27 செப்டம்பர் 2020

மலேசியத் தமிழர்களின் உரிமை மீறல்கள்

அகோரிகள். கேள்விப்பட்டு இருப்பீர்கள். வட இந்தியாவைச் சேர்ந்த சாதுக்கள். கங்கை ஆற்றின் கரைகளில் வாழ்பவர்கள். மனித மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள். மனித வாழ்கைக்கு முற்றிலும் அப்பால் பட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.  

மனித கபால ஓட்டில் உணவு உண்பது. அந்த ஓட்டிலேயே தண்ணீர் ஊற்றிக் குடிப்பது. ஆடை எதுவும் அணியாமல் சுற்றித் திரிவது. சுத்தமான நிர்வாணக் கோலத்தில் உருண்டு புரள்வது. மனித எலும்புகளால் மாலையைப் போட்டுக் கொள்வது. இடது கையில் ஒரு மண்டை ஓட்டை வைத்துக் கொள்வது. அப்படியே ஊர் ஊராய் ஊர்க்கோலம் போவது.

அகோரிகள்

இவர்கள் தான் அகோரிகள். இந்த அகோரிகளின் பங்காளிகளைப் போல ஒரு சிலர் இங்கேயும் எங்கேயும் வாழ்கிறார்கள்.

அகோரிகள் ஆடும் தாண்டவம் இருக்கிறதே அது ஒரு மாதிரியான அகோரத் தாண்டவம். ஆக்ரோஷமான தாண்டவம். ருத்ர தாண்டவத்தையும் தாண்டி நிற்கும் காளிகா தாண்டவம். அதற்குப் பஞ்ச சகார ஊர்த்துவத் தாண்டவம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.

அந்த அகோரிகள் தாண்டவம் அப்போது கரை தாண்டி நின்ற ஓர் அகோரத் தாண்டவம். ஆனால் இப்போது இங்கே அந்த மாதிரி எல்லாம் இல்லீங்க. நினைத்த நேரத்திற்கு எல்லாம் நினைத்த இடங்களில் ருத்ர தாண்டவங்கள். மன்னிக்கவும். வந்தேறிகள் என்கிற வக்கரத் தாண்டவங்கள்.

அப்படிச் சொன்னால் தான் சரியாக இருக்கும். சற்று அழுத்தமான உண்மையாகவும் இருக்கும். அப்புறம் அதையும் தாண்டிய நிலையில் நேற்று முளைத்த காளான்களின் ஆணவம் முற்றிய ஆனந்தச் சம்ஹார நவ தாண்டவம் என்று ஒரு தாண்டவம் இருக்கிறது.

அதாவது தருகாணவனத்து முனிவர்கள் மாதிரி கஜ சம்ஹாரத் தாண்டவம். அந்த மாதிரியும் வாய்க்கு வாக்கரிசி போடாமல் ஆடுகிற ஆட்டம்.

ஒரு முக்கியமான விசயம். நல்லது பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. நாட்டை நல்லபடியாகக் கொண்டு வருவதற்கு என்னென்னவோ செய்யலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.

எதைப் பேசக் கூடாதோ அதைத்தான் பேசுவார்கள். எப்படி பேசினால் எதைப் பேசினால் மற்றவர்கள் காயப் படுவார்கள் என்று நினைக்கிறார்களோ அதைத் தான் பேசுவார்கள். அத்தனையும் அர்த்தம் இல்லாத செருக்குச் சரணங்கள். உப்பு சப்பு இல்லாத அவதூறுகள்.

இந்தக் களேபரத்தில் ஊரை விட்டு ஓடி வந்த ஒரு திடீர் நாடோடி. அந்த மனுசனாலும் சும்மா இருக்க முடியவில்லை. காலா காலமாக இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் சீண்டிப் பார்க்கும் ஒரு கறுப்புத் தோல் வாரிசு.

இன்னும் ஒரு விநோதமான ஜென்மம். இங்கேயே பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு கேவலமான பிறவி. மார்கழி மாதத்தில் மதம் மாறி ஐப்பசி மாதத்தில் பிறப்பு மதத்தையே இழிவு படுத்தும் ஓர் இழி பிறவி.

தமிழகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. அப்படியே சன்னமாய் அடங்கிப் போனது. ஆனால் இங்கே அதே மாதிரியான புயல்காற்று அடிக்கடி ஆழிப் பேரலையாய் விஸ்வரூபம் எடுத்து வாட்டி வதைக்கிறது. விஷயத்திற்கு வருகிறேன்.

மலேசியாவில் கொஞ்ச காலமாகவே வந்தேறிகள் எனும் சொல் வக்கரச் சொல்லாக மாறி வருகிறது. அப்படியே முரட்டுத் தனமாக வரட்டுத் தனமாய் தாண்டவமும் ஆடி வருகிறது. ஒரு மினிட் பிளீஸ்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பார்கள். அந்த மாதிரி சில நாடுகளில் குறுக்குப் புத்திக் குதிரைகள் குறுக்கு வழியில் விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

வந்தேறிகள் எனும் சொல் பயன்பாடு இருக்கிறதே அது ஒரு வகையில் திசைத் திருப்புதல் பாவனையைச் சேர்ந்தது. அந்தச் சொல் இப்போது ஒரு குரூரமான உச்சத்தைத் தொட்டுக் கொண்டு போகிறது. அந்த வேகத்தில் தாறுமாறாய் உற்சாகம் காண்கிறது. அது ஓர் உல்டா கலாசாரம். தாராளமாகச் சொல்லலாம். தப்பே இல்லை.

ஆச்சு பூச்சு என்றால் வந்தேண்டா பால்காரன் என்று சொல்லி வந்தேறிகள் வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொல்லை நாம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடலாம்.

ஆனாலும் அந்தச் சொல்லை தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தப் படுவதால் செம கட்டு தேவைப் படுகிறது. ஆக சரியான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

ஒரு நாட்டின் பெரும்பான்மை இனத்தவர் மத்தியில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அரசியல் ஆதிக்கம் செய்வதற்கு வியூகம் வகுப்பார்கள். அதாவது அரசியல் ஆதிக்கம் கிடைத்தால் நாட்டின் பொருளாதாரம் கைக்கு வரும் என்கிற வியூகம்.

நாட்டின் பொருளாதாரம் கைக்கு வந்தால் அந்தக் குறிப்பிட்ட தரப்பினரின் குடும்பம், மாமன் மச்சான், உற்றார் உறவினர், சொந்த பந்தங்கள் எல்லாம் பல தலைமுறைகளுக்கு வக்கணையாக உட்கார்ந்து சாப்பிடலாம்.

அதே பெரும்பான்மை இனத்தில் இருக்கும் மற்ற மற்ற சாமானிய மக்களைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. இந்தா எடுத்துக்கோ என்று இரண்டு மூன்று சப்பைகளைத் தூக்கிப் போட்டால் எல்லாம் சரியாக வரும். சாமானியர்கள் அடங்கிப் போய் விடுவார்கள். சத்தம் வராது. அதுதான் அவர்களின் திட்டம்.

ஆனால் சமயங்களில் சத்தம் வரும். அப்படி வந்தால் மேலும் இரண்டு மூன்று துண்டுச் சப்பைகள்.

அதற்கும் மேலும் சத்தம் வந்தால் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாய நிலை. இந்தக் கட்டத்தில் தான் சிறுபான்மை இனத்தவர் பலிக்கடா ஆகிறார்கள்.

சில பல நூறாண்டுகளாக வாழ்ந்து கரைந்து போனவர்கள் மலேசியத் தமிழர்கள். அவர்களைப் பார்த்து ’நீங்கள் வந்தேறிகள்... திரும்பிப் போங்கள்’ என்றால் அதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அப்படிச் சொல்ல முடியுமா?

யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. சொல்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா? வெட்கமாக நினைக்க வேண்டாமா. மலேசிய இந்தியர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் போது வேதனை வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது.

மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட முன்னோடித் தமிழர்களின் ஒப்பற்ற உழைப்பு; அதில் அப்பழுக்கற்ற விசுவாசம். வரலாறு வேதனைப்படும் அளவிற்கு அவர்களின் அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார்கள். இப்படி நான் சொல்லவில்லை. பலரும் சொல்கிறார்கள்.

நம் மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப் பின் நோக்கி பாருங்கள். பெரும்பாலும் கண்ணீரும், காயங்களும் தான் மிஞ்சிப் போய் நிற்கும். அவைதான் அவர்களுக்குக் கிடைத்த தியாகத்தின் திருவோடுகள்.

அன்றைய மலாயா இன்று மலேசியாவாக இப்படி இந்த அளவிற்கு மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு காரணம் யார். இன்று இந்த நாட்டில் திரும்புகிற இடங்களில் எல்லாம் நிரம்பி வழியும் வங்களாதேசிகள் அல்ல. இந்தோனேசியர்கள் அல்ல. மியான்மார் வாசிகள் அல்ல. நேபாளிகள் அல்ல.

நியாயமான உரிமைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து; விட்டுக் கொடுத்து; கடைசியில் ஏமாந்து போனது தான் மிச்சம். ஒரே வார்த்தையில் சொன்னால் அந்நியத் தொழிலாளர்களை விட சிறுபான்மை இனமாக மலேசிய இந்திய இனம் மாறி வருகிறது.

மற்ற இனத்தவர் மத்தியில் இப்போது இளிச்சவாயர்களாக ஏமாந்து நிற்க வேண்டிய நிலை. ஏமாந்த சோணகிரிகளாக குனிந்து போக வேண்டிய நிலை. சும்மா சொல்லவில்லை. வேதனைகளின் உச்சத்தில் சத்தியமான உண்மைகள். வழிந்து ஓடும் குருதிப் புனலில் கொப்பளிக்கும் வேதனைக் குமிழிகள்.

பிழைக்க வந்த மற்ற மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்த நாட்டுத் தமிழர்களின் கண்களுக்கு இன்னமும் சுண்ணாம்புகளே பூசப் பட்டு வருகிறது. அதை மறுக்க முடியாது. நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்த போதிலும் இந்த நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான அடிமை விலங்கு முற்றிலுமாய் அகற்றப் பட்டதா? இல்லவே இல்லை.

நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கெஞ்சாமல் கிடைக்கிறதா. இல்லவே இல்லை. குனுகிக் குறுகி இடுப்பு வளையாமல் கிடைக்கிறதா. இல்லவே இல்லை. அழுது புலம்பி ஆத்திரம் வந்து ஆர்ப்பரிக்காமல் கிடைக்கிறதா? இல்லவே இல்லை.

இந்த நாட்டை வளப்படுத்திய ஓர் இனத்தை வஞ்சிக்கக் கூடாது என்கிற எண்ணம் தான் வருகிறதா? உண்மையான உழைப்புக்கு இன்னொரு பெயர் இந்தியர் என்கிற நன்றி உணர்வு கொஞ்சமாவது இருக்கிறதா?

ஆபிரகாம் லிங்கன்; நெல்சன் மண்டேலா; சுபாஷ் சந்திர போஸ்; செகுவாரா; மார்டின் லூதர் கிங்; வில்லியம் வாலாஸ்; இவர்கள் மீண்டும் பிறந்து வந்துதான் உண்மையான சுதந்திர காற்றையும், சுபிட்ச நிலையையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டுமா என்ன?

விதைகள் கீழ் நோக்கி விதைத்தாலும்,
விருச்சமாய் மேல் நோக்கி தான் வளரும்.
விழுந்தால் விதை. வளர்ந்தால் விருச்சம்.


புரட்சியாளன் வெற்றி பெற்றால் அவன் போராளி. அதே போல் தான் இந்த நாட்டில் சராசரி தேவைகளுக்குகூட போராடியே கேட்டு பெற வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பரவாயில்லை. வழக்கம் போல் அடுத்தவருக்காகத் தொடர்ந்து விளக்கை ஏற்றி வைப்போம். அப்படி ஏற்றி வைக்கும் போது நம்முடைய பாதையும் வெளிச்சமாகும். அந்த நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

நாடு சுதந்திரம் அடைந்தது 63 ஆண்டுகள். ஆனாலும் உன்மையான சுதந்திரத்தை ஓர் இனம் சார்ந்த மக்கள் மட்டும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்பது ஒரு பொதுவான பார்வை.

எப்போது இந்த நாட்டுத் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கப் படுகிறதோ அப்போது தான் இந்த நாட்டிற்கும் உண்மையான சுதந்திரம். ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலேசியத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது தப்பு. மலேசியா வாழ் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வது மிக மிக தப்பு.

கடைசியாக ஒரு வார்த்தை. மலேசியத் தமிழர்கள் இந்த மண்ணில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். அதை எவராலும் மறுக்க முடியாது. அது ஒரு வரலாற்று உண்மை.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலேசியத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலா காலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.09.2020


பேஸ்புக் பதிவுகள்

Rajendran Pakirisamy: நன்றி வாழ்த்துகள்...

Parameswari Doraisamy: வணக்கம் ஐயா... மறுக்க முடியாத நிதர்சனமான உண்மைகள். நம்மை வார்த்தைகளால் குத்திக் கிழித்துக் கூறு போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நன்றி மறந்த கேடு கெட்ட துரோகிகள்.

Sheila Mohan:
மிக அருமையாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள் சார்... இது தங்களது ஆதங்கம் மட்டும் அல்லாமல் எல்லோருடைய மனதிலும் வந்தேறிகள் என்ற சொல் மிகவும் வலி கொடுக்கிறது.

Raja Rajan: வணக்கம் ஐயா ஆணவமும் அதிகாரமும் இருக்கும் உச்சத்தில் இருக்கும் அவர்களுக்கு இந்தச் செய்தி போய் சேருமா? வருங்காலத்தில் தமிழர்களின் எதிர்காலம் இருண்ட காலமாக மாறுமா?

Mageswary Muthiah: உண்மையை அப்பட்டமாக எழுதி உள்ளீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பற்றாது. இது அனைத்து மலேசிய இந்தியர்களின் மனக் குமுறல்கள்.

Kumar Murugiah Kumar's: உண்மையின் சாசனம் ஐயா !

Maha Lingam:
நல்லது... வாழ்த்துகள்... ஐயா

Thanabaal Varmen: 🙏🙏

Selvi Sugumaran: 🙏🙏

Prema Kanniappan:
🙏🙏

Muthukrishnan Ipoh: இனிய வணக்கம். கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள். அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னர் பதில் வழங்கப்படும். காலை நேரத்தில் கூடுதலான எழுத்து வேலைகள். நன்றி. நன்றி. 🙏🙏

Ahmad Ridwa: உரிமைக்காக தமிழன் தவம் இருக்கிறான் என்பது வெட்கபட வேண்டிய விஷயம். இங்கே அனைத்தும் வலியவனுக்கே உண்மையில் திராணி இருக்குமேயானால் தமிழர்கள் அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Selvaa Yathamaniam: நமது இந்தியர்களின் உண்மையான வரலாறு இதுவே

Robert Bert: 🙏🙏






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக