06 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: சுங்கை சிப்புட் பிளாங் தோட்டம் 1846

1840-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் சுங்கை சிப்புட் பகுதியில் குடியேறி விட்டார்கள். மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்டுகள் அவர்களை அழைத்து வந்து இருக்கிறார்கள். ஏஜண்டுகள் என்றால் மலாயா ஆங்கிலேயத் தோட்ட நிர்வாகத்தினர் அனுப்பி வைத்த முகவர்கள். பெரும்பாலும் கங்காணிகள். 1846-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட்டில் 150 - 200 தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். [1]; [2]

[1]. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. Cornell University Library. Arnold Wright (London). H. A. Cartwright (Singapore). Lloyd's Greater Britain Publishing Co. Ltd. (Page: 419; 422; 423)

[2]. Stenson, Maichel R, Class, Race and Colonialism in West Malaysia, St. Lucia

இன்னும் ஒரு செய்தி. அதே 1846-ஆம் ஆண்டில் மலாயாவுக்கு 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். சுங்கை சிப்புட்டிற்கு அழைத்து வரப்பட்ட 150 - 200 தொழிலாளர்களில் சிலர் பிளாங் தோட்டத்திற்குச் சென்றார்கள். எண்ணிக்கை தெரியவில்லை. (Plang Estate) [3].

[3]. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957); Indian Labour Immigration to Malaysia 1844 - 1941.

அந்த வகையில் சுங்கை சிப்புட் முன்னோடி கரும்பு ரப்பர் தோட்டங்களில் பிளாங் தோட்டம் முன்னிலை வகிக்கிறது. முதன்முதலில் இங்கே  எலுமிச்சைப் புல் (lemon-grass) பயிர் செய்யப்பட்டது. பின்னர் காபி பயிர் செய்யப்பட்டது. அதன் பின்னர் கரும்பு; அதற்கும் பின்னர்தான் ரப்பர். இந்த தோட்டத்திற்கு 1900-ஆம் ஆண்டுகளில் தாம்சன் (J. W. Thompson) என்பவர் நிர்வாகியாக இருந்தார்.

(Mr. J. W. Thompson, the manager, a planter of wide experience, is working up the estate with characteristic energy. Whilst the rubber trees are young he hopes to produce catch crops of lemon-grass and coffee, from which good returns are anticipated.)

(Twentieth century impressions of British Malaya. Page: 423)

1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. மலாயாவில் முதன்முதலில் லைபீரியா காபி தான் பயிர் செய்யப்பட்டது.

இந்தத் தோட்டம் சுங்கே சிப்புட் இரயில் நிலையத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்து உள்ளது. இலங்கையின் ஆசியடிக் ரப்பர் நிறுவனத்திற்கு (Asiatic Rubber and Produce Company, Ltd.. of Ceylon) சொந்தமான ஐந்து ரப்பர் தோட்டங்களில் இந்தத் தோட்டம் இரண்டாவது பெரிய தோட்டமாக இருந்தது.

இன்றும் அந்தத் தோட்டம் உள்ளது. இப்போது 20- 30 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிளாங் தோட்டத்தைப் போல அதே காலக் கட்டத்தில் சுங்கை சிப்புட்டில் பல தோட்டங்கள் இருந்தன.

1898-ஆம் ஆண்டில் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்கிறேன். படங்கள் தெளிவாக இல்லை. இருப்பினும் நமக்குச் சான்றுகள் கிடைத்து உள்ளன. 122 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள். மலாயா தமிழர்களின் படங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2020

ஆய்வுத் துணை நூல்கள்:

1. The lost race in British Malaya: revisiting the problems of south Indian labourers Sivachandralingam Sundara Raja & Shivalinggam Raymond Pages 115-134

2. New Towns on the Malayan Frontier from Part I - The Nineteenth Century, Lynn Hollen Lees, University of Pennsylvania, Publisher: Cambridge University Press


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக