13 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலாயாவுக்கு ஏன் வந்தார்கள்?

தமிழ் மலர் - 12.10.2020

மலாயா தமிழர்கள் மலாயாவுக்கு ஏன் கொண்டு வரப் பட்டார்கள்? எப்படி கொண்டு வரப் பட்டார்கள்? எப்போது கொண்டு வரப் பட்டார்கள்? எங்கே இருந்து கொண்டு வரப் பட்டார்கள்? இந்த நான்கு கேள்விகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மலாயா தமிழர்களின் வரலாறு கண்ணீர் வடிக்கும். அந்த வரலாற்றுடன் சேர்ந்து மலேசியத் தமிழர்களும் கண்ணீர் வடிப்பார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய (Company rule in India - Company Raj) கம்பெனியின் மூலமாக ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் முதன் முதலில் கால் பதித்தார்கள். வலது காலை எடுத்து வைத்தார்களா அல்லது இடது காலை எடுத்து வைத்தார்களா தெரியவில்லை. அன்றைக்குப் பிடித்தது ஏழரை நாட்டு உறவு. இன்னும் விட்டுப் போகவில்லை.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள் தான். வர்த்தகம் எனும் பெயரில் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். அப்படியே மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிட்டார்கள். 18-ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் போர்கள். ஆங்கிலேயர்களுக்கு வெற்றி. கை ஓங்கியது.

ஆற்காடு நவாப், பிரஞ்சுப் படைகளை வென்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர்கள் வசம் வந்தன. ஹைதர் அலி; திப்பு சுல்தானை வீழ்த்தினார்கள். கட்டபொம்மன், மருது பாண்டியர்,  பாளையக்காரர்களை வீழ்த்தினார்கள். அதன் பின்னர் சென்னை மாநிலத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.

1858-ஆம் ஆண்டில் அந்தக் கம்பெனி கலைக்கப் பட்டது. இங்கிலாந்து அரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்தது.

ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் போது விவசாய நிலங்களுக்கு வரி மேல் வரி விதித்தார்கள். அந்த வரி ஆங்கிலேயக்குச் சிறந்த ஒரு வருமானமாக இருந்தது.

அந்த வகையில் ஆங்கிலேயர்கள் பல இடங்களைப் பல மன்னர்களிடம் இருந்து பற்பல மோடி மஸ்தான் சால்சாப்பு வித்தைகளைக் காட்டி அபகரித்துக் கொண்டார்கள். அதுவே தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் வருவதற்கு முன்னர் தமிழகத்தில் ஒவ்வோர் இடத்திற்கும் ஒரு வகையான வரி அமைப்பு இருந்தது. அந்த அமைப்பு சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள் காலத்து வரிகள்.

புதிதாக வந்த ஆங்கிலேய அரசாங்கம் அந்த வரிகளை எல்லாம்  தொகுத்து ஓர் ஒழுங்கு முறைக்குக் கொண்டு வந்தது. குடிமக்கள் அரசாங்கத்திற்கு நேரடியாக வரி கட்டினால் போதும். வேறு வரிகளைக் கட்ட வேண்டாம் என்று ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தது.

அப்படி வந்த அந்த வரிக்குப் பெயர்தான் ரயத்துவாரி. அதாவது மக்கள் வரி. இங்கே மலேசியாவில் பொது மக்களை ராக்யாட் என்று சொல்கிறார்கள். அந்த ராக்யாட் எனும் சொல்லில் இருந்து வந்தது தான் ரயத்து எனும் சொல். தவிர மிராஸ்தாரி முறை என்கிற ஒரு நிலவரியும் தமிழகத்தில் ஏற்கனவே இருந்தது.

நாயக்கர் ஆட்சிக்காலம் முடிவுற்ற பிறகு தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான பாளையக்காரர்கள் தனித் தனியாக தனி அரசுகளை நடத்தி வந்தார்கள். அந்தப் பாளையக்காரர்களிடம் சிறுசிறு படைகளும் இருந்தன. ஆங்கிலேய அரசாங்கம் அந்தப் படைகளையும் கலைத்துப் போட்டது.

பாளையக்காரர்கள் எனும் பெயர் மாறி ஜமீன்தாரர்கள், ஜாகீர்தாரர்கள், மிட்டாதாரர்கள், பட்டக்காரர்கள் என்று பற்பல பெயர்கள் உண்டாயின. இவர்களும் சும்மா இல்லை. கணக்கு வழக்கு இல்லாத வரிகளை விதித்தார்கள்.

அந்த வரிகளைக் கட்ட முடியாதவர்கள் மீது பற்பல கொடுமைகள் நடத்தப் பட்டன. ஆக ஊருக்கு ஊர் ஒரு வரி. ஒரு குலத்துக்கு ஒரு வரி. இப்படிப்பட்ட வரிகளை எல்லாம் ஒன்று இணைத்து ரயத்து வரி என்று கொண்டு வந்தார்கள்.

தென்னிந்தியாவில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த இராமநாதபுரம், புதுக்கோட்டை, மைசூர், திருவிதாங்கூர் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு சென்னை மாகாணம் என்று ஒரு தனி மாநிலம் அமைக்கப் பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களும் சென்னை மாநிலத்தில் சேர்க்கப் பட்டன.

தமிழ்நாட்டின் கிராமப்புற விவசாயத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களில் தொடர்ச்சியாக வந்த பஞ்சங்களையும் சேர்க்க வேண்டும்.

இதன் உச்சக் கட்டமாக 1878-ஆம் ஆண்டு தாது வருடப் பஞ்சம் (The Great Famine of 1876 – 1878 ) என்ற ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பல ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள்.

நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்களின் பிடிகளில் சிக்கிய சாதாரண விவசாயிகள் தங்களின் நில உரிமைகளை இழந்தார்கள். ஒரு காலத்தில் நிலச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் கடைசியில் அற்றைக் கூலிகளாக மாறினார்கள்.  தொழிலாளர்கள் சிலரும் பலரும் கொத்தடிமைகளாக மாறிப் போனார்கள். அதனால் பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்தார்கள்.

தமிழகக் கிராமப் புறங்களில் வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். குறிப்பாகத் தலித் மக்கள். இவர்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டார்கள். கிராமங்களை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் எனும் உணர்வுகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன.

இந்தக் கட்டத்தில்தான்  ரயத்து வரி உருவாகின. மலாயாவில் ரப்பர், தேயிலை, காபித் தோட்டங்கள் உருவாகின. மியன்மாரில் ரப்பர் தோட்டங்கள்; மொரிசியஸ் தீவில் கரும்புத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இயற்கையான காடுகளை வெட்டித் திருத்திச் செப்பனிட வேண்டி இருந்தது.

காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை உருவாக்குவது பெரிய விசயமாக இருந்தாலும் அவற்றைப் பராமரிக்கவும், அறுவடைகளைச் சேகரிக்கவும் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப் பட்டார்கள். அதனால் வேலையாட்களுக்கு கிராக்கி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆள் பிடிக்கும் வேலையும் தொடங்கியது. அப்படியே சஞ்சிக்கூலிகளின் சகாப்தமும் தொடங்கியது.  

அப்படி பயணித்த சஞ்சிக்கூலிகள்தான் அப்படியே வரலாற்றுச் சுவடுகளிலும் சங்கமித்து விட்டனர். அந்தச் சுவடுகளில் அவர்கள் விட்டுச் சென்ற சாம்பல்கள் தான் இன்றைய வரைக்கும் தத்தம் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்கிறது.

மலேசியாவில் மட்டும் அல்ல. இந்த உலகில் எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கு எல்லாம் விடியலை நோக்கி அந்த உரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்னும் பல தலைமுறைகளுக்குத் தொடரவே செய்யும்.

18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு மாபெரும் சூறையாடல் நடந்தது. இந்தியாவின் அத்தனை இயற்கை வளங்களையும் செயற்கைச் செல்வங்களையும் வெள்ளைக்காரர்கள் சூறையாடிச் சென்றதுதான் அந்த வரலாற்றுச் சூறையாடல்.

அப்படித்தான் சொல்ல முடிகிறது. பாரத மாதாவின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டார்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விடலாம். அந்த வகையில் இந்தியாவின் கிராமப் பொருளாதாரத்தை ஆங்கிலேயர்கள் சன்னம் சன்னமாய்ச் சிதைத்து விட்டார்கள். கிராமப்புற மக்களை வறுமைப் பிடியில் சிக்க வைத்து விட்டார்கள்.

அவர்களின் இயல்பான எதார்த்த வாழ்க்கையில் இருந்து விரக்தியின் வெறுமைகள் பார்த்த எல்லைக்கே விரட்டி அடிக்கப் பட்டார்கள்.

வேறு வழி தெரியாத வெள்ளந்தி மக்களும் வேறு வழி இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகிப் போனார்கள். அந்தத் தாக்கத்தில் தான் உலகின் பல நாடுகளுக்கு தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் அப்போதைக்கு தமிழக மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட தலை எழுத்து. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்ன தெரியுங்களா.

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளைக்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க வேண்டும்; இந்தியாவைக் கட்டிப் போட்டு ஆட்சி செய்ய வேண்டும்; இந்தியாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட எண்ணம் அவர்களிடம் இல்லவே இல்லை.

வந்தவர்கள் எல்லோருமே வணிகர்கள். அத்தனைப் பேரும் வணிக நோக்கத்தோடு தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். கிடைத்ததை அள்ளிக் கொண்டு போவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது.

வணிகம் செய்து அதிக லாபம் சம்பாதிப்பது. கிடைத்த லாபத்தில் மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பது. கிடைத்த லாபத்தை மூலதனத்தில் போட்டு மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பது. அது தான் அவர்களின் நோக்கம். அதுவே அவர்களின் தலையாய இலட்சியம்.

இந்தியா எப்பேர்ப்பட்ட நாடு. எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய நாடு. ஆனால் ஒரு குட்டிநாட்டு வெள்ளைக்காரர்களிடம் அடகு போனது. வேதனையிலும் வேதனை. காலம் செய்த கோலம் என்று சொல்வார்களே. அதே தான். அந்த மாதிரி நடந்து விட்டது. எழுதும் போது மனம் வலிக்கிறது.

1786-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழர்கள் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்டார்கள். அது மலாயா வரலாற்றில் தமிழர்களின் மூன்றாவது இடம்பெயர்வு.  பினாங்கு காடுகளைத் துப்புரவு செய்வது; சாலைகள் அமைப்பது; வடிகால்கள் வெட்டுவது; பொது கட்டிடங்கள் கட்டுவது; பொது உள்கட்டமைப்புப் பணிகள் செய்வது; இவற்றுக்கு மலாயா தமிழர்கள் முன்னோடிகளாக விளங்கினார்கள்.

கரும்பு, காபி, கொக்கோ, கித்தா மரங்கள் பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. காடுகளை வெட்டிச் சமப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகத் தான் கொண்டு வரப்பட்டார்கள்.

அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மனிதர்கள் நடமாடும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த சாலைகளில் தான், இப்போது பலரும் சொகுசாய்க் கார் ஓட்டி சொகுசாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் காடுகளை அழித்து அந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக மாற்றிய அந்த தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்களுக்கு கைலாஷ் நாட்டின் அதிபர் நித்தியானந்தா மொழியில் சொன்னால் நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.10.2020

Sources:

1. Chaudhuri, K. N. (1978). The Trading World of Asia and the English East India Company, 1660–1760. Cambridge, UK: Cambridge University Press. ISBN 978-0-521-21716-3.

2. Sen, Sudipta (1998). Empire of Free Trade: The East India Company and the Making of the Colonial Marketplace. Philadelphia: University of Pennsylvania Press. ISBN 978-0-8122-3426-8.

3. Williams, Roger (2015). London's Lost Global Giant: In Search of the East India Company. London: Bristol Book Publishing. ISBN 978-0-9928466-2-6.

4. Keay, John (2010). The Honourable Company: A History of the English East India Company. HarperCollins UK. ISBN 978-0-00-739554-5.

5. Farrington, Anthony, ed. (1976). The Records of the East India College, Haileybury, & other institutions. London: H.M.S.O.

6. Stern, Philip J. (2009). "History and historiography of the English East India Company: Past, present, and future!". History Compass. 7 (4): 1146–1180.



 

1 கருத்து: