மூச்சு விடாமல் பாடிய பாலா ஐயா... இன்று மூச்சை நிறுத்திக் கொண்டாயே. உன் பாடல்கள் என்றைக்கும் எந்தன் சாகா மொழிகள். தனிமையில் வாடிய போது எல்லாம் என்னைத் தாலாட்டித் தூங்க வைத்து இருக்கின்றன. கோபம் வந்த போது எல்லாம் சாந்தப் படுத்தி சமாதானம் செய்து வைத்து இருக்கின்றன. அழுகை வந்த போது எல்லாம் அமைதிப் படுத்தி அழகு படுத்தி இருக்கின்றன.
எத்தனையோ பௌர்ணமிகள் உன் பாடல்கள் என்னை குளுமைப் படுத்தி இருக்கின்றன. எத்தனையோ அமாவாசைகள் உன் பாடல்கள் நிம்மதியான நித்திரைக்கு வழிவகுத்துக் கொடுத்து இருக்கின்றன. நீ இல்லா விட்டாலும் இனியும் தொடரும்.
நீங்கள் மறைந்தாலும் என் உயிர் உள்ளவரை உங்கள் குரல் எனக்குள் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும். இனிமேல் சொர்க்கத்திலும் இன்னிசை மழை பெய்யும். அதைக் கேட்க நாங்களும் வருவோம். அமைதி கொள்வீர்கள் ஐயா.
இந்தியத் திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த பாடும் நிலா மறைந்து விட்டது. உலக ரசிகர்களை தன் பாடல்களால் மகிழ்வித்து வாழ்ந்தவர். தன்னுடைய பாடல்களால் பலரின் சோகங்களை மறக்கச் செய்தவர். கோடிக் கணக்கான ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று உள்ளார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவித்து உள்ளது.
16 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்று உள்ளார்.
முறைப்படி கர்நாடக இசைப் பயிற்சி பெறவில்லை. இருப்பினும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் இடம் பெற்ற பாடலுக்காக இந்தியத் தேசிய விருது பெற்றார்.
இதுவரை இந்தியத் தேசிய விருதை 4 மொழிகளுக்காக பெற்ற ஒரே பாடகர் எஸ்.பி. பாலா அவர்கள் தான்.
பாடும் நிலா பாலு மறைந்தாலும் அவரின் ஆயிரக் கணக்கான பாடல்களால் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
இவர் ஒரு பாடகர் மட்டும் அல்ல. தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
பன்முகத்திறமை கொண்டவர். இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து உள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்திய அனைத்துலகத் திரைப்பட விழாவில், இந்திய திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.
பலமுறை தமிழக அரசின் விருதுகளைப் பல முறை பெற்று உள்ளார். ஆந்திரா அரசின் நந்தி விருதை 25 முறை பெற்று சாதனை படைத்து உள்ளார். 1981-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டு உள்ளது.
இதுவரை எந்த ஒரு பாடகரும் செய்யாத சாதனைகளை எஸ்.பி. பாலா செய்துள்ளார். 1981 பிப்ரவரி 8-ஆம் தேதி பெங்களூர் நகரில் உள்ள ஓர் ஒலிப் பதிவுக் கூடத்தில், கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாருக்காக காலை 9 முதல் இரவு 9 மணி வரை, ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்தார்.
அது போல், தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும்; இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்து உள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மின்சார கனவு' என்ற படத்தில் இடம்பெற்ற 'தங்கத்தாமரை மகளே' என்ற பாடலுக்காக, தேசிய விருதை 6வது முறையாக பெற்றார்.
பாடும் நிலா பாலு நீங்கள் மறைந்தாலும் உங்களின் ஆயிரக் கணக்கான பாடல்களால் எங்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2020
தகவல் துணை:
1. https://www.dinakaran.com/
2. https://www.bbc.com/tamil/arts-and-culture-54291955
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக