19 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: கங்கா நகரம் கலைப்பொருட்கள்

தமிழ் மலர் - 19.10.2020

கங்கா நகரம். பண்டைய மலாயாவில் மிகப் பழைமையான அரசு. பழம்பெரும் பூமி. பழம் பெரும் பச்சை மண். பழம் பெரும் வரலாற்றுக் கலசம். அரிய பெரிய கலைநயனங்களைப் பாடிச் சென்ற ஓர் அழகிய வரலாற்றுக் காவியம். நேற்று முந்தாநாள் பூத்த பூஞ்சைக் காளான் அல்ல. 1800 ஆண்டுகளுக்கு முன்னால் மலையூர் மண்ணில் பொன்னொளிர் வீசிய பொன்னுறு மண். மலாயா தமிழர்களின் கதைகளைச் சொல்லும் மற்றும் ஓர் இதிகாசம்.

கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் பரவிப் பெருகி படர்ந்து அடர்ந்து நின்ற ஒரு சிற்றரசு. இதை ஒரு சிற்றரசு என்று சொல்வதைக் காட்டிலும் பேரரசு என்று சொல்வதே சரி. ஏன் தெரியுங்களா?

இந்த அரசு புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளை மட்டும் ஆட்சி செய்யவில்லை. தைப்பிங், கோலகங்சார், சுங்கை சிப்புட், சிம்மோர், ஈப்போ என ஒரு பெரிய நிலப் பகுதியையே ஆட்சி செய்து இருக்கிறது. சும்மா ஒன்றும் சொல்லவில்லை. சரியான சான்றுகள் உள்ளன. ஒரு செருகல்.

ஆடு மாட்டைக் கடிப்பது. தெரிந்த விசயம். மாடு ஆட்டைக் கடிப்பது. தெரிந்த விசயம். இது ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் ஆதிகாலத்தில் இருந்து தெரிந்த விசயம். ஆனால் ஆடுகளும் மாடுகளும் கூட்டு சேர்ந்து கொண்டு மனுசனைக் கடித்தால் எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அப்புறம் ராமர் பாலத்தையும் ராமர் காப்பியத்தையும் கடிப்பதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம். புரியவில்லை. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. வயிற்றெரிச்சல். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. பல்லவர்களின் கலைப்பொருட்கள். தமிழர்களின் தங்க ஆபரணங்கள். சீனர்களின் பீங்கான் மங்குகள். இந்தோனேசிய அரசுகளின் பின்னல் வேலைபாடுகள்.

அவற்றில் சில பொருட்கள் ஈப்போவிலும் இன்னும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது.

அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசிய கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். ஒரு செருகல்.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம். 1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள்.

கரடுமுரடான காடுகள் அழிக்கப் பட்டன. பச்சைப் பசும்புல் லாலான் மேடுகள் எரிக்கப் பட்டன. ஓடைகள், சமவெளிகள், பொட்டல் காடுகள் போன்றவை பள்ளங்கள் தாண்டிய பாலைவனமாகின. அங்கே ஈய லம்பங்கள் ஈசல் காடுகளாய் இளைப்பாறின. ஈயம் விளையாடி சீனர்கள் பலர் பெருத்த பணக்காரர் ஆனார்கள். அது ஈப்போ நகரின் ஈய வரலாறு.

காடு விளைந்தாலும் மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் கிந்தா பள்ளத்தாக்கில் அப்படி அல்ல. கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் விட்டன என்பதுதான் வேதனையான விசயம். அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம்.

இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலங்கச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.

பேராக் ஆற்றின் துணை நதிகளான கிந்தா மற்றும் பெர்ணம் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் பெரிய பெரிய வெள்ளங்கள் ஏற்படுவது உண்டு. தவிர ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அந்தப் பள்ளத்தாக்கில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்ளன. அதனால் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த வழிப்பாட்டுத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆழத்தில் மேலும் ஆழமாகப் புதைப்பட்டுப் போய் இருக்கலாம்.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாகக் காலம் காலமாக வண்டல் மண் குவிந்து வருவதால் கங்கா நகரத்தின் பண்டைய குடியிருப்புகள் புதைபட்டு இருக்கலாம்.

இருந்தாலும் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெண்கலச் சிலைகளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்தச் சிலைகள் அனைத்தும் தரைப் பகுதியில் இருந்து கீழே மிக ஆழமான இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டவை.

கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். சொல்லி இருக்கிறேன். இவை அனைத்தும் கி.பி. 200-ஆம் ஆண்டு தொடங்கி 1025-ஆம் ஆண்டு வரை நடந்தவை. இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு செய்தி. கங்கா நகரத்தைப் பற்றிய விவரங்களைப் பாட நூல்களில் அதிகமாகப் பார்க்க முடியாது. அதற்காகப் பாட நூல்களை எழுதியவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஊதியத்திற்கு வஞ்சகம் இல்லாமல் ஊழியம் செய்வது நல்ல ஒரு பண்பாகும். இது என் தனிப்பட்ட கருத்து.

தவிர அவசரத்தில் அவர்கள் கங்கா நகரத்தை மறந்து போய் இருக்கலாம். அப்படியும் பார்க்க வேண்டும் இல்லீங்களா. எது எப்படியோ கங்கா நகரம் என்கிற ஓர் அரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் ஒரு வேதனையான உண்மை. இந்த வரலாற்றுக் கொடுமையை எழுதும் போது மனசு ரொம்பவும் வேதனைப் படுகிறது.

கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

(6. S. Durai Raja Singam 1962)

புருவாஸ் நகரில் இருந்த ஒரு புராதன சாம்ராஜ்யம் (சிற்றரசு) அழிந்து போய் விட்டதாக வரலாற்று அறிஞர்கள் பல காலமாகச் சொல்லி வந்தார்கள். இருந்தாலும் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. 1849-ஆம் ஆண்டு அதற்கு ஒரு விடிவெள்ளி.

கார்னல் ஜேம்ஸ் லோ (Colonel James Low) எனும் ஆங்கிலேயர் புருவாஸ் பகுதியில் முதல் ஆய்வைச் செய்தார். அந்த இடத்தில் கங்கா நகரம் எனும் ஒரு சிற்றரசு இருந்தது என்பதை உறுதிப் படுத்தினார். கார்னல் ஜேம்ஸ் லோ (1795-1852) என்பவர் பினாங்கு புரவின்ஸ் வெல்லஸ்லி மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். அவர் இங்கிலாந்திற்குத் திரும்பிப் போன பிறகு அந்த ஆய்வுகள் அப்படியே நின்று போயின. (Citation: JMBRAS 1940)

HG Quaritch Wales: pioneer archaeologist, art historian and war correspondent

பின்னர் 1940-ஆம் ஆண்டுகளில் குவாட்ரிச் வேல்ஸ் (H.G. Quaritch Wales) எனும் மற்றோர் ஆங்கிலேயர் மலாயாவுக்கு வந்தார். கங்கா நகரத்தைப் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்தார். பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்குச் சொன்னவரும் இவர்தான். இவரும் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்களை உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார்.

இவர் ஒரு வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதன் பெயர் மாபெரும் இந்தியாவின் உருவாக்கம். (Making of Greater India: a study in South-East Asian culture change) அந்த நூலில் கங்கா நகரம் என்பது ஓர் இந்து அரசாங்கம் என்று எழுதி இருக்கிறார்.

1924-ஆம் ஆண்டில் தாய்லாந்தின் மன்னராக ராமா VI (Rama VI) என்பவர் இருந்தார். அப்போது அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் குவாட்ரிச் வேல்ஸ். நினைவு படுத்துகிறேன்.

கோலாலம்பூர் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில்
அவாலோகிதேஸ்வரா (Avalokitesvara) சிலை

இவரும் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்களை உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார். ஆக 1800 ஆண்டுகளுக்கு முன்னால் கி.பி.200-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1025-ஆம் ஆண்டு வரையில் புருவாஸ் பகுதியில் இந்தியர்கள் சார்ந்த அரசு இருந்து இருக்கிறது என்பதை கார்னல் ஜேம்ஸ் லோ; குவாட்ரிச் வேல்ஸ் இருவருமே ஆணித் தரமாகவும் உறுதியாகவும் சொன்னார்கள்.

அதன் பின்னர் புருவாஸ் பகுதியில் வாழ்ந்த கிராம மக்கள் அங்கே பல புராதனக் கலைப் பொருட்களைத் தோண்டி எடுத்து இருக்கின்றார்கள். அந்தக் கலைப் பொருட்கள் வயல் வரப்புகளில் கிடைத்து இருக்கின்றன. அப்புறம் சன்னம் சன்னமாய்க் கங்கா நகரத்தைப் பற்றிய பற்பல உண்மைகளும் தெரிய வந்தன.
 
புருவாஸ் காட்சியகத்தில் 128 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்கி இருக்கிறது. இது யாருடைய காலத்து ஆயுதம் என்று தெரியவில்லை. நிச்சயம் கங்கா நகரத்து ஆட்சியாளர்களின் ஆயுதப் பொருளாக இருக்காது. ஏன் என்றால் பீரங்கிகள் 17ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.

தவிர நீண்ட வாள்கள், கிரீஸ் கத்திகள், சில்லறை நாணயங்கள், ஈயக் கட்டிகள், சீனாவின் பீங்கான் மங்குகள் (Pottery from the Ming Dynasty), பெரிய ஜாடிகள் போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன. தமிழர்கள் பய்ன்படுத்திய ஜாடிகள். இவை அனைத்தும் புருவாஸில் கண்டு எடுக்கப் பட்டவை.

நிறைய கல் வெட்டுகள், குறியீடுகள், குறிப்புகள், சின்னச் சின்னச் சிலைகளும் கிடைத்தன. அவற்றில் தமிழர்களின் அடையாளங்கள் காணப் படுகின்றன. அதன் பின்னர் மலாயா வரலாற்று ஆசிரியர்களும் கங்கா நகரத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலோச்சிய கங்கா நகரச் சிற்றரசு புருவாஸ் பகுதியை மட்டும் நிர்வாகம் செய்யவில்லை. ஈப்போவில் இருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கும் பெங்காலான் (Pengkalan) எனும் இடத்தையும் ஆட்சி செய்து இருக்கிறது.

ஈப்போ பெங்காலான் எனும் இடத்தில் தான் ஆறாம் நூற்றாண்டுப் புத்தர் சிலை; லிங்க்ச் சிலைகளும் கண்டெடுக்கப் பட்டன. 1959-இல் நடந்த நிகழ்ச்சி.

தவிர 1936-ஆம் ஆண்டு பீடோர் நகரில் மேலும் ஒரு சிலை கிடைத்தது. முன்பு அங்கே ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கம் (Anglo Oriental Tin Mines) இருந்தது. அந்த இடத்தில் ஈயம் தோண்டும் போது 79 செண்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை கிடைத்தது. அந்தச் சிலைக்கு அவாலோகிதேஸ்வரா சிலை (Avalokitesvara) என்று பெயர். இப்போது கோலாலம்பூரில் இருக்கும் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

1962-ஆம் ஆண்டு பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில்
(Jalong, Chemor, Perak, Malaysia) கண்டு எடுக்கப்பட்ட அகத்தியர் சிலை

மலாயா வரலாற்றில் இருந்து எவ்வளவோ தமிழர் சார்ந்த இந்திய வரலாற்றுப் பின்னணிகள் மறைந்து போய் விட்டன. மறைந்தும் வருகின்றன. தமிழர்கள் சார்ந்த ஆவணங்களை முடிந்த வரையில் மீட்டு எடுப்போம். நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சீதனமாக விட்டுச் செல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.10.2020

சான்றுகள்:

1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13

2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.

3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

4. Malayan Place Names, S. Durai Raja Singam, Liang Khoo Printing Company, 1962 - Malaya - 253 page -186).

5. Kulke, Hermann; Kesavapany, K.; Sakhuja, Vijay (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on Chola naval expeditions to Southeast Asia. Institute of Southeast Asian Studies.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக