27 செப்டம்பர் 2020

மலேசியத் தமிழர்களின் மலைநாட்டுச் சோதனைகள்

தமிழ் மலர் - 27.09.2020

மலேசியத் தமிழர்கள்... மலையூர் மலைநாட்டைப் புதுமண்ணாய்ப் போற்றிப் பாடியவர்கள். முதல் மரியாதை. மழைக்காட்டுக் கித்தா தோப்புகளைச் செல்வக் கோபுரங்களாய் மாற்றிக் காட்டியவர்கள். முதல் வணக்கம். மலைக்காட்டு மண்வாசனையை அலைகடலுக்கு அப்பால் மணக்கச் செய்தவர்கள். முதல் காணிக்கை. உயிர் கொடுத்து; உடல் கொடுத்து; இந்த உலகில் எங்களை வாழவைக்கும் அந்தத் தெய்வங்களுக்கு இதுவே எங்களின் இதயம் தாழ்ந்த மூத்த காணிக்கை.

அமெரிக்காவில் அமேசான் மழைக் காடுகள். ஆசியாவில் களிமந்தான் மழைக் காடுகள். மலேசியாவில் மத்தியமலை மழைக்காடுகள். மூன்றுமே பழமை வாய்ந்த பச்சைக் காடுகள். மூன்றுமே  ஈரம் பாய்ந்த பச்சைப் பழம் காடுகள். எவரும் எளிதாய் நுழைந்து போக முடியாத அளவிற்கு அடர்த்தியான காடுகள். நெருக்கம் பெருக்கமாய் நெட்டை மரங்கள் நிறைந்த செழுமைக் காடுகள்.

வருசம் முழுவதும் மழை கொட்டிக் கொண்டே இருக்கும். வருசம் முழுவதும் வெயில் அடித்துக் கொண்டே இருக்கும். எந்த நேரத்தில் மழை கொட்டும்; எந்த நேரத்தில் வெயில் அடிக்கும் என்று இறைவனுக்கும் தெரியாது போலும். அப்படிப்பட்ட வனாந்திரப் பச்சைப் போர்வைகள்.

மேலே இருந்து பார்த்தால், பார்ப்பது எல்லாம் பச்சையாகத் தெரியும். கீழே இருந்து பார்த்தால், பார்ப்பது எல்லாம் கறுப்பாகத் தெரியும். அதுதான் மலைநாட்டுப் பச்சைக் காடுகள். கொஞ்சம் அமைதி. விசயத்திற்கு நான் இன்னும் வரவில்லை. இடையில் ஒரு செருகல்.

மேடையில் பேசுவதற்கு முன்னர் அறிஞர் அண்ணா ஒரு சிட்டிகை பொடி போட்டுக் கொள்வாராம். இங்கிலாந்து அரசி எலிசபெத் ஒரு மொடக்கு சூஸ் குடித்துக் கொள்வாராம். சர்ச்சில் ஒரு தம் சுருட்டு இழுத்துக் கொள்வாராம். இடி அமீனைப் பற்றி சொல்ல வேண்டாம். சண்டைக்கு வருவீர்கள். பரவாயில்லை. சொல்கிறேன். கூட்டத்தில் எவன் பெண்டாட்டியாவது ஏமாந்து போய் நிற்கிறாளா என்று ஓரக் கண்ணால் பார்ப்பாராம்.

அதாவது நம்ப நாட்டில் ஏமாந்து போன ஓர் இளிச்சவாயக் கூட்டமாக இருக்கிறோமே அந்த மாதிரி தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள். எல்லாம் சரியாக வரும். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

மலேசியக் காடுகளை மத்தியமலைத் தொடர் பிரிக்கிறது. இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கத்திற்கு அப்படி ஒன்றும் தாவிக் குதித்துப் போய்விட முடியாது. அதே போல அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கத்திற்கு இறக்கை கட்டிப் பறந்து வந்து விடவும் முடியாது. லேசு பட்ட காரியம் இல்லை. அவ்வளவு அடர்த்தியான காடுகள்.

இந்தப் பச்சைக் காடுகளில் கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய்க் கூடிக் கூடி கும்மாளம் போட்டு இருக்கின்றன. கோடிக் கோடியாய் இனப்பெருக்கம் செய்து இருக்கின்றன. மன்னிக்கவும். கோடிக் கணக்கில் கொள்ளு பேரன் கொள்ளு பேத்திகள் எடுத்து இருக்கின்றன. ஆக அவற்றுக்கு அங்கே ஏக போக வாழ்க்கை.

அப்படிப்பட்ட இந்த மலையூர் பச்சைக் காடுகளில் தான் மலேசியத் தமிழர்கள் பேர் போட்டு இருக்கிறார்கள். காட்டுப் பன்றிகள் கடிக்க வரும். கறுப்புக் கரடிகள் கரண்ட வரும். காண்டா மிருகங்கள் பிரண்ட வரும். மலைப்பாம்புகள் முழுங்க வரும். இப்படி ஆகப்பட்ட காட்டு ஜீவன்கள் காட்டுத் தர்பார் செய்த கரடு முரடான காடுகளில் தான் மலேசியத் தமிழர்களும் வரலாறு படைத்து இருக்கிறார்கள்.

ஒரு சில வருடங்கள் அல்ல. ஒரு சில மாமாங்கங்கள் அல்ல. இஅர்னடு மூன்று நூற்றாண்டுகள். மறுபடியும் சொல்கிறேன். முன்னூறு வருடங்கள். இன்னும் கூட்டிச் சொன்னாலும் தப்பு இல்லை. வெள்ளைக்காரன் அப்படியே ஓடி வந்து தப்பு என்று சொல்லித் தட்டிக் கேட்கப் போவதும் இல்லை.

எப்படியாவது பிழைச்சு போங்க என்று என்றைக்கு வெள்ளை துரைகள் கழற்றி விட்டுப் போனார்களோ; அன்றைக்கே மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும் கிழித்து மலாக்கா கடலில் வீசி விட்டார்கள். யார் என்று கேட்க வேண்டாம். மலேசியத் தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று கூப்பாடு போடுகிறார்களே அவர்கள் தான். இன்னும் ஒரு விசயம்.

மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வதற்கு முன்னாலேயே அவர்களின் வரலாற்றையும் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சக்கையாக்கி விட்டார்கள். அதையும் சொல்லி விடுகிறேன்.

மேலே கடாரத்தைக் கடாசி விட்டார்கள். கங்கா நகரத்தைக் கடைந்து விட்டார்கள். கீழே பலமேசுலாவை மலாக்கா ஆற்றில் மூழ்கடித்து விட்டார்கள். ஒன்னும் தெரியாத பாப்பா; போட்டு கிட்டாளாம் தாப்பா என்கிற மாதிரி கோத்தா கெலாங்கி என்றால் என்ன என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

இருக்கிற எல்லா சுவடுகளையும் ஒரு வழி பண்ணிய பிறகு தான் வந்தேறிகள் என்கிற வெறித் தனமான கீர்த்தனங்களுக்கு அடிக்கடி அனுபல்லவி சேர்க்கிறார்கள். மெட்ராஸ் பேச்சு வழக்கில் பஞ்ச் டயலாக்குகள். வயிற்றெரிச்சலில் கொட்டித் தீர்க்கிறேன். விடுங்கள். நியாயமான வயிற்றெரிச்சல். இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் இருக்கவே செய்கிறது. நல்ல பேர் வாங்க விரும்பும் நயவஞ்சகர்கள் வாழும் காலத்தில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். காட்டிக் கொடுக்க ஒரு சிலர் தயாராக இருப்பார்கள்.

ஒரு காலத்தில் இந்த நாடு பச்சைக் காடாய்க் கிடந்தது. திரும்பிய இடம் எல்லாம் காடுகள். தடுக்கி விழுந்தாலும் காடுகள். சொல்லி இருக்கிறேன்.  

ஆக இந்த நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலேசியத் தமிழர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலேசியத் தமிழர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா. சொல்லுங்கள்.

அப்படிப்பட்ட மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து.

பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த மண்ணில் மலேசியத் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் மீதான நிந்தனைப் பேச்சுகள் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகின்றது.

மலேசியத் தமிழர்களின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்தப் பூர்வீகத்தையே மறந்து விட்ட அசல் மலேசியர்களாக அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மலேசியத் தமிழர்களின் வேர்களும் விழுதுகளும் கடல் தாண்டிய மண்ணில் இருந்தது. உண்மை. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த வேர்களையும் விழுதுகளையும் எப்போதோ இந்த மண்ணிற்குக் கொண்டு வந்து கரை சேர்த்து விட்டார்களே.

அவர்கள் ஏறி வந்த பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; டீசல் இஞ்சின் கப்பல்கள்; இந்தக் கப்பல்களிடம் போய் மலேசியத் தமிழர்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். கண்ணீர் விட்டுக் கதைகள் சொல்லும்.

அப்படி கரை தாண்டி வந்தவர்களுக்கு பழைய இடத்தில் வேர்களும் இல்லை. விழுதுகளும் இல்லை. பிடித்து நிற்க ஒரு முழக் குச்சியும் இல்லை. ஆறாவது ஏழாவது எட்டாவது தலைமுறைகளில் இப்போது இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் முக்கால்வாசி பேர் தங்களின் பூர்வீக மண்ணைத் தொட்டுக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

மலேசியத் தமிழர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் மலேசியா. அந்த வகையில் மலேசியத் தமிழர்களுக்குத் தெரிந்த ஒரே நாடு மலேசியா.

இந்த நாட்டிற்காக அவர்களின் உயிர் உடல் பொருள் ஆவி இரத்தம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்லி நிந்திப்பது நியாயமா. தர்மமா. மலையக மண்ணுக்கே அடுக்குமா.

வந்தேறிகள் எனும் பேச்சு இந்த நாட்டின் மத, இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்குமா விளைவிக்காதா? சொல்லுங்கள். சீனர் இந்தியர்ச் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் என்பது அனைத்து மலேசியர்கள் மீதான தாக்குதல் என்பதை மலேசியர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போன மலேசிய இந்திய இனத்தின் அர்ப்பணிப்பு உணர்வுகளை நிந்திக்கலாமா?

18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டு கால இடைவெளி என்பது மலாயா வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய காலச் சுவடு.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவில் குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர்கள் தான் மலேசியாவில் நிரந்தரமாக ஓர் இந்தியர் சமூகம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்துக் காட்டியவர்கள். மலேசிய இந்தியர்கள் என்கிற வித்துகளை விட்டுச் சென்றவர்கள்.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

அந்த வாயில்லா பூச்சிகளைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லலாமா. சொல்ல ஒரு மனசு வேண்டாமா. சொல்ல ஒரு விவஸ்தை வேண்டாமா. சொல்லும் போது ஒரு வெட்கம் வர வேண்டாமா. இவை என் வேதனையின் விசும்பல்கள்.

மலேசியாவில் இப்போது வாழும் தமிழர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

மலாயா பாசா காடுகளில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சு காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு யாருக்கும் தெரியாது. வாங்க வாங்க… வந்து பொறுக்கி எடுங்க... அதான் உங்க வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த பைரவிகள். வேறு எப்படித்தான் சொல்வதாம்.

கிராமத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே கழுவி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. அப்போது அங்கே கிடைத்த சீயக்காய் சீமந்துச் சவர்க்காரத்தை எல்லாம் தடவி நன்றாகவே குளிப்பாட்டி நன்றாகவே காயப் போட்டு இருக்கிறார்கள்.

கற்பனை உலகில் மிதந்து கொண்டு இருந்த அந்தச் சாமானிய மக்களை அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது தமிழகத்தில் பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை. இன்னும் நடுங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது இருந்த நடுக்கம் வேறு.

அதன் பின்னர் மலாயாவில் இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்போது வந்தேறிகள் என்கிற நிந்தனைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களினால் ஒவ்வொரு நாளும் காய்ச்சல். முன்பு மலேரியா காய்ச்சல். டிங்கி காய்ச்சல். இப்போது கோவிட் 19. அதனால் சின்னச் சின்ன நடுக்கங்கள்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே சுனாமி நாயக்; பினாமி விநோத் போன்றவர்களின் நன்றி கெட்ட ஆலாபனைகள். இரண்டு பேருக்கும் நல்ல கம்பினேசன். வயிற்றெரிச்சல் வாழ்த்துகள்.

எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. சமாளிக்க முடியுமா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். எதிர்காலச் சந்ததியினர் சமாளிக்க வேண்டுமே. நினைத்தால் பயமாக இருக்கிறது.

மலேசியத் தமிழர்களின் வரலாறு என்பது சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் வேதனைகள் பார்த்த மலேசியத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றைக்கும் சோம்பேறிகளாய் வாழ்ந்ததே இல்லை. இரண்டு மரவள்ளிக் கிழங்கை அவித்துத் தின்று விட்டு சுருண்டு கிடக்கும் சோம்பேறிகளாய் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆற்றில் கிடைத்த இரண்டு மூன்று மீன்களைப் பொசுக்கித் தின்று விட்டு தொங்கு மூஞ்சி தூங்குமூஞ்சியாய் வாழ்ந்ததாக வரலாறும் இல்லை.

சோம்பேறிகளாய் வாழாமல் எறும்பு போல உழைத்தவர்கள். சன்னம் சன்னமாய் இந்த நாட்டைச் செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியவர்கள். அவர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை நிரூபிக்கவே வரலாற்றைப் புரட்டிப் போடுகிறேன். வேறு வழி இல்லை. காலத்தின் கட்டாயம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.09.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக