25 செப்டம்பர் 2020

மலேசியாவில் வந்தேறிகள் யார்? - 1

தமிழ் மலர் - 25.09.2020

மலையூர் மலைநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் வந்தேறிகளா? பக்கத்து நாடு கறுப்பா சிகப்பா என்று தெரியாமல் வாழ்கின்ற இப்போதைய மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்த அப்போதைய மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பக்கத்து நாடுகளில் இருந்து கொல்லைப் புறமாக நுழைந்தவர்கள் வந்தேறிகளா?

இந்த நாட்டிலே பிறந்து; இந்த நாட்டிலே வளர்ந்து; இந்த நாட்டிலே வாழ்ந்து; இந்த நாட்டிலேயே மரித்துப் போனவர்களை வந்தேறிகள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன நீதி இருக்கிறது. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மனிதம் செத்துப் போகிறது என்று சத்தம் போட்டுக் கத்தும்..

மலேசியா என்பது பச்சைப் பசும்தரை படர்ந்த நாடு. பொன்னும் மணியும் புதைந்து கிடக்கும் பொன்மணி நாடு. ஒரு புண்ணிய பூமி. ஒரு புண்ணியத் தளம். ஒரு புண்ணிய மண்.

அங்கே பல்லின மக்களின் கடின உழைப்பு. பல்லினச் சமுதாயத்தின் பகல் இரவு பாரா அர்ப்பணிப்புகள். உயர்வோம் உயர்ந்து காட்டுவோம் என்கிற ஒசத்தியான உணர்வுகள். அதில் அவர்களின் வியர்வைத் துளிகள். அவர்களின் இரத்தக் குமிழ்கள். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம். அதுதான் மலேசியா.

அப்படிப்பட்ட ஓர் அழகிய மண்ணிலே வந்தேறி எனும் சொல் அர்த்தம் இல்லாத சொல்லாகி விட்டது. திரும்பிப் போ என்கிற கூப்பாடு நீண்டு நெடிந்து ஒடிந்து விழுகிறது. அதனால் பலருக்கும் வேதனைகள். விசும்பல்கள்.

இந்த வந்தேறி எனும் சொல்லுக்கு இந்த நாட்டிலே முதன்முதலாகச் சூடம் சாம்பிராணி போட்ட பெருமை யாருக்குச் சேரும் தெரியுங்களா. சாட்சாத் ஓன் பின் ஜாபார். அவர் பயன்படுத்திய அந்தச் சொல் இன்றும் சுனாமி அலைகளாய் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகின்றன.


ஓன் பின் ஜாபார் என்பவர் நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் ஹுசேன் ஓன் அவர்களின் தந்தையார். அமைச்சர் ஹிசாமுடின் அவர்களின் தாத்தா. 1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை அவர் பயன்படுத்தினார். அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரஹ்மான் பயன்படுத்தி இருக்கிறார். நம்ப தேசத் தந்தை துங்கு தான். அவரும் பயன்படுத்தி இருக்கிறார். இதைச் சொல்லும் போது பலருக்கு வேதனையாக இருக்கலாம்.

சீனர்களும் இந்தியர்களும் இல்லாத இடங்களில்; கூட்டங்களில்; துங்கு அவர்கள், வந்தேறி எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கலாம். உண்மை. அதன் பின்னர் மகாதீர் முகமது பயன்படுத்தினார். இப்போது அந்தச் சொல் அவருக்கு ஒரு பழக்கத் தோசமாகி விட்டது.

எங்கோ படித்த ஞாபகம். புதிய இடத்தில் பழைய இடத்தைக் கொச்சைப் படுத்துவது பெரிய பாவம். வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.

அவருக்குப் பின்னர்... அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற மற்ற குட்டித் தலைவர்கள் சிலர் வாய்க்கரிசி போடுகிற மாதிரி வசை பாடுகிறார்கள். பசார் மாலாம் இரவுச் சந்தையில் கூட பழைய சொல்லாகி விட்டது போலும். அந்த அளவுக்கு அந்தச் சொல் ரொம்பவும் மலிவாகி விட்டது.

இப்படிச் சிலர் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

வந்தேறிகள் என்று சொல்பவர்களும் வந்தேறிகள் என்பது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவிற்குக்கூட தெரியும். ரொம்ப வேண்டாம். மண்ணில் ஊர்ந்து போகிறதே புழு பூச்சிகள்; அவற்றுக்குக்கூட வந்தேறிகள் என்று சொல்பவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியும்.

ஆனால் இவர்கள் என்னவோ முதல் நாள் முளைத்த முள்ளங்கி மாதிரியும்; முந்தா நாள் குதித்த வான்கோழி மாதிரியும்;  மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்கிறார்கள்.  

முன்னாள் பிரதமர் நஜிப் சார். அவர் பகிரங்கமாகவே தாம் இந்தோனேசியா, சுலாவாசி தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் நாட்டின் பிரதமராக இருந்தார். நல்ல மனிதர் தான். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு ரொம்பவுமே வேதனைப்பட்டு விட்டார். என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது.

அதற்கு முன்னர் மலாயா வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அப்போது தான் மலேசியாவில் உண்மையான வந்தேறிகள் யார் என்பது பின்னர் புலப்படும். அத்துடன் மலாயா வரலாற்றைத் தெரிந்து கொண்டது போலவும் இருக்கும். சரிங்களா.

மலாயாவின் வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர். 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு (Perak Man).

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப்பட்டு உள்ளது (Neolithic New Stone Age). 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் (Perak Woman) அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. தீபகற்ப மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

கி.மு. 4,000-ஆம் ஆண்டுகளில் ஒரு கண்டுபிடிப்பு. பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் ஊர். ஈப்போ மாநகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த குகை. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழமையான ஓவியங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கி.மு. 3,000 - இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மனிதர்கள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்த மனிதர்கள் ஆப்பிரிக்கா, இந்தியா, மியன்மார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள். மலாயாவைத் தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து இந்த உண்மை தெரிய வருகின்றது.

(The migration came from Africa via India, into Southeast Asia and what are now islands in the Pacific)

கி.மு. 2,500 - மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர். கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். இவர்கள் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்தவர்கள். மலாயாவில் குடியேறியவர்கள்.

கி.மு. 2,000 - இந்தக் கால கட்டத்தைக் கற்காலம் என்று மலாயா வரலாறு சொல்கிறது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். இவர்களிடம் வளர்ப்பு பிராணிகளும் இருந்து உள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டி உள்ளனர்.

கி.மு. 1,000 - வெண்கலக் காலம் (Bronze Age). இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் (Dong Son culture) என்றும் அழைக்கின்றனர். இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது.

(The Malay Peninsula became the crossroads in maritime trades of the ancient age. Seafarers who came to Malaysia's shores included Indians, Javanese and Chinese among others. Ptolemy named the Malay Peninsula the Golden Chersonese.)

ஒன்றை இங்கே மறக்க வேண்டாம். டோங் சோன் கலாசாரம் என்பது வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றிய கலாசாரம். ஆனால் அது எப்படி இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது.

டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன? முறையாக நெல் சாகுபடி செய்தல்;  நெல் பயிரிட எருமை மாடுகளை முறையாகப் பழக்குதல்; அதிகமான மாமிசம் தரும் விலங்குகளை வளர்த்தல்; வலை பின்னி மீன் பிடித்தல்; பாய்மரங்களைக் கட்டிப் படகு விடுதல்; மரத்தைக் குடைந்து படகுகளைச் செய்தல்.

கி.பி.200 - கி.பி.300 - கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்தது இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் ஐரோப்பா ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப் பட்ட பாசி மணிகள் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள். பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன.

(The migration came from Africa via India, into Southeast Asia and what are now islands in the Pacific)

கெடா கடாரத்தில் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினார்கள். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் 2200 ஆண்டுகள் பழைமையானவை.

(Archaeological discoveries of 200BC coastal settlement in Pulau Kelumpang, Matang, Perak)

இந்தியர்களின் ஆதிக்கம் கொண்ட இந்து; புத்த மத அரசாங்கங்கள் இந்தோனேசியாவில் இருந்தன. அவற்றில் ஒன்று ஸ்ரீ விஜய அரசு. இந்த அரசு மலாயாவின் இலங்காசுகம், கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்து உள்ளது.

கி.பி. 1300-ஆம் ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் தான் மலாயாவிற்குள் இஸ்லாம் சமயத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர்கள்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2020

சான்றுகள்:

1.  Lekenvall, Henrik. LATE STONE AGE COMMUNITIES IN THE THAI-MALAY PENINSULA. Journal of Indo-Pacific Archaeology 32 (2012)

2. Dr. Martin Richards. "Climate Change and Postglacial Human Dispersals in Southeast Asia". Oxford Journals.

3. The HUGO Pan-Asian SNP Consortium (11 December 2009). "Mapping Human Genetic Diversity in Asia".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக