15 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலாயாவுக்கு கப்பலேறிய சோகக்கதை

தமிழ் மலர் - 13.10.2020

இந்தியாவின் வரலாற்றைப் பாருங்கள். எத்தனை எத்தனையோ படையெடுப்புகள். எத்தனை எத்தனையோ போர்க் கோளங்கள். எத்தனை எத்தனையோ ருத்ரதாண்டவங்கள். பற்பல வரலாற்று வடுக்கள். அலெக்சாண்டர் வந்தார். அப்புறம் பாபர் வந்தார். அப்புறம் கஜினி முகமது வந்தார். அப்புறம் நாடிர் ஷா வந்தார். இவர்களுக்கு முன்னதாகக் கிரேக்கர்களும் வந்து போய் விட்டார்கள்.


இவர்களின் இந்தப் படையெடுப்புகளுக்கும் இங்கிலாந்து நாட்டின் வெள்ளைக்காரர்களின் தலையெடுப்புக்கும் பெரிய ஒரு வேறுபாடு இருந்தது. இருக்கிறது. இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொகலாயர்கள் (Moghuls);

சூர்கள் (Sher Shah Suri);

கில்ஜிகள் (Khaljis);

துக்ளக்குகள் (Tughlaqs);

சையிதுகள் (Syeds);

லோடிகள் (Lodis);

யாதவர்கள் (Yadavas);

காகத்தியர்கள் (Kakatiyas);

பாமனிகள் (Baminis)

இப்படி பல தரப்பினர் இந்தியாவின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள்.

இவர்கள் கொள்ளை அடித்த இந்தியச் சீர்ச் செல்வங்களைப் பெரும்பாலும் இந்திய மண்ணிலேயே பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்தும் போய் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை.

சில விலை உயர்ந்த சிலைகளும் விலை மதிப்பற்ற சிம்மாசனங்களும் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டும். மறந்துவிட முடியாது.

1738-ஆம் ஆண்டில் மொகலாய மன்னர் முகமதுஷா பாரசீகத்தைச் சேர்ந்த நாதிர் ஷா என்பவரிடம் தோல்வி அடைந்தார். கோகினூர் வைரம் (Kohinoor Diamond), மயிலாசனம் (Peacock Throne) போன்றவை நஷ்டயீடாக நாதிர் ஷாவிடம் தாரை வார்க்கப் பட்டன.

அதில் கோகினூர் வைரம் மட்டும் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்தது. சிறிது காலத்திற்குப் பின்னர் இங்கிலாந்திற்குப் போய்ச் சேர்ந்து அங்கேயே நிரந்தரமாகிப் போனது. அது வேறு ஒரு பெரிய வேதனையான சோகக் கதை.

ஆனால் மொகலாய மயிலாசனம் போனது போனது தான். அந்த மயிலாசனத்தை உருவாக்க 1150 கிலோ தங்கம்; 230 கிலோ மரகதம், மாணிக்கம், நீலமணி, வைரக்கற்கள் பயன்படுத்தப் பட்டன. பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப் பட்டது. அந்த மயிலாசனத்தின் விலை 100 கோடி ரிங்கிட் வரை வரும்.

நாதிர் ஷா அந்த மயிலாசனத்தைப் பாரசீகத்திற்கு எடுத்துச் சென்றான். அவன் மரணம் அடைந்த பின்னர் அந்த மயிலாசனத்தை அவனுடைய இராணுவத் தளபதிகள் அல்வா துண்டுகளைப் போல துண்டு துண்டுகளாக வெட்டி பங்கு போட்டுக் கொண்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இன்னும் இருக்கிறது என்று இன்னொரு தரப்பினரின் பேச்சு.

தெஹ்ரான் (National Museum, Tehran, Iran) அரும்காட்சியத்தில் இந்தியாவில் இருந்து கொள்ளை போன அதிஅற்புதமான இரத்தின நகைகள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த அரும்காட்சியத்தில் இந்தியாவின் மற்றும் ஒரு சிறிய மயிலாசனம் காட்சிக்கு உள்ளது.

இந்தியாவின் கோகினூர் வைரம் இப்போது லண்டன் அரும்காட்சியத்தில் (Tower Museum, London) பாதுகாப்பாக உள்ளது. இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தை (Crown Jewels) அலங்கரிக்கும் வைரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இந்த மாதிரி இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போய் விட்டன. நல்ல வேளை. சில புதையல் பொக்கிஷங்களை இந்தியாவின் பெயரில் வெளிநாட்டு அரும்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதுவரைக்கும் மகிழ்ச்சி அடைவோம்.

இன்னும் ஒரு விசயம். இந்தியாவில் காணாமல் போன வைரங்களைப் பற்றி ஜார்ஜ் லூகாஸ் என்பவர் இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones and Temple of Doom) எனும் மர்ம நாவலை எழுதினார். அமெரிக்கா நாட்டு ஹாலிவூட் சினிமாக்காரர்கள் என்றால் சும்மாவா. அதை அப்படியே ஒரு திரில்லர் படமாக எடுத்து அதிலும் மில்லியன் கணக்கில் காசு பார்த்து விட்டார்கள். 335 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது எப்படி இருக்கு?

ஆக மலேசியாவிலும் இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டையில் இறங்க வேண்டும்.

காணாமல் போன பரமேஸ்வராவின் கல்லறை;

நீல உத்தமனின் கல்லறை;

சங்கர விஜயதுங்க வர்மனின் கல்லறை;

பூஜாங்வெளி மர்மங்கள்;

காணாமல் போன கங்கா நகரத்தின் மர்மங்கள்;

கோத்தா கெலாங்கி இரகசியங்கள்;

இவற்றை ஆராய்ச்சிகள் பண்ண வேண்டும். மர்மக் கதைகள் எழுத வேண்டும்.

அப்புறம் என்ன. அவரும் ஹாலிவூட் மாதிரி கோடீஸ்வரராக ஆகிவிடலாம். ஒன் மினிட் பிளீஸ். இந்த வேலையை நான் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன. வயது கொஞ்சம் ஓடிப் போச்சு. பிரச்சினை இல்லை. சமாளித்து விடலாம். அடடடா... மலாயா தமிழர்கள் வரலாறு ஹாலிவூட் வரை போய் விட்டது. மன்னிக்கவும்.

இந்தியாவிற்கு வந்த வெள்ளைக்காரர்கள் இந்தியச் செல்வங்களை எல்லாம் அவர்களின் நாட்டிற்குக் கப்பல் கப்பலாய்க் கட்டிக் கொண்டு போனார்கள். இங்கே தான் இடிக்கிறது. மறுபடியும் மன்னிக்கவும். சுருட்டிக் கொண்டு போனார்கள்.

ஆங்கிலேயர்களின் முதல் நோக்கம் வியாபாரம். இரண்டாவதாக வருவது அதிகாரம் ஆதிக்கம். அப்புறம் மூன்றாவதாக வருவது சுரண்டல். அதாவது ’சுண்டலைக் காட்டி சுரண்டல் செய்வது’ என்று சொல்வார்களே. அதே அதே...  அந்த மாதிரியான சுரண்டல்.

இந்தியாவின் உயிர்நாடி என்பது கிராமப் புறங்களைச் சார்ந்த பொருளாதாரம். அந்தப் பொருளாதாரம் வெள்ளைக்காரர்களின் படிப்படியான சுரண்டல்களினால் நனைந்து நலிந்து நசிந்து போனது. திட்டமிட்ட நகர்வுகளின் மூலமாக சிதைந்தும் போனது.

ஒரு காலக் கட்டத்தில் குடிசைத் தொழில் தான் இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேராக விளங்கியது. கையால் நிலத்தை உழுவது; கையால் நூல் நூற்பது; கையால் துணிமணிகளை நெய்வது; அப்படித்தான் ஒவ்வோர் இந்தியக் குடும்பமும் காலம் காலமாகத் தன்னிறைவு கொண்ட வாழ்க்கையில் நிறைந்து வாழ்ந்தது.

கடைசியில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா. பல கோடி இந்திய மக்களுக்குச் சோறு போட்ட கைராட்டினத்திற்குத் தடை போட்டார்கள். இந்திய நூல் ஆலைகளை முடக்கிப் போட்டார்கள். இந்திய நெசவாளர்களை ஒட்டு மொத்தமாக நடுத் தெருவிற்கே கொண்டு வந்து நன்றாகவே அலைய விட்டார்கள்.

அது மட்டும் அல்ல. அன்றைய காலக் கட்டத்தில் இந்திய நாட்டில் சாதிக் கொடுமைகள் நிறையவே தலைகாட்டி நின்றன. மதத்தின் பெயரால் நிறையவே ஒதுக்கல்கள். சறுக்கல்கள். ஏற்ற இறக்கங்கள்.

ஒரு கட்டத்தில் இந்திய நாடே சிதறிப் போய்க் கிடந்தது. ஆக எந்த ஒரு செலவும் இல்லாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை வெள்ளைக்காரர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் சுத்த வெள்ளந்திகளாகவே வாழ்ந்தார்கள். தங்களின் கிராமத்தை விட்டு வெளியே என்ன நடக்க்கிறது என்பது தெரியாமலேயே வாழ்ந்தார்கள். வெளியுலகத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை.

வெளியுலகச் செய்திகள் என்பது அவர்களுக்குத் தேவை இல்லாத செய்திகள்; தங்களுக்குச் சோறு போடாத செய்திகள். அதுவே அவர்களின் அப்போதைய பொதுவான கருத்து. அவர்களின் கிராமத்தில் நடப்பது தான் அவர்களின் முக்கியமான செய்தி.

இராமன் ஆண்டால் என்ன. இராவணன் ஆண்டால் என்ன. அவர்களுக்கு அது எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்கு அவர்களின் கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் வயல் புல்வெளிகள் இருக்கின்றன. அந்த வயல்களும் அந்தப் புல்வெளிகளும் அவர்களுக்குச் சோறு போடுகின்றன. அது போதும் அவர்களுக்கு. அப்படித்தான் கிராம மக்கள் நினைத்தார்கள். அப்படித்தான் அவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டு இருந்தது. அப்படியே வாழ்ந்தும் வந்தார்கள்.

இடை இடையில் கொடிய பஞ்சங்கள் வந்து போயின. பஞ்சத்தில் வறுமையும் வெறுமையும் சேர்ந்து கொண்டன. அம்மை, காலரா, மலேரியா போன்ற கொடும் நோய்களும் வந்தன. ஏராளமான உயிர்களைப் பறித்துச் சென்றன. இருந்த போதிலும் கிராம மக்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஆக இப்படிப்பட்ட சிந்தனைப் போக்கைப் பார்த்த ஆங்கிலேயர்கள் அதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருவரின் பாதகமே மற்றவருக்குச் சாதகமாக அமைகின்றது. அதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

பேரும் புகழும் பெற்ற இந்திய நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றியும் கண்டார்கள். இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். இந்தியா என்பது ஒரு புண்ணியமான பச்சை மண். அந்தப் பச்சை மண்ணை ஒரு கரிசல் காடாக மாற்றிப் போட்டார்களே. வேறு எப்படிங்க சொல்வது.

நிலப் பிரபுக்களும் நிலச் சுவான்தாரர்களும் வெள்ளைக்காரர்களுக்குக் காக்காய் பிடிப்பவர்களாக மாறிப் போனார்கள். வெள்ளைக்காரர்கள் பிய்த்துப் போட்ட அல்வா துண்டுகளைப் பொறுக்கித் தின்றே பணக்காரர்கள் ஆனார்கள்.

வசதி படைத்தவர்களும் வாய்ச் சொல் வீரர்களும் வசதி மேல் வசதி அடைந்தார்கள். ஆனால் ஏழை எளியவர்கள் மட்டும் ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமல் பஞ்சப் பாமர ஜீவன்களாகிப் போனார்கள்.

அந்தத் தாக்கத்தில்; அந்த மன வேதனையில்; அந்த ஆதங்கத்தில் தான் அப்படிச் சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்றைக்கு இந்தியா ஒரு வல்லரசு. உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவே ஓரக் கண்ணால் பார்க்கிறார். இருந்தாலும் இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகள் சொகுசு காணும் வரையில் வல்லரசு என்பது கனவு அல்ல. அது வெறும் நனவு.

இந்திய கிராமத்து மக்கள் வேறு வழி தெரியாமல் அவர்கள் பிறந்த மண்ணிலேயே அடிமைகளாக மாறத் தொடங்கினார்கள். வாழ்ந்தாக வேண்டும் எனும் கட்டாயம். அதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயரத் தொடங்கினார்கள். அந்தக் காரணத்தினால் தான் ஆயிரக் கணக்கான; இலட்சக் கணக்கான தென் இந்தியர்கள் மலாயாவுக்கு வேலை தேடி வந்தார்கள்.  

பட்டினி, வறுமை, சாதியக் கொடுமைகளினால் சுயமரியாதை இழந்து தவித்து நின்ற தமிழர்கள் பலருக்கு அதுவே வரப்பிரசாதமாக அமைந்தது. தங்களின் தலைவிதியை வெள்ளைக்கார எசமானர்களிடம் ஒப்படைத்து விட்டு கப்பலேறி வந்தார்கள். தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அந்த இடங்கள்:

1. இராமநாதபுரம் 2. சேலம் 3. தஞ்சாவூர் 4. செங்கல்பட்டு 5. வட ஆற்காடு 6. தென் ஆற்காடு 7. திருச்சி 8. மதுரை 9. திருநெல்வேலி

(4. Hugh Tinker - Hansib 1991)

கேரளாவில் மூன்று இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப் பட்டார்கள். அந்த இடங்கள்: 1. மலபார் 2. கண்ணூர் 3. கன்னியாகுமரி

ஆந்திராவில் ஆறு இடங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப் பட்டார்கள். அந்த இடங்கள்: 1. குண்டூர் 2. விசாகப்பட்டினம் 3. நெல்லூர் 4. கஞ்சம் 5. கிழக்கு கோதாவரி 6. மேற்கு கோதாவரி

(5. Rajeswary Ampalavanar)

மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட தென் இந்தியர்கள் ஒரு வகையில் கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டார்கள். முதலில் ஒப்பந்தக் கூலிகளாகத் தான் கொண்டு வரப் பட்டார்கள். பின்னர் கங்காணி முறையில் கொண்டு வரப் பட்டார்கள். சொல்லி இருக்கிறேன். ஒப்பந்தக் கூலி முறை 1858-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட முறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.10.2020

சான்றுகள்

1. Abraham Eraly (2015). The Age of Wrath: A History of the Delhi Sultanate. Penguin Books. p. 178. ISBN 978-93-5118-658-8.

2. Muhammad Baqir. The Peacock Throne: Romance and Reality. Journal of the Research Society of Pakistan, 3 (1966), pp. 27-32.

3. Varma, Nitin (2016). Coolies of Capitalism: Assam Tea and the Making of Coolie Labour. De Gruyter Oldenbourg. ISBN 978-3-11-046115-2.

4. Hugh Tinker - Hansib 1991 - Foreign workers. A New System of Slavery: The Export of Indian Labour Overseas 1830-1920

5. Rajeswary Ampalavanar: The Indian Minority & Political Change in Malaya 1945-1957, Oxford University Press, 1981


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக