05 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம் 1853

தமிழ் மலர் - 05.10.2020

புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம். மலாயாவின் மிகப் பழைமையான தோட்டங்களில் முதன்மையானது. மூத்த வரலாற்றைக் கொண்டது. அது ஒரு சகாப்தம். ஒரு வரலாறு. பினாங்கு, புரோவின்ஸ் வெல்லஸ்லி பகுதியில் அல்மா தோட்டம் தான் அந்தக் காலத்தில் ஒரு முன்னோடித் தோட்டம்.

தொடக்கத்தில் அது ஒரு கரும்புத் தோட்டம். 1900-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது. அதற்கு முன்னர் மலாயா கரும்பு, ரப்பர் தோட்டங்களைப் பற்றி ஒரு சின்ன பார்வை.

1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள்.

ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.

அந்தக் கரும்பு, காபி, மிளகு தோட்டங்களில் தமிழர்கள் சேவைகள் செய்து வரலாறு படைத்து இருப்பதையும் அந்த வரலாறே மறக்கவில்லை.

பினாங்கு (புரோவின்ஸ் வெல்லஸ்லி);

பேராக் (கிரியான்);

சிலாங்கூர் (கிள்ளான்; காப்பார்; கோலாலம்பூர்);

நெகிரி செம்பிலான் (லிங்கி; லுக்குட்; சிலியாவ்);

மலாக்கா (அசகான்);

ஜொகூர் (பொந்தியான்; சாஆ; கூலாய்; ஸ்கூடாய்);


போன்ற பகுதிகள் எடுத்துக்காட்டு. இவற்றுக்குப் பின்னர் நிறைய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் கரும்பு, காபி, மரவெள்ளி, கொக்கோ, மிளகு, அன்னாசி தோட்டங்கள்.

1850-ஆம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்கள் பிரபலம்.

1860-ஆம் ஆண்டுகளில் காபி தோட்டங்கள் பிரபலம்.

1870-ஆம் ஆண்டுகளில் கொக்கோ தோட்டங்கள் பிரபலம்.

1880-ஆம் ஆண்டுகளில் மரவெள்ளி; மிளகு தோட்டங்கள் பிரபலம்.

1890-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டங்கள் பிரபலம்.

சரி, அல்மா தோட்டத்திற்கு வருவோம். புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம், மலாயாவின் மிகப் பழைமையான தோட்டங்களில் ஒன்றாகும். சொல்லி இருக்கிறேன்.

இந்தத் தோட்டம் உருவான காலக் கட்டத்தில் மேலும் சில தோட்டங்கள் பினாங்கில் உருவாகி உள்ளன. பத்து காவான் தோட்டம்; மலாக்கோப் தோட்டம்; பினாங்கு தோட்டம் போன்றவை. இவை 1850-ஆண்டுகளில் உருவான தோட்டங்கள்.

அல்மா தோட்டம் 1853-ஆம் ஆண்டு வில்சன் (Wilson) எனும் ஆங்கிலேயரால் உருவாக்கப் பட்டது. 500 ஏக்கர் பரப்பளவு. அந்தத் தோட்டத்தை 1854-ஆம் ஆண்டு அல்மா லியோபோல்ட் சேசெரியாவ் (Alma Leopold Es. Chasseriau) எனும் பிரெஞ்சுக்காரர் வாங்கிக் கொண்டார். இவருடைய அல்மா எனும் பெயர்தான் அந்தத் தோட்டத்திற்கு வைக்கப் பட்டது.

இவர் பிரான்ஸ் நாட்டில் 1825-ஆம் ஆண்டு போர்டியாக்ஸ் (Bordeaux) எனும் இடத்தில் பிறந்தவர். ஆப்பிரிக்கா மவுரித்தியஸ் நாட்டில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பயிற்சி பெற்றவர்.

இவர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சில ஆண்டுகள் வாழ்ந்தவர். தமிழ்நாடு பாண்டிசேரியில் இருந்து தமிழர்களைப் பினாங்கிற்குக் கொண்டு வந்தார். 1852-ஆம் ஆண்டு ஜாவி தோட்டத்தை (Jawee Estate) தோற்றுவித்தார்.

அந்தக் கட்டத்தில் வால்டோர் தோட்டம் (Val Dor Estate) எனும் கரும்புத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தை டோனாடியூ (Donadieu) என்பவர் நிர்வாகம் செய்து வந்தார். 1853-ஆம் ஆண்டு அவருடன் சேசெரியாவ் இணைந்து வால்டோர் தோட்டத்தின் நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.

சேசெரியாவ் பணி புரிந்த சில மாதங்களில் பங்காளி டோனாடியூ கொலை செய்யப் பட்டார். பத்து காவான் (Batu Kawan) ஆற்றில் பயணம் செய்யும் போது கடல் கொள்ளையர்கள் அவரைத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்து விட்டனர்.

1854-ஆம் ஆண்டு. கிரிமியன் போர் உருவானக் காலக்கட்டம். அந்தச் சமயத்தில் சேசெரியாவ் இன்னொரு தோட்டத்தை வாங்கினார். அதன் பெயர் ஆயர் ரெண்டாங் தோட்டம் (Ayer Rendang). பின்னர் கொஞ்ச காலம் சென்று அதன் பெயரை மலாக்கோப் (Malakoff) என்று மாற்றினார்.

இப்போது பினாங்கில் பிரச்சினையில் போய்க் கொண்டு இருக்கிறதே ஒரு தோட்டம். மலாக்கோப் தோட்டம். காலா காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களை வெளியேறச் சொல்லி அலைகழித்துக் கொண்டு இருக்கிறார்களே; அந்தத் தோட்டத்திற்கு இப்படித்தான் பெயர் வந்தது.

மலாக்கோப் தோட்டத்தில் கரும்பு; மரவள்ளிக் கிழங்குகளை சேசெரியாவ் பயிரிட்டார். தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் காடுகளை அழித்து மரவெள்ளித் தோட்டத்தை உருவாக்கினார்கள்.

அதன் பின்னர் பெர்மந்தாங் பாவ் (Permantang Pau) பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்திற்கு மலாக்கோப் தோட்டம் விற்கப்பட்டது. மரவெள்ளிக்குப் பதிலாகக் காபி சாகுபடி செய்யப் பட்டது.

அல்மா தோட்டத்தில் 1891-ஆம் ஆண்டு வரை சேசெரியாவ் நிர்வாகம் செய்தார். பின்னர் எஸ். எஸ். நாட்டல் (ss. Natal) எனும் கப்பல் மூலமாக பிரான்ஸ் சென்றார்.

ஆனால் தாய்நாட்டைச் சென்று அடையவில்லை. போகும் வழியில் கப்பலில் சின்ன ஒரு விபத்து. இத்தாலி ஏதான்ஸ் நகரில் காலமானார். அல்மா தோட்டத்தை உருவாக்கியவர் இப்படித்தான் அனாதையாகக் கரை தெரியாத ஒரு நாட்டில் கரைந்து போனார்.

அதன் பின்னர் அவருடைய மகன்கள் எமிலி (Emile); லியோபோல்ட் (Leopold); இருவரும் 1900-ஆம் ஆண்டில் அல்மா தோட்டத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.

1900 நவம்பர் 28-ஆம் தேதி பதிவேட்டுச் சான்றுகளின்படி அல்மா தோட்டத்தில் 1000 தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். பெரும்பாலும் கரும்பு; மரவெள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

அல்மா தோட்டத்திற்கு வந்த தமிழர்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரி; நாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து கப்பலேறி வந்தவர்கள். 1854-ஆம் ஆண்டிலேயே 120 தமிழர்க் குடும்பங்கள் அந்தத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு வந்து விட்டார்கள். எந்த ஆண்டு என்பதைக் கவனியுங்கள்.

1908-ஆம் ஆண்டில் அல்மா தோட்டத்தின் பரப்பளவு 3,000 ஏக்கர். 500 டன் மரவெள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப் பட்டது. தவிர 30,000 தென்னை மரங்களும் இருந்து உள்ளன. 1000 ஏக்கரில் அன்னாசியும் பயிர் செய்யப்பட்டு உள்ளது. பின்னர் ரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது.

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற தோட்டங்களில் அல்மா தோட்டமும் ஒன்றாகும். அல்மா தோட்டத்தின் வரலாறு மிகவும் நீண்டது. ஆனால் இப்போது இருப்பது அல்மா ரப்பர் தோட்டம் (ALMA RUBBER ESTATES SDN. BHD). வேறு பெயர். பழைய அறுவடையில் புதிய சாகுபடி.

இப்போது சீனர்கள் வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முன்பு காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. ஒரு செருகல்.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ராயிஸ் யாத்தீம். சில மாதங்களுக்கு முன்னர் மலாயா தமிழர்களைப் பற்றி ஒரு தப்பான வியாக்கியானம் செய்து இருந்தார். 1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று கூறி இருந்தார்.

ஆசியா பசிபிக் சமூக அறிவியல் சஞ்சிகை (Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2) July-Dec 2013, pp.205-229); 2013-ஆம் ஆண்டு ஜுலை - டிசம்பர் இதழில் பக்கம்: 225-இல் புள்ளி விவரங்கள் உள்ளன. அதை அவர் பார்த்து இருந்தால் அப்படி ஒரு தப்பான தகவலைச் சொல்லி இருக்க மாட்டார்.

FMS 1895  Penang Tamil

1844-ஆம் ஆண்டு; அந்த ஆண்டில் தான் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள்.

இதற்கும் முன்னதாக 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

Asia Pacific Journal of Social Sciences, Vol.5 (2), July-Dec 2013, pp.205-229

ஆனால் அது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

ஆக மலாயாவுக்குத் தமிழர்கள் தொழிலாளர்களாக முதன்முதலில் வந்தது 1837-ஆம் ஆண்டு. இதை மூத்தவர் ராயிஸ் யாத்தீம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று சொன்னது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிதைவு. மலாயா தமிழர்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். வயதிலும் அரசியல் கலையிலும் மூத்த ஒருவருக்கு அதுவே அறிவார்ந்த அழகு.

மலேசியாவில் எத்தனையோ ரப்பர் தோட்டங்கள் தமிழர்களின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அவற்றுள் அல்மா தோட்டம் பல்லாயிரம் தமிழர்களுக்கு வாழ்வு அளித்த ஓர் அட்சயப் பாத்திரம்.

அதையும் தாண்டிய நிலையில் மலாயா தமிழர்களின் வாழ்வியலில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாசனம். 180 ஆண்டுகளுக்கு முன்னர் அல்மா தோட்டத்தில் வாழ்ந்த பழம் பெரும் தமிழர்களுக்குச் சிரம் தாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.10.2020

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources: Page 373

2. http://seasiavisions.library.cornell.edu/catalog/

3. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

4. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக