1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க்
நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். சாலை அமைப்பதற்காகத் தமிழர்கள் சுடும்
வெயிலில் வேட்டி தலைப்பாகையுடன் வேலை செய்கிறார்கள். வெறும் சம்மட்டி;
குத்துக்கோல்; கடபாறைகளை மட்டுமே பயன்படுத்தி பெரும் கற்பாறைகளைக் தோண்டி
எடுத்து இருக்கிறார்கள். அப்படியே மண்ணை நிரப்பிச் சாலைகளையும் அமைத்து
இருக்கிறார்கள்.
சாலை நிர்மாணிப்பில் குழுக்கள் குழுக்களாக வேலை.
ஒவ்வொரு குழுவிலும் 60 பேர். இரண்டு மேற்பார்வையாளர்கள். இந்தப் பாதை
பினாங்கு கொடிமலைக்குச் செல்லும் பாதை.
1790-ஆண்டுகளில் பினாங்கு
தீவின் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம் அடைந்தன (basic physical and
organizational structures and facilities; e.g. buildings, roads, power
supplies). காடுகளை அழித்து மண் சாலைகள் அமைத்துப் பாலங்கள் கட்டும்
உள்கட்டமைப்பு பணிகள். இந்தப் பணிகளில் முதன்மை வகித்தவர்கள் மலாயா
தமிழர்கள்.
1786-ஆம் ஆண்டில் பினாங்கு தீவு ஆங்கிலேயர்கள் கைவசம்
ஆனதும், நூற்றுக் கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்
பட்டார்கள். ஆயிரக் கணக்கில் என்று சொன்னால் சரியாக அமையும்.
ஆங்கிலேயர்கள்
தங்குவதற்கு குடியிருப்புகளை உருவாக்குவதற்கும்; அடிப்படையான சாலைகளை
அமைப்பதற்கும் இந்த முன்னோடித் தமிழர்கள் பயன்படுத்தப் பட்டார்கள். அதன்
பின்னர் பினாங்குத் தீவை விரிவு படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சாலைகள்
உருவாக்கும் பணிகளே தலையாயப் பணிகளாக இருந்தன. பினாங்கில் நிறையவே
குன்றுகள். அவற்றை வெட்டிச் சமப் படுத்தும் வேலைகள் தமிழர்களின் வேலைகளாக
அமைந்தன.
இப்படிச் சாலைகளை அமைத்துக் கொடுத்தவர்களுக்கு வந்தேறிகள்
என்று பெயர் சூட்டி வருகிறார்கள். வந்தேறிகள் எனும் சொல்லை ஒரு மெகா
மனிதரும் சமயங்களில் பயன்படுத்துவது உண்டு. அவரின் தந்தையார் 1903-ஆம்
ஆண்டில் தான் பினாங்கிற்கு வந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.
இருப்பினும்
250 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழர்கள் பினாங்கிற்கு வந்து விட்டார்கள்.
அது மூன்றாவது குடியேற்ற அலை. ஆக யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று
கேட்பது. ஒன்றும் புரியாத ஒன் மில்லியன் டாலர் கேள்வி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.10.2020
1. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229
2. Sandhu, K.S (2010), Indians in Malaya: Some Aspects of Their Immigration and
Settlement (1786-1957).
3. Geoghegan, J, (1873), “Note on emigration from India”. Kessinger
Publishing: Calcutta, Pp.63-4.
4. Parmer, J. N. (1960), “Colonial labor policy and Administration”. New
York: J. J. Augustin. Pp.7-8.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக