ஊக்குவித்தல்; ஆதரித்தல்; வைத்திருத்தல்; விநியோகித்தல் போன்றவற்றின் சந்தேகத்தின் பேரில்... சோஸ்மா சட்டம் 2012-இன் கீழ் அவர்கள் மீது கைது நடவடிக்கை.

நிச்சயமாக மிகவும் வேதனைக்குரிய விசயம். இருந்தாலும் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அத்துடன் இலங்கை விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக ஜ.செ.க. தலைவர்கள் மீது குற்றம் சாட்டப் படுவது இதுவும் முதல் முறை அல்ல.

ஏற்கனவே பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி அவர்களும்; மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் சித்தரிக்கும் பழைய படங்கள், சமூக ஊடகங்களில் சிறிது காலமாகப் பரவி வந்தன. ஆனால் அந்தப் படங்கள் அண்மையில் ஒரு புதிய வடிவத்தில், ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளன.



இந்தக் கட்டத்தில் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். டாக்டர் பி. ராமசாமி; எம். குலசேகரன் இருவருமே சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் ஸக்கீர் நாயக்கிற்கு எதிராகப் பேசி வந்தவர்கள். தெரிந்த விசயம்.

ஸக்கீர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும்; அவரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளனர்.

இவர்கள் இருவரின் அந்த தொடர் வலியுறுத்தல்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த வலியுறுத்தல்கள் சில தனி நபர்களை வேதனைப் படுத்தி இருக்கலாம். அல்லது சமயம் சார்ந்த சில குழுக்களைக் கோபப்படுத்தி இருக்கலாம்.

அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் எதிராகப் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருக்கலாம். அவை ஊழியூழி காலத்து அரசியல் அணிகலன்களின் ஒரு பகுதி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்து... சாமிநாதன்; குணசேகரன் இருவருமே சிறிது காலமாகப் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்து உள்ளனர்.

கடந்த 2018 நவம்பர் 28-ஆம் தேதி மலாக்காவில் நடந்த தமிழீழ மாவீரர் தின நிகழ்ச்சியின் போது இருவரும் உரை ஆற்றியதாகச் சொல்லப் படுகிறது.

தவிர தமிழீழ விடுதலை இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும்; மாவீரர் தின நிகழ்ச்சியின் போது பிரசுரங்களை விநியோகித்ததாலும்; அவர்கள் கைது செய்யப் பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவர் மைடின் பிச்சை தெரிவித்து உள்ளார்.



2016 செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இலங்கை தூதரைத் தாக்கியதாக மேலும் இருவர் மீது குற்றம் சாட்டப் பட்டதாகக் கூறி இருக்கிறார்.

மற்றும் ஒருவர் 28 வயதான காப்பீட்டு முகவர். இவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் கோலாலம்பூர் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு.

கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆதாரங்கள் பாரபட்சம் இல்லாமல் முன்வைக்கப்பட வேண்டும்.

அது மட்டும் அல்ல. அவர்கள் அனைவரும் சிறப்புக் குற்றங்கள் சட்டம் என் அழைக்கப்படும் (சோஸ்மா) கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 28 நாட்கள் வரை அவர்களைத் தடுத்து வைக்க முடியும். ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.

சோஸ்மா என்பது கொடூரமானது. அதற்குச் சில பல திருத்தங்கள் தேவைப் படுகின்றது. ஆரம்பத்தில் இருந்தே அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

சோஸ்மாவின் கீழ் கைது செய்யப் பட்டவர்களின் மீது ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.

கைது நடவடிக்கையில் இனம் மற்றும் மதம் போன்றவை காரணங்களாக அமைந்து விடக் கூடாது. நியாயமான நிலைப்பாடுகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. நிச்சயமாக அந்த எழுவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள பற்பல முயற்சிகள் மேற்கொள்வார்கள்.

நடந்து முடிந்த நிகழ்ச்சியில் அதிருப்தியான உணர்வுகள் இழைந்து ஓடுவதும் சன்னமாய்த் தெரிய வருகிறது. வலிமை வாய்ந்த இன சமயச் சக்திகளைச் சமாதானம் செய்யும் வகையில் ஓர் அரசியல் விளையாட்டாகவும் இருக்கலாம். அப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

மியன்மாரின் இராணுவ கெடுபிடிகளில் அவதிப்படும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இஸ்ரேலியர்களின் இன்னல்களுக்கு இலக்காகும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கெடுபிடிகளுக்கு ஆளாகி இருக்கும் மிண்டானாவோ மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இந்தோனேசியாவில் இருக்கும் ஆச்சே மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இதைத் தவிர, உலகம் எங்கும் அவதிப்படும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.

அதே போல இலங்கையில் அவதிப்படும் தமிழீழ மக்களுக்கு அனுதாபம் காட்டுவதில் தவறு இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து.

ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்கு மரியாதை செலுத்துவதால்; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிப்பதாகப் பொருள் படாது.

பேராசிரியர் இராமசாமி சொல்வதை நினைவு கூர்வோம். ”மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் உறவினர்களை ஆதரிக்கும் தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அல்ல.”

“கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும் வலதுசாரி குழுக்களுடன் நேரத்தை வீணடிக்கக் கூடாது. நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மத போதகர் ஸக்கீர் நாயக் போன்றவர்களுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.”

எது எப்படி இருந்தாலும் கைது செய்யப் பட்டவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பது கண்டிப்பாக நிரூபிக்கப்பட வேண்டும். அது வரையில் அதிருப்திகள் தொடரலாம்.

நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக