01 அக்டோபர் 2020

தமிழ் வளர்த்த ஆங்கிலேயர் எல்லீசன்

தமிழ் மலர் - 01.10.2020

தமிழ் பார்த்த தமிழ் அறிஞர்கள் பலர். தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள் பலர். தமிழோடு வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களில் தமிழர் இனம் சார்ந்த அறிஞர்கள் பலர். தமிழர் அல்லாதவர்கள் சிலர். இவர்கள் தமிழை வளர்க்க தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிப்பு செய்த மாபெரும் தமிழ்த் தொண்டர்கள். தமிழ் அடியார்கள். தமிழ்த் தூதர்கள். தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழுக்காகவே உயிர் வாழ்ந்தவர்கள். தமிழுக்காகவே உயிர் துறந்தவர்கள்.

தமிழ் வளர்த்த பிற மொழியாளர்களில் சிலர்:

வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi);

கால்டுவெல் புலவர் (Robert Caldwell);

ஜி. யு. போப் (George Uglow Pope);

பீட்டர் பெர்சிவல் (Peter Percival);

ராபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan);

கமில் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil);

யாரொசுலாவ் வாச்செக் (Jaroslav Vacek);

ஹரால்டு ஷிப்மன் (Harold. F. Schiffman);

அலெக்சாண்டர் துபியான்சுகி (Alexander Dubyanskiy);

இரோசி யமாசிடா (Hiroshi Yamashita)

இவர்கள் உலகத் தமிழர்கள் பலருக்கும் தெரிந்தவர்கள். அறிமுகம் தேவை இல்லை. இறந்தும் இறவாமல் இன்றும் தமிழ் முகவரிகளுடன் தமிழோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

இந்தத் தமிழ் அறிஞர்களில் ஓர் ஆங்கிலேயத் தமிழறிஞரைப் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அவருக்கு அதிக விளம்பரம் இல்லாமல் போய் விட்டது. முகவரியைத் தொலைக்காமல் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஓர் அற்புதமான ஆங்கிலேய மகனார்.

அன்னைத் தமிழுக்காக வாழ்ந்தவர். அன்னைத் தமிழுக்கு அரும் பெரும் சேவைகள் செய்தவர். இவரைப் பற்றி தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவரைப் பற்றி நம்முடைய பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகத் தமிழர்கள் இவரை என்றும் மறக்கவே கூடாது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis). தமிழ் மீது இவருக்கு இருந்த பற்று காரணமாகத் தன் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு எல்லீசன் என மாற்றிக் கொண்டவர். எப்பேர்ப்பட்ட தமிழ் ஆர்வலர். பிறப்பு: 1777 இறப்பு: 1819. வயது 42.

1809-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் நிலச் சுங்க அதிகாரியாகப் பதவி. 1810-ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் பதவி. இவர் ஓர் ஆங்கிலேய அதிகாரி தான். பெரிய பதவிகள் தான். காலனித்துவ ஆட்சியில் ஓர் உறுப்பினர் தான்.

இருப்பினும் திராவிட மொழிகள் தொடர்பாக இவர் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறாரே. ஆங்கிலேயராக இருந்தாலும் தமிழுக்காக நிறைய சேவைகள் செய்து இருக்கிறாரே. எப்படி மறக்க முடியும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை தென்னிந்திய மொழிகள். இவை பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உணர்ந்து, "திராவிட மொழிக் குடும்பம்" என்னும் ஒரு கருத்தாக்கத்தை 1816-ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியவர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ். இவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்குத் தமிழே மிகவும் பிடித்து இருந்தது.

கால்டுவெல் புலவர். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் 1856-ஆம் ஆண்டில் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் நூலை எழுதினார்.

தமிழ் உலகில் மிகவும் புகழ் பெற்ற நூல். அவர் அந்த நூலை எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே எல்லீசன் தமிழ் மொழி ஆய்வுகள் செய்யத் தொடங்கி விட்டார்.  

எல்லீசன் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மூத்த முதல் முன்னோடி. திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரையையும் எழுதினார். தமிழின் யாப்பு இயலைப் பற்றியும் இவர் நூல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்து இருந்தார்.

தமிழ் யாப்பியல் கொண்ட நான்கு ஆய்வுரைகளை எல்லீசன் எழுதி இருக்கிறார். அவை:

1. தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,

2. தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,

3. தமிழ் யாப்பியல்,

4. தமிழ் இலக்கியம்


இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே அவர் இறந்து விட்டார். வெளிவந்து இருந்தால் எல்லீசன் அவர்களுக்குப் பெரும் புகழை வழங்கி இருக்கலாம். இருந்தாலும் அவரின் பெயரும் புகழும் தமிழ் அறிஞர்களிடம் இன்றும் தனி ஓர் இடத்தில் உள்ளது.

தமிழ் மொழியைக் கற்று; அந்தத் தமிழ் மொழியிலேயே கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்று இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடுகள். அவற்றைப் போக்குவதற்காகப் பல இடங்களில் கிணறுகளை வெட்டி பொது மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.

இன்னும் ஒரு ஆச்சரியமான தகவல். இந்துக்கள் சமய நம்பிக்கைக்கு ஏற்றபடி, இருபத்து ஏழு நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட இருபத்து ஏழு கிணறுகளை வெட்டி இருக்கிறார். இந்துக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உடந்தையாக இருந்து இருக்கிறார். ஆக அவர் இந்து சமயத்திற்குத் துணை போனார் என்பது சிலரின் எதிர்மறைக் கருத்துகள்.

இதில் என்ன எதிர்மறைக் கருத்துகளோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் அப்போது வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலோர் இந்துக்கள். அவர்களின் சமய நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து இருக்கிறார். அதனால் பாருங்கள். அவருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த சில பல அரசியல் கழகங்கள் அவரை மறந்து விட்டன. மறக்கச் செய்து விட்டன.

தமிழ் மீது தணியாத தாகம். பண்டைய இலக்கியங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வந்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காகத் தன் சொத்துக்களின் பெரும் பகுதியை விற்று இருக்கிறார். அப்படி கிடைத்து தான் ‘தேம்பாவணி’. இவர் மட்டும் முயற்சி செய்யவில்லை என்றால் இந்தக் காப்பியம் தமிழர்களுக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும்.

அவர் வெட்டிய கிணறுகளுக்கு அருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் நட்டு வைத்தார். இராயப்பேட்டையில் ஒரு கோயில். பெரிய பாளையத்தம்மன் கோயில். அங்கே ஒரு கிணறு. அதன் கைப்பிடிச் சுவரில் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு குறளைப் பதித்து வைத்து இருக்கிறார் எல்லீஸ்.

’இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு’ எனும் திருக்குறள். இதில் இருந்து அவரின் தமிழ்க் காதலை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்போது அந்தக் கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டு உள்ளது. அதில் கீழ்க்கண்டவாறு வாசகம் உள்ளது.

'எல்லீசன் என்னும் இயற்பெயர் உடையோன். திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி; அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத் தங்கு பல நூல் உதாரணக் கடலைப் பெய்(து); இங்கிலீசு தனில் இணங்க மொழி பெயர்த்தோன்.’

என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் இருந்து எல்லீசன் அவர்களின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும்; அவருக்குத் திருவள்ளுவர் மீதும்; திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடுகளும் தெளிவாகத் தெரிகின்றன.

ஒரு காலக் கட்டத்தில் சென்னையின் நாணயச் சாலை இவரின் பொறுப்பில் தான் இருந்தது. அப்போது திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டு இருக்கிறார். பிரிட்டிஷ் மகாராணிகள் விக்டோரியா; எலிசபெத் ஆகியோர் உருவங்கள் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக் கட்டத்தில் பெரும் புரட்சி செய்து இருக்கிறார்.

அது மட்டும் அல்ல. தமிழ்ச் சங்கம் ஒன்றையும் உருவாக்கினார். தனக்குக் கிடைத்த தமிழ்ச் சுவடிகளை எல்லாம் தொகுத்து நூல் வடிவில் அச்சிட்டு வெளியிட்டார். 1812-ஆம் ஆண்டில் சென்னைக் கல்விச் சங்கம் என்று ஒரு கல்லூரியை  நிறுவினார். மொழியியல் ஆய்வுகளுக்கு இந்தக் கல்லூரியே அடித்தளமாக விளங்கியது.

இவர் பல நூல்களை எழுதி இருக்கிறார். இருந்த போதும் 40 வயது வரையிலும் இவர் எந்த நூலையும் வெளியிடவில்லை. என்ன துரதிர்ஷ்டம். 41-ஆவது வயதில் காலமானார். இன்னும் பல தமிழ்ச் சேவைகள் செய்வதற்கு முன்பு எல்லீஸ் இறந்தது தமிழ் மொழிக்குப் பெரும் இழப்பு.

இவரின் தமிழ் ஆய்வுப் பணிகளுக்காகச் சென்னையில் ஒரு சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது. ஒரு தமிழ் முன்னோடியைப் பெருமைப் படுத்தும் வகையில் ஒரே ஓர் அடையாளம். அந்தச் சாலை மட்டுமே உள்ளது. அண்ணா சாலைக்கு அருகில் உள்ளது. இந்தச் சாலைக்கு அருகில் எல்லீஸ்புரம் எனும் கிராம நகர்ப்பகுதி உள்ளது.

2008-ஆம் ஆண்டு. சென்னையில் ஆங்கிலேயப் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பெயரை மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் எல்லீஸ் சாலையின் பெயரை மட்டும் அவர்கள் மாற்றவில்லை.

அதற்குக் காரணம், எல்லீசன் ஒரு தமிழ் அறிஞர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்க லீலை போன்ற நூல்களுக்கு விளக்கம் கொடுத்தவர். அத்துடன் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியவர். அதனால் அவருக்கு மரியாதை வழங்கி இருக்கிறார்கள்.

இவர் பெயரில் ஒரு சத்திரம் உள்ளது. பெயர் எல்லீஸ் சத்திரம். விழுப்புரத்தின் மேற்கே உள்ள ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும் எல்லீஸ் சத்திரம் சாலை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இதன் பெயருக்கும் புகழுக்கும் அதற்குக் காரணம் என்ன தெரியுங்களா. அங்கே  அமைந்து இருக்கும் அணைக்கட்டு. தமிழ் நாட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள 6-ஆவது அணைக் கட்டு. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு.

ஏற்கனவே ஐந்து அணைக்கட்டுகள் உள்ளன. அனியாளம் அணைக்கட்டு; கிருஷ்ணகிரி அணைக்கட்டு; நடுங்கல் அணைக்கட்டு; சாத்தனூர் அணைக்கட்டு; திருக்கோவலூர் அணைக்கட்டு. ஏழாவது புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1950-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றது. அவருக்கு 40 வயதாக இருக்கும் போது மதுரை மாநகரை பார்க்க ஆசைப் பட்டார். சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

வருடத்தைக் கவனியுங்கள். 1819. பல இடங்களைப் பார்த்தார். ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார். அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கே
அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருந்தது.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அடைந்தார். மதுரையைப் பார்க்க வந்த எல்லீசன் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை. எல்லீசன் 1819-ஆம் ஆண்டில், தன் 41-ஆவது வயதில் இறந்து போனார்.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் பெரிய பெரிய அறைகளில் மலை போல் குவிந்து கிடந்தன. அவற்றை ஆங்கிலேய அரசு ஏலம் விடுவதற்கு முடிவு செய்தது.

அந்த ஓலைச் சுவடிகளின் மகத்துவத்தைத் தமிழர்கள் யாரும் அறியவில்லை போலும். எவரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அந்த ஓலைச் சுவடிகள் சும்மா கிடந்தன. அதனால் சில மாதங்களில் செல்லரித்து விட்டன.

தமிழ் வளர்த்த எல்லீசன் எனும் ஓர் ஆங்கிலேயரின் கனவு அந்தச் சுவடிகளோடு ஒரு சுவடியாய் எரிந்து சாம்பலாகி விட்டது. இருந்தாலும் தமிழக அரசு அவரை மறக்கவில்லை. அவரின் நினைவாக அண்ணாசாலைக்கு அருகில் எல்லீஸ் நகர் என்று ஒரு குடியிருப்புப் பகுதிக்கு பெயர் வைத்து இருக்கிறது.

திராவிட மொழிகளுக்கு எல்லாம் மூலமொழி; மூத்த மொழி தமிழ் என்பதை எல்லிஸ் கண்டு அறிந்தார். வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். மேடை போட்டுப் பேசினார். இருந்தாலும் சில அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிடத்தை முன்நிலைப் படுத்தின. புரியும் என்று நினைக்கிறேன்.

அதனால் தமிழ் ஆய்வு அறிஞர் எல்லீசன் இரட்டடிப்பு செய்யப் பட்டார். வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டார். யார் அந்த எல்லீஸ் என்று கேட்கும் அளவிற்குத் தமிழர்கள் பலரும் மறந்து போய் விட்டார்கள். ஆனால் தமிழ் மொழி அவரை என்றைக்கும் மறக்காது. தமிழ் இருக்கும் வரையில் அவர் பெயரும் நிலைத்து நிற்கும்.

சான்றுகள்:

1. https://ta.wikipedia.org/s/us6

2. https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/167522-.html

3. https://groups.google.com/g/mintamil/c/NZ1U8ZpUjqY?pli=1
 

1 கருத்து: