1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். பினாங்கு வாட்டர்பால் சாலை மலைப் பகுதியில் Botanic Gardens Waterfall, Penang); தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக நில அளத்தல் செய்யப்படும் போது எடுத்த ஓர் அரிய படம்.
1790-ஆம் ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தின் உள்கட்டமைப்புகளுக்கு முதுகெலும்பாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளாய் கிடந்த வனாந்திரங்களைக் கோடரிகள்; பாராங் கத்திகள்; சம்மட்டிகள்; கடப்பாறைகள் போன்ற அடிப்படை ஆயுதங்களைக் கொண்டே செதுக்கிச் செப்பனிட்டு சீர் செய்து இருக்கிறார்கள்.
அந்தக் காடுகளில் சாலைகளையும் மரப் பாலங்களையும் அமைத்து அழகு பார்த்து இருக்கிறார்கள். காடுகளைச் சுத்தம் செய்யும் போது பல நூறு அல்லது சில ஆயிரம் பேர் வனவிலங்குகளால் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
காட்டு யானைகள்; காட்டுப் புலிகள்; காட்டுச் சிறுத்தைகள்; காட்டுக் கரடிகள்; காட்டு மாடுகள்; காட்டுப் பன்றிகள்; காட்டு விரியன்கள்; கருநாகங்கள்; மலைப்பாம்புகள் அவர்களைப் பதம் பார்த்து இருக்கின்றன. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நிறைய பேர் வீட்டிற்கு திரும்பால் காடுகளிலேயே காணாமல் இருக்கிறார்கள்.
அதையும் தாண்டிய நிலையில் மலேரியா; காலரா; காச நோய்; மூளைக் காய்ச்சல் (Encephalitis); வயிற்றுப் போக்கு; தட்டம்மை (Measles); குடல்புண் காய்ச்சல் (Typhoid); சுருளுயிரி காய்ச்சல் (Leptospirosis); போன்ற நோய்களினால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்து இருக்கிறார்கள். கணக்கில் சேர்க்கப் படாத கணக்கு. ஆங்கிலேயர்கள் எழுதி வைக்கவில்லை. மறந்து விட்டார்கள்.
இருந்தாலும் கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg); கார்ல் ஜோசப் கிளீங்கிரோத் (Carl Josef Kleingrothe); ஜி.ஆர். லம்பேர்ட் (Gustave Richard Lambert) போன்ற அந்தக் காலத்துப் புகைப்படக்காரர்கள், மலாயா தமிழர்கள் தொடர்பான படங்களை எடுத்து இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.
1863-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) என்பவர் ஒரு படம் எடுத்து இருக்கிறார். பினாங்கு வாட்டர்பால் சாலையின் குன்றுப் பகுதியில் ஓர் அருவி. அந்த அருவிக்கு அருகில் ஒரு தாவரவியல் பூங்கா அமைக்கத் திட்டம். அப்போது அந்தப் பகுதிகளை நில அளவு செய்தார்கள். அப்போது பினாங்கு மலைக் காடுகளில் பாதைகளைப் போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான்.
1884-ஆம் ஆண்டு பினாங்கு தாவரவியல் பூங்கா அமைக்கப் பட்டது. அந்தப் பூங்காவில் சாலைகள் அமைப்பது; அந்தச் சாலைகளைப் பராமரிப்பது; நீர்வீழ்ச்சியில் இருந்து சுத்தமான நீரைக் கொண்டு வருவதற்கு குழாய்கள் அமைத்துக் கொடுப்பது; தாவரங்களை நட்டு வைப்பது; பூச்சிப் புளுக்கள் வராமல் பாதுகாப்பது; நீருற்றுகளை அமைப்பது போன்ற வேலைகள்.
இந்த வாட்டர்பால் (Waterfall) மலையைத் தமிழில் தண்ணீர் மலை என்று அழைக்கிறார்கள். 1870-ஆம் ஆண்டுகளில் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து தான், குடிநீரை ஜியார்ஜ் டவுன் (George Town) என்னும் பினாங்கு நகருக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.
இந்தக் குடிநீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தமிழர்கள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு வேல் வடிவத்தை நட்டு வைத்தார்கள். அந்த வேல் தான் பிற்காலத்தில் அங்கு ஒரு முருகன் கோவில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. இந்தத் தகவலை வழங்கிய கோவிந்த பாலா அவர்களுக்கு நன்றி.
இப்படி பற்பல வேலைகளைச் செய்தவர்கள் மலாயா தமிழர்கள் தான். அவர்களை மறக்கலாமா? அவர்களை மறக்கத்தான் மனசு வருமா? அவர்களை வந்தேறிகள் என்று சொல்லலாமா? சொல்லத்தான் மனசு வருமா?
மலாயா கித்தா காடுகளிலும், பாசா காடுகளிலும், சயாம் மரண இரயில் பாதையிலும் 10 இலட்சம் தமிழர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். அப்படிச் செத்துப் போன உயிர்கள் எல்லாம் வந்தேறிகள் இனமா. அப்படிச் சொல்லலாமா? வெட்கமாக இல்லையா?
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.10.2020
References:
1. Kristen Feilberg (1839–1919). Title: Malaisie : Cascade à Malacca, près de Penang, ca. 1870.
2. David Jones: "Penang Waterfall Botanic Gardens". (p.13).
3. Sandhu, K.S (2010), Indians in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957).
4. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229
5. Geoghegan, J, (1873), “Note on emigration from India”. Kessinger Publishing: Calcutta, Pp.63-4.
6. https://en.wikipedia.org/wiki/Penang_Botanic_Gardens
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக